'வாழ்க நீ! எம்மான், இந்த
வையத்து நாட்டி லெல்;லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரதத் தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!
அவையோர் அனைவருக்கும் தமிழ் வீர வணக்கம்!
நான் விரும்பும் தேசத்தலைவர் யாரென்றுக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடுவேன் அது அண்ணல் காந்தியடிகள் தான் என்று. அவரை வெறுமனேத் தேசத்தலைவர் என்று கூறுவுது, வானளாவிய அவரது சிறப்பைச் சுறுக்கிக் கூறுவதாகவே கருதுகிறேன். அவர் தலைவர். அவர் உலகத் தலைவர் என்றால் கூட அது மிகையாகாது.
தன்மானத் தலைவர் தந்தை பெரியார் இல்லையா? கல்விக் கண் திறந்தக் கர்ம வீரர் காமராஜர் இல்லையா? கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் இல்லையா? கொடிகாத்து உயிர் நீத்த திருப்பூர் குமரன் இல்லையா? என்று நீங்கள் வினவுவது என் காதில் நன்றாகக் கேட்கிறது. நம் நாட்டு விடுதலைக்காய் இன்னுயிரை ஈந்த ஏராளம் தலைவர்கள் நம்மிடையே உண்டு என்பதில் எனக்கு அணுவளவும் ஐயமில்லை. இருப்பினும் இநத்த் தலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரியானத் தலைவர் ஒருவர் உண்டு என்றால் அது அண்ணல் காந்தியடிகள்தான்.
காந்தியடிகள் குஜராத்திலுள்ள போர்பந்தரில் 1869 ஆண்டு, அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் கரம்சந்த் காந்தி, புத்திலிபாய் அம்மையார் என்னும் வைசியக் குலப் பெற்றோருக்கு கடைசி பிள்ளையாகப் பிறந்தார். இவர் தனது சிறுவயதிலேயே அறத்திலும், ஒழுக்கத்திலும் மிகுந்தப் பற்றினைக் கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பை முடித்தப் பின் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பினார்.
அதன் பின் தன் வழக்கறி!ர் தொழிலைச் செய்வதற்காகத் தென் ஆப்ரிக்க நாட்டிற்றுப் பயணமானார். அங்குதான் அவர் மனிதர்களையும், சமுதாயத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும், அடிமைத்தனங்களையும், அடக்குமுறைகளையும் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொண்டார்.
ஒருமுறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த பயணச்சீட்டு பரிசோதகர், 'இது வெள்ளைக் காரர்கள் பயணம் செய்யும் முதல் வகுப்புப் பெட்டி. இங்கு கறுப்பு நாய்கள் பயணம் செய்ய முடியாது என்று கடுமையாகப் பேசி, அவரதுக் கழுத்தைப் பிடித்து வெளியேத் தள்ளினார். இந்த வலியில் முளைத்த விருட்சமே அவரை விடுதலை உணர்வுள்ள, மாபெரும் இயக்கச் சக்தியாக உருவாக்கியது.
தென் ஆப்ரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுவது குறித்து மிகவும் வேதனை அடைந்து 1893 ஆம் ஆண்டு 'நேட்டல் இந்தியர் காங்கிரஸ்' என்நும் அமைப்பினை உருவாக்கினார்.
மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற உலகின் மாபெரும் தலைவர்களே, காந்தியடிகளை முன்மாதிரியாகச் கொள்ள அவரது அகிம்சை என்னும் அறப்போராட்டமே முக்கியக் காரணமாகும். அகிம்சை அறவழியில் நடந்து 41 நாடுகள் விடுதலை அடைந்ததாகவும், 198 நாடுகளில் அகிம்சை உத்திகள் இருப்பதாகவும் வரலாற்று அறிஞர் ஜெனி ஷார்ப் (Gene Sharp) கூறுகிறார்.
பகவத் கீதையும், விவிலியத்தில் உள்ள மலைப்பொழிவும், லியோ டால்ஸ்டாய் என்பவரின் ' இறையாட்சி உங்களிடமே உள்ளது' என்ற நூலும் காந்தியடிகளின் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 'இரத்தமும், சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நம்புவது கடினமாக இருக்கும்' என்று ஐன்ஸ்டீன் கூறுகிறார்.
காந்தியடிகள் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தக் காரணத்தால் 1948, ஜனவரி 30 ஆம் நாள் நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் இன்னும் இறக்கவில்லை. அவரது இலட்சியக் கொள்கைகளால் நம்மிடையே வாழ்கிறார் என்பதற்கு அன்னா ஹசாரே, மேதாபட்கர் போன்ற நம் காலத்திய அறப்போராட்டவாதிகளே சாட்சி. காந்தியடிகளைப் போன்ற ஒரு தன்னலமற்ற மாபெரும் தலைவர் நம் மத்தியிலும் உருவாக வாழ்த்தி அமர்கிறேன்.
நன்ற! வணக்கம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக