கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 அக்டோபர், 2025

நீதி மறுக்கப்பட்ட பெண்ணொருத்தி

இது இலையுதிர் காலம்

இல்லையா நண்பர்களே!

உதிர்வன இலைகள் மட்டும்தானா?

இரவுகள் உதிர்கின்றன

உறவுகள் உதிர்கின்றன

பகல்கள் உதிர்கின்றன

பருவங்கள் உதிர்கின்றன

பொய்க்கின்ற நம்பிக்கைகளின்

உதிரிச் சருகுகளானதுதானே

பொக்கிஷமாய் நாம் கருதுமிந்த வாழ்க்கை!


தனித்திருக்கும் ஒருத்தி

அர்த்தம் தேட ஆசைப்படுகிறாள்

இராத்திரிகளின் புழுக்கத்தில் 

நித்திரை கொள்ளாது

நீதி வேண்டுகிறாள்!


காலைப்பூசையில் நீங்கள் கேட்ட

கைம்பெண்ணைப் பற்றித்தான் புலம்புகிறேன்

நீதி பரிபாலனைகள் புரியுமிடத்திலிருப்பவர்கள்

இரக்கமின்றி அவளைப் புறக்கணிக்கிறார்கள்

கேட்காதது போல, பார்க்காதது போல

முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்

வரலாறு முழுவதும் கேட்டக் கதைதானே!


சமாரியப் பெண்

சாமானியப் பெண்

சிவந்த குருதிப்போக்கினால் 

சங்கடமாகிப் போனப் பெண்

செல்ல மகனை இழந்த விதவைப் பெண்

எல்லாக் கையிருப்பையும் காணிக்கையிட்டப் பெண்

கண்ணீரினால் கழுவி, தலைமுடியால் துடைத்தப் பெண்

நானும் உன்னைத் தீர்ப்பிடவில்லை என்றதும்

விசும்பி அழுது திரும்பிச் சென்ற பெண்

இன்றைய விலையில் தங்கம் போன்ற 

ஒரு தைலத்தைக் கவிழ்த்துப் பூசி அன்புசெய்த பெண்

பாலூட்டிய பெண்

பாலுட்டியவள் பேறுபெற்றவள் என்று சொன்ன பெண்

செவிகொடுத்த பெண்

சேவை செய்த பெண்

சிலுவையின் கொடிய பாதையில் 

அச்சமின்றி அவர் முகம் துடைத்த பெண்

சூரியன் உதிக்கும் முன்னே

கல்லறைக்குக் காணச் சென்ற பெண்

இயேசுவின் வாழ்வில்தான் எத்தனைப் பெண்கள்!


நீதி மறுக்கப்பட்ட பெண்ணொருத்தி

எங்கள் ஊரிலும் இருந்தாள்

அவள் இருந்த ஊரையே எரித்தாள்

அவளும் கைம்பெண்தான்!


கொழுந்து இலைபோன்ற சின்னஞ்சிறுமி

நேற்று பெருநகரம் ஒன்றில் வன்புணரப்பட்டாள்

அவளை எரித்த நெருப்பில்

அந்த நகரம் கொதித்தது

நடந்த சேதாரங்களுக்கு நீதிமன்றங்கள்

ஆதாரங்களைக் கேட்கின்றன

ஏதோவெரு மிருகம் இரத்தவேட்கையோடு

சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது


ஆதாரங்களைத் தரவேண்டியவர்கள்

கொரோனா விதிமீறிய குற்றத்திற்காக

அப்பாவிகளின் மலக்குடலில்

லத்திகளைச் செலுத்தி தேடிக்கொண்டிருக்கிறார்கள்!


ஊரை எரித்தேனும் நீதியைப் பெற்ற நம் ஊரில்

என் எதிரியைத் தண்டித்து

எனக்கு நீதி வழங்கும் என்ற அபயக்குரல்

நீதியின் பலிபீடங்களைத் 

தொந்தரவு செய்துகொண்டேயிருக்கின்றன!


ஞாயிறு, 26 மார்ச், 2017

அதிகாரத்தின் ருசிதான் என்ன?

அதிகாரத்தை மனிதன் ஏன்
நேசிக்கத் தொடங்கினான்
நேசிப்பதற்கு அழகாக
இன்னும் எவ்வளவோ இருக்கும் போது!
கோரைப் பற்களோடு
அதன் பின்னால் அலைவதற்கு
அதிகாரத்தின் ருசிதான் என்ன?

புதன், 8 பிப்ரவரி, 2017

பூக்களை உருவாக்கிய சாதனை ஆடுகள்

தற்செயலாக பழைய கோப்புகளைக் கணிணியில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பழைய மறையுரைச் சிக்கியது. திருச்சி திருச்சிலுவை மகளிர் கல்லூரியில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் இரண்டு பேராசிரியைகளுக்காக நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்க என்னை அழைத்திருந்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுதான். இருந்தாலும் இந்த எழுத்து நம் வலைப்பூவில் பகிரத்தக்கதே என்ற எண்ணம் தோன்றியது. வாசித்துப்பாருங்கள்... உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு ஆசிரியரை மனதில் நினைத்துக்கொண்டு! 

பேராசிரியைகள் ஓய்விற்கான திருப்பலி மறையுரை
போராசிரியைகள்: திருமதி பியூலா மோசஸ், திருமதி ஜோஸ்பின் லீலா
வாசகங்கள்: யோசுவா 23:2-9, திருத்தூதர் பணிகள் 20:17-24, யோவான் 13:31-35

கிறிஸ்து இயேசுவில் மிகவும் அன்பிற்குரியவர்களே! இன்றைய விழா நாயகர்களாக வீற்றிருக்கும் பேராசிரியைகள் இருவருக்கும் எனது செபம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

'மொழியாய் முதிர்ந்தது ஒலி,
கவியாய் முதிரந்தது மொழி,
என்னவாய் முதிரும் கவி?' 
என்று கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையிலே வினா எழுப்புகிறார். என்ன அர்த்தம்? ஒலியின் உச்சம் மொழி. மொழியின் உச்சம் கவி. அப்படியென்றால் கவியின் உச்சம் என்ன? இப்போதைக்கு கவிதான் மொழியின் உச்சமாக இருக்கும் பட்சத்தில் 36 வருடங்கள், 34 வருடங்கள் என்று பணியின் உச்சத்தை எட்டியிருக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கு என் எளிய பரிசு இக்கவி!

மந்தையில் இரண்டு ஆடுகள்
புற்களை மேயும் சாதராரண ஆடுகளல்ல
பூக்களை உருவாக்கிய சாதனை ஆடுகள்

கண்மை காலத்தில் பணியேற்று
கடவுள் துகள் காலத்தில் விடைபெறுகிறார்கள்
சகாப்தங்கள் பல பார்த்த சாதனையாளர்கள்

'எமர்ஜென்சி' இவர்களை உள்ளே தள்ளியது
'எலெக்ஷன்' இவர்களை வெளியேற்றுகிறது
கல்வி தியாகிகள்

வானொலி பிள்ளைக்கும்
வாக்மேன் பிள்ளைக்கும் 
வரலாறு படைக்க வழிகாட்டியவர்கள்
வழி நெடுக வலி பார்த்தவர்கள்

நாம் கற்கையில் 
அவர்கள் நிற்கிறார்கள்
வாழ்வில் வளமாகி நாம் நிற்கையிலும்
அவர்கள் கற்கிறார்கள்

வளாகத்தில் நிழற்பரப்பும்
விளாக மரங்கள்
இவர்களுக்கு விதையிலேயே அறிமுகம்!
வகுப்பறையில் கற்பித்தாலும்
எத்தனை தேசங்களில் பரவியதோ
இவர்கள் கற்பித்தலின் வாசனை

எத்தனை ஆசிரியர்களுக்கு
பதியமிட்டதோ இவர்களது வகுப்பறை
இவர்கள் இருவரும்
பக்கக்கன்றுகளுக்கு  உயிரூட்டிய தலை வாழைகள்

எத்தனை வீடுகளில்
விளக்கேற்றியிருக்கும்
இவர்கள் கை பிடித்து கற்பித்த
வளை கரங்கள்
வாழ்க நீவீர்! பல்லாண்டு பாரினில் புகழோடு!

அன்பிற்குரியவர்களே! கடவுள் எப்படி இருக்கிறார் தெரியுமா?
-சின்னக்குறிப்பிடத்தில் படித்திருப்பீர்கள். தாமாக இருக்கிறார். தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார் என்று.
-சைவ மதத்தை பின்பற்றும் தொண்டர்களைக் கேட்டால் சொல்வார்கள். கடவுள் சிதம்பரத்திலே நடராசராக நடனமாடிக்கொண்டிருக்கிறார் என்று. நடனம் என்பது கடவுளின் இயக்கத்தை குறிக்கிறது.
-வைணவ மதத்தைப் பின்பற்றும் அன்பர்களைக் கேட்டால் சொல்வார்கள். கடவுள் ஸ்ரீரங்கத்திலே பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார் என்று. பள்ளிகொண்டிருத்தல் என்பது சயன நிலை. அதாவது உறக்க நிலை.

ஒரே கடவுள் ஒரே நேரத்தில் இயக்கமாகவும் இருக்கிறார். ஓய்வு என்னும் உறக்கமாகவும் இருக்கிறார். பணியும் ஓய்வும் வேறு வேறானதல்ல. இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும், சார்ந்தும் பிரிக்க இயலாததுமாய் இருக்கின்றது. எனவே இங்கு நடைபெறும் நிகழ்வானது உங்கள் பணியின் முடக்கமல்ல. இன்னொரு பணியின் தொடக்கமேயாகும்.
பணியும், ஓய்வும் மாறி, மாறி வந்தாலும் ஒன்று மட்டும் மாறாதது என்று நம்மால் உறுதிபடக் கூறமுடியும். அது என்ன தெரியுமா? தேனினுமினிய இயேசுவின் நாமம்.

விவிலியத்திலே இயேசுவுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் என்ன? 'இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அவருக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவீர்'. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது பொருள். 

அவர் நம்மோடு இருப்பதால் தான் அவரைப் பற்றிய நினைவுகள் நம் நெஞ்சை விட்டு நீங்குவதில்லை. 
நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில், பாவிகளோடும், சீடர்களோடும் சேர்ந்து உணவுண்டு மகிழ்ந்த இயேசு நம்மோடு இருக்கின்றார்.
நம்முடைய வாழ்வில் நாம் சவால்களை சந்தித்த தருணங்களில் வாழ்வு முழுவதுமே சவால்களை சந்தித்த  இயேசு நம்மோடு இருக்கின்றார்.
நம்முடைய வாழ்வில் நாம் சாதனைகள் புரிந்த துருணங்களில் 'இவரே என் அன்பாரந்த மகன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று தந்தையால் பாராட்டப்பெற்ற இயேசு நம்மோடு இருக்கின்றார்.
நம்முடைய வாழ்வில் நாம் சரிந்து விழுந்து கடுந்துயருள்ள வேளைகளில் 'என் இறைவா! என் இறைவா! ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர்!' என்று சிலுவையிலே கதறிய இயேசு நம்மோடு இருக்கின்றார்.
துன்பங்கள் கடந்து பின் வாழ்வு ஒளிபெறுவதை உணர்ந்து கடவுளன்பை நாம் சுவைத்த தருணங்களில் உயிர்த இயேசு நம்மோடு இருக்கின்றார்.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் விவிலியம் முழுவதுமே நமக்கு உணர்த்தும் பாடம். திருப்பாடல் 121 இல் அதன் ஆசிரியர் ஒரு வினா எழுப்புகிறார்.

'மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகிறேன்!. எங்கிருந்து எனக்கு உதவி வரும்? என்று. பின் அவரே பதிலளிக்கிறார்
'விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை. ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.'

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று உணர்ந்து துணிவோடு வாழ்வை எதிர்கொண்டவர்கள் தான் விவிலிய மாமனிதர்களாகிய ஆபிரகாம், மோசே, இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்ட யோசுவா, சாமுவேல், தாவீது போன்றவர்களெல்லாம்.

நீங்கள் பிறந்ததிலிருந்து பணியேற்ற நாள் வரையிலும், நீங்கள் பணியேற்ற நாளிலிருந்து பணி உச்சமடைந்த இந்த நாள் வரையிலும் உங்களோடு இருந்த அதே கடவுள் தான் இனிவரும் காலமும் உங்களோடு இருப்பார் என்பதை உணர்த்தவே இந்த விழா!

வாசன் ஐ கேர் விளம்பரத்திலே வரும் ஓர் அருமையான வசனம் 'நாங்க இருக்கோம்'
இது நாள் வரையிலும் இந்தக் கல்லூரியிலே கற்பித்தாலாக இருக்கட்டும், வழிகாட்டுதலாக இருக்கட்டும், நாட்டு நலப்பணித்திட்டமாக இருக்கட்டும், துறைத் தலைவர் பணியாக இருக்கட்டும் இன்னும் கல்லூரியின் பல்வேறு விழாக்களாக இருக்கட்டும் 'நாங்க இருக்கோம்' என்று முன்வந்து உழைத்து, உழைத்து தங்களையே உருக்கி உருக்கி எத்தனையோ மாணவியரின் வாழ்வைச் செதுக்கியிருக்கும் பேராசிரியர்களைப் பார்த்து நாம் கூற வேண்டிய தருணம் இது:    'நாங்க இருக்கோம்'. 

வெறும் வார்த்தைகளால் அல்ல: 'நான் உங்களிடையே அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்று இயேசு கூறிய அன்புக் கட்டளையை வாழ்வாக்குவதன் மூலம் நாம் இயேசுவின் சீடர்கள் என்று தொர்ந்து உலகிற்கு எடுத்துரைப்போம். 

நமது அன்பானது சாதி, மத, இன, நிற, பாலின வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற புரிதலை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டியும், இன்று பணி உச்சமடைந்து ஓய்வின் மூலம் மிச்சப்பணியாற்ற கல்லூரி என்னும் எல்லைகளைக் கடந்து செல்லும் இரு போரசிரியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கடவுள் இடமும், வலமும் இருந்து பாதுகாத்து, பராமரிக்க வேண்டியும் அவர்கள் மனதிலே நினைத்து வைத்திருக்கின்ற காரியங்கள் நிறைவேற வேண்டியும் இத்திருப்பலியிலே தொடர்ந்து செபிப்போம்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

இன்றைய அருட்பணியார்களிடம் இளைஞர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

தூய பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் படித்துக் கொண்டிருந்த போது இளையோர் மேய்ப்புப் பணி என்ற சிந்தனையில் ஒரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. சலேசிய அருட்பணியாளர்களால் வழிநடத்தப் பட்ட அந்நிகழ்விற்கு பங்குகளிலிருந்து இளைஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர் அவர்களின் பங்குத்தளங்களில் நடைபெறும் இளையோர் செயல்பாடுகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். ஒரு இளைஞர் தான் தன்னை வழிநடத்தும் அருட்பணியாளரிடம் எதிர்பார்ப்பது என்ன என்று கவிதை வடிவில் பகிர்ந்து கொண்டார். ஒரே அச்சில் வார்க்கப்பட்ட தலையாட்டி பொம்மைகள் போல நாட்கள் புதுமைகளற்றுத் தோன்றும் போது, என்னைத் தூசு தட்டுவதற்கு இக்கவிதையைப் பயன்படுத்துகிறேன். நன்றி நண்பரே! இக்கவிதை பூஞ்சைத் துடைப்பம் அல்ல. நல்ல குச்சி வெளக்குமாறு! மொத்தத்தில் இது ஒரு சுயவிமர்சனமே!

நீங்கள் இயேசுவைப் போல அல்ல
இயேசுவாக வாழ அழைக்கப்படுகிறீர்கள்
சிதைந்து போய்க்கொண்டிருக்கும் இந்த
மனித சமுதாயத்திற்கு உங்களைப் போன்ற
சீர்திருத்தவாதிகள் அவசியம் தேவைப்படுகிறார்கள்

மக்கள் பணத்தைக் கொண்டு மப்பில் மிதக்கின்ற
மடத்தனமான அரசியல் வாதிகளைப் போல
அடித்தட்டு மக்களின் அவலங்களை
அடையாளம் காட்டி
பணத்தைப் பெற்று பகட்டு வாழ்க்கை வாழும்
பிணந்தின்னிக் குருக்களைப் பார்க்கும் போது
இளைஞர் எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

ஃபாரின் சென்று பட்டப்படிப்புகள் பல முடித்து
பந்தங்களையும் சொந்தங்களையும்
பங்குப்பணத்தில் வாழவைத்துவிட்டு
பாமரர்களின் வயிற்றிலடிக்கும் பணியாளர்களைப் பார்க்கின்ற போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

செபமாலை உருட்டியக் கரங்களில் இன்று
செல்போன்கள் விதவிதமாய்
மறைநூல் தவழ்ந்த மடிகள்
இன்று மடிக்கணினிகளின் பிடியில்
திருவிருந்தைச் சிறப்பிக்க திருநிலைப்படுத்தப்பட்டவர்கள்
பெருவிருந்தில் மட்டுமே முன்னிலையில் பங்கெடுப்பு
இது போன்றக் காட்சிகளைப் பார்க்கின்ற போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

கள்ளக் காதலும் காதலித்து கற்பமாக்கிக் கைவிடுதலும் இன்றையக்
கலியுகத்து ஆண்களின் கைவந்தக் கலையாக இருக்கின்ற போது
அருள்பணியாளர்களும் துறவிகளும் இதில்
அளப்பரியச் சாதனை படைத்து வருவதைப் பாரக்கும் போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

பொன்னும் பொருளும் போதையும் ராதையும்
உங்கள் வாழ்வாகிப் போனால்
இயேசுவின் பாதையில் எம்போன்றோரை
வழிநடத்திச் செல்வது யார்?
சிக்சர் அடிப்பவர்களையும்
சிக்கென பஞ்ச் டயலாக் பேசும்
சினிமா கலைஞர்களையும்
தலைவர்களாய்ப் பாவித்து
தலைவிரிக்கோலமாய் அலைகின்ற
அந்நிய மயமாக்கலால் அலைக்கழிக்கப்பட்டு
ஆன்மீக வாசனையே அற்றுப்போன
தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தங்களைத் தொலைத்துவிட்ட -இளையோருக்கு
புரட்சியாளர் இயேசுவை எப்படி அடையாளம் காட்டப் போகிறீர்கள்?

அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை -வாழ்வில்
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
அருள்பணி வாழ்வு என்பது இக்காலத்தில்
சந்தி சிரிக்கின்ற பந்தா வாழ்வா - அல்லது
சரித்திரம் பேசும் தரித்திர வாழ்வா
இளையோராகிய எங்களுக்கு எப்படி உணர்த்தப் போகிறீர்கள்?

ஏழைகளின் வாழ்வு மிளிர
சமத்துவ சமுதாயம் மலர
சாதியத்தை ஒழித்து
நீதி தழைக்க
அரிதாரம் பூசியவர்களாக அல்ல
அவதாரம் எடுத்திடுங்கள் இயேசுவாக

இளைஞர்களை வழிநடத்த வாழ்வை உணர்த்த
இளைய குருக்களாகிய நீங்கள் அவசியம் தேவை
இயேசுவைப் போல அல்ல
இயேசுவாக வாழ

வெண்ணிற அங்கியும் அதிகாரமுமல்ல குருக்களின் அடையாளம்
ஏழ்மையும் எளிமையும் உண்மையும் உறுதியுமே உங்கள் உடைமையாகும்
திருநிலைப்படுத்தப் போகும் நீங்கள் முதலில்
உங்கள் மனதை ஒருநிலைப்படுத்துங்கள்
உலக மாயைகளில் உங்களைத் தொலைத்துவிடாமல் இருக்க
இயேசுவின் வார்த்தைகள் உங்கள் இடைக்கச்சையாகட்டும்
இறையன்பும் பிறரன்பும் உங்கள்
அருள்பணியில் படைக்கலனாகட்டும்
நன்னெறி கற்பித்தலும் நல்வழிகாட்டலும்
உங்கள் உன்னதப் பணியாகட்டும் - வெறும்
வார்த்தையால் மட்டுமல்ல - உங்கள்
வாழ்வின் வழியாக

பணத்திற்கும், பதவிக்கும்
பட்டத்திற்கும் சாதிக் கூட்டத்திற்கும்
சமரசம் செய்பவர்களாக அல்ல
உண்மைக்கும் நீதிக்கும்
உயிர் கொடுப்பவர்களாக
அநீதி கண்டு பொங்கி எழுந்த
அன்பர் இயேசுவாக
உங்களைக் காண ஆசைப்படுகின்றோம்

விலையுயர்ந்த ஓட்டல்களை நோக்கி அல்ல உங்கள் பாதங்கள் - வாழ்வில்
நிலைகுலைந்த ஓட்டை வீடுகளை நோக்கிச் செல்லட்டும்
எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்க
ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு பெற
குருத்துப் பணி மக்களின்
மனங்களைச் சீர்படுத்தும் மருத்துவப்பணி - எங்களுக்கு
இந்திய அரசும் வேண்டாம்
தமிழக அரசும் வேண்டாம்
இறையரசு இம்மண்ணில் மலர வேண்டும்

ஏழ்மையும் எளிமையும்
உண்மையும் மனிதத் தன்மையும்
உங்களில் வெளிப்பட
செபவாழ்வும் பணி வாழ்வும் எளியோர்க்குப் பயன்பட
இறையரசை இம்மண்ணில் அமைக்க
இயேசுவைப் பேல அல்ல
இயேசுவாகவே வாழ

இளையோராகிய எங்களின்
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

வெள்ளி, 18 மார்ச், 2016

தீர்த்துக்கொள்வதென முடிவான பிறகு...

தீர்த்துக்கொள்வதென முடிவான பிறகு
பேசித் தீர்த்தாலென்ன?
பேசாமல் தீர்த்தாலென்ன?

நாவினால் சுட்ட வடுக்களை விட
ஆழமாயிருக்கின்றன
சுடாமல் விட்ட வடுக்கள்

எப்போதும் இருந்ததேயில்லை
வார்த்தைகளே இல்லாத
ஒரு தூய மௌனம்
பேசாத வார்த்தைகளே
மௌனம்

அவை பேசிய வார்த்தைகளை விட
இரைச்சலாய் இருக்கின்றன
மெல்ல முடியாதவாறு
கனமாய் இருக்கின்றன

இல்லாமல் போகட்டும்
அமைதியைக் குலைக்கும்
உக்கிரமான மௌனங்கள்!

சனி, 1 நவம்பர், 2014

ஞானம்! (Wisdom)

ஒவ்வொரு மொளனங்களும்
ஏதோவொன்றை பேசிக்கொண்டுதானிருக்கின்றன

ஒவ்வொரு கலகங்களும்
அமைதியையே முன்னிறுத்துகின்றன

ஆலய மணிகளுக்குப் பின்னும்
பாவங்கள் ஓலமிடுகின்றன

அறியாமை என்று விரல் நீட்டும் போது
அது நம்மையே குறிக்கலாம்

பன்மையைக் கற்றுக் கொள்வதே
ஞானம்!

திங்கள், 24 மார்ச், 2014

மரி'யாள்
யாழ் கொண்டுதானே
இசை மீட்டுவர்!
என்ன ஆயிற்று கடவுளுக்கு?
மரி'யாள்' கொண்டு மீட்டுகிறார்
இயேசு என்னும் இசையை...

கைதேர்ந்த கலைஞன்
விரலுக்கு வீணை அடிமை
கடவுளுக்கு அன்னை மரியாள்!

உயிர் வளி ஊதி
விரல் செய்யும் வித்தையில்
நாத சுர ஜனனம்
கடவுளின் ஆவிக்கு
அஞ்சல்காரனோ கபிரியேல்!

மரிமலர் தரித்த கர்ப்பத்தில்
பனிமலர் பிறந்த அதிசயம்
பாலன் இயேசு!

கனி ஒன்றைத் தாங்கி
கனிவோடு சென்றதோ
பூமரம்!
பகலவனைச் சுமந்து
பணிசெய்யச் சென்றதோ
பனித்துளி!
அன்னை மரியாள்
எலிசபெத்தை சந்திக்கிறார்
ஆண்டவரின் அலைவீச்சில்
சிணுங்கும் அலைபேசியாய்
எலிசபெத் வயிற்றில் யோவான்

பழுத்த இலை
பச்சை இலையை வாழ்த்த
பாடுகிறது பச்சை இலை
படைத்தவனைப் புகழ்ந்து!

இறைவா நீர் போற்றி!
இரவு நேர தடாகம் நான்
நிலவு உம் ஒளி தாங்கி நிற்கிறேன்
இனிவரும் கவிஞரெல்லாம்
இந்தக் குளத்திற்குமன்றோ
பா பாடுவர்

தரைநோக்கும் மொட்டுக்கள்
உம் ஒளிபட்டு மலராகி மகிழ
செருக்கோடு வான் நோக்கும் புற்கள்
உம் வெப்பத்தால் பதராகி போனதுவே!
வாக்கு மாறாத தந்தையே

நீர் வாழிய! வாழியவே!

சனி, 3 மார்ச், 2012

சுவர்க் கோழியும், கைப்பிடியளவு வெளிச்சமும் (The Death of the Tamilians)

பின்னிரவு முடியும் கருக்கலில்
கைப்பிடியளவு வெளிச்சம் முளைத்து
ஊருக்குள் கூவு என
சுவர்க்கோழியிடம் சொன்னது!

அதிர்ச்சியூட்டும் செய்திகளில்
பாதிக்கப்படுவோர் இருப்பின்
கேட்பதைத் தவிர்ப்பது நலம்
என்றது வெளிச்சம்

அதிர்ச்சியடைந்தது கோழி
இந்த ஊரிலாவது அதிர்ச்சியாவது?

குஸராத்தில் வேண்டாம் என்றான்
கேரளத்தில் விரட்டி விட்டான்
வந்தோரை வரவேற்கும் இந்த ஊரில்
யாருக்கும் அதிர்ச்சியில்லை
அணுஉலை வந்தபோது!

பார்க்கும் தூரத்தில்
ஓரினம் ஒழிந்த போது
பழையத்துணி போலக் கிழிந்த போது
உடையோடு உடல் கீறும்
முள்ளிவாய்க்காலின் முனங்கல் கேட்டபோது
யாருக்கும் அதிர்ச்சியில்லை
செத்தவன் தமிழன்தானே!

யாரைக் கொன்றாலும்
கருணைக்கு இடமுண்டு
நீங்கள் தமிழன் இல்லையென்றால்
என்ற முடிவை எதிர்த்து
முத்துக்குமரன் செத்தது போல
தன்னை எரித்துச் செத்தாள் செங்கொடி
என்ற  செய்தி கேட்டும்
யாருக்கும் அதிர்ச்சியில்லை
கேட்டால் யார் அந்த செங்கொடி என்பர்!

எல்லை கடந்த ஆழியின்
சுனாமி என்னும் கொடும்பசியினும்
அதிகமாக பெருகும் இலங்கைப் பினாமிகளின்
குருதியின் மீதானத் தீராப்பசிக்கு
குதறப்பட்ட தமிழ் மீனவர்களின் ஈரசடலங்களில் வீசும்
சவநெடியின் வீச்சமறிந்தும்
இங்கு யாருக்கும் அதிர்ச்சியில்லை
எல்லை கடந்தால் இப்படித்தானென்று எடுத்துக்கொள்வர் போல..

இடிபோல எதிரி இருப்பினும்
இடிச்ச புளி போல இருந்தே
பழகி விட்டோம்
கரகரத்தது சுவர்க்கோழி

புளி, கார திருச்சபையின்
எதிர்வினை பற்றி
விளக்கம் கேட்டது வெளிச்சம்
பேசாமலே இருந்தது சுவர்க்கோழி

எச்சரிக்கை
சுவர்க்கோழியின் செவிகளைச் சுட்ட
கையளவு வெளிச்சத்தின் வெப்பம்
எதிர்வினைகளின்றி சோம்பும்
யாரையும் சுடக்கூடும்!

தமிழனே உனக்கு நுறு சூடு
நல்ல மாட்டுக்கு
மட்டும் தான் ஒரு சூடு

எதையேனும் தின்னும் வெறியைக் கூட்டிக்கொள்ள
தவக்கால ஒடுக்கங்களில்
செயற்கையானக் கொடும்பசிகளில்
மாமிசருசி பெருகும்படியாய் உங்கள்
கோரைப்பற்களைத் தீட்டிக்கொள்பவர்களெனில்
கை நிறைய உப்பை அள்ளித் தின்றுபாருங்கள்
கொஞ்சமேனும் சொரணை வரக்கூடும்

காவிரிநீர், ஈழப்போர்,
அலைக்கற்றை ஊழல்,
முல்லைப்பெரியாறு அணை,
கூடங்குளம் அணுஉலை
ஒன்றிலும் ஒன்றுபடாத இனமே
ஒன்றாக வீசாதக் காற்றை
புயல் என்பவன் மூடன்

ஒன்றுபடக் கூவு சுவர்க்கோழியே
தமிழன் ஒன்றுபடக்கூவு
தின்று விட எண்ணும் பேதைக் கூட்டம்
இன்றே சென்றுவிடக் கூவு

வந்தேறி வாதையெல்லாம்
வெந்துவிடக் கூவு
அழிக்கும் அணுஉலையே
அவிந்துவிடக் கூவு

ஏமாற்றும் அரசுகளை
நீ மாற்றக் கூவு
ஏமாறும் எம்மக்கள்
பாராளக் கூவு...

இறையரசு வேட்கையுடன்
பிரான்சிஸ்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

ஒரு உயரதிகாரியின் நலவிரும்பியாக நீங்கள் விரும்பிய கணத்தில்...!



ஒரு உயரதிகாரியின்
நலவிரும்பியாக
நீங்கள் விரும்பிய கணத்தில்...!
... எச்சரிக்கை
உயரதிகாரியின்
நலவிரும்பி வருகிறான்
என்ற சமிக்ஞைகள் பரவும்

உயரதிகாரியின்
உளம் விரும்பாத படி
எதுவும் நடந்துவிடுவதை
தடுப்பதில் எப்பொழுதும் கவனம்

உயரதிகாரியின் முகவரியோடு
முக வரிகளையும்
வாசிக்கத் தெரிந்திருப்பது அவசியம்
அப்பொழுதுதான்
உங்கள் கண்ணாடி அறையைப்
பார்க்கத் திரும்புமுன்
அவர் முன் நீங்கள் செல்லமுடியும்

உயரதிகாரி நட்பு மனநிலையில்
இருக்கும் போது நட்பாகவும்,
அவரது மற்ற ஏனைய மனநிலைகளின் போதும்
நட்பாகவேயிருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்

இது குறித்து சக அதிகாரிகளின்
ஏளனப் பார்வைகளை
எதிர்கொள்ளும் வாதங்களைத்
தயாராக வைத்திருப்பது நலம்

இல்லையென்றால்
உயரதிகாரியின் நலவிரும்பியாக இருப்பதில்
என்ன திருப்தி கிடைக்கப் போகிறது?

அனைத்திலும் முக்கியம்
உயரதிகாரியின் நலவிரும்பியாக
நீங்கள் விரும்பியக் கணத்திலிருந்து
இடைவிடாமல்
அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்

உயரதிகாரியின்
நலவிரும்பியாக
நீங்கள் விரும்பியக் கணத்தில்
மீண்டும் இதை நன்றாக
மனப்பதியம் செய்வது அவசியம்

அன்புடன்
யாரோ.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு (A MODERN EVIL CALLED FDI)

காடு கழனிகளிலிருந்து
மாடுகளை அனுப்பிவிடுங்கள்
வெள்ளைக்கார மாடுகள்
மேய வருகின்றன
உங்கள் வயிறுகள்
காய வருகின்றன

சில்லறை வணிகத்தில்
அந்நிய முதலீடு
ஆனை கட்டி போரடித்து
போரடித்து விட்டது
இனி அம்பானி பார்த்துக்கொள்வான்

"யூதரென்றும், கிரேக்கரென்றும் இல்லை"
சாத்தான்களுக்கு இதைச் சொன்னது யாரோ?
தின்று கொழுத்த அமெரிக்கனென்றோ
மண்ணைத் தின்னும் சோமாலியனென்றோ
செரிக்க நடக்கும் வெள்ளையனென்றோ
சேரியில் சாகும் சாமானியனென்றோ
பிரிவுக் கொடுமை இனியும் இல்லையாம்!!!
உலகக் கிராமத்தில் நீயும் நானும் ஒண்ணு
 நம்பும் உன் வாயில் மண்ணு!

அரசின் அடிமையாக சில காலம்
அரசியின் அடிமையாக இன்னும் சில காலம்
இன்று அமெரிக்க அடிமையாகிப் போன
ஒரு தலைவன் வெட்கமின்றி சொல்கிறான்:
'வால்மார்ட்' வருக! வருக!
'மெகா' உங்கள் சகா!
'டெஸ்கோ', 'கேரிப்போர்'
நமக்குள் என்ன சொற்போர்?
கொள்வார் இருக்க
கடைவிரிக்க தடைவிதியேன்!

பசிலிக் கீரையும்
சிட்டுக்குருவி லேகியமும்
இனி காந்தி மார்க்கெட்டில் கிடைப்பதில்லை
காந்திக்கே இங்கு மார்க்கெட் இல்லை
என்ன சரக்கோ
வா! வால்மார்ட்டுக்கு!

 வெள்ளையன் துணியை
வீதியில் எரிப்போம்
அந்நியப் பொருளை
ஆழியில் வீசுவோம்
சொந்தச் சந்தையை
தூக்கி நிறுத்த
சுதந்திரப் போரில் ஒன்றுபடு
சுதேசியாக வென்றுவிடு

'சுதேசி! சுதேசி! என்று
சொன்னவன் செத்தான்
மற்றவன் அதனை மறந்துவிட்டான்!
அரை மீட்டர் கொடி காக்க
அடிப்ட்டு செத்தான் ஒருத்தன்
செக்கிழுத்து மாண்டான் மடையன்
கதர்! கதர்! என்று
கதற கதற கத்தினான் கிழவன்
தண்டி வரை நடந்தானாம்
உப்பு காய்ச்சி விளையாட!

எல்லாம் தப்பாகி விட்டது
தலைவர்களே! தியாகிகளே!
உங்கள் இரத்தத்தை
நாங்கள் அடமானம் வைத்துவிட்டோம்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டோம்
கவலை உனக்கில்லை என்பதை மட்டும்
இந்த நாட்டில் ஒத்துக்கொள்ள முடியவில்லை
குறுதி ஊற்றி விளைத்த பொருளை
விற்பனை செய்வது
கற்பனை தானோ?
கண்ணீருடன் சொல்கிறேன்
அந்நிய முதலீட்டை
அனுமதித்துவிட்டால்
கதியொன்றுமில்லை - நாம்
கரை சேர்வதில்லை

அந்நிய முதலீட்டை அனுமதிப்பதும்
என் மனைவியை கொஞ்ச நாள்
நீ வைத்துக்கொள் என்று
அமெரிக்கனிடம் விடுவதற்கும்
பெரிதாக எந்த
வித்தியாசமும் இல்லை

இலஞ்ச ஊழல் பெருச்சாளிகளின்
பண முதலைகளின்
அராஜக, மக்கள் விரோத
கொடுங்கோல் காங்கிரஸ்
ஒழிந்து போக!
சேர்ந்து சபிப்போம்.

திங்கள், 14 நவம்பர், 2011

தீமை எரிக்க...வாழ்க்கை விளக்க

எதையோ ஒன்றை
சுட்டுவதாய்
உன் விழிச்சுடர்!
சுடுபடு பொருள் அறியேன்...
தெளிந்த உன் கண்களே
என்னைக் குழப்புகின்றன

எந்த சூட்சுமத்திலும்
பிடிபடவில்லை
உன் அடையாளம்
ஆணோ, பெண்ணோ
அறுதியிட இயலாது
நீயே நிற்கிறாய்
ஏதோ ஒன்றின் அடையாளமாய்!

உலக உலையில்
வெந்து தணிந்த முதுமை
உரித்துபோட்ட பாம்பின் சட்டையாக
வாழ்வு என்னும் புதிர் வட்டத்திலிருந்து
உன்னைக் களற்றி விட்டது யாரோ?
உன் குருதியை உறிஞ்சிய
மழைக்காலத்து அட்டைப் பூச்சிகள்
மகனோ? மகளோ?

இன்னும் என்ன
புனிதம் கிடக்கிறதென
தொப்பியில் காட்டுகிறாய்
பச்சைக்கொடி
கண்தானம் செய்வாயோ?
தசைதானம் செய்வாயோ?

மின்னும் விளக்கென
வீர விழிகள்
உனக்குப் பின்னும் தேவை
தீமை எரிக்க
வாழ்க்கை விளக்க
பார்வை கொடு பூமிக்கு
தாயே! தந்தையே!

புதன், 9 நவம்பர், 2011

என் அடையாளங்களை
நான் வெறுக்கிறேன்
அவை என்னைச் சுட்டுவதில்லை
என்றோ எவனோ
கட்டியக் கதைகளை
யாரைக் கேட்டு சூட்டுகிறீர்கள்
என் மீது!
இந்தியனாம்! தமிழனாம்!
சத்தியமாய் நான் விரும்பவில்லை
கேவலம்! குமட்டுகிறது

இந்த நாட்டில் ஓட்டு போடுவதற்கம்
தற்கொலை செய்வதற்கும்
எந்த வேறுபாடும் இல்லை!
என் தலைமையின் செயல்பாடுகள்
என் மீது எச்சிலை உமிழ்கின்றன
நான் போடும் ஓட்டுக்கள்
இதற்கான என் அனுமதிப் பத்திரங்கள்

நீ பிச்சை கேள்
போடுகிறேன்
பிழைத்துக்கொள்
அறிவற்ற உனக்கு
மிக மிகக் கேவலமான உனக்கு
ஏழைகளின் எச்சிலுக்கம் விலைபெறாத உனக்கு
எதற்கு ஓட்டு

பார்ப்பன நாய் குரைத்து விளையாட
கேட்கிறது என் எலும்புகளை
பல்லை இளித்துக்கொண்டு
பல்லக்குத் தூக்கும்
அறியாமைக் கூட்டத்துக்கு
ஒரு பெயர் தமிழனாம்
அதில் நானும் ஒருவனாம்

பெரும்பான்மை முட்டாள்களால்
போதி மரத்தில் விறகு வெட்டும்
ஒருத்தி தலைவியாகிறாள்
அவள் எனக்கும் தலைவியாம்?
தலைவலி...

ஐந்து ஆண்டுகளுக்கேனும்
இப்பகுதிக்குப் புதியப் பெயரிடுவோம்
நரகம் என்று...


                                                                                                  கோபம் தொடரும்.
                                                                                                                      நன்றி.

புதன், 10 ஆகஸ்ட், 2011

'நாம் தமிழர்' (What a Foolishness)

பாண்டி, பட்டி,
தோணி, சேரி, மதராசி
பாரெங்கும் பாருங்கள்
தமிழனுக்கு எத்தனைப் பெயர்கள்
திராவிடம் என்னும்
இல்லாதப் போர்வையில்
இங்கு மட்டும்
எல்லோரும் தமிழன்!
கன்னடன், தெலுங்கன்,
மலைவிழுங்கும் மலையாளி,
வந்தேறி, மார்வாடி, குஜராத்தி
யார் சொன்னது மடையன்களே!
'நாம் தமிழர்'

தனித்தமிழ் நாடு (Ashamed tobe a bloody Indian)

நெஞ்சைப் பதைக்கிறது
பிரெஞ்சு தெருக்களில்
சீக்கியனுக்குத் தடை தொப்பி போட!
மூக்கு வியர்த்து
வெறிகொண்டு எழுந்து
சிங்கமுகம் கொண்டு கர்ஜித்து
கண்டித்தான் சிங் என்னும் ஒருவன்

வாயில் பிள்ளைகளைப் போட்டு
கடவாய்ப் பற்களுக்கிடையில்
நசுங்கிய இள இரத்தம் குடித்து
வெறியடங்கா அரக்கனுக்கு
என்ன பொருத்தம்!
சிவப்பு கம்பள வரவேற்பு

தன் தசை எரிவதை
தானேப் பார்க்கும்
பேறுபெற்ற எம் தமிழினம்
'அய்யோ! அம்மா!'
என்று அலறியக் குரலுக்குப்
பாராமுகமாய் இருந்த
உங்கள் இனம் அழியும்!

அமேதியில்
அமைதி ஊர்வலம்
வெள்ளை உடையில் குள்ளநரிகள்!
ஏழை நண்பர்களே!
இனியும் நம்ப வேண்டாம்
உங்கள் தட்டில்
கைவைத்து உண்ணும் போது
சற்றே உற்றுப்பாருங்கள்
தமிழனைக் குதறிய
இரத்தக் கறை இருக்கும்

காவியை கைவிட்ட நீங்கள்
வெள்ளையை எரிக்க வேண்டும்
எங்களை நாங்களே பாதுகாப்போம்
பிரித்துக் கொடு ஒரு தனித்தமிழ் நாடு

சேர்ந்து தேடுவோம் (come on Seeking)

மேற்கு குமரியில்
மூழ்கும் பரிதியில்
காட்சி கண்டேன்
நான் இளைஞன்!
தமஸ்கு சாலையில்
ஒளியடித்து விழுந்த
இளமுனி பவுலாக
இருண்டு போனதென் கண்கள்!

வழக்கு மன்றக் கூண்டில்
கொடிகள் பின்னிய
மரமாய் நான் எதிரே கடவுளைக் கண்டேன்
அவள் கருப்பாயிருந்தாள்
'தாயே! தாயே!'

வினா :
சேவலைப் பற்றி என்னத் தெரியும்?

விடை :
சிவந்த கொண்டை
நீண்ட வால், மினுக்கும் மேனி
ஊர் திருவிழாவில் கறியோ சுவை!
நான் இளைஞன்

வினா :
பரிதி எழும் முன் எழும்
தொண்டை கீற கூவி எழுப்பும்
சிறகை அடித்து உயிரைக் கூட்டும்
கிடைப்பது பற்றிய பதற்றமின்றி
தொடர்ந்து தேடும்
தீமைக்கு அஞ்சி ஓடும்
நேரத்தில் வீடு தேடி அடையும்
இது பற்றி அறிவாயோ?

விடை :
நான்காம் வரியைக் காட்டி
'நான் இளைஞன்' என்றேன்
உன் கால்களை நீயே கட்டி விட்டாய்
பரிணாமத்தில் உச்சியில்
பரிதாபமாய் நீ!
ரசித்ததும், ருசித்ததும்
போதும்! நிறுத்து...
வெளிறிக்கிடக்குமம்
உன்னைத் தூசி தட்டு
தோல் கொஞ்சம் உறைக்கட்டும்
தோல்வியைத் தாங்க
தோளுக்கு வலு சேர்
திருந்த செயல் செய்து
சேவலாய் மாறு
வெற்றி உன் வாசல் படியில்...'

இப்பொழுது நான்
விழித்து விட்டேன்
உச்சி சேரும் வரை
உறக்கம் இனி இல்லை!
வா! நண்பா!
நீயும் வா!
சேர்ந்து தேடுவோம்
தனித்தனியே கண்டுபிடிப்போம்!

சனி, 29 ஜனவரி, 2011

ஒரு நவீன குழந்தையின் ( A Joyful Psalm of a Modern Child )

வாழ்க்கையில்
நம்பிக்கை என்னும் ஊன்றுகோலை இழந்து
வாழப்பிடிக்காமல் வாழ்ந்து தொலையும்
பரிதாப மனிதர்களிடம்
'நல்லகாரியங்கள் நம்மைசுற்றிலும் நடந்தேறுகின்றன'
என்பதை தெளிவுபடுத்தும்
ஒரு நவீன குழந்தையின்
நன்றித் திருப்பாடல்

அன்புள்ள அப்பா
உங்களுக்கு நன்றிசொல்ல
ஆசை ஆசையா ஓடிவந்தேன்

ஒரு சம்மனசு போல
நல்ல பிள்ளையா
என்ன பிறக்கவெச்சீங்களே!

எனக்கு பாசம் கொடுத்து
பராமரிக்க, பாதுகாக்க
பாசமான அப்பா, அம்மா,

அக்கா, அண்ணன்,
சொந்தக்காரங்க
எல்லாரையும் கொடுத்தீங்களே!

உங்களப்பத்தி தெரிஞ்சிக்க
எனக்கு மறைக்கல்வி, பூசபாக்க
வாய்ப்பு கொடுத்தீங்களே!

இன்னிக்கு நான் இப்படியிருக்க
முக்கியக் காரணமான
தியாக உணர்வுள்ள ஆசிரியர்கள்

நல்ல நல்ல நண்பர்களை
பெரிய மனசுள்ள சமுதாயத்தை
ஒரு பைசா செலவில்லாம தந்தீங்களே!

எனக்கு துன்பமே தெரியாம
எப்பவும் சிரிச்சிக்கிட்டேயிருக்க
குறு குறுன்னு ஒரு தங்கச்சிப்பாப்பா

செல்ல பூனைக்குட்டி,
மை பெஸ்ட் ஃப்ரெண்டு Jimmy
குட்டியா ஒரு வீட்டுத்தோட்டம்...

ஏ..அப்பா!
எவ்வளவு கொடுத்திங்க..
ரொம்ப நன்றிப்பா!

ரொம்பவும் நன்றி
ஆனா ஒரு சின்ன வேண்டுகோள்
நீங்க எனக்கு எதுவுமே தரவேண்டாம்!

நீங்க எப்பவும்
எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
நீங்க ஏங்கூட இருக்கிங்க..

ஏங்கூட பேசுவீங்க
ஏங்கூட சண்டபோடமாட்டீங்க..
இந்த நம்பிக்கை

இதுபோதும் அப்பா
உங்களுக்கு எப்பவும்
நன்றி சொல்லுவேன்

நன்றி அப்பா! நன்றி!
என் இதயம் துடிப்பதும்,
நான் மூச்சு விடுவதும்

நான் கண் சிமிட்டுவதும் கூட
அன்னிச்சை செயல் இல்லப்பா..
என் நன்றியின் தாள சுதிகள்!


நன்றிகளுடன் ம. ஆன்றனி பிரான்சிஸ்



இனிவருபவை...


இலையுதிர் காலம்
சில இலைகளை விரும்பியே உதிர்த்து விட்டேன்
விருப்பமான சில இலைகளும்
விரும்பியே உதிர்ந்துவிட்டன

கொட்டிய மழையிலும்,
 வாட்டிய வெயிலிலும் கூட
என்னோடு இன்னமும் சில இலைகள்...

என்னைப் பற்றி எழுதத்துவங்கும்
என்னுயிர் இலைகளே..!
நீங்கள் என்னில் துளிர்த்த நாள்
எனக்குத் தெரியும்
மண்ணில் துளிர்த்த நாளையும்,

தொலைவிலே போனாலும்
தொலைந்து விடாமலிருக்க
தொலைபேசி எண்ணையும்,

வந்தால் பார்த்து செல்ல-அல்லது
வந்து பார்த்து செல்ல
உங்கள் வேர்களின் முகவரியும்,

இதயம் கனிந்து
இதனுடன்
இணைத்திடுக..!

குறிப்பு: இலைகள் என்றதும்
இறக்கமாய் பார்க்கவேண்டாம்
என் வேர்களுக்கு நீர்பாய்ச்சுவதே
இந்த இலைகள் தான்..         

  அன்புடன் ம. ஆன்றனி பிரான்சிஸ்




புதன், 15 டிசம்பர், 2010

கடற்கரை மணலில்...எழுதப்பட்டக் கவிதை

கடற்கரை மணலில்
கரைஒதுங்கிக் கிடக்கும்
ஓர் கடற்கன்னியின்
புகைப்படத்திற்கு 
எழுதப்பட்டக் கவிதை
அலைப் போர்வைக்குள்
ஓர் அபலை உறங்குகிறாள்
என் உறக்கத்தைக் கெடுத்துவிட்டு..

இவள் இயற்கை அன்னையா?
தமிழ்த் தாயா?
தேச மாதாவா?
விடுதலை தேவியா?
கடல் கன்னியா?
என் காதலியா?
இவள் மௌனத்தில்
ஏன் கலையவேண்டும்
என் தூக்கம்?

திறக்க மறுக்கும்
இவள் இமைகளைப் பார்த்து
என் கண்கள்
மூட மறுப்பதன்
நோக்கம் என்ன?

இவள்
கரை ஒதுங்கிய
கடலின் உயிரா?
இழுத்துச் செல்லப்படும்
புவியின் பயிரா?
அய்யகோ
இரண்டுமே இழப்புதானே?

உலக மயமாக்கலுக்கு
'கால்' முளைத்துவிட்டது
உலக(ம்) மாயமாகிவிட்டது
மனிதமும் தான்..

அலைக்கற்றையில்
அடிபட்டு
சிட்டுக்குருவிகள்
செத்துப்போனது பற்றி
சட்டசபைக்கு
என்ன கவலை?

திரையில் சலனமில்லை
காட்சிகள் விரயவில்லை
பின்னர் என்ன சப்தம்?
ஓ! குப்பை கொட்டுகிறான்
மனிதன்

மனிதனின்
நவீனக் கழிவுகளுக்கு
'மக்கும் மற்றும் 'மக்கா' என்று
மாபெறும் குப்பைத்தொட்டி
சகல வசதிகளுடன் கூடிய
கடல்
அங்கே
பயமுறுத்தும் கண்களில்எனக்கு
துளிகூட பயம்வரவில்லை
சில மனிதர்களோடு
வாழ்ந்து பழகிவிட்டது

இனிமேல்
குழந்தைகள் மீதும்
நம்பிக்கையில்லா தீர்மானம்!
விரல், ரேகை,
விழித்திரை, முகவரி என்று
பிறப்புச் சான்றிதழில் ஓர்
நவீன சோதிடம்...

இனிவரும்
பேரப்பிள்ளைகளுக்கு
பால்சோறு, பருப்பு சமைக்க
கணிப்பொறியில்
மென்பொருள் தயாரிக்க வேண்டும்!

விவசாயிகள் காட்சிசாலை
அமைப்பது கோரி
ஒருநாள் அடையாள
இணைய விரதப்போராட்டம்
அறிவிக்கப்படும்...

சிரிப்பதா?
அழுவதா?
நான் ஏன் புலம்புகிறேன்?

இவள் மௌனத்தில்
ஏன் கலையவேண்டும்
என் தூக்கம்?

இவள் இயற்கை அன்னையா?
தமிழ்த் தாயா?
தேச மாதாவா?
விடுதலை தேவியா?
கடல் கன்னியா?
என் காதலியா?

அலைப் போர்வைக்குள்
ஓர் அபலை உறங்குகிறாள்
என் உறக்கத்தைக் கெடுத்துவிட்டு...