புதன், 21 செப்டம்பர், 2016

நெகிழி மற்றும் எரிக்கப்படும் டயர்களின் தீமைகள் - ஓர் அலசல் (The hazards Of Plastics and burning tyres)

முன்னுரை

இயற்கையோடு இயைந்த வாழ்வால் வான்புகழ் கொண்டுத் திகழ்ந்தது நம் பண்டையத் தமிழர் இனமாகும். இங்கே உண்பதும், உடுத்துவதும், பக்தியும், பண்டிகையும், இறையும், இலக்கியமும், கலையும், கவிதையும், வீரமும், விளையாட்டும்  என்று யாவுமாகி நின்று அழகு செய்தவள் நம் இயற்கை அன்னையே! சங்க காலத்தில் மட்டுமல்ல. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய உங்கள் கிராமங்களை நினைத்துப் பாருங்கள். பூவரசு இலைகளில் 'பீப்பி', நுங்கு கூந்தலில் தள்ளுவண்டி, பத்து பைசாவுக்கு பம்பர மிட்டாய், வயல் வரப்புகளில் ஓடிப்பிடித்து, வாழைத் தோப்புகளில் திருடன்-போலிஸ் என்று அங்கே விளையாட்டுக்கு கூட இயற்கை இல்லாமலில்லை. பிறந்த குழந்தையின் தொட்டிலிருந்து கடைசியில் கிடத்தும் கட்டில் வரையிலும் இயற்கை என்றிருந்த நிலை மாறி இன்று எங்கும் பிளாஸ்டிக்! எதிலும் பிளாஸ்டிக்! என்றாகிவிட்டது. விலையோ குறைவு. உற்பத்தி செய்வது எளிது. இன்றைய உலகின் அன்றாடத் தேவையை ஈடுசெய்ய இதற்கு மாற்று எதுவுமில்லாத சூழலில் எங்ஙனம் பிளாஸ்டிக் இயற்கையின் பகைவன் ஆனது என்பதையும், இத்தகைய பிளாஸ்டிக் மற்றும் பயன்படுத்தப்பட்ட டயர்களை எரிப்பது இயற்கைச் சூழலை எங்ஙனம் பாதிக்கின்றது என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.

நெகிழியின் பிறப்பு

தமிழில் நெகிழி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் என்பது 'பிளாஸ்டிக்கோஸ்' என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது. வார்க்கத் தக்க அல்லது பிசைவு கொள்ளத் தக்கப் பொருள் என்று இதனை வரையறுக்கலாம். தொடக்கக் காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடுகள், சில வண்டு, பூச்சிகளில் இருந்து 'செராடின்' என்ற நெகிழியானது செய்யப்பட்டன. பின்னர் எவ்வாறு பிளாஸ்டிக்கானது முழுக்க முழுக்க செயற்கை வேதி மூலங்களிலிருந்து தயாரிகக்கப்படுகின்றன என்பதை கீழ்வரும் காலக்கோடு மூலம் அறிந்து கொள்ளமுடியும்.
  • பிளாஸ்டிக் முதன் முதலில் 1862 -ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் 'பார்க்ஸ்டைன்' என்ற பெயரிட்டார். 
  • பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 -ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற பிளாஸ்டிக் உருவானது. 
  • 1907-ல் லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், டுபாண்ட் என்னும் அமெரிக்க நிறுவணம் வெடி பொருள் பிளாஸ்டிக்; தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது.  
  • 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.
நெகிழியின் வகைகளும், பயன்களும்

வெப்பத்தால் எற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழிகளில் இரு பிரிவுகள் உண்டு. அவை முறையே இளகும் வகை, இறுகும் வகை என்பனவாகும்.

1.வெப்பத்தால் இளகி, குளிர்வித்தால் இறுகி பின் எத்துனை முறையும் இவ்வாறு மாற்றி மாற்றி செய்யமுடியக்கூடிய நெகிழி இளகும் வகை நெகிழி ஆகும். இவை மறு சுழற்சி செய்யக் கூடியவை. அவற்றின்  பெயர்களையும், பயன்பாடுகளையும் இங்கே காண்போம்.
  • செல்லுலாயிட்: எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள், தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.
  • பாலி புரோப்பிலின்:  கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், ஆரோக்கியப் பொருள்கள், குப்பிகள் ஆகியவை செய்யவும், இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள்,கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன.
  • பாலிவினைல் குளோரைடு:  மணமற்ற நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் இன்சுலேட்டர்கள், நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.
  • பாலிவினைல் அசிட்டேட்:  வண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் ஆகியவை பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • வினைல் : டெரிலின் இழை போலவே இதில் இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்காது. தூசி படியாது. அழுக்கை எளிதில் நீக்கலாம். வண்ணமேற்றலாம். இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள்.
  • அக்ரிலிக்: நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள் செய்யவும் பல்வேறு சாதனங்களிலும் பயன்படுகிறது. இதனை நாம் மீன் தொட்டி செய்ய பயன் படுத்தலாம்
  • செல்லுலோஸ் அசிட்டேன்: இதனுடன் வண்ணம் சேர்த்து பெருமளவில் மோட்டார் தொழிலில் தேவையான பல பொருள்களைச் செய்கின்றனர்.
  • ஈதைல் செல்லுலோஸ்: பொருள்கள் மீது மேல் பூச்சு அமைக்கவும், புகைப்படத் தகடுகள் செய்யவும் பயன்படுகிறது. 
2.இளக்கிப் பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழி இறுகும் நெகிழி ஆகும். இது எளிதில் நொறுங்கக் கூடியது. இது இளகும் வகையை விட தரம் குறைந்தவையாகக் கருதப் படுகின்றன. அவற்றின் சில எடுத்துக்காட்டுக்களை கீழே காண்போம்.
  • ஆல்கைடு ரெசின் : பொருள் வெப்பம், ஈரத்தால் பாதிக்கப்படாதது. மின்சாரம் கடத்தாது. உறுதியானது. கடினமானது. ஒளி புகும். எனவே விமானம், மொட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், தண்டுகள், இன்சுலேட்டர்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
  • மெலமின் ரெசின் : இது எளிதில் தேயாது மின்சாதன பாகங்கள் (குறிப்பாக மின்விசிறி) செய்யப் பயன்படுகிறது.
  • பீனாலிக் ரெசின் : மலிவு விலை மின்சுவிச்சுகள், பலகைகள், தொலைபேசிகள் செய்யப் பயன்படுகின்றது.
இவ்வாறு விலை மிகவும் மலிவாகவும், அனைவரையும் கவரும் பல வகை நிறங்களிலும், காற்று, நீர், ஈரம் இவற்றால் பாதிக்கப் படாமலும், மின்கசிவு ஏற்படாமலும் இருப்பதால் நெகழியானது நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன.

நெகிழியின் தீமைகள்

நாம்  அனைவருமே ஏற்கனவே அறிந்ததுதான். நெகிழிப் பொருள்கள் எளிதில் அழிவதில்லை. சராசரியாக ஒரு பாலித்தீன் பையின் பயன்பாட்டுக் காலம் 12 முதல் 20 நிமிடங்களே என்றும் அவை அழிய 1000 ஆண்டுகளுக்கும் அதிக காலம் பிடிக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. பயன்பாடற்ற ஒரு நச்சுவேதிப் பொருளின் நெடிய ஆயுட்காலம் என்பது இயற்கையின் நியதிக்கு மிகமிக ஆபத்தான முரண்பாடாகும். அதிலும் நெகிழியின் அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக இவை கற்பனைக்கெட்டாத அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளையும், மானுடரல்லாத பிற உயிர்களையும், இயற்கைச் சூழலையும் பற்றிய அக்கறையற்ற சுயநலமே இன்றைய நிலையாக இருக்கின்றது. மறுசுழற்சி என்பதும் பெரிதும் பயன்தரப் போவதில்லை. ஏனென்றால் நெகிழிப் பொருட்களில் 10 சதவீதப் பொருள்களே மீண்டும் பயன்படுத்தத் தக்கவையாக இருக்கின்றன. மற்ற 90 சதவீதப் பொருட்களும் வீணே எரிக்கப்பட்டுவிடுகின்றன. 'இன்சினரேசன்' என்னும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன.
  • தொழிற்சாலைகளில் இவை மறு சுழற்சி செய்யப்படும் போதும், எரிக்கப்படும் போதும்  வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதாக இருப்பதால், அருகிலுள்ள மக்களின் உடல்நலனாது பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. தோல்நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • பாலித்தீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. நிலத்தடி நீர் பெருகுவதைத் தடுக்கின்றன.
  • மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பைகளைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.
  • மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
  • கடலில் எறியப்படும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும் பாதிக்கின்றன.
டயர்கள் என்னும் இன்னொரு தலைவலி

வாகனப் பெருக்கம் நாம் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத அளவிற்கு அதிகரித்துவிட்டது. மக்கள் கல்வி, பணி நிமித்தமாக தினசரி பயணிக்க வேண்டியத் தேவையும், தரமில்லாத பொதுப் போக்குவரத்துச் சேவையும் தனியார் வாகனப் பெருக்கத்தை இன்றியமையாததாகச் செய்துவிடுகின்றன. தமிழகம் முழுவதும் 70 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 100 வாகனங்கள் என வைத்தால், ஒரு நாளைக்கு 7 ஆயிரம் புதிய வாகனங்கள். 20 வேலை நாள்கள் என கணக்கிட்டால் கூட, ஒரு மாதத்தில் 1,40,000 புதிய வாகனங்கள் தமிழகச் சாலைகளில் உலா வரத் துவங்குகின்றன. வாகனப் பெருக்கத்தின் விளைவாக காற்று மாசுபடுவதோடு, புவி வெப்பம் அதிகரிப்பதோடு, இன்னொரு தலைவலியாக பயன்படுத்தப்பட்ட டயர்கள் ஒவ்வொரு நாளும் மலை போலக் குவிந்து விடுகின்றன.

டயர்களும் இயல்பிலேயே அழிவதற்கு நிறைய காலம் எடுத்துக் கொள்கின்றன. அத்தோடு மறுசுழற்சியும் பெரிய பயன்தருவதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் மாசு என்னும் தீய விளைவையேக் கொண்டிருக்கின்றன. டயர்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் துத்தநாகம், குரோமியம், ஈயம், செம்பு, கேட்மியம் மற்றும் சல்பர் போன்ற வேதிப் பொருள்கள் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தவையாகும். இவை எரிக்கப்படும்போது காற்று மாசுபடுவதால் தோல் நோய்கள், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுக் காரணமாகின்றன.

பழைய டயர்கள் பெரும்பாலும் காகிதம், சிமென்ட் போன்ற தொழிற்சாலைகளில் மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகின்றன. போகி, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதும், கிளர்ச்சி போராட்டங்களின் போது தங்கள் எதிர்ப்பைக் காட்டவும் எரிக்கப்படும் டயர்கள் சுற்றுச்சூழலைப் மிகவும் மாசுபடுத்துகின்றன. பூமியில் புதைக்கப்படும் டயர்கள் நாளடைவில் பல்வேறு ரசாயனங்களை வெளியிடுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, மண்வளத்தையும் கெடுத்துவிடுகின்றன.

சட்டமும் சமூகமும்

அன்றாடப் பயன்பாடு, அதிவேக உற்பத்தி என்ற சுழற்சியில் டயர் மற்றும் பிளாஸ்டிக் பெருக்கமானது கட்டுக்கடங்காது சென்றுகொண்டிருக்கின்றன. பன்னாட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளின் தீவிர அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு நாடுகளும், நகரங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பல வரைமுறைகளை வகுத்துள்ளன. குறிப்பாக நமது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்ட அரசாணையில் இந்தியா முழுவதும் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுவதுமாகத் தடைசெய்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் சமுதாயத்தின் மனப்பூர்வமான சம்மதமின்றி, அரசின் சட்டப்பூர்வமான முயற்சிகள் முழு இலக்கினை அடைய முடியாது. எதிலும் அச்சமயத்திற்கு எளிதான, இலகுவான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நமது சாதாரண இயல்பு. ஆனால் பிளாஸ்டிக் விசயத்தில் நாம் மாற்றி யோசிக்க வேண்டும்.
  • கடைக்குச் செல்லும் போதே துணிப்பைகளை எடுத்துச் செல்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசே இத்துணிப்பைகளை பெருமளவு உற்பத்தி செய்வதோடு, கடைகளில் பயன்படுத்தப்படுவதைக் கட்டயமாக்க வேண்டும்.  நசிந்துவரும் நெசவுத் தொழிலை மீட்பதற்கும், கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இம்முயற்சியானது சிறந்த பலனளிக்கும்.
  • வீட்டு நல்ல காரியங்களில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளில் செய்யப்படும் குவளைகள், தட்டுக்களைப் பயன்படுத்தலாம். படித்த இளைஞர்கள் தனியாகவோ, கூட்டு முயற்சியாகவோ இத்தகையத் தொழில்களைச் செய்ய முன்வரலாம். கூட்டுறவுச் சங்கங்கள் வழியாக அரசும் தேவையான உபகரணங்கள் மற்றும் மானியங்கள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
  • பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதிலாக, மண்பானைகளைப் பயன்படுத்த வேண்டும். கடந்த 20-9-2016 அன்று தமிழக முதல்வர் அவர்கள் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி செலவில் விலையில்லா மின் சக்கரம் வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வேலையில்லை என்று காத்திருப்பதை விட இத்தகைய முயற்சிகளைச் செய்ய இளைஞர்கள் முன்வரவேண்டும். அரசும், பொது மக்களும் இதற்கு கைகொடுக்க வேண்டும்.
  • மக்கள் போராட்டங்களில் டயர்கள், உருவப்பொம்மைகள் எரித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதற்குப் பதிலாக தீங்கில்லாத மாற்று வழிகளைப் கடைபிடிக்க வேண்டும்.
உயிரன்பு என்னும் அறம்

கிறிஸ்தவர்களுக்கு சிலுவை மரமும், இந்துக்களுக்கு கற்பக மரமும், பௌத்தர்களுக்கு போதி மரமும் வாழ்வின் மரங்களாக இருக்கின்றன. வளரும் பிள்ளைகளுக்கு சமயக் கல்வியில் இயற்கை அன்பையும் கட்டாயம் போதிக்கவேண்டும். இறைவன் படைத்த இயற்கைச்சூழலில் ஒவ்வொரு உயிரும் அற்புதமானவையே. அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால் எல்லா உயிர்களுமே ஒன்றையென்று சார்ந்தே இயங்குகின்றன. அவை மலர்ந்தும், மடிந்துமே இந்தப் பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. இந்த உயிர்களின் உறவுச் சங்கிலிக்குப் பெரிதும் ஆபத்தான, மரணிக்க மறுக்கும் நெகிழியை நாம் கைவிட்டே ஆகவேண்டும். எழுத்தாளர் ஜெயமோகன் 'யானை டாக்டர்' என்னும் ஒரு சிறுகதையில் நெளியும் ஒரு புழுவைக் கையில் எடுத்து இவ்வாறு வருணனை செய்கிறார். 'குண்டு குண்டாக, மென்மையாக, புசுபுசுவென்று ஆவேசமாக நெளிந்து கொண்டிருக்கும் புழுக்களில் தெரியும் உயிரின் ஆவேசத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனம் மலைப்புறும். உண் என்ற ஒற்றை ஆணை மட்டுமே கொண்ட உயிர். அந்தத் துளிக்கு உள்ளே இருக்கின்ற சிறகுகள், முட்டைகள். ஒவ்வொரு கணமும் உருவாகும் ஆபத்துக்களை வென்று மேலெழுந்து அழியாமல் வாழும் கற்பனைக்கெட்டாத கூட்டுப்பிரக்ஞை' என்று ஒரு புழுவுக்குள் நெளியும் ஒரு துளி உயிரின் அதிசயத்தைப் பார்த்து வியப்படைகின்றார். உயிர்களின் மீதான அன்பே சிறந்த அறம். அந்த அறமே எல்லாவிதமான இயற்கை விரோதங்களையும் வென்றெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக