திங்கள், 20 மார்ச், 2017

தவக்காலம் மூன்றாம் வாரம் திங்கள்(20-3-2017)

இன்றைய நற்செய்தி : மத்தேயு 1:16-18, 21-24

16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.
18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்; அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.
21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'; என்றார்.
22-23 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்.
24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

சிந்தனை : இன்று அன்னை மரியாவின் அன்புக் கணவரும், மனுவுறு கொண்ட நம் மீட்பர் இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான புனித யோசேப்புவின் பெருவிழா. அப்பா என்ற வார்த்தைக்குள் அச்சமின்மை, பாதுகாப்பு, உழைப்பு, கனிவு, கண்டிப்பு, தியாகம் என்ற எண்ணற்ற வார்த்தைகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்குமே தங்கள் வாழ்வின் முதல் கதாநாயகன் அவர்களது தந்தைதான்.  இயேசு ஆண்டவரும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல என்பதையும், அவரது வளர்ப்புத் தந்தை எந்த அளவிற்கு அவரது ஆளுமையைப் பாதித்திருக்கிறார் என்பதையும், இயேசு ஆண்டவரின் பிற்காலப் பணிவாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அவரது எல்லாப் பணிகளுக்குமே அடிப்படையாக இருந்தது அவரது 'அப்பா ஆன்மீகமே'. கடவுள் ஒரு அரசர், கண்டிப்பான நீதிபதி, என்றெல்லாம் கற்பிதங்கள் மேலோங்கியிருந்த சமயத்தில், கடவுளை அப்பா என்று கண்டுகொண்டவர் இயேசு. நாமும் அவ்வாறே 'அப்பா! தந்தாய்' என்று அழைக்க கற்றுக்கொடுத்தவர் இயேசு. அப்பா கடவுளின் பண்பு நலன்கள் எப்படிப்பட்டவை என்பதை ஊதாரி மைந்தன் உவமையின் வாயிலாகச் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய அடிப்படை ஆன்மீகத்தை இயேசுவின் உருவாக்கியதில் நீதிமானாக விளங்கிய, அன்னை மரியாளை பல இக்கட்டானச் சூழல்களில் பாதுகாத்த, தச்சுத் தொழிலால் தன் குடும்பத்தைப் பராமரித்த நல்ல அப்பா யோசேப்புக்கு முதன்மையானப் பங்கு இருக்கிறது. புனித யோசேப்புவே எங்கள் குடும்பங்களின் தலைவர்களாகிய எல்லா அப்பாக்களையும் ஆசீர்வதியும். தங்கள் கடமையையும், கொடையையும் உணர்ந்தவர்களாக, உம்மைப் போன்ற முன்மாதிரியான அப்பாக்களாக அவர்கள் வாழ துணைசெய்யும், 

செபம் : அருள் நிறைந்த யேசேப்புவே வாழ்க! ஆண்டவர் உம்முடனே! ஆண்களுக்குள் பேரு பெற்றவர் நீரே! இப்பூவுலகில் உம்முடையப் பாதுகாவலில் வளர்க்கப்பட்ட உம் அன்பு மகனாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே! தூய யோசேப்புவே, இயேசுவின் தந்தையே! பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்! ஆமென்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக