புதன், 1 நவம்பர், 2023

அனைத்து புனிதர்களின் திருவிழா

இன்று அனைத்து புனிதர்களின் திருவிழா. புனிதர்களின் வணக்கம் திரு அவையின் வரலாற்றில் பெரும் பங்கு வகித்திருப்பதை காண முடிகிறது. ஊரெங்கும் கோவில்கள். கோவில்கள் எங்கும் புனிதர்கள் என்று தான் பெரும்பாலும் கத்தோலிக்க பக்தி மார்க்கம் வளர்ந்திருக்கிறது. புனிதர் நிலைக்கு ஒருவர் உயர்த்தப்படுவது என்பது எல்லோருக்கும் எட்டாக்கனியாகவும், ஒரு சிலருக்கான தனி உடமையாகவும் பார்க்கப்பட்டது.

ஆனால் திரு அவையின் வேர்களுக்குச் சென்று பார்க்கும் பொழுது கிறிஸ்துவ நம்பிக்கையாளர்கள் அனைவரும் புனிதர்கள் என்றே அழைக்கப்பட்டனர். யூதர்களும்,  புறவினத்தவர்களும் நம்மை கலிலேயர்கள், நசரேனியர்கள், சிலுவையில் அறையப்பட்டவரைப் பின்தொடர்பவர்கள் என்று ஏளனத் தொனியில் அழைத்த போது, புனித பவுல் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை புனிதர்கள் என்று அழைத்தார். அவரது கடிதங்களில் எபேசு, கொரிந்து, ரோமை நகரில் வாழும் புனிதர்களே என்று குறிப்பிடுவது எங்கோ விண்ணில் வாழும் சிறப்புமிக்க இறந்தவர்களை அல்ல! மாறாக கிறிஸ்துவை தன் வாழ்வின் மீட்பராக ஏற்றுக் கொண்டு, அவரது அன்பின் கொள்கைகளை தங்களது அன்றாட வாழ்வின்  இலக்காக ஏற்றுக்கொண்டு, தன்னலம் நாடும் உலகப் போக்கிற்கு எதிராக வாழத்துணிந்த சாதாரண மக்கள். 

ஆகவே இன்றைய நாளில் எங்கோ கண்ணுக்குத் தெரியாத ஓர் இடத்தில் நமக்காக கடவுளின் முன் பரிந்து பேசும் புனிதர்களை மட்டும் நினைவு கூறுவதோடு நிறுத்தி விடாமல், திருமுழுக்கினால் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் புனித நிலைக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, அந்த அழைப்பிற்கு ஏற்ற வாழ்க்கை வாழ முயல்வதே சிறந்தது. 

இன்றைய முதல் வாசகமான திருவெளிப்பாடு நூலில், "வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது... எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரை இடும் வரை நிலத்தையோ கடலோ மரத்தையோ அழிக்க வேண்டாம் என்று அவர்களிடம் கூறினார்" என்று வாசிக்கின்றோம். 

ஆம்! முத்திரை இடுவது என்பது ஒரு பொருளையோ அல்லது ஒரு ஆளையோ உடைமை ஆக்கிக் கொள்வதாகும். பழைய ஏற்பாட்டில் இனிமை மிகு பாடல்கள் புத்தகத்தில் காதல் வயப்பட்ட பெண் "உன் நெஞ்சத்தில் இலட்சினைப்போல் என்னைப் பொறுத்திடுக இலச்சினை போல் உன் கையில் பதித்திடுக" என்று, தான் அன்பு செய்பவரிடம் முறையிடுகிறார். உன் சிந்தனைகள் முகிழ்க்கும் நெஞ்சத்தில் என் முத்திரை இருக்கும் பொழுது அங்கு வேறு யாருக்கும் இடமில்லை. என்னோடு உடன்படாத எந்த முடிவுகளையும் நீ எடுக்க இயலாது. என்னை மகிழ்விக்காத எச்செயலையும் உன் கையால் நீ செய்ய இயலாது என்பதுதான் காதலியின் வேண்டுதல். 

இயேசுவின் திருமுழுக்கின் பொழுது இவரே என் அன்பார்ந்த மகன் என்று தந்தையாம் கடவுள் இயேசுவைத் தூய ஆவியால் முத்திரையிட்டு அறிவிக்கிறார். இனி மகனின் சிந்தனையும், செயலும் தந்தையின் அன்பினின்று விலகி நிற்க இயலாது. அதிகாரத்திற்கு அஞ்சாது உண்மையை எடுத்துரைப்பதும், சுயநலம் கருதாது ஏழை எளியவர்களின் சார்பாக நிற்பதும், தந்தையின் அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, நன்மைத்தனத்தை விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் எடுத்துரைத்து, அனைவரையும் நிறைவாக வாழ அழைப்பு விடுப்பதே தந்தையை மகிழ்விக்கும் என்று மகனும் செயல்பட்டார். சிலுவையில் தன்னையே பலியாகத் தரவும் முன் வந்தார்.

 திருமுழுக்கு பெற்ற எல்லோரும் அதே தூய ஆவியால் முத்திரையிடப்பட்டவர்கள் தான் என்று பவுலடியார் எபேசியர் எழுதிய திருமுகத்தில் கூறுகிறார். ஆகவே தான் திருமுழுக்கு பெற்ற நம்பிக்கையாளர்களின் சமூகத்தை புனித திரு அவை என்று சொல்கின்றோம். 
நாடு, இனம், மொழி கடந்த, தூய ஆவியால் முத்திரையிடப்பட்ட கடவுளின் மக்கள் நாம். நமது இந்த புனித அடையாளத்தை தான் இன்று நாம் விழாவாக கொண்டாடுகிறோம். 



1 கருத்து: