வறுவேல் அந்தோணி அவன் பெயர். குமரி மாவட்டத்துக் கிறிஸ்தவர்களிடம் வழங்கப்படும் பெயர். என் தாத்தாவின் பெயர் கூட அதுதான். புனித ஜார்ஜியாரைக் குறிக்கும் தமிழ் வடிவம் என்று நினைக்கிறேன். அவன் என் நண்பன்.
நேற்று மாலை வழிபாட்டில் 'மாக்னிஃபிகாத்' (அன்னை மரியாவின் 'என் ஆன்மா இறைவனையே ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது' என்னும் பாடல்) பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று வறுவேலின் ஞாபகம் வந்து போனது. அதன் பின்னர் இதை எழுதும் வரையிலும் அவனோடு எனக்கான நட்பைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவனுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவன்தான் முதல் அப்பா.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் ஐந்தாம் வகுப்பில் அவன் எங்களோடு சேர்ந்தான். பள்ளிக்கு வடக்கே ஓடிய நீரேரடைக்கு அந்தப் பக்கமாக இருந்தது அவனது வீடு. ரேஷன் கடை, பள்ளிக்கூடம், பங்கு கோவில், 'லண்டன்'(காரர்) வீடு என்று அடித்துப் போட்டாலும் மறக்காத இடங்களுக்கு அருகில் வயல்களுக்கும், வாழைத் தோப்புகளுக்கும் மத்தியில் பசுமை இல்லமாக இருந்தது அவனது வீடு. வீட்டு முற்றத்தில் கிடக்கும் பனை நார் கட்டிலில் இருந்து நொச்சி மரங்களின் ஒற்றைக் கால்களை வருடி சலசலவென்று ஓடும் ஓடையின் ஓசையைக் கேட்டுக் கொண்டே மேலே பார்த்தால் வானம் எப்போதும் மேக மூட்டத்தோடு காணப்படுவது ஏன் என்பது ரமணனுக்கே வெளிச்சம். உலகம் ஒரு நாள் நீரின்றி வறண்டு போகுமென்றால், ஆவியாகும் கடைசி சொட்டு நீர் அவன் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருக்கும் உயரமான வாழை தன் சுருண்ட குறுத்து இலைக்குள் ஒளித்து வைத்திருக்கும் குளிர்ந்த நீராகத்தான் இருக்கும். இயற்கை அன்னை தன் மொத்த அழகையும் அங்குதான் கொட்டி வைத்திருந்தாள். அங்கு அவன் தான் புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டை படமெடுத்து வாட்ஸ்அப்-பில் அனுப்பியிருந்தான்.
அவன் தந்தையை நான் பார்த்ததேயில்லை. வாதை அடித்து அவர் கடவுளிடம் சென்று விட்டதாக சிறு வயதில் சொல்லியிருக்கிறான். கணவனை இழந்தும், பிள்ளைகளை சிறப்பாக வளர்த்து, சமுதாயத்தில் ஆளாக்கும் தியாகத் தாய்மார்களில் அவனது அம்மாவும் ஒருவர். எங்கள் நண்பர்களின் அம்மாக்களுக்கு நாங்கள் எல்லோரும் பிள்ளைகள் தான். அவனோடுதான் எத்தனை நினைவுகள்! ஐந்தாம் வகுப்பில் மதர் லவுரன்சியா ஒருநாள் ஏதோவொரு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தாலே எங்களுக்கெல்லாம் பயம். வறுவேலுக்கு அப்படியெல்லாம் எந்த தயக்கமும் இல்லை. அவர் கேட்கும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் அவனே பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனது ஆர்வத்தைத் தாங்க முடியாமல் அவரே சத்தமாக சிரித்துக் கொண்டு 'வறுவேல்! முந்திரி கொட்டை. எல்லோரையும் பதில் சொல்ல விடு' என்றார். வகுப்பே கலகலப்பானது. அவனோடு இருந்தால் நாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்காது. குழுவைத் தனது விருப்பத்தில் நயமாகவும், நலமாகவும் ஒருங்கிணைக்கும் திறமை அவனுக்கு உண்டு.
ஓன்பதாம் வகுப்பு என்று நினைக்கிறேன். ஒரிசாவின் புவனேஸ்வரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றது. முத்துகுமார் ஆசிரியர் அவன் பெயரையும், என் பெயரையும் தலைமையாசிரியரிடம் கொடுத்திருந்தார். கடைசி நேரத்தில் பள்ளிக்கு ஒருவர்தான் என்ற போது வறுவேல் மட்டும் புவனேஸ்வரம் சென்று வந்தான். அவனோடு இருக்கும் நினைவுகளிலேயே அதி சாதாரணமானது இதுதான். தீவிரமான நிகழ்வுகள் அவனுக்கும், எங்கள் நண்பர்களுக்கும் நன்றாகத் தெரியும். இன்னும் எனக்கு அவை மறக்காமலிருப்பது யாரையேனும் காயப்படுத்தக் கூடும் என்பதால் தவிர்க்கிறேன். மொத்தத்தில் அப்போதிலிருந்தே அவன் வெளிப்படையானவன். எதிலும் அவசரக்காரன். எல்லோரையும் முந்திக்கொண்டு முன்னால் நிற்பவன். எப்போதும் மாறாமல் அதே வறுவேலாக இருப்பவன். அன்பானவன். இன்னும் அவன் நிறைய, நிறைய, உயர உயர வளர வேண்டுமென்று என் வலைப்பூவில் அவனுக்கு பூங்கொத்துக்களைத் தருகிறேன்.
கடந்த ஆண்டுதான் அவனுக்கும், ஜாஸ்மினுக்கும் திருமணமானது. ஜாஸ்மினும் எங்களோடு படித்தவள்தான். பள்ளியில் படிக்கும் போது அவளோடு எப்போதும் சண்டைதான். சண்டை போடுவதற்கு கூட நான் அவளோடு அதிகமாய் பேசியதில்லை. அவர்கள் திருமணத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்வு வரை அவர்களுக்கேத் தெரியாது அவர்கள் ஒரு நாள் திருமணம் செய்வார்கள் என்று. அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள். ஜாஸ்மினுக்கு என் பாட்டியின் பிறந்த ஊரான இராஜாவூர். என் தந்தையின் குடும்பக் காரர்கள் நிறைய பேர் இராஜாவூரில் தான் இருக்கிறார்கள். அப்படி ஏதோவொரு முறையில் அவளுக்கு நான் சித்தப்பா முறை. இப்போது வறுவேலும் ஜாஸ்மினும் பெற்றோரான தினத்தில், நானும் முதன் முறையாகத் தாத்தாவனோன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக