திங்கள், 22 நவம்பர், 2010

நீங்க மட்டும்தான் மனிசங்க..' (a must read)

                                                                முன்வாசல்

நான்       :          எம்மா! மாரி பாட்டி வந்திருக்காவ!

அம்மா   :         அந்த வண்ணாத்திய பொற வாசலுக்கு வரச்சொல்லு மக்கா!
                     (மாரி பாட்டியிடம்)

          'ஏ மாரி! இந்தா.. இந்த பழயத குடி!
           ச்சோலியப்பன் (மாரி பாட்டியின் கணவன்) இந்த சைடு வந்தாம்னா
           இவியளுக்க (எங்க அப்பா)   சட்டய  தேச்சி    குடுத்துவுட்ரு.                             
           பயலுவளுக்க  
          நிக்கரு,  சட்டய.. வெயில் தார  தம்பி  வருவான் கொஞ்சம்                  
          நல்லா   தேச்சிகுடு.. மனசுல ஆச்சா?

மாரி பாட்டி : சரிங்கம்மா! அப்ப நான் போயிட்டு வற்ரேங்கம்மா!

நான்                :     (இந்த உரையாடல் என்னுள் சின்னப் 
                                  பிள்ளைகளுக்கே               உரித்தான              
                                 பல கேள்விகளையும், கற்பனைகளையும் உசுப்பிவிட்டது.
                                 'வண்ணாத்தின்னா மாரி பாட்டிக்கு பட்டப்பெயரா   
                                 இருக்குமோ?                      
                                அதுக்கு என்ன காரணமா இருக்கும்? நம்ம அம்ம ஏன் 
                                 மாரி  பாட்டிய பேரு சொல்லி கூப்பிடாவ?')

               ' எம்மோ! சோமு அண்ணனோட பாட்டிய அன்னக்கி
                 வண்ணாத்தின்னு                   
                சொன்னிய.. அவுங்க பேரு மாரிபாட்டிதான?'

அம்மா  : என்னது? மாரி 'பாட்டியா?' ஒங்க அப்பனுக்க அம்மையா அவா..
                  கிறுக்கு பயலே! இந்த அண்ணன், நொண்ணேன்னு 
                  சோமு    பயலுக்க     கூட பேசுன, எதாவது வாங்கித் தின்னன்னு  
                  வையி.. மொவனே தொலிய உறிச்சிப்புடுவேன் உறிச்சி!

ஒரு சாதிக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு தன்னை பெற்றெடுத்த மறுநாளே
இறந்து போன தன் தலித் தாயின் நினைவு ஒருபுறம்..
இன்னொரு சாதிக்கார பெண்ணை மணந்து மது, மாது என போதை வாழ்க்கை  நடத்தும்
பேதை தந்தையின் அடாவடித்தனங்கள் மறுபுறம்..
தன்னை வளர்க்கும் அப்பத்தாவின் வெறுப்பும் கசப்புமே வாழ்வாகிப்போன
சோமு அண்ணனின் சொந்தக் குரலில்....
இந்தப் புலம்பல்..சோமு அண்ணனுக்கு சமர்ப்பணம்
.

படைச்ச பெருமானே
எறங்கியிங்கே வாருமய்யா
பரிசுத்த பரம்பொருளே
பாவியெனைப் பாருமய்யா!

சோகமெல்லாம் சொல்லியழ
சுற்றத்திலே யாருமில்லை
தேகமெல்லாம் இளச்சுபுட்டேன்
வேகமாக வாருமய்யா

சின்னபுள்ள வெளயாட்டில்
'அழிச்சிலேர்ந்து ஆடினோமே
வாழ்க்கையிலும் அப்படியே
வகை செய்யக்கூடாதா?

பொறந்ந மறுநாளே
ஆத்தாள கொன்னுபுட்டேன்
அப்பனோட ஆத்தாதான்
எனையெடுத்து வளத்துபுட்டா

கோபக் கொடுங்காரி
கொலமட்டும் செய்யலியே
எடுத்ததுக்கும் பிடிச்சதுக்கும்
காளியாட்டம் ஆடுறாளே

பச்சப் புள்ளையின்னு
பாவமெல்லாம் பாக்;காம
பழியெல்லா ஏம்மேல
ஏத்திவெச்சு அடிக்கிறாளே!

அப்பனுக்கு எம்மேல
எள்ளளவும் பாசமில்ல
ரெண்டே மாசத்தில
ரெண்டாந்தரக் கல்யாணம்

மின்சார வேலிக்குள்ள
கண்தெரியா மானப்போல
வகைவகையா வாழ்க்கையில
நானும்வந்து மாட்டிக்கிட்டேன்

சித்(தீ)யை பத்திநானும்
சொல்லணுமா ஆண்டவரே
நெருப்புக் கட்டையால
தெனந்தோறும் சூடுவைப்பா

பத்திரமா பள்ளிக்கூடம்
பெத்தமகள அனுப்பிவெச்சு
பாவிமக என்னமட்டும்
அனுப்பிவிட்டா துணிதொவைக்க

வெள்ளாயி வெக்கையில
கையிரண்டும் புண்ணாச்சு
மருந்துவெச்சு தேச்சதுல
வெரலு ஒண்ணு விழுந்துபோச்சு

மட்டைப்பந்து வெளயாட
மைதானம் போனாக்க
வண்ணாப்பய வெளயாட
'தூமத்துணி' தரவாங்குறான்

எப்படியும் வாழ்க்கையில
முன்னேறப் போவதில்லை
இப்படியே என்னவந்து
எடுத்துக்கயா ஆண்டவரே

மனுசனாகப் பொறந்தாக்க
நம்பிக்கை வேணுமடா
அய்யனாரு கோயிலுல
பூசாரி சொன்னாரு

மனசில்லா ஒலகத்துல
மனுசனாக நானெதுக்கு
மாடாச்சும் ஆடாச்சும்
மாத்தினாலும் போவுமய்யா

சின்னபுள்ள வெளயாட்டில்... 
சோகமெல்லாம் சொல்லியழ...  
படைச்ச பெருமானே....!

எரேமியாவின் புலம்பல் போலவும், எசாயாவின் துன்புறும் ஊழியனாகவும் இருந்த சோமு அண்ணன் வாழ்வில் ஒருநாள்...
'அன்பு எந்தக்கடையில் கிடைக்கும்? கிலோ என்ன விலை?' என்றுகூறும் வெள்ளாந்தியாய் புரட்சி செய்து தன்விடுதலையை தானே சாத்தியப்படுத்திக்கொள்ள 
வழி தெரியாதவராய் முடங்கிக் கிடந்த சோமு
அண்ணன் வாழ்வில் ஒருநாள்....


(கறுப்பு மக்களைத் தன் 'கனவின்' மூலம் உசுப்பி விட்ட
மார்ட்டின் லூதர் கிங் போல அன்போடும்,
கியூபாவின் கரும்போடு சேர்ந்து, புழுதியின் புதல்வர்களும் அமெரிக்காவிற்கு விலைபேசப்பட்ட நேரத்தில் விருட்சம் கண்டு தன்நாட்டையும், மக்களின் தன்மானத்தையும் மீட்டெடுத்த பிடல் காஸ்ட்ரோ போல புரட்சியோடும்...
மாற்றலாகி வந்தார் ஓர் ஆற்றல் மிக்கப் பங்குத்தந்தை பணி.சேவியர் சுந்தர்!)

'தம்பி! சோமு.. இங்க வாப்பா!' தோள்களில் கைவைத்துக்கொண்டே பரிவோடு கேட்ட சாமியாரிடம், தான் ஒரு வண்ணான் என்று எப்படி சொல்வதென்று தெரியாமல் நெளிந்தார் சோமு அண்ணன்.
 'சாமி! நான் யாருன்னு தெரிஞ்சா நீங்க ஏங்கூட பேச கூட மாட்டீங்க.. ஒங்க கிட்டயே விட மாட்டீங்க' வெள்ளாந்தியாய் சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாய் ஓடி மறைந்து விடத் துடித்தார்.

 தன் குருத்துவக்கல்லூரி ஏற்பாடு செய்யும் கிராம அனுபவ பாசறைகளில் முழு ஈடுபாட்டோடு பங்கேற்று, சமூகத்தை ஒற்றைப்பார்வையிலேயே பகுப்பாய்வு செய்யும் திறமைசாலியாயிற்றே நம் பங்குத்தந்தை!. தப்பிக்கப் பார்த்த சோமு அண்ணனின் சட்டையை எட்டிப்பிடித்து தன் அறைவீட்டு முகப்பில் கிடந்த சாய்வு நாற்காலியில் அமர்த்தி, குசினியை நோக்கி 'அக்கா! ரெண்டு குளம்பி எடுத்துகிட்டு வாங்க' அப்படீன்னார. குளம்பின்னா ரொம்ப கொளம்பிடாதீங்க.. நம்ம தமிழ்ல 'காபி'.

 'தம்பி! நீ யாரு..உனக்கு என்ன பிரச்சனை.. எல்லாம் கேள்விபட்டேன்.. நம்ம ஊர்ல உபதேசியார் மாதிரி ரெண்டு மூனு நல்லவங்களும் இருக்கத்தானே செய்யுறாங்க! என்ன சொல்ற?' பூடகமா கேட்டார் சாமியாரு.
 'சாமி எனக்கு ஒரே ஒரு சந்தேகந்தான்..என்னான்னா..' இழுத்துக்கொண்டே சோமு அண்ணன் சொன்னதைக் கேட்டு முரட்டு மனிசன் சாமியாரு கூட ஒரு நிமிசம் ஆடித்தான் போயிட்டாரு. 'சாமி நாங்களும் மனிசங்கதானே?'
 'தம்பி..நீங்கல்லாம் இல்லப்பா.. நீங்கதான் மனிசங்க..உடம்பு வச்சிருக்கவனெல்லாம் மனிசந்தான்னா அந்த நாயும் நரியும் கூட மனிசங்களாயிட முடியுமா? உங்களப் போல ஏழைங்க, ஒடுக்கப்படுறவங்கங்ககிட்டதாம்பா மனசுன்னு ஒன்னு கிடக்குது..நீங்கதான்..நீங்க மட்டும்தான் மனிசங்க..' குளம்பியை குடிச்சி முடிச்சிட்டு;

 'அப்ப நான் வற்ரேன் சாமி'-ன்னுட்டு ஒரு வழியா வீட்டுக்குப் போயிச் சேந்தப்புறம்...'நீங்கதான்..நீங்க மட்டும்தான் மனிசங்க' அப்படீன்னு சாமியாரு சொன்னது அவன் அடிமனசில ஓங்காரமா.. ஆழிப் பேரலையா.. புயல்காத்தா..ஒரே எறச்சலா ஓசையை கௌப்புது..
 தேக்கி வெச்ச அழுகையெல்லாம் கண்ணுல பொத்துக்கிட்டு சாடுது.. ஆயிரக்கணக்கான வருசமா அவுங்க வெள்ளாயி வெக்கவும், சாதிக்காரனுங்களுக்கு வெளயாட்டுப் பொருளாகவும், உயிரோடு பொறந்த பொம்மைங்களாக பாத்தவுங்களுங்கு மத்தியில நீங்கதான்..நீங்க மட்டும்தான் மனிசங்கன்னு சொன்ன சாமியார கெட்டியாப் பிடிச்சிகிட்டு, இந்த வாழ்க்கையில எப்படியாச்சும் செயிச்சுபுடனும்.
நம்ம சொந்தபந்தங்க.. நம்மள மாதிரியே இந்த சுத்துபத்துக்குள்ள அடைஞ்சுக் கெடக்குறவுங்க.. எல்லா பேருகிட்டயும் இதச் சொல்லனும்.. சத்தமா சொல்லனும்.. இப்படி நெனச்சிக்கிட்டே.. வாய்பாரிக்கிட்டே.. அழுதுகிட்டே.. மனசுக்குள்ள மண்டிக்கிடந்த அடிமை இருட்டு எல்லா கரைஞ்சி தவுடு பொடியா வெளிய போயி.. ஒரு புது மனுசனா அவர மாத்தி, 'நான் வந்துட்டேம்ல..இனி இருட்டே இருக்காதுன்னு ஒரக்க சொல்லிக்கிட்டே தலையக்காட்டுது இளஞ்சூரியன்..' ஆனா சோமு அண்ணனுக்கு தன்னை மனுசனா அடைளங்காட்டுன சாமியாருதான் கண்ணுக்குள்ளயே நிக்கிறாரு!

இயேசுவும் பெரிசா ஒன்னுஞ்செய்யலீங்க...சமுதாயத்துல ஓரங்கட்டப்பட்டவங்கள அவரு மையப்படுத்தினார்.. சமுதாயம் யாரெல்லாம் வேண்டாம்னு சொல்லிச்சோ அவுங்க எல்லாரும் இயேசுவுக்கு வேணும். அவுங்க மட்டும்தான் இயேசுவுக்கு வேணும்..
இல்ல  இல்ல.. கிடையாது. இயேசுவுக்கு எல்லாரும் வேணும் அப்படீன்னு சொல்றவ(ன்) இன்னக்கும் இருக்கான். ஏழைங்கள எத்திப் பொழக்கிறவன் இயேசுவுக்கு தேவையா? சாதியச் சொல்லி தன்னோட அழுக்க மறைக்கப்பாக்குறவன் இயேசுவுக்கு தேவையா? 'அவுங்க பணக்காரங்காதான். ஆனால் அவுங்க ஆன்மா ரொம்ப ஏழை.. அதனாலதான் நாங்க அவுங்களுக்குன்னு இஸ்கூலு நடத்துறோம்'னு சப்பைக்கட்டு கட்டுனா கெட்டவார்த்த போட்டு திட்டுவாரு இயேசு. இந்த எடுத்துக்காட்டப்பாருங்களேன்.. உங்களுக்கே புரியும்.. 

• 'தொழு நோயாளியா அப்ப நீ 'தீட்டு..தீட்டு'' ..அப்படீன்னு யூத சமுதாயம் சொல்லிக்கொடுத்துச்சு. அட மடப்பயலுங்களா.. நீங்கதாண்டா தீட்டு.. விரியம் பாம்பு குட்டிகாளா.. கடவுளோட புள்ளங்கன்னா உங்களுக்கு அவ்வளவு எளக்காரமா போச்சா.. பொறம்போக்கு பசங்களா.. அப்படீன்னு எல்லாபேரையும் ஒரு வாங்கு வாங்கிட்டு.. தொழு நோயாளியை தொட்டு கொணமாக்கி திரும்பவும் சமுதாயத்துல சேத்துவிடுராரு.

• 'ஏழைங்களா, பொம்பளங்களா, அதுலயும் நீங்க விதவைங்களா.. அப்ப உங்களால யாருக்கும் எந்த லாபமும் இல்ல' அப்படீன்னு யூத சமுதாயம சொல்லிக்கொடுத்துச்சு. அப்படியெல்லாம் ஒர மசிருங்கிடையாது. அந்த ஏழை விதவை பெண் போட்ட செப்புக்காசு முன்னாடி ஒங்க பணம் மட்டையெல்லாம் மண்ணு.. 'தே'... பசங்களான்னு ஒரு கெட்ட வார்த்தைய போட்டு அந்த பொம்பளக்குரிய மரியாதையக் குடுத்தாரு.
இப்ப ஒங்க மனசுல கைய வெச்சு சொல்லுங்க பழைய ஏற்பாட்டு தந்தைக் கடவுளும் சரி.. இயேசு சாமியும் சரி.. இன்னிக்கு நாஞ்சொன்ன சாமியாரு சேவியர் சுந்தர் மாதிரி ஆளுங்க வழியா செயல்படுற தூய ஆவி சாமின்னாலும் சரி.. கடவுளுக்கு முக்கியம் விடுதலை.. மனுசத்தன்மையற்ற அறியாமையிலர்ந்து நீங்கதான்..நீங்க மட்டும்தான் மனிசங்க அப்படீன்னு சொல்ற ஒரு விடுதலை. அப்புறம் அவனே பொளச்சுக்குவான் பாருங்க.. அதனாலதான் திரும்பவும் சொல்றேன்.. 'தலித் விடுதலை..தலித் விடுதலைன்னு' பக்கம் பக்கமா எழுதி கூட்டத்து முன்னால வாசிச்சு கைநெறய கைதட்டு வாங்கிட்டு போகாம, அவன் யாரோ? என்ன சாதியோ? கொலமோ..? ஒடுக்கப்படுறானா..! அவன கூப்புட்டு, அவன் தோளு மேல கை போட்டு, நீதான்டா மனுசன்... கவல படாதடா.. நம்ம எல்லாம் ஒன்னு சேந்து நம்ம விடுதலைய நாமளே எடுத்துக்குவோமடா.. வா வந்து போராடு.. அரசியலா? ஓம் பங்க கேளு.. ஆன்மீகமா? ஓம் பங்க கேளு.. ஒன்ன மட்டும் மறந்துடாதடா? நம்மளுக்குள்ள மொதல்ல எந்த ஏற்றத்தாழ்வும் இருக்கப்புடாதுடா? அப்படீன்னு மெதுவா சொல்லிக்கொடுக்கனும். பயந்துகிட்டு மொறண்டு புடிப்பான். விட்றக்கூடாது. 'சாமி என்னிக்கும் நம்ம பக்கம்' அப்படீன்னு விவிலியத்த எடுத்து காட்டிப்புட்டோம்னு வையிங்க...இறையாட்சி கண்ணுக்கெட்டுற தூரம்தாம்னு தைரியமா சொல்லிப்புடலாம்...
சேர்ந்து செய்வோம்..! வெற்றி பெறுவோம்.!

நன்றி.





மாரி பாட்டி
சோமு அண்ணன்
மற்றும் பிரான்சிசு




ஆக்கம்
ம. ஆன்றனி பிரான்சிசு



ஊக்கம்
பணி. வில்லியம் லூர்துராசு



தூய பவுல் இறையியல் கல்லூரி
திருச்சி-1

3 கருத்துகள்: