அருட்தந்தை சேசுராஜ். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் தத்துவவியல் துறையில் பேராசிரியர். அவரது காரின் கண்ணாடியில் 'உறவே தெய்வம்' என்று எழுதியிருப்பார். அதற்கான விளக்கத்தை வகுப்பில் ஒரு முறை சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வாறு தெய்வத்தை பலரும் தங்கள் அனுபவங்களில் அடிப்படையில் உணர்ந்து கொள்வதுண்டு. தத்துவங்களை விட வாழ்க்கையின் அன்றாட அனுபவங்களில் இறைவனின் பராமரிப்பை உணர்ந்து கொள்ளப் பழகி விட்டால், நாளையைப் பற்றிய பயமின்றி இரவில் நன்றாக உறங்கி எழும்ப முடியும். அந்த வகையில் உணவும் தெய்வமாகும் ஒரு நிகழ்வினைப் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு ஒரு பெரியப்பா உண்டு. அவருக்கு மூன்று பிள்ளைகள். சிவா, ஆனந்த், ஆர்த்தி. இதில் ஆனந்துக்கும் எனக்கும் ஒரே வயது. அவர்களுடைய வீடு நாகர்கோவிலில் உள்ளது. நான் சிறுவயதில் விடுமுறை நாள்களில் செல்ல விரும்பும் ஒரே உறவினர் வீடு அவர்களுடையதுதான். நிறைய காரணங்கள் இருந்தாலும், ஆனந்துடன் சேர்ந்து கொண்டு அவனது நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவது மற்றும் சைக்கிள் எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவது என்றுமே மறக்காத நினைவுகள். ஊரில் மிகவும் சுமாராக விளையாடும் என்னை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள அங்கு போட்டியே நடக்கும். இது எனக்கு மிகவும் பிடித்தது. ஊருக்கு திரும்பியதும் ஊர் பையன்களிடம் நான் நாகர்கோவிலிலேயே சைக்கிள் ஓட்டினேன் என்று சொன்னால் அது ஒரு தனி கெத்து தான். பெரியப்பா எனக்கு தெரிந்த காலத்திலேயே மிகவும் வசதியானவர்தான். இப்போது சொல்லவே வேண்டாம். நாகர்கோவிலில் மிகவும் அறியப்பட்ட பில்டிங் கான்டிராக்டர்.
அவரைப் பற்றிய எனது முதல் நினைவு. குறைந்தது ஒரு பதினெட்டு வருடங்களாவது முன்னதாக இருக்க வேண்டும். ஒரு முறை நாங்கள் அங்கு சென்றிருந்த போது பெரியப்பா வீட்டில் இல்லை. 'இரவு எட்டு மணிக்குத்தான் வருவார். அவர் வரும் வரைக் காத்திருக்க வேண்டாம். சாப்பிடுங்கள்' என்று சொல்லி பெரியம்மா வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே பெரியப்பா வந்து விட்டார். எங்களைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் சந்தோஷம். உடனே சிவாவிடம் நூறு ருபாயை எடுத்துக் கொடுத்து புரோட்டா வாங்கி வரச் சொன்னார். அவன் எவ்வளவு என்றான். நூறு ருபாய்க்கும் வங்கிட்டு வா என்றார் பெரியப்பா. அப்போதைய எங்கள் பொருளாதாரக் கணக்கில் புரோட்டாவே பெரிய காரியம். அதிலும் நூறு ருபாய்க்கும் புரோட்டாவா? அதன் பின்னர் அவர் பேசியக் காரியம் தான் இக்கட்டுரைக்கான அவசியத்தை ஏற்படுத்தியது.
பெரியப்பா சிறுவயதிலேயே தனது அப்பாவை இழந்தவர். இவர் வீட்டிற்கு ஒரே பையன். அவரது அம்மா லெட்சுமி பாட்டிதான் இவரை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தவர். உறவினர்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட சூழ்நிலை. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இந்து சமுதாய பழக்கவழக்கங்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். லெட்சுமி பாட்டி ஒரு விதவை. அத்தோடு வறுமை. பல வேளைகளில் பசியோடுதான் உறங்கச் செல்வார்கள் தாயும், பிள்ளையும். வயிற்றுப் பசி ஒருபுறம், உறவினர்களின் புறக்கணிப்பு ஒருபுறம் என்று சபிக்கப்பட்ட வாழ்வின் கருகியப் பக்கத்திலிருந்து தான் அவர் துளிர்விட ஆரம்பித்திருக்கிறார்.
ஒரு நாள் தலையில் எண்ணைகூட தேய்க்காமல், மேல் சட்டையில்லாமல், ஒட்டிய வயிற்றோடு தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த போது தெருவில் கடை போட்டிருந்த நபர் ஒருவர் 'தம்பி! இங்க கொஞ்சம் வா!' என்று அழைத்து ஒரு பெரிய நேந்திரம் பழத்தைக் கொடுத்து சாப்பிடு தம்பி என்றாராம். அந்த சூழ்நிலைக்கு அது ஒரு பழம் அல்ல. அது ஒரு வாழ்க்கை. அது பல கோடிகளைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. இதை பெரியப்பா சொல்லிக் கொண்டிருந்த போது அந்தக் கடைக்காரர் ஏற்கனவே இறந்து போயிருந்தார். அவரது இரண்டு பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு பெரியப்பா நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்.
அவரது சிறுவயதில் அவரைப் புறக்கணித்த அவரது குடும்பத்தினர் பலரும் இன்று அவரிடம் தான் வேலை செய்கின்றனர். விதவை மகன் என்று புறக்கணித்த சமுதாயத்தில், இன்று நிறைந்த செல்வத்துடனும், செல்வாக்குடனும் வாழ்ந்து வருகிறார் பெரியப்பா. அவரிடம் நான் வியந்த காரியத்தில் ஒன்று எத்தனை பணம் வந்தாலும் இறைவனையே சரணாகதியாய் கொள்ளும் அவரது இறைபத்தி. இறைவன் முன்னிலையில் தான் ஒரு தூசு; நாளையே அவர் என்னை ஊதித்தள்ளிவிட முடியும் என்ற தெய்வபயம். ஓய்வறியா உழைப்பு, செய்யும் தொழிலில் நேர்மையும், நேர்த்தியும். பட்டினி காலத்தில் ஒரு நேந்திரம் பழத்தின் மதிப்பை இன்றும் உணரும் செய்நன்றி மறவா உள்ளம்.
பசித்திருப்போருக்கு உணவு தருதல் என்பது தருவோனுக்கும், பெறுவோனுக்கும் ஒரு சிறந்த இறையனுபவம் என்று நினைக்கிறேன். இதற்கு எத்தனை எத்தனையோ உதாரணங்களைத் தரமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக