சனி, 19 பிப்ரவரி, 2011

மாண்புமிகு குழந்தைகள் (Dear Respected Children)

முன்னுரை

ஒளி படைத்தக் கண்ணினாய் வா வா வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!
என்று பாரதியாரால் அன்போடும், வீரத்தோடும் அழைக்கப்பட்டக் குழந்தைகள், இன்று அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச்சீட்டிற்கு தங்கள் மனித மாண்பினையும், மரியாதையையும் விலைகொடுக்க வேண்டியிருப்பதைப் பார்க்கும் போது என் நெஞ்சம் சொல்லொண்ணாத் துயரம் அடைந்திருக்கிறது. அவர்கள் குழந்தைகள் என்ற முறையில் ஏற்கனவே பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் அகவிழி திறக்கப்படாத நம் சமுதாயத்தில், இன்றைய இலவசப் பயணச்சீட்டு அவர்களை இன்னும் மாண்பிழக்கச் செய்கிறது. எல்லா இலவசங்களையும் எதிர்ப்பது போல, இவ் வசதியையும் எதிர்ப்பதற்காக எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. மாறாக அவ்வாறு குழந்தைகள் நலம் விரும்பி ஏற்படுத்தப்பட்டிருக்கும் இப்பணச்சீட்டு முறையில், இன்றையக் குழந்தைகள் எங்ஙனம் நடத்தப்படுகிறார்கள் என்பதையும், அவர்களது உடல், கல்வி, மனநலம் எந்த அளவிற்கு பாதிப்படைகிறது என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.

பேருந்து நிறுத்தங்களில்

மெக்காலே, மெட்ரிகுலேஷேன் போன்ற வெள்ளைக்காரச் கல்விச் சரக்குகள் நம் குழந்தைகளின் முதுகுகளில் ஒருநாளும் குறையாத புத்தகச் சுமையினை ஏற்றிவிட்டு வேடிக்கைப் பார்ப்பதை நாம் அறிவோம். அம்மூட்டை முடிச்சுகளுடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நிற்கும் போதே அவர்களின் காலை உணவு முழுவதுமாக செரித்து விடுகிறது. அதன் பின்னர் ஏராளம் தனியார் பேருந்துகளும், அதிவேக, மிக அதிவேக, குளிர்சாதன, இடைநில்லா என்று அத்தனை வகை பேருந்துகளையும் களைப்புடனே பார்த்தக்கொண்டிருக்கும் குழந்தைகள், தாங்கள் செல்ல வசதி படைத்த சில மிக மெது வேக பேருந்துகளின் பின்னாலும் ஓட வேண்டியிருக்கிறது. புத்தக மூட்டை அவர்களை பின்னோக்கி இழுத்தாலும், பள்ளி செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர்களை பேருந்தின் படிக்கட்டு வரை முன்னே செலுத்துகின்றது. குறைந்தது இரண்டு, மூன்று பேருந்துகளாவது அவர்களுக்கு ஒரு ஓட்டப்பயிற்சியினைக் கொடுத்தபின். வேண்டா வெறுப்பாக ஒரு பேருந்து முனகிக் கொண்டே அவர்களை தன்னுள் ஏற்றுக்கொள்கிறது.

நடத்துனரின் நடத்தைகள்

'டேய் நாயே! படிக்கட்டிலர்ந்து உள்ள வா!' என்ற பள்ளிக் குழந்தைகளுக்கு வரவேற்புரையாற்றுபவர் நடத்துனர். 'டிக்கெட்டா, பாசா?' என்றும் 'எத்தனை நாளு சொல்றது.. அந்த மூட்டைய எங்கயாச்சும் இறக்கி வையின்னு' கேட்கும் நடத்துனரிடம் எங்கு இறக்கி வைப்பது என்று தெரியாதக் குழந்தை விழிக்கிறது. 'முழியப் பாரு கள்ளப்பய மாதிரி, இதுகல்லாம் படிக்கப் போகுதோ, வேறஎதுக்கும் போகுதா, நமக்குன்னு வந்து வாய்க்கிறாங்க பாரு' என்ற வசைச் சொற்களோடு பேருந்தில் தன்னால் இயன்ற அளவிற்கு முன்னேற முயல்கிறது குழந்தை.

பிற பயணிகளின் பங்களிப்பு

'ஏய் உங்களுக்கெல்லாம் வேற பஸ்ல வந்தா என்ன? ச்சி.. அங்க தள்ளி போ!'
என்று இப்படி ஒரு உருவத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்பது போன்ற பாவனையை முகத்தில் காட்டி அக்குழந்தைகளின் முகத்தில் வெறுப்பு அமிலத்தை தெளிப்பது பிற பயணிகளின் வேலை. இவர்கள் பிரயாணிகளா? அல்லது பிராணிகளா? என்று கூட பல வேளைகளில் எண்ணியிருக்கிறேன். இவர்கள் குழந்தைகளாக இருந்ததே இல்லை போல. அல்லது இவர்களுக்கு குழந்தைகளே இல்லை போல.

பள்ளியில் குழந்தைகள்

ஊர்ந்து சென்ற பேருந்து வழக்கம் போல நிறுத்தத்திலிருந்து அரைகல் தள்ளியே நிற்கிறது. இறங்கி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடியும் குழந்தையால் முதல் பாடவேளையில் கடைசி நிமிடத்தில்தான் நுழைய முடிகிறது. பேருந்திலிருந்து உமிழப்பட்டக் குழந்தைகள், இங்கும் இருக்கையின் மேல் நிற்க, முழங்கால் நிற்க, ஐந்நூறு முறை 'இனி நான் காலந்தவறாமல் வருவேன்' என்று எழுத என ஏதோவொரு தண்டனையைப் பெறுகிறது.

அறநெறி பார்வையில்

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நீ என்ன செய்தாய் என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. நான்; அச்சிறுவர்களை 'இப்படி வாங்க தம்பி' என்று பன்மையில் அழைப்பதை ஒரு சிறு பங்களிப்பாகக் கருதுகிறேன். இத்தனை தெளிவிற்கு பின்னரும் இப்படித்தான் என் பங்களிப்பு இருக்கிறது என்றால் அது எந்த மாற்றத்தையும் உருவாக்காது என்பதையும் உணர்கிறேன். 'மனிதர் நோக மனிதர் பார்க்கும் பழக்கம் ஒழியுமோ' என்ற பாரதியாரின் வார்த்தைகள் என் நெஞ்சைச் சுடுகின்றது. அறநெறியின் பன்முகத்தன்மையில் பார்க்கும் போது குழந்தைகளின் மாண்பு என்பது சட்டமாக, ஒவ்வொருவரின் உள்ள உறுதிப்பாடாக, தனிமனித வளர்ச்சியாக, பிறர் மீதுள்ள அன்பாக, அனைத்திற்கும் உச்;சமாக ஒரு சமூக மாற்றமாக உருவெடுக்க வேண்டும் என்பதே என் உள்ளார்ந்த விருப்பம். குழந்தைகளின் மீதான இந்த வன்முறையைப் பார்த்த பின்னரும் நாம் அந்த இடத்திலேயும், பின்னர் இந்நிலை முற்றிலும் மாறும் வண்ணம் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளாவிடின் நீதியின் பரிமாணங்களாகிய பொதுநீதி, கடமையைச் செய்ய வைக்கும் நீதி, சமூக நீதி போன்றவற்றை தெரிந்து வைத்திருந்தும் அவற்றிற்கு அநீதி இழைக்கின்றோம் என்றே பொருள். இனி வரும் நாளில் குழந்தைகள் மாண்பினை மதிப்பேன் என்றும் காப்பேன் என்றும் உறுதி கொள்வோமா?








சனி, 29 ஜனவரி, 2011

ஒரு நவீன குழந்தையின் ( A Joyful Psalm of a Modern Child )

வாழ்க்கையில்
நம்பிக்கை என்னும் ஊன்றுகோலை இழந்து
வாழப்பிடிக்காமல் வாழ்ந்து தொலையும்
பரிதாப மனிதர்களிடம்
'நல்லகாரியங்கள் நம்மைசுற்றிலும் நடந்தேறுகின்றன'
என்பதை தெளிவுபடுத்தும்
ஒரு நவீன குழந்தையின்
நன்றித் திருப்பாடல்

அன்புள்ள அப்பா
உங்களுக்கு நன்றிசொல்ல
ஆசை ஆசையா ஓடிவந்தேன்

ஒரு சம்மனசு போல
நல்ல பிள்ளையா
என்ன பிறக்கவெச்சீங்களே!

எனக்கு பாசம் கொடுத்து
பராமரிக்க, பாதுகாக்க
பாசமான அப்பா, அம்மா,

அக்கா, அண்ணன்,
சொந்தக்காரங்க
எல்லாரையும் கொடுத்தீங்களே!

உங்களப்பத்தி தெரிஞ்சிக்க
எனக்கு மறைக்கல்வி, பூசபாக்க
வாய்ப்பு கொடுத்தீங்களே!

இன்னிக்கு நான் இப்படியிருக்க
முக்கியக் காரணமான
தியாக உணர்வுள்ள ஆசிரியர்கள்

நல்ல நல்ல நண்பர்களை
பெரிய மனசுள்ள சமுதாயத்தை
ஒரு பைசா செலவில்லாம தந்தீங்களே!

எனக்கு துன்பமே தெரியாம
எப்பவும் சிரிச்சிக்கிட்டேயிருக்க
குறு குறுன்னு ஒரு தங்கச்சிப்பாப்பா

செல்ல பூனைக்குட்டி,
மை பெஸ்ட் ஃப்ரெண்டு Jimmy
குட்டியா ஒரு வீட்டுத்தோட்டம்...

ஏ..அப்பா!
எவ்வளவு கொடுத்திங்க..
ரொம்ப நன்றிப்பா!

ரொம்பவும் நன்றி
ஆனா ஒரு சின்ன வேண்டுகோள்
நீங்க எனக்கு எதுவுமே தரவேண்டாம்!

நீங்க எப்பவும்
எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
நீங்க ஏங்கூட இருக்கிங்க..

ஏங்கூட பேசுவீங்க
ஏங்கூட சண்டபோடமாட்டீங்க..
இந்த நம்பிக்கை

இதுபோதும் அப்பா
உங்களுக்கு எப்பவும்
நன்றி சொல்லுவேன்

நன்றி அப்பா! நன்றி!
என் இதயம் துடிப்பதும்,
நான் மூச்சு விடுவதும்

நான் கண் சிமிட்டுவதும் கூட
அன்னிச்சை செயல் இல்லப்பா..
என் நன்றியின் தாள சுதிகள்!


நன்றிகளுடன் ம. ஆன்றனி பிரான்சிஸ்



இனிவருபவை...


இலையுதிர் காலம்
சில இலைகளை விரும்பியே உதிர்த்து விட்டேன்
விருப்பமான சில இலைகளும்
விரும்பியே உதிர்ந்துவிட்டன

கொட்டிய மழையிலும்,
 வாட்டிய வெயிலிலும் கூட
என்னோடு இன்னமும் சில இலைகள்...

என்னைப் பற்றி எழுதத்துவங்கும்
என்னுயிர் இலைகளே..!
நீங்கள் என்னில் துளிர்த்த நாள்
எனக்குத் தெரியும்
மண்ணில் துளிர்த்த நாளையும்,

தொலைவிலே போனாலும்
தொலைந்து விடாமலிருக்க
தொலைபேசி எண்ணையும்,

வந்தால் பார்த்து செல்ல-அல்லது
வந்து பார்த்து செல்ல
உங்கள் வேர்களின் முகவரியும்,

இதயம் கனிந்து
இதனுடன்
இணைத்திடுக..!

குறிப்பு: இலைகள் என்றதும்
இறக்கமாய் பார்க்கவேண்டாம்
என் வேர்களுக்கு நீர்பாய்ச்சுவதே
இந்த இலைகள் தான்..         

  அன்புடன் ம. ஆன்றனி பிரான்சிஸ்





மேய்ப்பு பணியில்
இருப்பவர்கள்
மனதளவில்
வறண்ட நிலமாய்
இறையனுபவத்தில்
வெற்றுப்பாத்திரமாய்
இருக்கும் அவலநிலையை
இறைவனிடம் முறையிடும்
ஓர் குழந்தை தொழிலாளரின்
புலம்பல், ஏக்கம், கண்ணீர்
இறையனுபவத்திற்கான
ஆசையை
வேட்கையை
தேடலை
என்னிலே தூண்டிய
என் ஆசிரியப் பெருமக்களுக்கு
இப்பாடல் சமர்ப்பணம்.

 
படைச்ச பெருமானே
எறங்கியிங்கே வாருமய்யா
பரிசுத்த பரம்பொருளே
பாவியெனைப் பாருமய்யா!

சோகமெல்லாம் சொல்லியழ
சுற்றத்திலே யாருமில்லை
தேகமெல்லாம் இளச்சுபுட்டேன்
வேகமாக வாருமய்யா

சின்னபுள்ள வெளயாட்டில்
அழிச்சிலேர்ந்து ஆடினோமே
வாழ்க்கையிலும் அப்படியே
வகை செய்யக்கூடாதா?

பொறந்ந மறுநாளே
ஆத்தாள கொன்னுபுட்டேன்
அப்பனோட ஆத்தாதான்
எனையெடுத்து வளத்துபுட்டா

கோபக் கொடுங்காரி
கொலமட்டும் செய்யலியே
எடுத்ததுக்கும் பிடிச்சதுக்கும்
காளியாட்டம் ஆடுறாளே

பச்சப் புள்ளையின்னு
பாவமெல்லாம் பாக்;காம
பழியெல்லா ஏம்மேல
ஏத்திவெச்சு அடிக்கிறாளே!

அப்பனுக்கு எம்மேல
எள்ளளவும் பாசமில்ல
ரெண்டே மாசத்தில
ரெண்டாந்தரக் கல்யாணம்

மின்சார வேலிக்குள்ள
கண்தெரியா மானப்போல
வகைவகையா வாழ்க்கையில
நானும்வந்து மாட்டிக்கிட்டேன்

சித்(தீ)யை பத்திநானும்
சொல்லணுமா ஆண்டவரே
நெருப்புக் கட்டையால
தெனந்தோறும் சூடுவைப்பா

பத்திரமா பள்ளிக்கூடம்
பெத்தமகள அனுப்பிவெச்சு
பாவிமக என்னமட்டும்
அனுப்பிவிட்டா தொழிற்கூடம்

பட்டாசு வெடிச்சதுல
கையிரண்டும் புண்ணாச்சு
மருந்துவெச்சு தேச்சதுல
வெரலு ஒண்ணு விழுந்துபோச்சு

எப்படியும் வாழ்க்கையில
முன்னேறப் போவதில்லை
இப்படியே என்னவந்து
எடுத்துக்கயா ஆண்டவரே

மனுசனாகப் பொறந்தாக்க
நம்பிக்கை வேணுமடா
அய்யனாரு கோயிலுல
பூசாரி சொன்னாரு

மனசில்லா ஒலகத்துல
மனுசனாக நானெதுக்கு
மாடாச்சும் ஆடாச்சும்
மாத்தினாலும் போவுமய்யா

சின்னபுள்ள வெளயாட்டில்
'அழிச்சிலேர்ந்து ஆடினோமே
வாழ்க்கையிலும் அப்படியே
வகை செய்யக்கூடாதா?

சோகமெல்லாம் சொல்லியழ
சுற்றத்திலே யாருமில்லை
தேகமெல்லாம் இளச்சுபுட்டேன்
வேகமாக வாருமய்யா

படைச்ச பெருமானே
எறங்கியிங்கே வாருமய்யா
பரிசுத்த பரம்பொருளே
பாவியெனைப் பாருமய்யா!
 
                    ஏக்கத்துடன் ம.ஆன்றனி பிரான்சிஸ்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

தமிழ்-ஆங்கில மன்ற தொடக்கவிழா அறிக்கை (Tamil-English Acdemies inaguration)

அகவையில் மூத்த அழகு தமிழே – வைகைக்கரையில் பாய்ந்த வேங்கைத் தமிழே
செம்மொழியாய் பார்போற்றும் இயங்கு தமிழே
போற்றி! போற்றி! போற்றி!
அவையினர் அனைவருக்கும் தமிழ் வீர வணக்கம்!


மதுரையில் முடிந்து போன முச்சங்கங்களின் தொடர்ச்சியாய், மலைக்கோட்டை மாநகர், திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியின் 2010-2011 ம் கல்வியாண்டின் தமிழ்-ஆங்கில மன்றங்கள் 'சேதெஸ் சேப்பியன்ஸா' அரங்கில் மலர்ந்த நேரம் 19-06-2010, சனிக்கிழமை, காலை 11.30 மணி.

 இரண்டாமாண்டு மாணவர்கள் இசபெல்லா மற்றும் சுரேஷ்குமார் இணைந்து, உணர்ந்து பாடிய 'உன்னருகில் நானிருக்கும்...' என்ற இறைவணக்கப் பாடல் நம்மை இறையன்பின் அனுபவத்தில் நெக்குருக வைத்தது.


அன்றலர்ந்த பூவாய் புன்னகைத்து வந்தோரை வரவேற்றார் வைகைக் குழுவின் ஜான்கென்னடி.


 சிறப்பு விருந்தினர், மன்றங்களின் இயக்குனர் தந்தையர்கள் மற்றும் மன்றச்செயலர்கள் குத்துவிளக்கேற்ற, உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்து, விருந்தோம்பல், வீரம், காதல் வளர்த்த தமிழகப் பண்பாட்டின் தொட்டில்கான, காவிரி, அமராவதி, தாமிரபரணி, வைகை, பவானி என்னும் தமிழ் ஆறுகளின் பெயர்களைத் தாங்கிய ஐந்து தமிழ்மன்றக் குழுக்களும் தங்கள் பணியை அன்றேத் தொடங்கினர்.


 நெப்போலியன் தலைமையில் அணிவகுத்த பவானி குழுவினரின் 'தமிழா, தமிழா, நீயும் தலை உயர்த்தடா' என்ற பாடல் நம் செவிகளுக்கு இடப்பட்ட கட்டளை.


 நெஞ்சக்கிடக்கையில் உறைந்து கிடக்கும் இறைமையோடு உறவாட உகந்த மொழி என்று புளங்காகிதப்பட்டது போதும். இனிமேல் செயற்கைகோள்கள் தமிழில் செய்தி அனுப்பட்டும்.. கொடிய நோய்கள் என்றாலும் அவை நல்ல தமிழில் இருக்கட்டும். கணினியில் மென்பொருள்கள் கட்டாயமாகத் தமிழ் கற்றுக்கொள்ளட்டும். மாநாடுகள் போதும்.. இனி செயல்பாடுகள் முன்வரட்டும் என்றத் தன் கருத்தைப் பதிவு செய்தார் சிறப்பு விருந்தினர், 'தூய வளனார் கல்லூரி முதல்வர் பணி.இராசரெத்தினம் சே.ச. அவர்கள். மனித உறவுகளைக் கருத்தில் கொண்டு, அயல் மொழிகளை, குறிப்பாக ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதும் சாலச்சிறந்ததே என்று அவர் ஆங்கிலத்தில் பேசியது புதுமை.


 கல்வி, கலை, மொழி, அரசியல் போன்ற சமூக இயக்கத்திற்கு தடையாக இருக்கும் புல்லுருவிகளுக்கு வீச்சரிவாள் வீசியது, தாமிரபரணி குழுவினர், தெக்கத்தி தமிழில் அரங்கேற்றிய வீதி நாடகம்.
 நம் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ் பேசத் தெரியவில்லை என்பது தம் நெஞ்சை நெருஞ்சி முள்ளாகக் குத்துவதாகவும், பள்ளிக்கல்வியைத் தாய்மொழியிலும், அந்நிய மொழிகளை வேண்டுமானால் அடுத்த ஆறு மாதங்களிலும் கற்றுக்கொள்ளலாம் எனத் தம் யோசனையை முன்வைத்தார் தமிழ்மன்ற இயக்குநர் தந்தை பணி.இ.ரெய்மண்ட் ஜோசப் அவர்கள்.


'வானமறிந்தது அனைத்துமறிந்து வளர்மொழி எம்மொழி என்ற முதலாண்டு மாணவர்களின் குழுப்பாடல், கொன்றை, குவளை, அன்னிச்ச மலர்களைத் தமிழ் நரம்புகளில் பூக்கச்செய்தது.
 தெரிவு செய்தலே வாழ்வு. பின்னர் தொடர்ந்த ஈடுபாடும், அயராத உழைப்பும் நம்மை அறுபது மடங்காகவும், ஏன் அதைவிட அதிகமாகவும் கனிதரச் செய்யும் என தந்தைக்குரிய வாஞ்சையோடு உற்சாகப்படுத்தினார்
ஆங்கில மன்றங்களின் இயக்குனர் பணி.நார்பட் தாமஸ் அவர்கள்.


 மலர்ந்த முகம், குவிந்த கரம், தாழ்ந்த சிரம் என காவிரி குழுவின் எபனேசர், அனைவருக்கும் நன்றி கூறிய பாங்கு நம் நெஞ்சை விட்டு இன்னும் நீங்காமல் நிற்கிறது.


'நாங்கள் தமிழ் மாணவகள்..' என்ற, இதயத்துடிப்பின் தாளகதியில் மன்றப்பண்ணிசைக்க இனிதே நிறைவுற்றது தொடக்கவிழா.
அட.. என எண்ண வைத்த அமராவதி குழுவினரின் நிகழ்ச்சித் தொகுப்பு புதுமையிலும் புதுமை.
'நிலமுட்டை வெடித்து மனிதம் வாய் திறந்த போது அகரமாய் உயிர்த்த ஆதிமகள் தமிழின் ஆழமும், விரிவும் நம் காலத்திலே இன்னும் அகலப்படட்டும்'
நன்றி!
என்றும் தோழமையுடன்,
செயலர்
ம.ஆன்றனி பிரான்சிஸ்

வியாழன், 27 ஜனவரி, 2011

திருப்பலி முன்னுரை

பொதுமுன்னுரை

முகிலைத் தழுவும் தென்றல் மழையைத் தருகிறது. மண்ணைத் தழுவும் மழை விளைச்சலைத் தருகிறது. அவனியை  அன்பால் தழுவும் மனமே அர்ப்பணிக்க முன்வருகின்றது. இதயத்தில் நிரம்பி வழியும் அன்பால், கிறிஸ்துவின் அர்ப்பணத்தில் தம்மையே முழுமையாக இணைத்துக்கொள்ள முன்வந்திருக்கும் எம் சகோதரர்கள் சந்தோஷ் குமார், குழந்தை ராஜ், அந்தோணி குரூஸ் ஆகியோரின் இறுதி அர்ப்பண விழாவில் கலந்து கொண்டு, எம் இறையன்னை குடும்பத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க வந்திருக்கும் அருள் பணியாளர்கள், அருட்சகோதரிகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்பொழுக வரவேற்கின்றேன்.

பாண்டி-கடலூர் உயர்மறைமாவட்டம் அழகப்பசமுத்திரத்தில் திரு.சாமுவேல், திருமதி அந்தோணியம்மாள் அவர்களின் நான்காவது மகனாக 10-05-1982 அன்று பிறந்தவர் எம் அருட்சகோதரர் சந்தோஷ் குமார். பார்க்கும் போதெல்லாம், இவரது முகத்தில்  அரும்பும் புன்னகை நமக்குப் பூக்களை நினைவுபடுத்தும். அவை அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஏராளம் கனிகளை பிரசவிக்கும் ஆற்றல் கொண்டவை. 

திண்டுக்கல் மறைமாவட்டம்,  அம்மாபட்டியில் திரு.சவரிமுத்து, திருமதி அன்னம்மாள் ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் ஐந்தாவது மகனாக 24-12-1982 அன்று பிறந்த செல்லப்பிள்ளை எம் அருட்சகோ.குழந்தை ராஜ். உள்ளத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் தான் பெயரிட்டிருப்பார்களோ என்று இவரோடு பழகியவர்களுக்குத் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. எளிமை, இயல்பு, ஆழ்ந்த இறை நம்பிக்கைக்கு இவரை எடுத்துக்காட்ட இயலும்.

அடுத்ததாக அருட்சகோ.அந்தோணி குரூஸ். முத்துக்களைப் பெற்றெடுப்பதில் அழகப்பசமுத்திற்கே முதல் இடம் என்பது போல் இவர் இவ்வூரிலிருந்து எம் சபையில் பூக்கும் இரண்டாவது மலர் திரு.ராயப்பன், திருமதி அந்தோணியம்மாள் இவர்களின் நான்கு பிள்ளைகளில் இரண்டாவது மகனாக 20-04-1984 அன்று பிறந்தார். பாகுபாடற்று பழகுவதும், பெரிய சிந்தனைகளை, எளிய மொழியில் பேசிவிடுவதும் இவரது தனிச்சிறப்பு. 

இம் முக்கனிகள் மூன்றும் எம் சபையில் காலடி பதித்த ஆண்டு 2002. ஓராண்டு புதுமுக அனுபவத்தை இதே இல்லத்தில் பெற்றபின் 2003 முதல் 2004 வரை மூன்றாண்டு மெய்யியல் படிப்பை மதுரையிலும், 2007-2008 இல் ஓராண்டு நவசன்னியாசத்தை மீண்டும் இதே இல்லத்திலும் முடித்து, தங்கள் முதல் வாரத்தைப்பாட்டினைக் கொடுத்த நாள் 07-05-2007. தொடர்ந்து 2007-2010 வரை நான்கு ஆண்டு இறையியல் படிப்பை திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியில் முடித்த இவர்கள் இன்று எம் இறையன்னை சபையின் நிரந்தர அங்கத்தினர்களாக தங்கள் இறுதி அர்ப்பணத்தைக் கொடுக்கவிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்தி, இவர்களுக்காக செபிக்க வந்திருக்கும் நாம், பாடல் குழுவினரோடு இணைந்து வருகைப்பாடலைப் பாடுவோம்.

திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் மிகவும் பிரியமான சகோதர, சகோதரிகளே! எம் இறை அன்னை சபை என்னும் தோட்டத்திலே நிரந்தரமாய் வேரூன்றி, இன்றுமுதல் புதிதாகப் பூத்துக் குலுங்கவிருக்கும் எம் அருட்சகோதரர்கள் சந்தோஷ் குமார், குழந்தை ராஜ், மற்றும் அந்தோணி குரூஸ் ஆகியோரின் இறுதி அர்ப்பண விழா திருப்பலியில் பங்கேற்று, அவர்களின் துறவற அர்ப்பணம் சிறக்க வாழ்;த்த வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கின்றோம். 'தன்னைக் காத்து உலகை துறப்பதல்ல- துறவரம் தன்னைத் துறந்து உலகைக் காப்பதே என்ற சிலுவைத் துறவியாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவடி தொடர்வதே இன்றையக் காலத்திற்கு ஏற்றத் துறவறமாகும். திருச்சபை என்னும் மாபெறும் இறைமக்கள் இயக்கத்திற்கு இதயமாய் விளங்குவது துறவறம் ஆகும். இதுவே காலத்தின் சுவடுகளில் நாம் காணும் உண்மை. அடிமை வழக்கம், அரசர் வழிபாடு, நாடு பிடிக்கும் வெறி, பகட்டு வாழ்க்கைமுறை, காலனி ஆதிக்கம் போன்றவை உலக வரலாற்றின் ஒவ்வொரு காலத்திலும் முளைத்த நச்சுக் காளான்கள். இறையாட்சிக்கு எதிரான இத்தகைய இருட்டுக்கொள்கைகள் திருச்சபையின் இயக்கத்தில் தேக்கத்தை ஏற்படுத்;திய போதெல்லாம் சூழலின் தேவைக்கேற்ப புதிய புதிய வடிவம் கொண்ட துறவறம், ஒட்டுமொத்த திருச்சபைக்கும் உண்மையின் பாதையைச் சுட்டிக்காட்டிய சுடரொளியாக விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில், நற்கருணையில் இறைபிரசன்னம், அன்னை மரியாள் இறைவனின் தாய் போன்ற மறை உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் தாழ்ச்சியற்ற சிலரால் திருச்சபை பிளவுபட்டக் காலத்தில், குழந்தைகளுக்கு மறைக்கல்வி என்னும் கருவியைக் கையிலெடுத்து, திருச்சபைத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் தெளிவினை ஏற்படுத்தியவர்தான் எம் இறையன்னை சபை நிறுவனர் புனித ஜான் லியோனார்தியார்.அவரது தனிவரத்திலிருந்து(உhயசளைஅ) அணுவளவும் பிறளாது சூழலின் தேவைக்கேற்ப மாற்றுப் பணிகளைச் செயல்படுத்தி இறையாட்சிக்குச் சான்று பகரும் எம் சபையின் இயக்க ஓட்டத்தில் இன்று இவர்கள் தங்களையே இணைத்துக்கொள்ளவிருக்கிறார்கள். முதல் அர்ப்பணத்தில் இவர்கள் உச்சரித்த கற்பு, ஏழ்மை, கிழ்படிதல் என்ற வார்த்தைப்பாடுகள் இன்று முதல் இவர்களின் வாழ்க்கைப்பாடாக மாறவிருக்கின்றன. இயேசுவின் பாதச் சுவடுகளை மற்ற யாவரைக் காட்டிலும் மிக நெருக்கமாய் பின்தொடர சிறப்பான முறையில்  அழைக்கப்பட்டிருக்கும் இச்சகோதரர்களுக்கு ஆற்றலளிக்கும் ஊற்றாக இருப்பது இவர்களது ஆழ்ந்த இறையனுபவமும், இவர்களுக்காக இறைமக்களாகிய நாம் ஒப்புக்கொடுக்கும் செபங்களும்தான்.தொடர்ந்து இவர்களுக்காக செபிப்போம்திருப்பலியில் பங்கேற்று நாமும் இறையாசீர் பெறுவோம்.