ஞாயிறு, 26 ஜூலை, 2020

È per il tuo bene - எல்லாம் உனது நன்மைக்குத்தான்

"எ பெர் இல் தூவோ பெனே"  (È per il tuo bene) என்பது சமீபத்தில் நான் பார்த்த இத்தாலியத் திரைப்படத்தின் பெயர். 2017 இல் வெளியான Es Por Tu Bien என்னும் ஸ்பானியத் திரைப்படத்தின் இத்தாலிய ரீமேக். அமேசான் பிரைமில் கிடைக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடும் போதெல்லாம் வழக்கமாக "எல்லாம் உனது நன்மைக்குத்தான்" என்று சொல்வார்கள் அல்லவா? அதுதான் இப்படத்தின் தலைப்பின் அர்த்தம்.

அர்த்தர்-இசபெல்லா தம்பதியினருக்கு வாலன்டீனா ஒரே மகள். அவள் அலெக்சியா என்னும் பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுக்கிறாள். அவள் கறுப்பினத்தவள். சுற்றுசூழல் போராளி. தான் வேலை பார்த்த நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிப்பதை வெளிப்படுத்தியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு திருட்டுப்பட்டம் சூட்டப்பட்டு வழக்கறிஞரான வாலன்டினாவிடம் உதவிகேட்டு வருகிறாள். வழக்கு முன்னே செல்ல காதல் பின்தொடர்கிறது. அர்த்தர் தன் மகள் வாலன்டினாவில் நன்மைக்காக இந்தக் காதலை முறியடிக்க சூழ்ச்சி செய்கிறார்.

அந்தோணியோ-பவுலா தம்பதியினருக்கு ஒரே மகள் மார்த்தா. பள்ளி இறுதியாண்டு மாணவி. உடம்பெல்லாம் பச்சைக் குத்தி, காதில் கடுக்கன், ஆங்காங்கே கிழிந்து தொங்கும் ஜீன்ஸ், காலரில்லாத சிவப்பு, மஞ்சள் வண்ண டீ-சர்ட் அணிந்து, கொஞ்சம் கஞ்சாவை உள்ளிழுத்து அனுமதியில்லாத பொது இடங்களில் பாப் இசைக்கும் ஒரு சமவயது பையன் பியோண்டாவைக் காதலிக்கிறாள். அந்தோணியோ தன் மகள் மார்த்தாவின் நலனுக்காக அவளுக்கு அவன் மேல் வெறுப்பு வரச்செய்ய முயற்சி செய்கிறார்.

செர்ஜியோ-ஆலிச்சே தம்பதியினரின் ஒரே மகள் சாரா. கல்லூரி செல்லும் வயதில் ஒரு தேநீர் விடுதியில் வேலை செய்கிறாள். செர்ஜியோ தன் செல்ல மகளின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் பரிசளிப்பதற்காக ஒரு அழகிய மிதிவண்டியை வாங்கி அவ்விடுதிக்கு வருகிறார். அங்கு தன்னிலும் வயதில் கொஞ்சம் இளைய பால்யகால நண்பன் போஜியைச் சந்திக்கிறார். சிறுவயதில் நிறைய பெண்களுடன் சுற்றிக்கொண்டிருந்த போஜியின் கெட்டிக்காரத் தனத்தை நினைவுகூர்ந்து இருவரும் சிரித்துக்கொண்டிருக்கும் போதே அங்கு வரும் சாராவிடம் தான் கொண்டுவந்திருந்த மலர்க்கொத்தை நீட்டி "இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் அன்பே" என்று கொடுக்கிறார். செர்ஜோ கடுங்கோபத்தைக் கட்டுப்படுத்த மனநல ஆலோசனைப் பெற்று வருபவர். தன்னையும் மீறி அந்த இடத்திலேயே போஜியைக் கொத்தாகத் தூக்கி தேனீர் விடுதிக்கு வெளியே வீசி துவைத்து எடுக்கிறார்.

அர்த்தர், அந்தோணியோ, செர்ஜியோ மூவரும் நெருங்கிய நண்பர்கள். தங்கள் பிள்ளைகளின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிள்ளைகளின் நலனுக்காக அவர்களின் காதலர்களை ஓடவிட மூவரும் இணைந்து செயல்படுகிறார்கள். 

அலெக்சியா தங்கள் வீட்டில் திருடியதாக கதைகட்டி அவளை நாடுகடத்தப் பார்க்கிறார்கள். பியோண்டா தனது பையில் போதை மருந்துகள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறான். போஜி நடத்தை கெட்டவன் என்பதை நிரூபிக்க ஒரு விபச்சாரப் பெண்ணின் உதவியை நாடுகிறார்கள்.

ஆனால் தங்களது அனைத்து முயற்சிகளாலும் அதிகம் பாதிக்கப்பட்டு துன்பப்படுவது தங்கள் பிள்ளைகள் தான் என்பதை உணர்ந்து, கடைசியில் அவர்களே தங்கள் பிள்ளைகளின் காதலைச் சேர்த்து வைப்பதாக படம் முடிகிறது.

மிக எளியக் கதையுடன் கூடிய மிகச்சாதாரண காமெடி திரைப்படம் தான் எனினும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் ஆளுமையையும் துல்லியமான நடிப்பால் தனித்து வெளிப்படுத்துவதால் படம் போராடிக்காமல் செல்கிறது. இதுவே ஒரு திரைப்படத்தைப் பற்றி நான் எழுதும் முதல் கட்டுரை. இந்தப்படம் கையாளும் கதைக்களம் என்னை புன்னகைக்க வைத்தது மட்டும் தான் காரணம். எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன் என்னும் வகையிலான பெற்றோர்கள் உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.

சமீபத்தில் எழுதப்பட்ட சங்கர்கள் மகிழ்ச்சியாக வாழும் போது நம்நாடு வல்லரசாகும் என்னும் கட்டுரையில் ஆல்பா என்னும் இத்தாலியப்பெண் சித்தாத் என்னும் கறுப்பினத்துப் பையனைத் திருமணம் செய்யவிருப்பதைப் பதிவு செய்திருந்தேன். அது மிகவும் சாதராணமாக தெருவுக்குத் தெரு நடப்பது போன்ற தோற்றத்தை அக்கட்டுரை ஏற்படுத்தியது.

ஆனால் இத்திரைப்படம் அதற்கு மாறான இன்னொரு பக்கத்து எதார்த்தத்தை எடுத்துக்காட்டியது. வாலண்டினா-அலெக்சியாவின் ஒருபாலினக் காதலை எதிர்கொள்ளும் ஒரு முன்னேறிய சமூகத்துப் பெற்றோர் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை முடிவு செய்ய இயலாமல் திணறுவதை, இயல்பான வசனங்களுடன் பதிவு செய்திருந்தது.

பிறருக்கு நடக்கும் போது புரட்சியாக, முற்போக்காகத் தோன்றும் சில விசயங்கள் தனக்கு வரும் போது அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக்காட்டியது. எது சரி, எது தவறு என்று சார்புகளைப் பற்றி இயக்குநர் அக்கறைப்படவில்லை. அதைப் பார்வையாளர்களிடம் விட்டுவிடுகிறார். உங்கள் கருத்துக்களைப் பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள். அவர்கள் தனித்துவமானவர்கள். அவர்கள் உங்கள் கருத்துக்களின் நகல்கள் அல்ல. வித்தியாசத்தை ஏற்றுக்கொள்ள மனதை அகலத் திறந்து பயிற்சியெடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை அவர்களாக இருக்கவிடுங்கள். அவர்களுக்கு எது நல்லது, எது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை அவர்களே முடிவெடுக்கட்டும்.

இன்யை இளம் பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி அதிகம் அக்கறை கொள்கிறார்கள். நல்லது தான். ஆனால் தனியார் பள்ளிகளும், சமூகமும் அளிக்கும் அழுத்த மிகுதியால் குழந்தை வளர்ப்பே உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை போல பதற்றமடைகிறார்கள். இயல், இசை, நாடகம், இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு என்று பிஞ்சுக் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை ஒரு கொடுங்கனவாக்குகிறார்கள். தொட்டியில் வளரும் போன்சாய் மரங்கள் அழகானவைதான் என்றாலும், வெட்ட வெளியில் வளரும் ஆலமரங்களில் தான் பறவைகள் கூடுகட்டும். கொஞ்சம் ஃப்ரியா விடுங்க பாஸ்!

புதன், 22 ஜூலை, 2020

சங்கர்கள் மகிழ்ச்சியாக வாழும் போது நம் நாடு வல்லரசாகும்!


வரும் அக்டோபர் 3 ஆம் நாள் நடைபெறவிருக்கும் திருமண அழைப்பிதழ் தான் இது. மணமகள் ஆல்பா சான் பெர்தினாந்தோ என்னும் தெற்கு இத்தாலியில் இருக்கும் ஒரு கிராமத்துக்காரி. மணமகன் சிதாத். இதே ஊரில் இருந்த ஒரு அகதிகள் முகாமில் இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்த ஆப்ரிக்காவின் கானா நாட்டு இஸ்லாமிய கறுப்பின இளைஞன். அவன் கடல் வழியாக கரை சேர்ந்தவன் என்பதால் திருமண அட்டையை இவ்வளவு அர்த்தப்பூர்வமாக அச்சிட்டிருக்கிறார்கள்.
ஆல்பா அங்கு இத்தாலிய மொழி பயிற்றுநராக பணியாற்றினாள். சித்தாத் தனது மதத்தின் இரு பிரிவினரிடையே நடைபெற்ற கவலவரத்திலிருந்து தப்பித்து விசைப்படகு மூலம் தாரந்து கடற்கரையில் ஒதுங்கியக் கதையைச் சொன்னான். இருவரும் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் இரண்டு ஆண்டுகளாகப் பழகி தெரிந்துகொண்டனர். எங்கள் ஆலயத்தில் கடந்த ஒரு ஆண்டாக திருமண பயிற்சி வகுப்பில் இருவருமே கலந்து கொண்டனர். ஆல்பாவும் அவளது குடும்பமும் எங்கள் கோவிலின் அனைத்துப் பணிகளிலும் உடனிருப்பவர்கள். அவளது தாய் பங்கின் ஏழை, எளியோருக்கு உதவும் காரித்தாஸ் அமைப்பின் பொறுப்பாளர். சித்தாத் திருமணத்தின் பொருட்டு மதம் மாறவில்லை. தொடர்ந்து இஸ்லாமியனாகவே இருப்பான். மேலும் அவன் இந்த ஊரில் காலடி வைத்த போது அவனுக்கு உதவியவர்கள் பக்கத்து பங்கின் அருட்பணியாளரும், நண்பர்களுமே என்பதால் திருமணத்தை அந்த ஆலயத்திலேயே நடத்துகின்றனர். அவன் அப்போதுதான் சொந்த வீடு போல உணர்வான் என்பதற்காக இந்த ஏற்பாடு. இப்படி அவன் அந்நியனாக உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தங்கள் விருப்பங்களை முன்னிலைப்படுத்தாது நிறைய காரியங்களைப் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள்.
சட்டப்படி தகுதியான இரு நபர்களின், சட்டப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்ட சம்மதம் திருமணத்தை உருவாக்குகின்றது. இவ்வளவு தான் திருமணம். ஆல்பாவும், சித்தாத்தும் தங்கள் சம்மதத்தை சட்டப்பூர்வமாக வெளிப்படுத்த அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை. சாதி, மதம், இனம், நிறம், பொருளாதாரம், சமுதாயம் எதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. திருமணம் இரு நபர்கள் சம்பந்தப்பட்டது. ஆம்! நீங்கள் வாசித்தது சரிதான். இரு நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது. இந்த உரிமையைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும், நீதித்துறைக்கும் உள்ளது.
மார்ச் 13, 2016 அன்று உடுமலைப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிகவளாகத்தின் வாயிலில் பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்ட பட்டியலினத்தவரான சங்கரை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். அவரது மனைவி கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்பிழைத்தார். இந்தக் குரூரக்கொலைக்கானத் தெளிவான சிசிடிவி காட்சிகள் இருக்கின்றன. திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட இன்னும் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரின் தூக்கு ஆயள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறைவாசலில் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உயிரைக் காக்க உயிரையேப் பணயம் வைத்து அந்நிய நாட்டில் அடைக்கலம் புகுபவர்கள் அகதிகள். ஐக்கிய நாட்டு சபையின் அகதிகள் உடன்பாட்டில் கையொப்பமிட்டிருக்கும் 147 நாடுகளுமே தங்கள் நாட்டில் தஞ்சம் புகும் அகதிகளைப் பராமரிக்கவும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, கருத்து, சமய உரிமைகளைப் பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளன. அவர்கள் தாயகம் திரும்புவது அவர்களது உயிருக்கு ஆபத்து எனக் கருதும் வரையிலும் அவர்களைத் திருப்பி அனுப்ப இயலாது. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அனைத்திலும் அவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.
ஆல்பாவை சித்தாத் ஊரே கொண்டாட திருமணம் செய்ய முடிந்தால் அதற்கு பெயர் வளர்ந்த நாடு. நடுரோட்டிலே போட்டு வெட்டிக் கொன்னா, கொன்னவன நீதிமன்றம் விடுதலை செஞ்சா, கொலை செஞ்சவன் கைளில் பொன்னாடையும், பூங்கொத்தும் தந்து வரவேற்கப்பட்டால் அப்துல் கலாம் கனவு கண்ட 2020 கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம்.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

சலிப்பூட்டும் நாத்திக அடிப்படைவாதம்


கருப்பர் கூட்டம் என்னும் பெயரிலான ஒரு யூடியூப் சானலில் கந்தசஷ்டி கவசப் பாடலின் ஒரு சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு மிகவும் கொச்சையாக விமர்சித்திருந்தனர். மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பா.ஜ.கா அந்த சானலைத் தடை செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்தினர். 

முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். எங்கள் ஊரில் அழகன் என்ற பெயரில் இந்து, கிறிஸ்தவ பாகுபாடின்றி நிறைய பேர் இருக்கின்றனர். அழகென்ற சொல்லுக்கு முருகா! என்ற இனிமையானப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மதம் கடந்தும் ஒருவருக்கு இதயத்தில் அன்பு சுரக்கும். சிறுவயதில் எங்கள் வீட்டில் குழந்தை முருகனின் படம் போட்டு காலண்டர் இருந்தது. அதில் யாமிருக்க பயமேன் என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டுதான் பள்ளிக்குக் கிளம்புவது வழக்கம். குழந்தை இயேசுவின் முகத்தையே எனக்கு அது நினைவுபடுத்தியது. மருங்கூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் அருகில் தான் எங்கள் பள்ளி. ஒடுக்கத்து வெள்ளியன்று அங்கு சுவையான கஞ்சி கிடைக்கும். நண்பர்களோடு சென்று சாப்பிட்டுவிட்டு, அங்கிருக்கும் ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடுவது சிறுவயதின் அழகான நினைவுகள். அந்த ஆலமரம் போன்று கடவுள் ஒருவரே. நாம் நம்பும் ஆத்திகம், அல்லது நம்பாத நாத்திகம் யாவும் நாம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் விழுதுகள்; இறுகப் பிடித்துக் கொள்ளலாம். ஆனால் என் விழுதுதான் ஐ.எஸ்.ஒ 9001 என்று கருதினால் ஆலமரம் கோபித்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். 

எங்கள் ஊரில் இந்துக்கள், சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க மதத்தினர் எனக்குத் தெரிந்து இதுவரையிலும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். புலிமலை சகாய மாதா கோவிலில் திருப்பலி நடக்கும் போது, அதன் அடிவாரத்தில் இருக்கும் சுடலை மாட சுவாமி, மற்றும் முத்தாரம்மன் கோவில் ஒலிப்பெருக்கியை அணைத்துவிடுவார்கள். அங்கு கொடை நடக்கும் போது இங்கு பொது வழிபாடுகள் நடத்துவதில்லை. எல்லாம் எழுதப்படாத ஒப்பந்தங்கள்தான். மரியாதையும், புரிதலும் தான் இந்த இணக்கத்திற்கு காரணம். 

காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது முதல் முன்பு இருந்த ஒரு இயல்பான உறவும், உரையாடலும் சற்றே பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். பரஸ்பர வெறுப்பு இல்லையென்றாலும், நாம் இன்னும் நண்பர்கள் தானா என்ற ஐயம் சமவயதினரின் கண்களில் தெரிகிறது. முகநூலிலும் தெரிந்த நண்பர்களே மத - மனித வெறுப்போடு எழுதுவது ஒரு நாசிச சமூகமாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோமா என்று அச்சத்தை உருவாக்காமல் இல்லை. 

அரசியல் விழிப்புணர்வு மிகவும் நன்மை பயக்கும் ஒன்று. அதிகாரப் பரவலை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் ஏகாதிபத்தியத்தைக் குலைக்கும். ஆனால் சக மனிதனை நேசிக்காமல், உறவு பாராட்டாமல் ஆக்குமென்றால் அது நம்மை அரசியல் குருடர்களாக்கும் என்றே நினைக்கிறேன். குருட்டுத்தனமாக கொள்கைகளின் பின்னால் செல்வது ஒற்றுமையைக் குலைத்து நம்மைப் பிளவுபடுத்தும். வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் புதிய வடிவம் தான் இன்றைய மத அரசியல் என்று புரிந்துகொள்கிறேன்.

தமிழ்நாடு கிறிஸ்தவ பேரவை, தமிழ்நாடு முஸ்லீம் இயக்கம் போன்ற மதத்தின் பெயரிலான அரசியல் ஒருங்கிணைதலுக்கு ஜனநாயகத்தில் இடம் இருக்கும் போது இந்துக்களை ஒன்றுபடுத்தும் அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு இயக்கம் இருப்பதில் யாருக்கும் நடுக்கம் தேவையில்லைதான். ஆயினும் ஒரு சமூகம் தன் மத, இன, மொழி சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது என்பதை வைத்துதான் அந்த சமூகத்தின் முதிர்ச்சியும், வளர்ச்சியும் தீர்ப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்தியா முழுவதுமே மதச்சிறுபான்மையினர் மீது, அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது நேரடியாக அல்லது அரசியல் சாசன வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. 

எனக்குத் தெரிந்த இந்து மதம் அகிம்சையைப் போதிக்கின்றது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு அதன் அடிநாதமாக விளங்குகிறது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் ஏற்றி வைத்த பசிப்பிணி போக்கும் அருட்பெருஞ்சோதி இன்றளவும் அணையவில்லை என்பதே அதன் சாட்சி. அரசியல் தளத்தில் செயல்பட்டவர்களில் காந்தியை விட அதிகமாக இந்து மதத்தை நேசித்து வாழ்ந்த ஒருவரைக் காணமுடியுமா? ஆனால் இன்று அவரைச் சுட்டுக்கொன்ற ஒருவர் கொண்டாடப்படுகிறார். காந்தி மீண்டும் பொம்மைத் துப்பாக்கியால் சுடப்படுகிறார். கூடி நிற்பவர்கள் வேடிக்கையாகக் கொக்கரிக்கிறார்கள். இது தான் அரசியல் விழிப்புணர்வா? வன்முறை கொண்டாடப்படும் சமூகத்தில் பாதுகாப்பும், அமைதியும் எப்படி இருக்க முடியும்? இந்தக் காரணத்திற்காக மட்டுமே எந்த மதம் என்றாலும் பிளவுபடுத்தும் அடிப்படைவாதிகளை கருத்தளவில் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பன்முகத்தன்மையே இந்தியாவின் ஆன்மா. பல்வகை மொழியும், இனமும், மதமும் இணைந்து, பிணைந்து, உறவு பேணி வாழ்வதே அதன் தனித்தன்மை. அதை எப்படி மத நம்பிக்கையால் ஒற்றைத் தன்மையாக்க முயல்வது வன்முறையோ, அது போலவே மத நம்பிக்கையின்மையாலும் ஒற்றைத் தன்மையாக்க முடியாது என்பதையே கருப்பர் கூட்டம் முதலான நாத்திக அடிப்படைவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

புறவுலகோடு எந்தத் தொடர்பும் அற்ற அந்தமான் பழங்குடியின மக்களிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி பெண் தேர்தல் அதிகாரி சந்திக்கும் அனுபவங்களை விவரிக்கும் ஓரு நாவல் கன்னித்தீவு. மகிழ்ச்சி, வியப்பு, காதல், காமம், பயம் போன்ற அனைத்து உணர்ச்சிகளின் போதும் அதன் சூழலுக்கேற்ப கந்த சஷ்டி கவசப் பாடல் ஒன்றினை உச்சரிப்பார் யமுனா என்னும் அந்தக் கதாபாத்திரம். யமுனாவின் கணவர் பெயர் முருகன். கன்னித்தீவு நாவலாசிரியர் எழுத்தாளர் சி.சரவண கார்த்திக்கேயன். முருகன், சரவணன், கார்த்திக்கேயன் எல்லாம் அந்த அழகனாகிய ஆறுமுகனையேக் குறிக்கும். 

ஆப்பிளுக்கு முன் நாவலில் காந்தியடிகள் தன் அகவாழ்வில் மேற்கொண்ட சோதனைகளை மிக அழகியலோடும், நேர்மையோடும்  அணுகிய அதே எழுத்தாளர் சமீபத்தில் அவரது முகநூல் நிலைத்தகவலில், "கொரோனா எத்தனை எளிதாய், எத்தனை விரைவாய் வாழ்க்கையின் நிலையாமையை மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது! என் ஆச்சரியமெல்லாம் இன்னும் எப்படி இந்தப் பைத்தியகாரர்கள் கடவுளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே!" என்று எழுதினார். கருத்துக்களால் நான் பெரும்பாலும் காயப்படுவதில்லை. ஏனெனில் "மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது. மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது" என்று திருவிவிலியம் கூறுகிறது. இந்த மடமை மிகவும் அழகானது. மனிதத்தை நேசிக்க வைக்கின்றது.

கருப்பர் கூட்டம் போன்ற நாத்திக அடிப்படைவாதிகளிடமிருந்தும் பன்முகத்தன்மையைக் காப்பாற்ற வேண்டியிருப்பது சலிப்பாயிருக்கிறது.  

சனி, 13 ஜூன், 2020

சுத்தம்- சிறுகதை


சாவிக்கொத்தைப் பிசைந்து தலையில் வெளிர் நீல ரப்பர் உறையிட்ட சாவியை தேடியெடுத்து அலுவலகத்தைத் திறந்தான். மேசைக்கும் சுழல் நாற்காலிக்கும் இடையில் எதையும் நகர்த்தாமல் நுழைந்து மூச்சுவாங்க தன் கனத்த உடலை அமர்த்தினான். முன்னால் இருந்த பீங்கான் பேனா தாங்கியைப் பார்த்துக்கொண்டிருந்தான். தான் பங்குத்தந்தையாகப் பொறுப்பெடுத்த நாளில் கிளாரா பரிசளித்தது. அது இப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாதபடி ஒரு வடிவில் இருந்தது. நடுவில் எழுது பொருட்கள் வைப்பதற்காக ஒரு குழாய் போன்ற அமைப்பும், சுற்றிலும் அஞ்சரைப் பெட்டி போன்ற சிறுசிறு அறைகளும் இருந்தன. அவற்றில் தனது சைக்கிள் மற்றும் அலமாரிகளின் சாவிகளைப் போட்டுவைத்திருந்தான். அதன் அடியில் தங்க நிறத்தில் அருட்பணி செர்ஜியோ என்று எழுதப்பட்டிருந்த தனது பெயரைத் தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

இத்தாலியின் தெற்கு முனையில் இருக்கும் ஒரு பழமையான சிறுநகரத்தில் பிறந்து, வளர்ந்து இப்போது பதினொரு வருடங்களாக பர்லேத்தா என்னும் இந்த ஊரில் தான் பங்குத் தந்தையாக இருக்கிறான். அவனோடு இன்னும் இரண்டு சாமியார்கள் இருக்கிறார்கள். இன்னொரு இத்தாலியன் மர்த்தீனோ மற்றும் ரிப்பப்ளிக் ஆப் காங்கோ என்னும் மத்திய-மேற்கு பகுதியில் உள்ள ஆப்ரிக்க நாட்டிலிருந்து வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கு வேலை செய்யும் விர்த்து. இருவருமே அவனது உதவிப்பணியாளர்கள்.

அறைக்கதவின் வெளியே யாரோ நிற்பது போன்று நிழல் அசைந்து கொண்டிருந்தது. கதவு மேற்பாதி முழுவதும் செமி-ட்ராஸ்பேரன்ட் வகைக் கண்ணாடியினாலானது. உள்ளே வாங்க என்று குரல் கொடுத்தான். விர்த்து நின்றுகொண்டிருந்தான். "கிராட்சியா வந்தாளா?"  என்றான்.
"எந்த கிராட்சியா?" என்றான் செர்ஜியோ.

"அதான் ஒரு வாரமாக வந்துகொண்டிருக்கிறாளே! கிராட்சியா மானோஸ்பெர்த்தி. உன்னைத்தான் பார்க்க வருகிறாள். ஆனாலும் அவளை அதிகமாக அலைய விடுகிறாய்" என்று குற்றம் சுமத்தும் தொனியில் சொன்னான்.

"அவளுக்கு என்ன வேண்டுமாம்? கேட்டியா?"

"எல்லா கதையும் சொல்கிறாள். ஆனால் உன்னை எதற்கு பார்க்க வேண்டும் என்பதை உன்னிடம் தான் சொல்வாளாம். அல்லது மர்த்தீனோ என்றாலும் பரவாயில்லையாம்."

"எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அவள் வரும் நேரம் என்னால் அவளை சந்திக்க முடியவில்லை."

"நேற்று ஒரு நிமிடம் வரச்சொல்! போதும்! என்று கெஞ்சினாள்."

"நான் என்ன செய்ய? கிளாரா அவள் அம்மாவுடன் வந்திருந்தாள். பாரில் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் என்னால் இறங்கி வரமுடியவில்லை."

"அவளைப் பார்த்தால் ஏதோ சாவு பயத்தில் இருப்பவள் போலிருக்கிறது. ஏதோவொரு பாவத்தை உன்னிடம் சொல்லிவிட்டுத்தான் சாக வேண்டும் என்று  அடம்பிடிக்கிறாள் என்று நினைக்கிறேன். அடுத்த முறை மிஸ் பண்ணிவிடாதே செர்ஜியோ" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு தன் அலுவலகத்தை திறந்து சோபாவில் அமர்ந்தான்.

கிராட்சியா எதற்காக செர்ஜியோவைப் பார்க்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தான். நேற்று மிகவும் பதற்றமாக இருந்தாள். பார்ப்பதற்கு ஐம்பது வயது மதிக்கலாம். ஆனால் நிச்சயம் அறுபதுக்கு குறையாமல் இருப்பாள். எடுப்பான தோற்றம். அவளிடம் ஒரு ஸ்டைல் இருந்தது. பளபளப்பு கூட்டப்பட்ட உயர்ரக கறுப்பு ஷீ, அடர் நீல பெனட்டன் கைப்பை. அவளைப் பார்த்தவுடன் சட்டையில் எங்கேனும் கறையிருக்கிறதா? காலணிக்கு பாலிஷ் போட்டோமா? என்று நமக்கு நாமே ஒரு முறை சரிபாரக்கத் தோன்றும்.

நேற்று அவளுடன் நடந்த உரையாடலை மனதுக்குள் திரும்ப நிகழ்த்திக்கொண்டிருந்தான். அவளுக்கு எப்போதும் செர்ஜியோ மேல் நன்மதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நேற்றும் அப்படித்தான் குறை கூறிக்கொண்டிருந்தாள். "நான் வரும் போதெல்லாம் அந்த கிளாராவுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறான். என்னை  இந்த வயதில் இப்படி காத்திருக்க வைக்கலாமா? நீயே சொல்."

"அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நீ சரியாக வருகிறாய்! என்ன செய்வது?"

"எனக்கு ஒன்றும் இல்லை. நான் வெளிப்படையானவள். சொல்லிவிடுகிறேன். எண்ணைக்காக ஒலிவக் கொட்டைகளை அரைப்பது போல பலரும் எதையாவது பேசிக்கொள்கிறார்கள். அவன் கவனமாக இருக்க வேண்டும்" என்றாள்.

"கிளாரா அவனுக்கு பிள்ளை வயது. அவளும் அவனை ஒரு தந்தை போலத்தான் நடத்துகிறாள். இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது. விடு!"

"இல்லை விர்த்து. நான் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. உன்மேல் எல்லோருக்கும் நன்மதிப்பு இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன்" என்றாள். அப்படி சொல்வது அவள் முதல் ஆள் கிடையாது.

அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே அவனுக்குப் பட்டது. எத்தனை முறைதான் அவளும் வருவாள். ஒரு நிமிடம் மட்டும் தான் தேவைப்படும் என்கிறாள். என்ன வேலையென்றால் என்ன? வந்து பார்த்துவிட்டு போனால் என்ன? என்று யோசித்துக்கொண்டிருக்கையில் கதவை முரட்டுத்தனமாகத் திறந்து கொண்டு நின்று கொண்டிருந்தான் மத்தியா. சிறிய பூக்கடை வைத்திருக்கிறான். கோவிலில் அவ்வப்போது விற்பனையாகாத பூக்களை கொண்டுவந்து வைப்பான். பிறகு பிரட் வாங்குவதற்கென்று ஒரு யூரோ கேட்பான். அழுக்கான உடை. அண்ட முடியாத வாசம். யாரும் அவனிடம் பூ வாங்குவதில்லை. இந்த ஊரில் எல்லாக் கதைகளும் தெரிந்தவன். கிராட்சியோ வந்து நீண்ட நேரமாக செர்ஜியோவின் அலுவலகத்தின் முன் நின்றுகொண்டிருப்பதாகச் சொன்னான்.

"அவன் அங்கேதானே இருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து அவனோடு போனான். கிராட்சியா நின்றுகொண்டிருந்தாள்.

"இன்று சரியான நேரத்திற்கு வந்துவிட்டாய்! செர்ஜியோ அலுவலகத்தில் தான் இருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டே கதவைத் தட்டினான். திறக்க வில்லை. அவளது முகத்தில் வழக்கம் போல பதட்டமும், கூடுதலாக கொஞ்சம் கோபமும் தென்பட்டது. பொறுமை இழந்தவனாய் கதவைத் திறந்தான்.
சில நிமிடங்களுக்கு முன் இருந்தவனை இப்போது காணவில்லை. குழுக்கோஸ் அடைக்கும் போது தவறுதாலாக சிறிது இரத்தம் குழாயில் ஏறுவது போல அவளது முகத்தில் சிவப்பு கோடுகள் விழ ஆரம்பித்துவிட்டன.

நிலைமையை சமாளிக்க வேண்டி "மார்த்தீனோ என்றால் பரவாயில்லையா?" என்றான் விர்த்து. அவளும் "சரி! பரவாயில்லை வரச்சொல்" என்றாள். மூன்றாவது மாடியில் விறுவிறுவென்று ஏறினால் அவனது அறையில் அவன் இல்லை. எதிர்பார்த்தது தான். இந்த நேரம் கிச்சனில் நிற்பான். அங்கு போனால் தியான நிலையில் மாவு பிசைந்து கொண்டிருந்தான். தன்னால் அரை நொடி கூட இப்போது வரமுடியாது. "எதாவது சொல்லி அனுப்பிவிடு" என்று மறுத்துவிட்டான். விர்த்து பாவம்போல முகத்தை வைத்து கிராட்சியாவின் நிலையை எடுத்துச் சொல்லிப்பார்த்தான். முடியாது என்று நிமிர்ந்துவிட்டான். "தான் இப்போது இறங்கினால் பீட்சாவிற்கு பதில் பிஸ்கட் தான் சாப்பிட முடியும்" என்று அதே தியான நிலையில் ஒரு ஜோக் சொன்னான்.

அவளிடம் சென்று அவன் பாத்ரூமில் குளிப்பதற்கு தயாராக நிற்பதாகச் சொன்னான். "ஒரு நிமிடம் தானே இறங்கச் சொன்னேன். ஏன் இப்படி செய்கிறார்கள் இரண்டு பேரும்? " என்று புலம்பியவாரே போனவளை உதவ இயலாதவனாகப் பார்த்து நின்றுகொண்டிருந்தான் விர்த்து.
ஒருவார அலைச்சலுக்குப் பிறது இன்று காலை வந்து கதவைத் தட்டினாள்.

திறந்து "வா கிராட்சியா" என்றான் விர்த்து. "இங்கு யாரும் இல்லையா?" என்றாள்.

"நான் உன் முன் தானே நிற்கிறேன்! யாருமில்லையா என்றால் என்ன அர்த்தம்?" என்று சொல்லிக்கொண்டே செர்ஜியோவிடம் அவள் வந்திருப்பதாக இன்டர்காமில் சொன்னான்.

"வரச்சொல்" என்றான்.

ஒருவழியாக இன்று செர்ஜியோவைச் சந்தித்துவிட்டாள். அவள் சொன்னது உண்மைதான் அரை நிமிடத்திற்கும் குறைவாகத்தான் அவனிடம் பேசினாள்.

அவள் சென்றதும் விர்த்துவிடம் மூச்சுவாங்க வந்தான்.
"அவள் இத்தனை நாள் என்னையோ, மர்த்தீனோவையோ ஏன் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள் தெரியுமா?" என்றான்.

அடுத்தவர் காரியம்! ஆர்வமில்லாதவன் போல முகத்தை வைத்துக்கொண்டு "என்ன?" என்று கேட்டான்.

"ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று ஒரு சிறிய தொகை கொண்டு வந்திருந்தாள். இந்த காலத்தில் எல்லோரையும் நம்ப முடியாது என்பதால் நேரடியாக என்னை சந்தித்துத் தரவேண்டும் என்று காத்திருந்தாக சொன்னாள். விர்த்துவிடம் கொடுப்பதும் என்னிடம் கொடுப்பதும் ஒன்றுதான் என்றேன். அவள் பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள்" என்றான் செர்ஜியோ.

விர்த்துவின் குளியல் பழக்கம் வித்தியாசமானது. பனி கொட்டும் கடுங்குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரில் மட்டும்தான் குளிப்பான். பாதத்தை முதலில் நனைப்பான். பின் மேல் நோக்கி உச்சி தலை வரையிலும்
ஷவரின் கைப்பிடியைக் கொண்டு செல்வான். அவனது கருத்த தேகம் இன்னும் உள்ளிருந்து ஒளியூட்டப்பட்டு மின்னுவது போல் இருக்கும். அப்போது ஒரு காகிதத்தை மெழுகுவர்த்தியில் காட்டி மெல்ல மெல்ல எரிப்பது போல் உணர்வான். செர்ஜியோ அப்படி சொல்லிவிட்டு போனதும் ஒரு குளியல் போட்டுக்கொள்ளவேண்டும் போலிருந்தது அவனுக்கு.

வியாழன், 14 மே, 2020

இறைவார்த்தையை வாழ்வாக்க உதவும் செபமாலை


பற்பல முறையிலும் பல்வேறு வகையிலும் இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய கடவுள் 'இவ்விறுதி நாட்களில் தம் ஒரே மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்' (எபி 1:1-2). கடவுளின் வார்த்தையாகிய இயேசு மனித உடலெடுத்து நம்மிடையே குடிகொண்டார் (யோவான் 1, 14). தந்தையாம் கடவுளை இயேசுவைப்போல் வெளிப்படுத்த யாராலும் இயலாது. ஏனெனில் இயேசுக் கிறிஸ்துவைக் காண்பது தந்தையைக் காண்பதாகும் (யோவா 14:9). அன்பின், மன்னிப்பின், இரக்கத்தின் கடவுளை நாம் இயேசுவின் வார்த்தைகளிலும், வாழ்விலும் தான் கண்டுகொண்டோம். இறைவார்த்தையே நம் ஆன்மீக வாழ்வின் அடித்தளமும், உயிர்மூச்சும் ஆகும். அந்த வகையில் இறைவனின் மற்றும் நம் அனைவரின் விண்ணக அன்னையாகிய மரியாளை நோக்கி நாம் செய்யும் புகழ்ச்சி செபமாலையும், இறைவார்த்தையை வாழ்வாக்கவே உதவுகின்றது. எப்படி என்று பார்க்கலாமா?

செபமாலையின் செபங்கள்
செபமாலையில் மொத்தம் மூன்று செபங்கள் முதன்மையாகச் சொல்லப்படுகின்றன. 
1. விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே : எனக்கு செபிக்கத் தெரியாது என்று  சொல்லும் மனிதர்கள் இன்றும் நம்மிடையே உண்டு.  தெரியாத பல காரியங்களைத் தேடித்தேடி கற்றுக் கொள்ளும் நாம், செபிப்பதற்கும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இயேசுவே கற்றுத்தந்த இச்செபத்திற்கு இணையாக எதுவும் இருக்க இயலாது. தந்தையே என்ற சொல்லிலேயே என் உள்ளம் பேரன்பின் பூரிப்பால் நிறைந்துவிடுவதால் என்னால் மேற்கொண்டு செபத்தினைச் சொல்ல இயலாமல் போகின்றது. பல மணிநேரங்கள் அந்த ஒரு வார்த்தையிலேயே மனம் குடிகொள்கின்றது என்று சொல்கின்றார் புனித அவிலா தெரசா.
2. அருள் நிறைந்த மரியே வாழ்க! : மனிதன் எப்போது உயிர் வாழத்தொடங்குகிறான்? நாம் நினைப்பது போல் அவன் பிறக்கும் தருணத்தில் அல்ல. மாறாக தன் அன்னையின் கர்ப்பத்தில் கருவாக உருவாகும் போதே மனித வாழ்வு தொடங்குகிறது. ஆனால் கடவுளின் பார்வையில் அதற்கும் முன்பே அவர் நம்மைத் தெரிந்து வைத்துள்ளார். தேர்ந்து கொள்கின்றார். (எரேமியா 1, 5) அப்படியென்றால் இயேசு அன்னை மரியின் திருவயிற்றில் கருவாக உருவான தருணம் தானே மீட்புத்திட்டத்தின் தொடக்கம். அப்புனிதமான மணித்துளியில் கடவுளின் தூதர் கபிரியேல் பதின்பருவம் முடிவுறாதக் கன்னியாகிய மரியாளிடம் கடவுள் ஒப்படைக்கவிருக்கும் திருவுளத்தை நினைந்து வியந்து போகின்றார். அருள் நிறைந்த மரியே வாழ்க என்று புகழ்கிறார். ஆண்டவர் உம்முடனே! எல்லாப் பெண்களிலும் பேரு பெற்றவள் நீர்! என்று வாழ்த்துகிறார். இறை-மனித சங்கமம் நிகழும் புனித நேரத்தில் கடவுளின் தூதரால் உச்சரிக்கப்பட்ட இந்த வார்த்தைகளை நாம் மூச்சுக்கொரு முறை செபித்தாலும் மிகையாகாது தானே!
3. பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக!
தூய தமத்திருத்துவ புகழ்ச்சி செபம் என்று அறியப்படும் இச்செபமானது இறைவனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள அவசியமான அனைத்து மறைஉண்மைகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. ஒரே கடவுள் மூன்று ஆட்களாகத் திகழும் தமத்திருத்துவத்தைப் புகழ்ந்து, ஆராதித்து, வணங்கும் இச்சிறிய செபம் மிகுந்த வல்லமையுள்ளதாகத் திருச்சபை வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே அறியப்படுகின்றது. 

செபமாலையின் மறை உண்மைகள்
பாரம்பரியமாக செபமாலையில் மகிழ்ச்சி, துக்கம், மகிமை, ஒளி என்னும் நான்கு மறை உண்மைகள் தியானிக்கப்படுகின்றன. இந்த மறை உண்மைகள் அனைத்துமே இயேசுவின் வாழ்வு, பணி, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்னும் மீட்பின் செய்திகளையே உள்ளடக்கியுள்ளன. வெறுமனே மேற்சொன்ன மூன்று செபங்களைக் கடமைக்குத் திரும்பத்திரும்பச் சொல்வது செபமாலை செபிப்பதன் நோக்கமல்ல. மாறாக செபிக்கும் போது நாம் இறைவனில் இரண்டறக் கலக்க வேண்டும். ஒவ்வொரு மறை உண்மையும், ஒவ்வொரு செபமும் இறைவார்த்தையைத் தாங்கி வருவதால் மிகுந்த கவனத்துடனும், ஆராதனை உணர்வுடனும் செபிக்க வேண்டும். மேலும் இரக்கத்தின் இயேசு, ஆறுதல் தரும் ஆண்டவர், குணப்படுத்தும் கடவுள் என்று  இயேசுவின் பணிவாழ்விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளைத் தொகுத்து மறைஉண்மைகளாக அவ்வப்போது செபிக்கலாம். ஒவ்வொரு மறை உண்மைக்குப் பின்னரும் அந்நிகழ்வு சுட்டும் இறைவார்த்தையை வாசித்தும் தியானிக்கலாம். 

இறைவார்த்தையை வாழ்வாக்க உதவும் செபமாலை
அன்னை மரியாள் இறைவார்த்தையைக் கருவில் தாங்கிய புதிய உடன்படிக்கைப் பேழையாகத் திகழ்ந்தாள். அந்த இறைவார்த்தையே அவளை அருள் மிகப் பெற்றவள் ஆக்கிற்று. என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகின்றது என்று அவரைப் புகழ்ச்சிப்பண்ணிசைக்க வைத்தது. இறைவன் ஏழை, எளியோரின் சார்பாக நிற்கின்றார். அவர்களைக் கைத்தூக்கி விடுகின்றார் என்று அவர் அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்கின்றார். தானும் அப்பணியினைச் செய்யும் போது இறைவனின் பணியையேச் செய்கின்றோம் என்னும் எண்ணத்துடன் விரைந்து சென்று முதிர்வயதில் கருவுற்றிருக்கும் எலிசபெத்து என்னும் தன் உறவினருக்கு உதவுகின்றார். மகிழ்ச்சியின் இரசம் தீர்ந்து விட்ட திருமண வாழ்விற்கு, மீண்டும் மகிழ்ச்சியளிக்கத் தம் ஒரே மகனிடம் பரிந்து பேசுகின்றார். உடனிருந்து உணவு பகிர்ந்துண்ட சீடர்களே பயந்து ஓடிவிட, சிலுவையில் குருதியில் நனைந்து செம்மலராகத் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசுவின் பாதங்களைத் தாங்கிக்கொள்கிறாள். யூதர்களுக்குப் பயந்து மூடிய அறையில் முடங்கிக்கிடந்த தொடக்கத் திருச்சபையின் மையமாக அமர்ந்து செபத்தால் அவர்களை உறுதிபடுத்துகிறார். மீண்டும் ஒருமுறை தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார். பாருங்கள்! இறைவார்த்தையால் ஆட்கொள்ளப்பட்டவரின் வாழ்வு எத்தகைய ஆற்றல் மிக்கதாகத் திகழ்கின்றது என்று! மூவொரு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மீட்பின் பாத்திரமாகிய அன்னை மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டு, விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டு மீட்கப்பட்டோரின் முன்னோடியாக, பாவிகளுக்காக இடையறாது பரிந்து பேசுகின்றார். செபமாலையில் இறைவார்த்தையைத் தியானிக்கும் போது நாமும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகின்றோம். கடவுளின் பணியைச் செய்யும் ஆர்வமும், வேட்கையும் நம்மை உயிரோட்டமுள்ள மனிதர்களாக மாற்றுகின்றது. ஆகவே அன்றாடம் செபித்து வாழ்வாக்குவோம் அரிய பொக்கிஷமாகியத் திருச்செபமாலையை!