திங்கள், 20 அக்டோபர், 2025

நீதி மறுக்கப்பட்ட பெண்ணொருத்தி

இது இலையுதிர் காலம்

இல்லையா நண்பர்களே!

உதிர்வன இலைகள் மட்டும்தானா?

இரவுகள் உதிர்கின்றன

உறவுகள் உதிர்கின்றன

பகல்கள் உதிர்கின்றன

பருவங்கள் உதிர்கின்றன

பொய்க்கின்ற நம்பிக்கைகளின்

உதிரிச் சருகுகளானதுதானே

பொக்கிஷமாய் நாம் கருதுமிந்த வாழ்க்கை!


தனித்திருக்கும் ஒருத்தி

அர்த்தம் தேட ஆசைப்படுகிறாள்

இராத்திரிகளின் புழுக்கத்தில் 

நித்திரை கொள்ளாது

நீதி வேண்டுகிறாள்!


காலைப்பூசையில் நீங்கள் கேட்ட

கைம்பெண்ணைப் பற்றித்தான் புலம்புகிறேன்

நீதி பரிபாலனைகள் புரியுமிடத்திலிருப்பவர்கள்

இரக்கமின்றி அவளைப் புறக்கணிக்கிறார்கள்

கேட்காதது போல, பார்க்காதது போல

முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்

வரலாறு முழுவதும் கேட்டக் கதைதானே!


சமாரியப் பெண்

சாமானியப் பெண்

சிவந்த குருதிப்போக்கினால் 

சங்கடமாகிப் போனப் பெண்

செல்ல மகனை இழந்த விதவைப் பெண்

எல்லாக் கையிருப்பையும் காணிக்கையிட்டப் பெண்

கண்ணீரினால் கழுவி, தலைமுடியால் துடைத்தப் பெண்

நானும் உன்னைத் தீர்ப்பிடவில்லை என்றதும்

விசும்பி அழுது திரும்பிச் சென்ற பெண்

இன்றைய விலையில் தங்கம் போன்ற 

ஒரு தைலத்தைக் கவிழ்த்துப் பூசி அன்புசெய்த பெண்

பாலூட்டிய பெண்

பாலுட்டியவள் பேறுபெற்றவள் என்று சொன்ன பெண்

செவிகொடுத்த பெண்

சேவை செய்த பெண்

சிலுவையின் கொடிய பாதையில் 

அச்சமின்றி அவர் முகம் துடைத்த பெண்

சூரியன் உதிக்கும் முன்னே

கல்லறைக்குக் காணச் சென்ற பெண்

இயேசுவின் வாழ்வில்தான் எத்தனைப் பெண்கள்!



நீதி மறுக்கப்பட்ட பெண்ணொருத்தி

எங்கள் ஊரிலும் இருந்தாள்

அவள் இருந்த ஊரையே எரித்தாள்

அவளும் கைம்பெண்தான்!


கொழுந்து இலைபோன்ற சின்னஞ்சிறுமி

நேற்று பெருநகரம் ஒன்றில் வன்புணரப்பட்டாள்

அவளை எரித்த நெருப்பில்

அந்த நகரம் கொதித்தது

நடந்த சேதாரங்களுக்கு நீதிமன்றங்கள்

ஆதாரங்களைக் கேட்கின்றன

ஏதோவெரு மிருகம் இரத்தவேட்கையோடு

சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது


ஆதாரங்களைத் தரவேண்டியவர்கள்

கொரோனா விதிமீறிய குற்றத்திற்காக

அப்பாவிகளின் மலக்குடலில்

லத்திகளைச் செலுத்தி தேடிக்கொண்டிருக்கிறார்கள்!


ஊரை எரித்தேனும் நீதியைப் பெற்ற நம் ஊரில்

என் எதிரியைத் தண்டித்து

எனக்கு நீதி வழங்கும் என்ற அபயக்குரல்

நீதியின் பலிபீடங்களைத் 

தொந்தரவு செய்துகொண்டேயிருக்கின்றன!


திங்கள், 21 ஜூலை, 2025

அவன் ஏழை என்பதாலேயே

வழக்கமாக எல்லோரும் சொல்வதுதான். நாம் ஏதோவொன்றை நினைத்துக்கொண்டு முகப்புத்தகத்தைத் திறந்தால், அங்கே கவிஞர் மனுஸ் நமக்காக அதே மன ஓட்டத்தை நகலெடுத்து ஒரு கவிதை எழுதி வைத்திருப்பார். அதுபோல கட்டுரையாளர்களிடம் ஒருநாள் யாராவது சொல்வார்கள் என்றால் நானே நம்பியிருக்கமாட்டேன்.

ஆனால் எனக்கு நடந்தது. நேற்று இரவு ஒரு வேகத்தில் ஆசிரியரிடம் ஒரு வாக்குறுதி அளித்துவிட்டேன். எனது ப்ளாக்கில் ஒரு பத்து கட்டுரையாவது எழுதிவிட்டு மீண்டும் வருகிறேன் என்று. 

அனாதிகாலத்துக் கனியான ஆப்பிளின் பதினாறாவது (கூடுதல் வகையறா) அலைபேசியை வாங்கி ஏக்கம் தீர்த்த நான் அடைந்த முதல் ஏமாற்றமே தமிழ் டைப்பிங் தான். யமுனாவின் கைகள் பாபுவின் தலைமயிரைக் கோதிக்கொண்டே 'வருஷக்கணக்காக, எத்தனை வருஷம், எட்டு வருஷமா இல்லை, விவரம் தெரிந்தது முதல், பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே?' என்ற கேள்வியின் பரிதாபத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல என் ஏமாற்றம். 

இதற்கு முன் வைத்திருந்த ஒரு ஆண்ட்ராய்டு காரன், சங்க காலத்தமிழில் பேசினாலும் துல்லியமாக டைப் செய்துவிடுவான். கெட்டிக்காரன். அவன் ஏழை என்பதாலேயே அவனை அவமரியாதையாக நடத்தியதைக் குறித்து நேற்றிரவு முதல் முறையாக வருத்தப்பட்டு தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்து பார்த்தால் வாட்சப் சேனலில் ஆசிரியர் பராமரிப்புக் கலை கட்டுரையைப் பகிர்ந்து மேக் -கின் உன்னதங்களைப் விதந்தோதியிருந்தார். 

ஆசிரியருக்கு ஒரு கேள்வி. தங்கள் அலைப்பேசியும் ஆப்பிள் தானா? அதில் தமிழில் டைப் செய்வது அல்லது குரல் டைப் செய்வது சிரமமாக இல்லையா? அதற்கு ஒழுங்காக செயல்படாத ஜுபோர்டு (கூகுள் ஆள்) தவிர்த்து வேறு எதாவது நல்ல ஆப்பு இருக்கிறதா?

நான் இன்னும் பாரம்பரியமான பாமினி எழுத்துருவைக் கொண்டு, சன்னல் சுவடிகளில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். 

எனக்கு அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளைக் சிதறாமல் கொட்டி வைக்க வாய்ஸ் டைப் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆப்பிள் போனில் அதை (தமிழில்) செயல்பட வைக்க என்ன ஆப்பு பரிகாரம் செய்யலாம் என்று சொல்லுங்களேன்! புண்ணியமாகப் போகும். 


ஞாயிறு, 20 ஜூலை, 2025

அன்புள்ள எழுத்தாளர் பா.ரா அவர்களுக்கு!

அன்புள்ள எழுத்தாளர் பா.ரா அவர்களுக்கு!

வணக்கம். தங்களது அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற இறைவன் உங்களுக்கு நல்ல உடல், உள்ள நலம் தர வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு பள்ளிக்கூடம். ஒரு கண்டிப்பான தலைமையாசிரியர். காலை மாணாக்கர் கூடுகையின் போது, கூச்ச சுவாபமுள்ள ஒரு மாணவனின் பெயரை கூப்பிட்டு 'முன்னாடி வா!' என்று சொன்னால் எப்படி உணர்வான்? அப்படி ஒரு உணர்வை கடந்த 5 ஆம் தியதி தங்களது வாட்சப் வாய்க்காலில் எனது பெயரைக் கண்டதும் உணர்ந்தேன். 'ஆன்டனி ப்ரான்சிஸ், நான் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் விதத்தில் பதிலளிப்-பாராவுக்குக் கேள்விகள் அனுப்பவும். (ஆனால் திங்கள்தான் பதிலளிப்பேன்.)'

எத்தனை முறை அதை வாசித்தேன் என்று தெரியவில்லை. என்னை யாரும் இந்த அளவிற்கு வியக்க வைத்ததில்;லை. அம்மாவின் அளவுகடந்த அன்பைக் குறிந்து வியத்திருக்கிறேன். கலைஞரின் பன்முக ஆற்றலை, திறனை, உழைப்பைக் குறித்து வியந்திருக்கிறேன். ஆனால் இந்த வாட்சப் வசதியால் தான் உங்களைப் போன்ற மிகவும் தனித்துவமான மாபெரும் ஆளுமையோடு இவ்வளவு நெருக்கமாக உணர முடிகிறது. 

ஏற்கனவே உங்களிடம் சமயம், இறைநம்பிக்கை குறித்தெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கிறேன். அவ்வளவு எழுத்துப்பணிகளுக்கு மத்தியிலும் பதில் வராத கேள்விகளே இல்லை. உங்களது நேரத்தை வீணடிக்கிறேனோ நினைத்திருக்கிறேன். ஆனால் நீங்களோ ஜெயமோகன் அவர்களின் சோத்துக்கணக்கு கதையில் வரும் கெத்தேல் சாகிப் போல கொடுத்துக்கொண்டேயிருக்கிறீர்கள். நாங்கள் பெற்றுக்கொண்டேயிருக்கிறோம். அறிவையும், ஆளுமையையும் கற்றுக்கொண்டிருக்கிறோம். 'அன்னமிட்ட கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே. தாயத்துகட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும், மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை?' என்ற அக்கதையின் இளைஞனாக என்னை உணர்கிறேன். 

பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் என்ற இரு மார்க்கங்களில் ஒருவர் இறைவனை அல்லது மகிழ்ச்சியை அடையலாம் என்ற தத்துவத்தைப் படித்திருக்கிறேன். நீங்கள் ஒரு கர்ம மார்க்கத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி. விளைவுகளைப் பற்றி (போற்றல், தூற்றல், லைக், டிஸ்லைக்) எந்த அக்கறையும் இன்றி, செயல் ஒன்றே என்று ஒன்றிப்போகும் பாங்கு எங்களுக்கும் கொஞ்சம் அமையட்டும். 

அன்பிற்கு நன்றி!

ஆன்றனி பிரான்சிஸ்


புதன், 21 மே, 2025

இருந்தால் தானே கொடுக்க முடியும்! (A healthy Christian is a Joyful Christian)

வாழ்க்கை-னா என்ன? இந்தக் கேள்விக்கு எல்லோரிடமும் ஒரு பதில் இருக்கிறது. எனக்கு அவ்வப்போது ஒரு பதில் தோன்றுகிறது. வாழ்க்கை என்பது ஒரு வட்டம், புதிர் வட்டம், விடுகதை, ஒண்ணுமில்லை என்று எத்தனையோ பதில்கள். அப்படி எனக்கு நேற்று திடீரென்று தோன்றியது வாழ்க்கை-னா ஒரு கொடுக்கல் - வாங்கல் என்று.

அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அழுகை கொடுக்கல் என்றால் பால் வாங்கல். இந்த புரிதலில் தான் வாழ்வின் எல்லா காரியங்களும் அமைந்துள்ளன என்று இன்று மட்டும் நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு நாளை எனக்கு வேறு எதாவது தோன்றாலாம். மிகச் சொற்பமானக் கருத்துக்களில் தான் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. தவிர வேறு எந்தக் கருத்தையும் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்க மாட்டேன். அப்படி ஒரு கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு என்றால் அது மனிதனின் மகிழ்ச்சி சம்பத்தப்பட்டது.  

ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியைத் தேடுகிறான். அதற்காகத் தான் உழைக்கிறான். உண்கிறான். உடுத்துகிறான். மகிழ்ச்சி என்ற ஒன்றை வாங்கத்தான் வாழ்வு முழுவதும் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். நேரம், உழைப்பு, தியாகம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக நாம் செய்யும் அல்லது செய்யாத செயல்கள் அனைத்தையும் கொடுத்து மகிழ்ச்சி வாங்க முயற்சிக்கிறோம். சோம்பேறி கூட தன் செயலின்மையைக் கொடுத்து மகிழ்ச்சி வாங்க காத்துக்கொண்டிருக்கிறான். மகிழ்ச்சிக்கு பல பெயர்கள் உண்டு. உடல் நலம், பணம், செல்வாக்கு, புகழ், அதிகாரம் உட்பட. கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் உட்பட. 

ஆனால் எது மனிதனுக்கு நிலையான மகிழ்ச்சியை அல்லது நிறைவைத் தருகிறது என்பதற்கு இன்று வரையிலும் யாரிடமும் பதிலில்லை. எந்த சூத்திரங்களும் மகிழ்ச்சி என்ற தீர்வைத் துல்லியமாகத் தருவதில்லை. தேர்வுகளின் போது கணித வினாக்களுக்கு சரியான விடை கிடைக்காவிட்டாலும் செய்முறைக்காக ஒரு மதிப்பெண் தருவார்கள் அல்லவா. அதுபோலத்தான் மகிழ்ச்சியும் ஓரளவுக்கு கிடைக்கிறது. கொடுப்பதும், வாங்குவதும் சமமான மதிப்பைக் கொண்டிருப்பதில்லை.

ஒரு திருப்பாடல் ஆசிரியர் 'வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது' என்று கூறுகிறார். கடவுள் ஒருநாள் நம் கனவில் தோன்றி ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். (அ). கோயிலில் வாழ பத்து நாட்கள் அல்லது (ஆ). வேற்றிடங்களில் வாழ பத்தாயிரம் நாட்கள். நாம் எதைத் தேர்வு செய்வோம்? மகிழ்ச்சிக்கானக் கொடுக்கல் வாங்கல்; வணிகத்தில் எல்லோரும் ஒரே கணக்கைப் போடுவதில்லை. ஆனால் மகிழ்ச்சி என்ற ஒரே தீர்வைத்தான் எதிர்பார்க்கிறோம். செய்முறைக்கேற்ற மதிப்பெண்கள் கிடைக்கிறது. 

கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன் என்று புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதியக் கடிதத்தில் சொல்கிறார். தான் எதைக் கொடுத்து எதை வாங்குகிறோம் என்பதில் ஒரு உறுதிப்பாடு அவரிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு தெளிவு இருந்தால் ஏமாற்றங்கள் இருக்காது. சிலர் மண்ணைக் கொடுத்துப் பொன்னை வாங்கலாம். சிலர் பொன்னைக் கொடுத்து மண்ணை வாங்கலாம். கடைசியில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்பது தான் கேள்வி. பவுல் அடியார் அதே கடிதத்தில் பிலிப்பு நகர மக்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகிறார்: 'ஆண்டவரோடு இணைந்து மகிழுங்கள். மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள்'. ஆம் மகிழ்ச்சிக்கானத் தேடலில் உங்கள் கொடுக்கல் வாங்கலை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். 

இந்த மகிழ்ச்சியைக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவில்தான் தேட வேண்டும். அவரது மதிப்பீடுகளை வாழ்வாக்குவதில் தேடவேண்டும். மன்னிப்பது, பணிவிடை செய்வது, தாழ்ச்சியோடு இருப்பது, தியாகம் செய்வது போன்றவை அடிப்படையான படிப்பினைகள். இவற்றைச் செய்தால் (கொடுத்தால்) நிறைவாழ்வை (மகிழ்ச்சியை) அடையலாம் என்பது தான் கிறிஸ்தவம். ஆகவே மகிழ்ச்சிதான் பிறரை ஈர்க்கும் துருப்புச்சீட்டு. “A healthy Christian is a Joyful Christian, even in times of sorrow and tribulation” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஒரு மறையுரையிலே கூறினார். 

வாழ்க்கை என்னும் வணிகத்தில் எதையும் கொடுங்கள்! எதையும் பெற்றுக்கொள்ளுங்கள்! ஆனால் உள்ளத்தின் ஆழத்தில் அடிக்கரும்பின் இனிப்பைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள். இருந்தால் தானே கொடுக்க முடியும்!


வெள்ளி, 9 மே, 2025

உங்கள் செயல்கள் தான் உங்கள் உலகத்திற்கு நீங்கள் முன்வைக்கும் உங்கள் பிம்பம்

உலகம் மிகப் பெரியது தான். நான் அதைப் பற்றிச் சொல்லவில்லை. நான் சொல்லும் உலகம் மிகச் சிறியது. நான் வாழும் இடம். நான் அன்றாடம் புழங்கும் இடம். நான் வளரும் இடம். இங்கு இருக்கும் பெரும்பாலானவற்றை நான் மாற்றிக்கொள்ள முடியாது. என் வகுப்புத் தோழர்கள், என் விடுதி அறையைப் பகிர்ந்து கொள்பவர்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆன்மீகவாதிகள் போன்று என் மேல் உரிமை உள்ளதாகக் கருதிக்கொள்பவர்கள் போன்றவர்களை உள்ளடக்கியது தான் என் உலகம். ஆட்டோ காரனைப் பிடிக்கவில்லை என்றால் பேருந்தில் போகலாம். ஆனால் எல்லா இடங்களிலும் நான் விரும்பும் நபர்களை மட்டும் நான் தேர்ந்து கொள்ள முடியாது.

எனக்கு சிலரைப் பிடிக்கிறது. சிலரைப் பிடிக்கவில்லை. அவர்களுக்கும் நான் அப்படித்தான். என்னைச் சுற்றியிருக்கும் மரம், செடி, கொடிகளைப் போலவே அவர்களையும் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. அனைத்திற்கும் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தால் என் உலகத்தில் அமைதி இருக்காது. வளரச்சிக்கான நேரத்தை உணர்ச்சி எடுத்துக்கொள்ளும். 

வீட்டில் நான் அப்பாவின் இளவரசியாக இருக்கலாம். சமூகத்திற்கு நீங்கள் யார் தெரியுமா? 8.2 பில்லியன் மனிதக் கூட்டத்தில் ஒருவர். பத்து எறும்புகளும் நம் கண்களுக்கு ஒன்றுபோலத்தான் தெரிகிறது அல்லவா? அது போலத்தான் நீங்களும், நானும். ஆனால் நாம் எல்லோருமே நம்மைத் தனித்துவமானவர்களாக, அதைவிடக் கொடுமை பிறரை விட சிறப்பானவர்களாகக் கருதிக்கொள்கிறோம். இதைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் பிறரும் அவ்வாறேக் கருத வேண்டும், நடத்த வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். 

நாம் 'நான்' என்று கருதும், நம் அடையாளத்தின் மீது சின்னச் சின்னக் கீறல்கள் விழத்தான் செய்யும். 'நீ ஒரு பொருட்டே கிடையாது' என்று ஒருவர் சொல்லாம். 'நீ உன்னையே மாற்றிக்கொள்' என்று இன்னொருவர் சொல்லலாம். ஆனால் நான் என்னைப் பற்றி என்ன சொல்கிறேன் என்பதுதான் முக்கியம். அதில் நான் நானே உறுதியாக இருக்கிறேனா என்பது அதைவிட முக்கியம். இந்த என்னைப் பற்றிய அடையாளங்களை இந்த உலகம் ஏற்றுக்கொள்ள அவசியமில்லை. மீண்டும் நினைவுபடுத்துகிறேன். உலகம் என்பது நீங்கள் அன்றாடம் புழங்கும் இடம் அவ்வளவுதான். மற்ற உலகத்திற்கு உங்கள் இருப்பைப் பற்றியே எந்த அக்கறையும் இல்லை. ஆகவே நம் எல்லோருடைய இடமும் மிகச் சிறியதுதான். 

என்னைப் பற்றிய எனது எண்ணங்கள், நான் வைத்திருக்கும் பிம்பங்கள் மிகையானதாகவோ, குறைவானதாகவோ இருக்கும் போது சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உங்கள் உலகம் உங்களைப் பார்ப்பதற்கும், உங்கள் பிம்பத்திற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கும் போது பொருத்தமின்மைகள் ஏற்பட்டு உள்ளும், புறமும் சமநிலை குலைகிறது. உறவுச்சிக்கல்கள் ஏற்படுகிறது.

காலும், காலணியும் சரியாக பொருந்தினால்தான் பயணம் எளிதாக அமையும். அது போல நம்மைப் பற்றிய நம் பிம்பங்களும், நமது உலகத்தின் ஏற்பும், விலகலும் அதிகமாக முரண்படாத போது உறவுகள் எளிதாக அமையும். அப்படியென்றால் நமது அடையாளங்களை எப்படி உருவாக்குகிறோம் என்பது முக்கியம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான். ஆனால் காக்கைக் குஞ்சுகள் வளர்ந்த பிறகு, தான் மின்னிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? ஆகவே பிள்ளைகள் வளரும் போது தங்களைப் பற்றி யாரோ சொன்னவைகளைக் கொண்டு தங்கள் மன பிம்பங்களை உருவாக்கக் கூடாது. மாறாக தனது அன்றாட செயல்களைக் கொண்டே உருவாக்க வேண்டும். உங்கள் செயல்கள் தான் உங்கள் உலகத்திற்கு நீங்கள் முன்வைக்கும் உங்கள் பிம்பம். உங்கள் எண்ணங்கள் அல்ல.