மேற்கு குமரியில்
மூழ்கும் பரிதியில்
காட்சி கண்டேன்
நான் இளைஞன்!
தமஸ்கு சாலையில்
ஒளியடித்து விழுந்த
இளமுனி பவுலாக
இருண்டு போனதென் கண்கள்!
வழக்கு மன்றக் கூண்டில்
கொடிகள் பின்னிய
மரமாய் நான் எதிரே கடவுளைக் கண்டேன்
அவள் கருப்பாயிருந்தாள்
'தாயே! தாயே!'
வினா :
சேவலைப் பற்றி என்னத் தெரியும்?
விடை :
சிவந்த கொண்டை
நீண்ட வால், மினுக்கும் மேனி
ஊர் திருவிழாவில் கறியோ சுவை!
நான் இளைஞன்
வினா :
பரிதி எழும் முன் எழும்
தொண்டை கீற கூவி எழுப்பும்
சிறகை அடித்து உயிரைக் கூட்டும்
கிடைப்பது பற்றிய பதற்றமின்றி
தொடர்ந்து தேடும்
தீமைக்கு அஞ்சி ஓடும்
நேரத்தில் வீடு தேடி அடையும்
இது பற்றி அறிவாயோ?
விடை :
நான்காம் வரியைக் காட்டி
'நான் இளைஞன்' என்றேன்
உன் கால்களை நீயே கட்டி விட்டாய்
பரிணாமத்தில் உச்சியில்
பரிதாபமாய் நீ!
ரசித்ததும், ருசித்ததும்
போதும்! நிறுத்து...
வெளிறிக்கிடக்குமம்
உன்னைத் தூசி தட்டு
தோல் கொஞ்சம் உறைக்கட்டும்
தோல்வியைத் தாங்க
தோளுக்கு வலு சேர்
திருந்த செயல் செய்து
சேவலாய் மாறு
வெற்றி உன் வாசல் படியில்...'
இப்பொழுது நான்
விழித்து விட்டேன்
உச்சி சேரும் வரை
உறக்கம் இனி இல்லை!
வா! நண்பா!
நீயும் வா!
சேர்ந்து தேடுவோம்
தனித்தனியே கண்டுபிடிப்போம்!