தூய பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் படித்துக் கொண்டிருந்த போது இளையோர் மேய்ப்புப் பணி என்ற சிந்தனையில் ஒரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. சலேசிய அருட்பணியாளர்களால் வழிநடத்தப் பட்ட அந்நிகழ்விற்கு பங்குகளிலிருந்து இளைஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர் அவர்களின் பங்குத்தளங்களில் நடைபெறும் இளையோர் செயல்பாடுகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். ஒரு இளைஞர் தான் தன்னை வழிநடத்தும் அருட்பணியாளரிடம் எதிர்பார்ப்பது என்ன என்று கவிதை வடிவில் பகிர்ந்து கொண்டார். ஒரே அச்சில் வார்க்கப்பட்ட தலையாட்டி பொம்மைகள் போல நாட்கள் புதுமைகளற்றுத் தோன்றும் போது, என்னைத் தூசு தட்டுவதற்கு இக்கவிதையைப் பயன்படுத்துகிறேன். நன்றி நண்பரே! இக்கவிதை பூஞ்சைத் துடைப்பம் அல்ல. நல்ல குச்சி வெளக்குமாறு! மொத்தத்தில் இது ஒரு சுயவிமர்சனமே!
நீங்கள் இயேசுவைப் போல அல்ல
இயேசுவாக வாழ அழைக்கப்படுகிறீர்கள்
சிதைந்து போய்க்கொண்டிருக்கும் இந்த
மனித சமுதாயத்திற்கு உங்களைப் போன்ற
சீர்திருத்தவாதிகள் அவசியம் தேவைப்படுகிறார்கள்
மக்கள் பணத்தைக் கொண்டு மப்பில் மிதக்கின்ற
மடத்தனமான அரசியல் வாதிகளைப் போல
அடித்தட்டு மக்களின் அவலங்களை
அடையாளம் காட்டி
பணத்தைப் பெற்று பகட்டு வாழ்க்கை வாழும்
பிணந்தின்னிக் குருக்களைப் பார்க்கும் போது
இளைஞர் எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?
ஃபாரின் சென்று பட்டப்படிப்புகள் பல முடித்து
பந்தங்களையும் சொந்தங்களையும்
பங்குப்பணத்தில் வாழவைத்துவிட்டு
பாமரர்களின் வயிற்றிலடிக்கும் பணியாளர்களைப் பார்க்கின்ற போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?
செபமாலை உருட்டியக் கரங்களில் இன்று
செல்போன்கள் விதவிதமாய்
மறைநூல் தவழ்ந்த மடிகள்
இன்று மடிக்கணினிகளின் பிடியில்
திருவிருந்தைச் சிறப்பிக்க திருநிலைப்படுத்தப்பட்டவர்கள்
பெருவிருந்தில் மட்டுமே முன்னிலையில் பங்கெடுப்பு
இது போன்றக் காட்சிகளைப் பார்க்கின்ற போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?
கள்ளக் காதலும் காதலித்து கற்பமாக்கிக் கைவிடுதலும் இன்றையக்
கலியுகத்து ஆண்களின் கைவந்தக் கலையாக இருக்கின்ற போது
அருள்பணியாளர்களும் துறவிகளும் இதில்
அளப்பரியச் சாதனை படைத்து வருவதைப் பாரக்கும் போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?
பொன்னும் பொருளும் போதையும் ராதையும்
உங்கள் வாழ்வாகிப் போனால்
இயேசுவின் பாதையில் எம்போன்றோரை
வழிநடத்திச் செல்வது யார்?
சிக்சர் அடிப்பவர்களையும்
சிக்கென பஞ்ச் டயலாக் பேசும்
சினிமா கலைஞர்களையும்
தலைவர்களாய்ப் பாவித்து
தலைவிரிக்கோலமாய் அலைகின்ற
அந்நிய மயமாக்கலால் அலைக்கழிக்கப்பட்டு
ஆன்மீக வாசனையே அற்றுப்போன
தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தங்களைத் தொலைத்துவிட்ட -இளையோருக்கு
புரட்சியாளர் இயேசுவை எப்படி அடையாளம் காட்டப் போகிறீர்கள்?
அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை -வாழ்வில்
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
அருள்பணி வாழ்வு என்பது இக்காலத்தில்
சந்தி சிரிக்கின்ற பந்தா வாழ்வா - அல்லது
சரித்திரம் பேசும் தரித்திர வாழ்வா
இளையோராகிய எங்களுக்கு எப்படி உணர்த்தப் போகிறீர்கள்?
ஏழைகளின் வாழ்வு மிளிர
சமத்துவ சமுதாயம் மலர
சாதியத்தை ஒழித்து
நீதி தழைக்க
அரிதாரம் பூசியவர்களாக அல்ல
அவதாரம் எடுத்திடுங்கள் இயேசுவாக
இளைஞர்களை வழிநடத்த வாழ்வை உணர்த்த
இளைய குருக்களாகிய நீங்கள் அவசியம் தேவை
இயேசுவைப் போல அல்ல
இயேசுவாக வாழ
வெண்ணிற அங்கியும் அதிகாரமுமல்ல குருக்களின் அடையாளம்
ஏழ்மையும் எளிமையும் உண்மையும் உறுதியுமே உங்கள் உடைமையாகும்
திருநிலைப்படுத்தப் போகும் நீங்கள் முதலில்
உங்கள் மனதை ஒருநிலைப்படுத்துங்கள்
உலக மாயைகளில் உங்களைத் தொலைத்துவிடாமல் இருக்க
இயேசுவின் வார்த்தைகள் உங்கள் இடைக்கச்சையாகட்டும்
இறையன்பும் பிறரன்பும் உங்கள்
அருள்பணியில் படைக்கலனாகட்டும்
நன்னெறி கற்பித்தலும் நல்வழிகாட்டலும்
உங்கள் உன்னதப் பணியாகட்டும் - வெறும்
வார்த்தையால் மட்டுமல்ல - உங்கள்
வாழ்வின் வழியாக
பணத்திற்கும், பதவிக்கும்
பட்டத்திற்கும் சாதிக் கூட்டத்திற்கும்
சமரசம் செய்பவர்களாக அல்ல
உண்மைக்கும் நீதிக்கும்
உயிர் கொடுப்பவர்களாக
அநீதி கண்டு பொங்கி எழுந்த
அன்பர் இயேசுவாக
உங்களைக் காண ஆசைப்படுகின்றோம்
விலையுயர்ந்த ஓட்டல்களை நோக்கி அல்ல உங்கள் பாதங்கள் - வாழ்வில்
நிலைகுலைந்த ஓட்டை வீடுகளை நோக்கிச் செல்லட்டும்
எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்க
ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு பெற
குருத்துப் பணி மக்களின்
மனங்களைச் சீர்படுத்தும் மருத்துவப்பணி - எங்களுக்கு
இந்திய அரசும் வேண்டாம்
தமிழக அரசும் வேண்டாம்
இறையரசு இம்மண்ணில் மலர வேண்டும்
ஏழ்மையும் எளிமையும்
உண்மையும் மனிதத் தன்மையும்
உங்களில் வெளிப்பட
செபவாழ்வும் பணி வாழ்வும் எளியோர்க்குப் பயன்பட
இறையரசை இம்மண்ணில் அமைக்க
இயேசுவைப் பேல அல்ல
இயேசுவாகவே வாழ
இளையோராகிய எங்களின்இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக