ஞாயிறு, 21 டிசம்பர், 2014

அன்பற்ற அன்பு மொழிகள் (Loving Words without Love??)

அன்பற்ற அன்பு மொழிகள்

'உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்' மத்தேயு 12;:37

'வார்த்தை' என்ற வார்த்தையைப் பற்றி வார்த்தையின் இறைவன் ஓர் அற்புதமானக் கருத்தைதத் தம் சீடர்களுக்கு முன்வைக்கிறார். வெல்லப்பட்ட நாட்டிற்கு  வென்றவன் பொறுப்பு. சொல்லப்பட்ட வார்த்தைக்கு சொன்னவன் பொறுப்பு. நமது சொற்களை நாம் அறிந்து, ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும் என்பது நமது நலமான வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதைச் சற்று சிந்திப்போமா?

தவறான அல்லது தேவையற்ற வார்த்தைப் பிரயோகம் என்பதை இரு சூழ்நி;லைகளில் நாம் பயன்படுத்தக் கூடும். முதலாவது ஒரு செல்லலைச் சொல்லிவிட்டு அய்யோ இக்கடுஞ்சொல்லை சொல்லிவிட்டேனே என்று வருந்தியிருப்போம். இரண்டாவது உண்மையான அன்பும், அக்கறையுமில்லாமல் இன்னொரு நபரின் பணத்தின் பொருட்டோ, அதிகாரத்தின் பொருட்டோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர்களுக்குப் பிரியமான வார்த்தைகளைப் பேசி பின்னர் அதற்கும் வருந்தியிருக்கலாம்.

முந்தையக் காலங்களில் அதிகம் உணர்ச்சிவசப்படும் மனிதர்களை நம் தெருக்களில் பாரக்க முடியும். இன்றைய நமது தெருக்களில் நிலவும் ஒருவித அமைதியைப் பார்க்கும் போது மனிதர்கள் எதற்கும் உணர்ச்சிவயப்படுவதில்லை என்று முடிவவெடுத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. சண்டைகள் இல்லை. சச்சரவுகள் இல்லை. ஆகவே இன்றைய காலத்தில் கடுஞ் சொல் சொல்லி பின்னர் வருத்தப்படுவோர் குறைவுதான். இப்படடிப்பட்ட வருத்தம் கூட ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட நபரிடம் 'நண்பா அவசரப்பட்டு இப்படி பேசிவிட்டேன். மனதில் வைத்துக் கொள்ளாதே. இனி இப்படி நிச்சயம் பேசமாட்டேன்' என்று சொல்லிவிட்டால் மீண்டும் பழைய உறவு மலர வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இரண்டாவதாகச் சுட்டிக் காட்டப்பட்டச் சூழ்நிலையே இன்னும் ஆபத்தானது. உண்மையற்ற பிரிய மொழிகள். உள்ளத்தில் உண்மையல்ல என்று நன்றாகத் தெரிந்தும் சில 'பெரிய' மனிதர்கள்  செய்யும் தவறான செயல்களுக்கும் தப்புத் தாளம் போடுவது மிகவும் ஆபத்தானது. 'உங்களை விட்டால் வேறு யாரு உண்டு! நீங்க செய்தால் சரியாகத்தான் இருக்கும்' என்று போலி மொழிகளை உதிர்த்து விட்டு பின்பு ஒரு நாள் நீங்கள் வருத்தப்படக் கூடும். தொடரும் அவரது அனைத்து அட்டூழியங்களுக்கும் உங்களது அன்பு மொழியை அல்லது ஒரு செயற்கைச் சிரிப்பாலான அனுமதியையேனும் அவர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடும். அப்போது முதல் சூழ்நிலையில் சொன்னது போல 'ஐயா! அன்று தெரியாமல் உங்கள் செயலைப் பாராட்டிவிட்டேன். இனிமேல் இப்படி ஒரு போதும் நான் செய்யப் பொவதில்லை? என்று அவ்வளவு எளிதாக நம்மால் சொல்ல முடியாமல் போய்விடும்.
'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்' என்பது போல அந்த 'பெரிய மனிதரும் ஒருநாள் அழிவைச் சந்திப்பார். துதிபாடி, துதிபாடி அடிமையாய் கழிந்த உங்கள் ஆன்மா அப்போது எந்த ஆதாயமுமின்றி துதிபாட பழகியிருக்கும்

இதற்கு ஒப்பான இன்னொரு எடுத்துக்காட்டைக் கூற வேண்டுமென்றால், தகவல் தொடர்பு யுகத்தில் வாழும் யுவன்களும், யுவதிகளும்; பயன்படுத்தும் அன்பற்ற அன்பு மொழிகள், கனிவற்ற கனிவு மொழிகள், அக்கறையற்ற அக்கறை மொழிகள். அன்பும், கனிவும், அக்கறையும் உண்மையாகவே காட்டப்பட வேண்டிய சமுதாயத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களிடடம் மனசாட்சியற்று காட்டப்படும் மவுன மொழிகள். இத்தனைக்குப் பின்னர் எளிதாக இனித்த வார்த்தைககள் சுமத்தும் பொறுப்புகளை ஏற்க இயலாது அழுத்தும் மனச் சுமைகள். உறவு முறிவுகளும், கசப்புகளும் எஞ்சியிருக்க அதை மறைக்க மீண்டும் முதலிலிருந்தே அன்பற்ற அன்பு மொழிகள் என்ற சுமையின் சுழற்சியில் வாழ்க்கையை வீணடிக்கும் கடவுளின் குழந்தைகள். வார்த்தையில் இருக்கிறது வாழ்வு என்பது புரிகிறதா? வாழ்வு தரும் வார்த்தைகளை மட்டுமே பேசுவதென இன்று முதல் முடிவெடுப்போமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக