திங்கள், 29 மே, 2017

தமிழ் மரம் (சிறு நாடகம்) A small skit on Tamil Tree

காட்சி 1
(மேடையின் நடுவில் ஒரு மரம். அதன்மீது தமிழ் என்று எழுதப்பட்டுள்ளது.. அதன் கிளைகளில் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்று பல தமிழ் நூல்களின் பெயர்கள் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கின்றன. இரு பெண்கள் கையில் கூடை, விளக்குமாறுடன் வருகின்றனர்)

பெண்1: இங்க பாருடி, எவ்வளவு அழகான மரம்! இப்படி நடுவீதியில வச்சிட்டுப் போயிருக்காங்க. யாருமே கண்டுக்க மாட்டேங்குறாங்க (சுற்றி சுற்றி பார்க்கின்றனர்)

பெண்2: அய்யயோ! வெயில்லயும் மழையிலயும் காஞ்சு கிடக்கே! எங்க ஒருத்தரையும் காணோம்.

பெண்1: இந்த மரத்திலிருக்கும் எண்ணற்றக் கனிகளைப் பார். உலகப் பொது மறையான திருக்குறள் என்ன? சிலப்பதிகாரம் என்ன? கம்பராமாயணம் என்ன? இன்னும் எத்தனை எத்தனை இலக்கியச் செல்வங்களைக் கொண்ட இந்த அழகிய மரத்தின் இன்றைய நிலையைப் பார். 

பெண்2: யாருமே இதன் கனிகளை உண்பதும் இல்லை. இதன் அருகில் வருவதையே அவமானமாகக் கருதி பிற சாதாரண மரங்களையேத் தேடி ஓடுகின்றனர். இப்படியே விட்டுவிட்டால் இம்மரம் விரைவில் வாடி வதங்கி பட்டுப்போய்விடுமே!!! 

பெண்1,2: தமிழ் என்னும் இந்தச் சிறப்புமிக்க மரத்தை வளர்த்தெடுக்க நாம் ஏதாவது செய்யவேண்டுமடி!


காட்சி 2
(4 பெண்கள் பேய் வேடத்தில் பேசிக்கொள்கின்றனர்)

பேய் 1: பேய்களே, இங்க பாருங்கள். ஒரு அழகான மரம்
2: பாக்குறதுக்கு பளபளன்னு அழகாக இருக்கிறதே!.
3: ஆமாம். இது இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் பழமையான மரம். 
4: இதன் கனிகளைப் பார்த்தீர்களா? வேறு எந்த மரத்திலும் இத்தனைச் சிறப்பு வாய்ந்த கனிகளை நாம் பார்த்ததே இல்லை.

பேய் 1: இந்த மரம் இந்த மக்களின் பெருமை. இந்த மரத்தை அடியோடு அழித்துவிட வேண்டும்.
2: ஆம். ஆனால் அதை நேரடியாகச் செய்தால் இந்த மக்கள் நம்மைத் தூக்கி எறிந்து விடுவார்கள். மறைமுகமாக அழிக்க வேண்டும்.
3: இதன் வேறில் இந்தி, சமஸ்கிருதம் என்னும் கழிவு உரங்களைப் போடவேண்டும். 
4: அதனால் இந்த மரம் வளரும் என்று பெய்யைப் பரப்ப வேண்டும்.

(பெண் 1, 2 பின்வரும் பாடலைப் பாடிக்கொண்டு வருகின்றனர்)

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

பேய்கள் 1,2,3,4 : ஏதோ சத்தம் கேட்கிறது. அந்த முட்டாள்கள் வருகின்றனர். வாருங்கள் நாம் நடிக்கத் தொடங்குவோம்
(பேய்கள் மரத்திற்கு உரம் போடுவது போல நடிக்கின்றனர்)

பெண்1: அடியே இங்கே பாருடி. நம் அழகிய மரத்தைச் சுற்றிலும் காவி நிறப்பேய்கள். இங்கு என்ன செய்கிறார்கள்?

பெண்2: ஆமாம். வா. என்னவென்று பார்ப்போம்.

(இருவரும் மண்வெட்டியால் பேய்களைத் தாக்குகிறார்கள்)
பேய்1: ஐயோ எங்களை ஏன் தாக்குகிறீர்கள்! நாங்கள் உங்கள் மரத்திற்கு நன்மைதான் செய்வோம்.

பெண்1 : அப்படியா? நீங்கள் யார்? 

பேய் 2 : நாங்கள் பேய்கள். நாங்கள் வடக்கிலிருந்து வருகிறோம். வரும் வழியில் இதைப் போல் நிறைய மரங்களைப் பார்த்தோம். எல்லா மரங்களுக்குள்ளும் இந்தி, சமஸ்கிருதம் போன்ற போன்ற உயர்ரக மரபணுக்களைத் திணித்துக்கொண்டு வருகிறோம். இதன் மூலம் உங்கள் மரத்தை தரம் உயர்த்தப் போகிறோம்.

பெண்2 : அப்படியா? மிக்க மகிழ்ச்சி. .

பேய்3 : அதுமட்டுமில்லை. நாம் எல்லோரும் இந்தியர்கள். நாடு முழுவதும் இந்தியைப் புகுத்திவிட்டால் நாம் எல்லோரும் ஒரே மொழியில் பேசலாம். இது நல்லது தானே?

பெண்1 : அட அட! என்னே அருமையான யோசனை. 

பேய் 4 : இந்தியில் நீங்கள் பேசினால் நிறைய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

பெண்1,2 : அடடே! எல்லோருக்கும் ஒரே மொழி. வேலை வாய்ப்பு. என்ன அருமையான யோசனை. உடனே எங்கள் குழந்தைகளுக்கு இந்தி பேச கற்றுத்தரப் போகிறோம்.

பேய்கள் 1,2,3,4 : அப்படியே செய்யுங்கள். சென்று வாருங்கள்!
(பெண்கள் இருவரும் சென்றுவிடுகிறார்கள்)

பேய் 1: ஹ ஹ ஹ! மாபெரும் வெற்றி. இவ்வளவு எளிதாக வென்றுவிட்டோம் இம்முட்டாள்களை.
2 : இம்மரத்தை இன்றே வேறோடு சாய்த்து என் முதுகுக்கு இதமாக சாய்வு நாற்காலி செய்யப்போகிறேன்.
3 : எம் இம்மூடர்களின் மொழியை அழித்துவிட்டால் இவர்கள் காலத்துக்கும் நம் அடிமைகளாக இருப்பர். இதன் கனிகளை நெருப்பிலிட்டு அழிக்க வேண்டும்.
4 : இப்படி ஒரு மரம் இங்கு இருந்த தடமே இருக்கக் கூடாது.
பேய்கள் 1,2,3,4 : சத்தமாகச் சிரிக்கிறார்கள் 

காட்சி 3
(பெண்கள் இருவரும் ஊருக்குள் சென்று குழந்தைகள் அனைவரையும் அழைக்கிறார்கள்.)

பெண் 1,2 : பள்ளி செல்லும் குழந்தைகளே! எல்லோரும் இங்கே வாருங்கள். வெல்லம் போன்ற இனிப்பானச் செய்தியொன்றைச் சொல்லப்போகிறோம்.
குழந்தைகள்: அப்படியா! ஆர்வம் தாங்கவில்லை. உடனேச் சொல்லுங்கள்.

பெண் 1: இனி நம் ஊரின் மரத்தில் இந்தி மரபணுவைத் திணிக்கப்போகிறார்களாம். நாம் எல்லாரும் இனி இந்தியா முழுவதும் இந்தியிலியே பேசலாம்.

குழந்தை 1: நாம் ஏன் இந்தியா முழுவதும் பேசப் போகிறோம். இந்தி பேசும் இடங்களுக்கு செல்பவர் மட்டும் படித்தால் போதாதா? எல்லோரும் ஏன் படிக்க வேண்டும்? நாங்கள் தமிழில் தான் பேசுவோம்.

பெண் 2: சரிடா செல்வமே! இந்தி பேசினால் நிறைய வேலை வாய்ப்புகள் பெருகுமாமே!

குழந்தை 2: ஹஹஹ! அப்படியென்றால் இன்று நம் ஊரின் மூலை முடுக்கெல்லாம் சேறு மிதித்து சோறு உண்பவர்கள் அவர்கள் ஊரிலேயே வேலை பார்த்திருக்கலாமே? என்ன முரண்!

பெண் 1: சரி அதை விடுங்கள்! இந்தி நாடு முழுவதும் ஒரு தொடர்பு மொழியாக இருக்குமே!?

குழுந்தை 3: நாடு முழுவதும் ஆங்கிலம் கற்றுத் தரப்படுகிறது. இதனால் நம் நாடு மட்டுமல்ல. அதுவே உலகம் முழுக்கப் பேசும் தொடர்பு மொழியாக இருக்கிறது. ஆகவே ஒழுங்காக எல்லாரும் தாய்மொழியோடு இணைப்பு மொழியாக ஆங்கிலம் மட்டும் படித்தால் போதுமானது. ஒரு ஆற்றைக் கடக்க இரண்டு பாலங்கள் வேண்டுமா?

பெண் 1 : வேலை வாய்ப்பு, இணைப்பு மொழி, எல்லாம் சுத்தப் பொய் போன்றல்லவா இருக்கிறது. 

பெண் 2 : நம் முன்னோர்கள் போற்றிப் பாதுகாத்த நம் மொழியை நாமே வளர்ப்பதுதான் முறை. நம் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலைத் தாய்மொழியே வளர்க்க முடியும். 

பெண் 2: அப்பேய்கள் நம்மை ஏமாற்றுவது போல எனக்குத் தோன்றுகிறது. வாருங்கள் எல்லோரும் சென்று என்ன ஏதென்று பார்ப்போம்.

காட்சி 4
(பேய்கள் மரத்தை வேக வேகமாக வெட்ட முயற்சி செய்கிறார்கள்.) 

குழந்தைகள் : பெண்களே பாருங்கள்! நாம் சந்தேகப்பட்டது சரிதான். அவர்கள் நம் பெருமை மிக்க மரத்தை வெட்டப் பார்க்கிறார்கள்.

பெண்கள் : அடித்து விரட்டுங்கள். இந்த ஆதிக்க வெறி பிடித்த ஓநாய்களை! இந்தியத் தாய் மொழியால், இனத்தால், கலாச்சாரத்தால் பல வண்ணங்களைக் கொண்டவள். அவளை ஒற்றை வண்ணத்தில் வெள்ளையடிக்க நினைப்பவர்கள் யாராயினும் அடித்து விரட்டுவோம். 

(அடித்து விரட்டுகிறார்கள்)

பின்னர் அனைவரும் இணைந்து சொல்கிறார்கள்:

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!
எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!
(நன்றி கவிஞர் வைரமுத்து)

பின்குரல்:
இந்தப் பெண்களும், குழந்தைகளும் எப்படி முழுச்சிக்கிட்டாங்களோ, அதுபோல இங்க இருக்கிற ஒவ்வொரும் முழுச்சிக்கிறவரைக்கும்...
சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டை போடுறது நிறுத்திட்டு தமிழன் என்ற உணர்வால் நாமெல்லாம் ஒன்னா கை கோர்த்து நிக்கிற வரைக்கும்....
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக