பகுதி 3
தவக்கால 5 ஆம் ஞாயிறு (மார்ச் 22, 2026)
எசே 37, 12-14, தி.பா 129, ரோமையர் 8, 8-11, யோவான் 11, 11-45
(அருட்தந்தை பெர்னாந்தோ அர்மெல்லினி அவர்கள் இத்தாலிய மொழியில் ஆற்றிய மறையுரையானது கருத்துச்சிதைவின்றி மொழிச்சுதந்திரத்தோடு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான உயிர்த்தெழுதல் பற்றிய நமது புரிதலை இன்னும் ஆழப்படுத்த உதவக்கூடும். Fr. ஆன்றனி பிரான்சிஸ், OMD)
என்னிடம் நம்பிக்கை கொள்பவன் ஒருபோதும் இறப்பதில்லை என்ற வசனத்தின் பொருள் என்ன?
நம் கண்முன் இறந்த உடலாகக் கிடப்பவர் இறக்கவில்லை என்பதை எப்படி புரிந்துகொள்வது?
இதை விளக்குவதற்கு சில உருவகங்கள் நமக்கு உதவிசெய்யக்கூடும்.
நம்முடைய மனித வாழ்வில் நாம் எங்கிருந்தோ வருகிறோம்.
எதை நோக்கியோ செல்கிறோம்.
பிறப்பிற்கு முன்பும்,
இறப்பிற்குப் பின்பும் நாம் யார்? ஒன்றுமில்லாமையிலிருந்து தாயின் கருவில் உருவாகின்றோம்.
மரணத்தின் சாயல் கொண்ட இந்த உலகில் நுழைகின்றோம்.
தனிமை கைவிடப்படுதல்,
துரோகம்,
அறியாமை,
நோய், வலி போன்றவை அனைத்துமே மரணத்தை நமக்கு முன்னறிவிக்கின்றன.
நமது இவ்வுலக வாழ்வே முழுமையல்ல.
அது தொடக்கமும்,
முடிவும் கொண்ட எல்லைகளுக்கு உட்பட்டதே.
இதுவே எப்படி இறுதி இலக்காக இருக்க முடியும்?
மரணிக்காத வாழ்விற்கு நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும்.
ஒரு தாயின் கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
அவர்கள் தங்கள் சிறிய உலகத்தை மட்டுமே அறிவார்கள்.
வெளியுலக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை.
கருப்பைக்கு வெளியே மனிதர்கள் திருமணம் செய்கிறார்கள்.
பயணம் செய்கிறார்கள்.
வேலைக்கு செல்கிறார்கள்.
இதைப்பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.
கடலும், மலையும்,
செடியும்,
கொடியும்,
பூக்களும்,
கனிகளும் இருப்பதைப்பற்றி அவர்கள் யோசித்திருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் அக்கருப்பைக்குள் அனுபவிக்கும் அந்த வாழ்க்கை முறையை மட்டுமே அறிவார்கள்.
ஒன்பது மாதங்கள் நிறைவடையும்போது முதல் குழந்தை பிறக்கிறது.
உள்ளிருக்கும் இரண்டாவது குழந்தை என்ன நினைக்கும்.
'என் சகோதரன் இறந்துவிட்டான்.
அவன் இனி இல்லை. மறைந்துவிட்டான்.
என்னைப் பிரிந்துவிட்டான்'
என்று அழுதுபுலம்பி கருப்பையைக் கண்ணீரால் நிரப்பும்.
ஆனால் அந்த சகோதரன் இறக்கவில்லை.
அவன் ஒரு குறுகிய கருப்பை உலகிலிருந்து வெளியேறி,
மற்றொரு வாழ்க்கை முறைக்குள் நுழைந்துள்ளான்.
இயேசுவும் இதைத்தான் மார்த்தாவுக்கு விளக்குகிறார்.
தன்னில் நம்பிக்கை கொள்ளும் சீடன், மரணத்தை அனுபவிப்பதே இல்லை. மாறாக ஒரு புதிய வாழ்க்கை முறைக்குள் பிறக்கிறான்.
கடவுளின் உலகிற்குள் நுழைகிறான்.
இந்த பூவுலக வாழ்வில் நடப்பது போன்றதல்ல அவ்வாழ்க்கை.
அது எல்லைகளுக்கும்,
மரணங்களுக்கும் உட்படாத உயிர்நிலை.
அதற்கு மேல் நாம் எதையும் துல்லியமாக சொல்லிவிடமுடியாது.
ஏனெனில் நமது கற்பனைகள் மீண்டும் இவ்வுலக வடிவங்களையே பிரதிபலிக்கும்.
மாறாக அவ்வுலக வாழ்க்கை கடவுள் தம் சீடர்களுக்காக வைத்திருக்கும் ஒரு ஆச்சர்யம்.
'தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை' (1கொரி 2:9)
எனவே கிறிஸ்தவ நம்பிக்கையின் பார்வையில்,
இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு கருக்காலம் மட்டுமே.
மரணம் என்பது மரணிப்பவருக்கு இல்லை. அதை இங்கு இருப்பவரே அறிகிறார்.
வெளியே செல்பவருக்கு அது ஒரு பிறப்பு.
இதன் மூலம் இலாசரின் மரணத்தைத் தடுக்காததற்காக இயேசு ஏன் மகிழ்ந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
அதை அவர் கடவுளின் கண்கொண்டு பார்க்கிறார்.
மனிதனின் மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியானத் தருணமாக அதைக் காண்கிறார்.
மற்ற மனிதர்கள் இறப்பையும்,
துன்பத்தையும் கண்டு விரக்தியிலும்,
ஏமாற்றத்திலும் விழும்போது,
தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள்
'பிறந்த நாள்' என்று சரியாகவே அழைத்தார்கள்.
புனிதர்களின் விழாக்கள் அவர்கள் இறந்த நாளிலேயேக் கொண்டாடப்படுவதன் பொருளும் இதுதான்.
'ஒரு கம்பளிப்பூச்சிக்கு எது உலக முடிவோ, அதுவே இன்னொரு உலகத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் பிறப்பு' என்பது லா-ட்சுவின் (Lao-Tze) புகழ்பெற்றப் பொன்மொழி. கம்பளிப்பூச்சியாக மறைந்து வண்ணத்துப்பூச்சியாகத் தன் வாழ்வைத் தொடர்வதே, மரணத்தின் மீது கிறிஸ்து கொண்ட வெற்றியைப் புரிந்துகொள்வதற்கு மேலும் ஒரு சிறப்பான உதாரணம்.
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மார்த்தா ஒரு முக்கியமான நம்பிக்கை அறிக்கையைத் தருகிறார்.
'ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்' (வசனம் 27).
தொடர்ச்சியாக இயேசுவுக்கும்,
மரியாவுக்கும் நடக்கும் உரையாடலில் நாம் கவனம் செலுத்தத் தேவையில்லை.
ஏனென்றால் ஏற்கனவே சொன்னதைத் தவிர புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை.
யூதர்கள் இலாசரின் சகோதரிகளைத் தேற்றுவதற்காக பெத்தானியாவிற்குச் சென்றதைப் போல, இயேசு அங்கு செல்லவில்லை என்பதைக் கவனிப்பது அவசியம்.
அவர் துக்கவம் விசாரிக்க வந்தவரல்ல.
வாழ்வைத் தரவல்லவர்.
அதற்காகவே வந்தவர்.
அழுது, துன்புறும் அந்த வீட்டைவிட்டு மரியாளும் வெளியே வரவேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
ஆயினும் ஒவ்வொரு மனிதரையும் போலவே மரணத்தின் துயரத்தை இயேசுவும் நன்கு அறிவார்.
நற்செய்தியாளர் எவ்வளவு அழகாக இதனைக் காட்டுகிறார் பாருங்கள்:
'மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, அவனை எங்கே வைத்தீர்கள்? என்று கேட்டார்”.
இறுதிக் காட்சிக்கு வருவோம்.
(வசனங்கள்
34-42)
இது இயேசுவின் அழுகையுடன் தொடங்குகிறது.
மரணத்தை ஒரு பிறப்பாகக் காண்பவர் மட்டுமே இயேசுவின் சீடராக இருக்க முடியும்.
இருப்பினும் உணர்ச்சிகளற்ற போதகர் அல்ல இயேசு. ஒரு நண்பனின் பிரிவில் கண்ணீர் சிந்தாமலிருக்க முடியவில்லை அவரால். அவன் இறக்கவில்லை என்பதையும்,
கடவுளின் உலகில் அவன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான் என்பதையும் அவர் அறிவார்.
ஆயினும் இவ்வுலக நியதியின் படி ஒரு குறிப்பிட்டக் காலம் பிரிந்திருக்க வேண்டுமே என்ற வருத்தம் அவருக்கு உண்டு.
அழுகை இரண்டு வகை. ஒன்று மரணத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று தேற்ற முடியாத வகையில் தேம்பி அழுவது. மற்றது இயேசுவின் அழுகை. அவரது அழுகையின் கண்ணீர் நம்பிக்கையைக் கரைப்பதில்லை.
அழுகையின் இந்த இரண்டு வகைகளையும் நற்செய்தியின் மூலமொழியான கிரேக்கத்தில் இருவேறு வினைச் சொற்களால் நற்செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
மார்த்தா,
மரியா மற்றும் யூதர்களின் அழுகைக்கு klaiein என்ற சொல்லும், இயேசுவின் அழுகைக்கு edakrusen சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாவது விரக்தியின் அழுகை. இரண்டாவது நம்பிக்கையிழக்காத அமைதியான அழுகை. இதுவே கிறிஸ்தவர்களின் அழுகை.
அழுகையைத் தொடரந்து ஒரு கட்டளை வருகிறது.
'அந்தக் கல்லை அகற்றுங்கள்' இறந்தவர்களின் உலகிற்கும்,
நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும்,
அவை முற்றிலும் பிரிக்கப்பட்டிருக்கின்றன என்று கருதிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் விடுக்கப்பட்டக் கட்டளை இது. உயிர்த்த இயேசுவை நம்புபவர்கள்,
இறந்த நம் சகோதர, சகோதரிகளும் வாழ்க்கை நிலையில் மாறுபட்டிருந்தாலும்,
அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
ஈஸ்டர் விழாவில் எல்லாத் தடைகளும் தகர்க்கப்பட்டன.
எல்லா கற்களும் அகற்றப்பட்டன.
இப்போது ஒருவர் இறப்பை அறியாமலே மற்றொரு உலகிற்குள் நுழைகிறார்.
வசனம் 41-42 இல் இயேசு ஏறெடத்த செபம் ஒரு அற்புதத்திற்கானக் கோரிக்கை அல்ல. மாறாக அவரைச் சுற்றிலும்,
கண்ணீரும்,
கம்பலையுமாக இருந்த மக்களுக்கு ஞானத்தின் ஒளி கிடைக்க வேண்டும் என்பதைத்தான் இயேசு விரும்பினார்.
தாம் செய்யப்போகும் அரும் அடையாளத்தின் ஆழமானப் பொருளை அனைவரும் புரிந்து கொண்டு, வாழும் இறைவனாகியத் தன்னில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதையே அவர் வேண்டுகிறார்.
'இலாசரே! வெளியே வா!' என்று இயேசு உரத்தக் குரலில் அழைக்கிறார்.
'காலம் வருகிறது. ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்;. அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று (யோவான் 5:25) இயேசுவின் இறைவாக்கு இங்கு நிறைவேறுகிறது.
'இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன' (வசனம் 44). ஆம். இலசார் 'இறந்தவர்'
தான். நான்கு நாள்களுக்குப் பின் அவர் முற்றிலும் இறந்தவர் ஆகிறார்.
அப்படிப்பட்ட ஒருவரோடுதான் இயேசு தனது உயிரளிக்கும் வல்லமையைக் காட்டுகிறார்.
அவனை மீண்டும் இவ்வுலகிற்குக் கொண்டுவருவதன் மூலம் அல்ல. மாறாக அவனைத் தன்னுடனே கடவுளின் மகிமைக்குள் அழைத்துக் செல்வதன் மூலம்.
'கட்டுக்களை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்' என்று அவர் இறுதியாகக் கட்டளையிடுகின்றார்.
பிரியமான ஒருவரை இழந்ததற்காக அழும் கிறிஸ்தவ சமூகத்தின் சகோதர, சகோதரிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு இது. 'இறந்தவர்' தனது புதிய நிலையில் மகிழ்ச்சியாக வாழ அனுமதியுங்கள். திருவெளிப்பாடு 21:4 இல் நாம் இவ்வாறு வாசிக்கின்றோம்: 'அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது. முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன'
இறந்தவர்களைத் தக்க வைத்துக்கொள்ளப் பல வழிகளில் முயற்சி செய்கிறோம்.
அவர்களது நினைவானப் பொருளைப் பத்திரப்படுத்துகின்றோம். தொடர்புகொள்ள ஆசைப்படுகின்றோம். கல்லறைகளுக்குத் தொடர்ச்சியாகச் செல்கின்றோம். இது ஒருவகையில் 'உயிருடன் இருப்பவரை இறந்தோரிடையேத் தேடுவது' போலாகும்.
ஒரு நண்பனின் பிரிவு வேதனைக்குரியதுதான்.
ஆனால் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்புவது சுயநலமானதாகும்.
அது ஒரு குழந்தை பிறப்பதைத் தடுப்பது போன்றது.
ஒருவரின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் ஒவ்வொரு சீடரிடமும் இயேசு இன்றும் இதையே மென்மையாகச் சொல்கிறார்.
'அவனைக் கட்டவிழ்த்து போகவிடுங்கள்”.
