புதன், 17 ஜூன், 2026

தமிழ்நாடு தேர்தல் 2021

                                                    .

தேர்தல் முடிந்து நாற்பது நாட்களாகிவிட்டது. இந்த நேரத்து நினைவுகளைப் பதிவு செய்து வைத்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். தேர்தல் நாளன்று நான் ஊரில் தான் இருந்தேன். நான் படித்த சிறுமலர் ஆரம்பப் பள்ளியில் வாக்கு செலுத்தினேன்.

நிச்சயம் திமுகதான் ஜெயிக்கும் என்று நம்பினேன். காரணம் என்னைப் பொறுத்தமட்டில் தமிழகத்தின் சிறந்த கட்சி திமுக.

“சிறந்த கட்சி” என்பதற்கு பொருள் “தூய கட்சி” அல்ல; “குற்றம்-குறையற்ற கட்சி” அல்ல. அப்படி ஒரு கட்சியோ, ஆட்சியோ உலகின் எந்த மூலையிலும், எந்த காலத்திலும் இல்லை. அப்படி ஒன்று இருந்தால், அந்தக் கட்சியிடம் உலகத்தையே ஆட்சி செய்யக் கொடுத்து விடலாம்.

எனது புரிதலில், சிறந்த கட்சி என்பது தூய்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை நோக்கி நகர முயலும் கட்சி; எல்லா துறைகளிலும் கவனம் செலுத்தி, எல்லா தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக திட்டங்களை தீட்டி, அவை அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் கட்சி. குறிப்பாக சமூகத்தின் நலிந்த தரப்பினருக்கு கூடுதல் கவனம் கொடுத்து அவர்களை முன்னேற்றும் கட்சி.

ஜாதி, மதச் சார்பின்றி, அறிவியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி, சுகாதாரத்தை அணுகும் கட்சி; விமர்சனங்களுக்கு செவி கொடுத்து தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் பண்பு கொண்ட கட்சி; கேள்விகளுக்கு தெளிவான, நேர்மையான பதில்களை வழங்கும் கட்சி; எந்த அவையிலும் ஆணித்தரமாக கருத்துக்களையும் கொள்கைகளையும் பேசக்கூடிய திறமையான அரசியல் தலைவர்களை கொண்ட கட்சி.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரே கட்சி தமிழகத்தில் திமுக மட்டுமே என்பதால், எனக்கு உவகையான கட்சியும் அதுவே.

திமுக வெல்லும் என்று நம்பியதற்கு காரணம், கடந்த ஐந்தாண்டுகளில் பெண்களும் மாணவர்களும் பல்வேறு திட்டங்களால் கணிசமான பலன்களை பெற்றதை நான் நேரடியாகக் கண்டதுதான். ஆனால், அதே இரு தரப்பினரும் தான் ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது நான் கேரளாவில் இருந்தேன். அங்கு காணுமிடமெல்லாம் காங்கிரஸின் வெற்றிக் கொண்டாட்டம். எனக்கோ, தமிழக முடிவுகளைப் பார்த்தபோது பெரும் ஏமாற்றமும் ஒரு வகை அவமான உணர்வும் ஏற்பட்டது.

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று திமுக தலைமையே கூறினாலும், மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இத்தனை ஆண்டு அரசியல் வாழ்வில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்று கலைஞரிடம் பேட்டி எடுத்தபோது, “உங்களால் பயனடைந்தவர்கள் உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது” என்று அவர் கூறியதாக சொல்வார்கள்.

இந்த முறை திமுக அந்த எதிர்பார்ப்பில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

திமுக மீது வீசப்படும் பல பொய்யான அவதூறுகள், அடிப்படை அரசியல் அல்லது வரலாறு அறியாதவர்களால் எளிதாக நம்பப்படுகின்றன. இன்று பலர் தங்கள் அரசியல் சிந்தனைகளை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை உருவாக்கிய நிர்வாக அனுபவத்தை கொண்ட கட்சியின் சாதனைகளை, இளைஞர்கள் மற்றும் பெண்களின் எளிய புரிதலுக்குள் கொண்டு சேர்ப்பதில் திமுக குறைபட்டுவிட்டதோ என்று கருத வேண்டியிருக்கிறது.

தோற்றது திமுக அல்ல; தமிழ்நாடுதான் என்ற எண்ணம் இந்த ஒரு மாத அனுபவத்திலேயே மனதில் தோன்றுகிறது. இன்னும் 54 மாதங்கள்… தமிழ்நாடு வெல்லும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக