கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு
என்று பெருமிதம் கொள்கிறார் மகாகவி பாரதியார். ஆம்! கல்வியிலும், இலக்கியத்திலும், பண்பாட்டுச் செழுமையிலும் உலகில் யாருக்கும் தாழ்ந்தவர்களல்ல தமிழர்கள் என்பது கண்கூடான உண்மை. மனிதன் ஒரு சமூக விலங்கு என்கிறார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில். மனிதனை விலங்கு நிலையிலிருந்து விடுவித்து சமூகத்திற்கு ஏற்ற முழு மனிதனாக மாற்றுவது கல்வியே ஆகும். ஆயினும் பள்ளிக்கூடங்களையேப் பார்த்திராத பல மாமனிதர்களையும், பட்டங்கள் பல பெற்றும் விலங்கினும் கீழாக நடந்து கொள்ளும் நபர்களையும் நாம் அன்றாட வாழ்வில் கடந்து வருகிறோம். கல்வி என்றால் ஏட்டுக்கல்வி மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொண்டால் இந்த முரண்பாட்டையும் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
வள்ளுவரும் கல்வியும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடமை போன்ற அதிகாரங்களில் கல்வியின் சிறப்புகளை விதந்தோதுகிறார் திருவள்ளுவர். ஆழ்ந்த பொருளும், அழகும் கொண்ட அக்குறள்கள், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கனிந்த நம் கல்வி மரபின் சாட்சிகளாக நிற்கின்றன.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு (திருக்குறள் 396)
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் என்று இக்குறளுக்கு விளக்கம் தருகிறார் கலைஞர்.
கல்வி என்ற சொல் கல் என்ற வேர்ச்சொல்லிலிருந்தே பிறக்கிறது. கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். ஆகவே அறிவு என்னும் ஆயுதம் கொண்டு நம் சிந்தனையின் ஊற்றுக்கண்களைத் திறப்பது கல்வி ஆகும். நம் ஆழ்மனதை மூடியிருக்கும் கட்டுக்கதைகள், மூட நம்பிக்கைகள், பழமைவாத சிந்தனைகள் போன்றவற்றைப் பகுத்து, ஆராய்ந்து, நீக்கி உண்மையைக் காணச் செய்வதே கல்வியின் தலையாயப் பணியாகும்.
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை (கலைஞர் விளக்கவுரை) என்னும் பொருளில்,
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. (திருக்குறள் 400)
என்கிறார் திருவள்ளுவர். அதனால் தான் பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்கிறது வெற்றி வேற்கை.
கல்வி என்பது ஓர் அறிவுச்செயல்பாடு
நான் சிந்திக்கிறேன்; ஆகவே நான் இருக்கிறேன் என்கிறார் மேற்கத்திய மெய்யியலின் தந்தை என்று அழைக்கப்படும் ரெனே டெக்கார்ட். ஒருவர் தன் முன்னிருக்கும் ஒரு எதார்த்தத்தைக் கவனித்து, அது ஏன், எதற்கு என்ற வினாவெழுப்பி, தரவுகளைச் சேகரித்து, ஆய்வுக்குட்படுத்தி, முடிவுகளைக் கோருவதே அறிவியல் செயல்பாடு ஆகும். அறிவியலின் முடிவுகளும் ஆய்வுக்குட்பட்டதே என்பதால் தனது பழைய கருத்துக்களைப் புதுப்பித்துக்கொள்ளவும் அது தவறுவதில்லை. நமது வரலாற்று, சமூக, அரசியல், பொருளாதார. சுற்றுச்சூழல் எதார்த்தங்களை ஆய்வுக்குட்படுத்தி, கேள்விகளை எழுப்பி, மனிதர்கள் வாழ்வை ஒருபடியேனும் முன்னகர்த்த பயன்படுமாயின் அதுவே உண்மையான கல்வியாகும். ஏடுகள் நமக்குள் ஒரு தீப்பொறியைப் பற்றவைக்கலாம். அதனை நம் சிந்தனை மற்றும் செயல்களின் மூலமே பயனுள்ள ஆற்றலாக மாற்றிக் கொள்ள முடியும்.
இன்றைய சூழல் என்ன?
போட்டிகள் நிறைந்த நம் காலத்தில் கல்வி என்றால் அதிக மதிப்பெண்கள் பெறுவது என்று குறுகலாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது. தேர்வு முடிவுகளை இலக்காகக் கொள்ளும் கல்வி என்பது மாணவர்களிடமிருந்து கற்றல் இன்பத்தை முற்றிலும் பறித்துவிடுவதோடு, அதிகமானப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றது. மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே அவர்களது மேற்படிப்பிற்கான வாய்ப்புகள் தீர்மானிக்கப்படுவதால் அப்பதற்றம் தவிர்க்க முடியாததாகிறது. பள்ளிகளில் கற்றல் - கற்பித்தலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை மறுக்கமுடியாது எனினும், பத்தாம் வகுப்பு முடிவிலேயே அவர்கள் தங்கள் கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக பெரிய முடிகளை எடுக்க வேண்டிய சூழலே இருக்கின்றது.
நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேல்நிலை வகுப்பில் கணிதம் அறிவியல் தேர்வு செய்யும் மாணவர்கள் கடினமான பாடத்திட்டத்தால் பெறும் அழுத்தத்திற்கு உள்ளாவதையும், வரலாறு, வணிகவியல் எடுக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் துறைக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை நினைத்து வருந்துவதையும் பெருமளவு பார்க்க முடிகிறது. ஆகவே பாடத்திட்டங்கள் எளிமையாக்கப்பட்டு, மேற்படிப்புக்கான வாய்ப்புகளில் நெகிழ்வுத் தன்மை கொண்ட கல்விமுறைகள் காலத்தின் கட்டாயமாகிறது. அப்போதுதான் மாணவர்கள் கல்வியை ஏட்டுக்கல்வியாக அல்லாமல் வாழ்க்கைக் கல்வியாக அணுக முடியும். எனக்குத் தெரிந்த வரையில் ஐரோப்பிய நாடுகளில் கல்லூரி இளங்கலை முடியும் வரையிலும் ஒருவர் தன் துறையைத் தீர்மானிக்க அவகாசம் தரப்படுகின்றது. அத்தகைய நெகிழ்வுத் தன்மையுள்ள கல்வித்திட்ட மாதிரிகளை அரசு பரிசீலிக்கலாம் என்று வலியுறுத்துகிறேன்.
வாழ்க்கைக் கல்வி
இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கானத் தேர்வு முடிவுகள் வந்திருக்கும். நீங்களோ, உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவரோ எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் சோர்ந்து போயிருக்கலாம். அல்லது மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கலாம். அல்லது எதிர்பார்த்த படிப்பிற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கலாம். உங்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்று மட்டும் தான். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்வின் ஒரு கட்டத்தில் உங்கள் கற்றல் செயல்பாட்டினை மதிப்பிடும் ஒரு அளவுகோல் தான் மதிப்பெண்கள். வாழ்வு இதைப் போன்ற பல கட்டங்களை உள்ளடக்கியது. பல செயல்பாடுகளை உள்ளடக்கியது. அவை எதற்கும் மதிப்பெண்கள் என்னும் அளவுகோல்கள் இருப்பதில்லை. விடா முயற்சி, தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை, மகிழ்ச்சியாக இருத்தல், நன்றியுணர்வு கொண்டிருத்தல், நட்பு பேணுதல், உணர்ச்சியுள்ள மனிதராக இருத்தல் போன்ற மதிப்பெண்கள் தரப்படாத பல துறைகளில் நீங்கள் வெற்றியாளர்களாக இருக்கலாம். ஆகவே ஒரு தோல்வியோ, ஒரு ஏமாற்றமோ, ஒருவரின் கேலிச் சொல்லோ, ஒரு அவமானமோ உங்கள் வாழ்க்கையை வரையறுக்க விடாதீர்கள். எழுந்து நடங்கள்! பாதைகள் இல்லாவிடினும் எழுந்து நடங்கள்! உங்கள் பயணங்களில் உலகம் உங்களைப் பின் தொடரும்!
அருமையான தகவல்.உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள்💐
பதிலளிநீக்குநன்றி
நீக்கு