இன்றைய நற்செய்தி : மாற்கு 12:28-34
28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்டார்.
29 அதற்கு இயேசு, 'இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக' என்பது முதன்மையான கட்டளை.
31 'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை' என்றார்.
32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், 'நன்று போதகரே, 'கடவுள் ஒருவNர் அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று நீர் கூறியது உண்மையே.
33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது' என்று கூறினார்.
34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
சிந்தனை: இயேசு நம்மைப் பார்த்தும் 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்று சொல்ல வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? நமது கடமைகளை சரிவர செய்ய வேண்டும். அவரது அன்புப் பிள்ளைகளாகிய நாம் அனுதினமும் அவரை அன்பு செய்ய வேண்டும். அவரது அன்பிற்காகவும், இரக்கத்திற்காகவும் காலையும், மாலையும், எல்லா வேளையும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுவே முதன்மையானக் கட்டளை. இரண்டாவது கட்டளை அடுத்தவரை அன்பு செய்வது. இரண்டு கட்டளைகளும் ஒன்றை ஒன்று இணைந்தும், பிணைந்துமே இருக்கின்றன. ஒன்றுக்கு பதில் இன்னொன்று அல்ல. ஒன்றை ஒன்று நிறைவு செய்வதாகவும், பொருள் தருவதாகவும், துணை செய்வதாகவும் இருக்கின்றன. குறிப்பாக சில நபர்களை அன்பு செய்வது கடினமாக இருக்கும் நேரத்தில், அந்த நபருக்காக செபிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. கடவுளை அன்பு செய்வோம். அந்த அனுபவத்தை பிறரோடு பகிர்ந்து கொள்வோம்.
செபம்: அன்பு இறைவா! எங்கள் இதயங்களை நன்கு அறிந்தவரே! எங்கள் முதன்மையானக் கடமைகளையும், கட்டளைகளையும் முழு ஆர்வத்தோடு நாங்கள் நிறைவேற்ற எங்களுக்குத் துணை செய்யும். இந்த நாளை உமது ஆசீரால் நிரப்பும். இன்று நாங்கள் சந்திக்கும் எல்லா நபர்களையும் உமது அன்பு அனுபவத்தால் அரவணைக்க அருள் தாரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக