ஞாயிறு, 22 மார்ச், 2026

இதை நீ நம்புகிறாயா? - பகுதி 1

 

பகுதி 1

தவக்கால 5 ஆம் ஞாயிறு (மார்ச் 22, 2026)

எசே 37, 12-14, தி.பா 129, ரோமையர் 8, 8-11, யோவான் 11, 11-45

(அருட்தந்தை பெர்னாந்தோ அர்மெல்லினி அவர்கள் இத்தாலிய மொழியில் ஆற்றிய மறையுரையானது கருத்துச்சிதைவின்றி மொழிச்சுதந்திரத்தோடு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.  கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான உயிர்த்தெழுதல் பற்றிய நமது புரிதலை இன்னும் ஆழப்படுத்த உதவக்கூடும்Fr. ஆன்றனி பிரான்சிஸ், OMD)

'தெய்வங்கள் மனிதகுலத்தைப் படைத்தபோது, மரணத்தை மனிதகுலத்திற்கு என்று ஒதுக்கினார்கள். வாழ்வை மட்டும் தங்கள் கைகளிலேயே வைத்துக்கொண்டார்கள்' என்று உலகின் மிகப்பழமையான இலக்கியங்களில் ஒன்றான மெசபத்தோமியாவின் கில்கமேசு காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரணமில்லா வாழ்வைத்தரும் மரத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் 

கில்கமேசிடம் மதுபான விற்பனையகத்தை நடத்திக்கொண்டிருக்கும் சிதுரி என்னும் பெண் கூறியதே இவ்வரிகள். இதைக் கேட்டு மனமுடைந்த அவ்வீரன் இவ்விதிக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை உணர்ந்துகொள்கிறான். மரணம் என்பது 'திரும்பி வாராத தேசத்திற்கு' மேற்கொள்ளும் பயணம்.

மிகப் பழமையான யூதக் கோட்பாடுகளின்படியும் இருளும், சலனமின்மையும், நினைவழிந்து போவதுமே மரித்தவர்களின் இருப்பிடத்தைச் சூழ்ந்துள்ளன. பழைய ஏற்பாட்டில் இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைப் பற்றியும், ஆன்மாவின் அழிவின்மையைப் பற்றியும் மிகச்சிலக் குறிப்புகளே உள்ளன. அரிதான அக்குறிப்புகளும் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன. 

'மரத்திற்காவது நம்பிக்கையுண்டு. அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும். அதன் குருத்துக்கள் விடாது துளிர்க்கும். அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும், அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப் போனாலும், தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும். இளஞ்செடி போல் கிளைகள் விடும். ஆனால் மனிதர் மடிகின்றனர். மண்ணில் மறைகின்றனர். உயிர் போனபின் எங்கே அவர்கள்? ஏரியில் தண்ணீர் இல்லாதுபோம். ஆறும் வறண்டு காய்ந்துபோம். மனிதர் படுப்பர். எழுந்திருக்கமாட்டார். வானங்கள் அழியும் வரை அவர்கள் எழுவதில்லை. அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை' என்று யோபு 14:7-12 இல் வாசிக்கின்றோம். இந்த ஏமாற்றம் நிறைந்த மனச்சோர்வே திருப்பாடல் ஆசிரியரின் வாயில் ஓர் கழிவிரக்கத்தின் வேண்டுதலாக வெளிப்படுகின்றது. 'என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர். என் ஆயட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை. உண்மையில் மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவர்கள். அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர். அவர்கள் வருந்து உழைப்பது வீண். அவர்கள் சேமித்து வைக்கின்றனர். ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார். நான் பிரிந்து மறையும் முன்பு சற்றே மகிழ்ச்சி அடையும்படி, உம் கொடிய பார்வையை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.' (தி.பா 39: 5-7, 13)

ஆதி காலத்தின் அறிவொளி பேராளுமைகளும் இவ்வாறே இறப்பின் முன்பான தங்கள் திகைப்பை, போதாமையை, விரக்தியை, வேதனையை வெளிப்படுத்தினர். உலகின் மீது உயிர்த்த இயேசுவின் பாஸ்கா பெருவெளிச்சம் பிரகாசிக்கும் முன்பாக, மூடப்பட்டக் கல்லறைக் கதவுகளின் அடர்த்தியான இருள் எவ்வளவு கனமிக்கதாக இருந்தது என்பதை நமக்கு நினைவூட்டவே, இத்தகையப் பெருமூச்சுக்களைச் சேமித்து வைக்கும் பெட்டகமாக திருவிவிலியம் திகழ்கின்றது.  

இச்செய்தியை நம் இதயத்தில் ஆழமாகப் பதியவைக்க திருப்பாடல் ஆசிரியரோடு நாமும் சொல்வோம்: 'சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சமாட்டேன்' (தி.பா 23:4)

முதல் வாசகம்: எசே 37, 12-14

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். ஹஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்' என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

பாபிலோனுக்கு கி.மு 597 இல் அடிமைகளாக இழுத்துச்செல்லப்பட்ட இஸ்ராயேல் மக்களிடையே எசேக்கியேல் என்ற ஒரு குருவும் இருந்தார். பிற்காலத்தில் நாடுகடத்தப்பட்ட அந்த அந்நிய நிலத்து அகதிகள் திரளின் இறைவாக்கினாராக மாறினார். 'எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் ஆண்டில், பத்தாம் மாதத்தின் ஐந்தாம் நாள். எருசலேமிலிருந்து தப்பியோடி வந்த ஒருவன் என்னிடம் வந்து, 'நகர் வீழ்ந்துவிட்டடது' என்றான்' (எசே 33,21). இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, நெபுகத்நேசரின் படைவீரர்கள் அந்த நகரைக் கைப்பற்றித் தீயிட்டுக் கொளுத்தியிருந்தார்கள். அவர்கள் பிடித்துச் சென்ற புதிய கைதிகள், ஏற்கனவே மெசப்பத்தோமியாவில் இருந்தவர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர்.

தோல்வியுற்று, மனமுடைந்த நிலையில் அங்கிருந்த மக்களிடையேதான் எசேக்கியேல் தன் இறைவாக்குப் பணியைச் செய்கிறார். அவர்களோ 'எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்' (எசே37:11) என்றார்கள். அவர்கள் தங்களை உயிரற்றப் பிணங்களாகக் கருதினார்கள். நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை என்னும் கல்லறையில் பல ஆண்டுகள் நம்பிக்கையின்றி கழிந்ததால், தங்களை மட்கிப் போன உலர்ந்த எலும்புக்கூடுகளாகவே உணர்ந்தார்கள்.

அப்படியென்றால் எல்லாம் முடிந்து விட்டதா? எம் தந்தை ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்ட ஆசிர்வாதத்தின் வாக்குறுதிகள், மக்களின் பாவத்தால் வீணாகிவிட்டனவா? இனி கடவுள் வாக்கு பிறழாதவர் இல்லையா? இரு பெருநதிகளின் நகரமான மெசபத்தோமியாவின் பள்ளத்தாக்குகளிலும், சமவெளிகளிலும் சிதறிக்கிடக்கும் உலர்ந்து எலும்புக்குவியலாக மாறிப் போன இஸ்ரயேலுக்கு இனி கதியேதுமில்லை என்பது உறுதிதானே? (எசே 37:1-3)

இந்த வரலாற்றுச் சூழலில்தான், முன்னெப்போதும் கண்டிராத, கேட்டிராத ஒரு புதுமையை எசேக்கியேல் அறிவிக்கிறார். 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.' (எசே 37:12-13). ஆக இந்த இறைவாக்கு நாம் வழக்கமாகப் புரிந்துகொள்வதைப் போன்ற 'இறந்தவர்களின் உடல்சார்ந்த உயிர்த்தெழுதலைக்' குறிக்கவில்லை. மாறாக நாடுகடத்தப்பட்ட மக்கள் மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புவதையே குறிக்கின்றது. ஆயினும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், வேறு வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த யூத ரபிக்கள் இவ்வரிகளை ஆழ்ந்து தியானித்து மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். மெசியாவின் வருகையின் போது நீதிமான்கள் அனைவரும் மீண்டும் உயிர்பெற்று எழுவார்கள் என்ற சிந்தனை மலர்வதற்கு  இவ்வரிகளே பெரும்பங்காற்றியது என்றால் மிகையாகாது.

கடவுளின் ஆவி எங்கெல்லாம் பிரசன்னமாகின்றதோ, அங்கெல்லாம் வாழ்வு  தளிர்க்கின்றது. தொடக்கத்தில் கடவுள் நிலத்தின் புழுதியிலிருந்து மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசிகளில் உயிர் மூச்சை ஊதியபோது இது நிகழ்ந்தது. 'மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்' (தொ.நூ 2:7).

இந்த உயிரளிக்கும் ஆவியானவர் இன்றும் கூட செயலாற்றுகின்றார். மரணத்தின் அச்சம் சூழந்த ஒவ்வொரு சூழ்நிலைகளிலும், மக்களினங்கள் நாடுகளுக்கிடையே நெடுங்காலமாக நிலவும் பகையுணர்ச்சிகள், சமூகப் பிரிவினைகள், பிணக்குகள், குடும்பத்து உறுப்பினர்களிடையே நிலவும் கசப்புணர்வுகள், புரிதலற்றி நிலைகள் என அனைத்திலும் ஆண்டவரின் ஆவியானவர் புதிய உயிரோட்டத்தை அளிக்க முடியும். அவரால் மீட்டெடுக்கப்பட முடியாததென்று எதுவுமில்லை. உலர்ந்து போன எலும்புகளைக் கூட ஒன்றிணைத்து அவரால் உயிர் கொடுக்க முடியும்.

குணப்படுத்த முடியாத காயங்களும்,

அழகுபடுத்த முடியாத அசிங்கங்களும்,

திருத்தி எழுதப்பட முடியாத தீர்ப்புகளும் இறையரசில் இல்லை!

இரண்டாம் வாசகம் (உரோமையர் 8:8-11)

சகோதரர் சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

எல்லா மனிதர்களுக்கும் இறப்பு உண்டு. வாழ்வின் 'நிலையற்ற தன்மை' மற்ற விலங்கினங்களுக்கும், மனிதர்களுக்கும் பொதுவான மற்றும் தவிர்க்கவே முடியாத உயிரியல் விதியாகும்.

மனுவுருவெடுத்த இறைமகன்  இயேசுவும் இறந்தார். ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார். அது எப்படி நடந்தது? எது அவரை உயிர்த்தெழச்செய்தது?

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் இவ்வினாவிற்கு பதிலளிக்கின்றார்.  'அவர் கடவுளின் ஆவியைத் தன்னுள் முழுமையாகக் கொண்டிருந்தார்'. நாம் ஏற்கனவே பார்த்தது போல கடவுளின் ஆவி இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும். இயேசுவிடம் என்றுமே அழியாக கடவுளின் வாழ்வு இருந்தது.

மனித வாழ்விற்குத்தான் ஒரு தொடக்கமும், முடிவும் உண்டு. ஆனால் கடவுளின் வாழ்வு நித்தியமானது. அவருக்குத் தொடக்கமுமில்லை. முடிவுமில்லை. இயேசு இத்தகையக் கடவுளின் வாழ்வைக் கொண்டிருந்தார். சிலுவையில் அவருடைய இவ்வுலக வாழ்வு நிறைவு பெற்றாலும், கடவுளின் ஆவி அவரை உயிர்பெற்றெழுந்து கடவுளின் மாட்சிமைக்குள் அழைத்துச் சென்றது.

பவுல் தொடர்ந்து கூறுவது போல, திருமுழுக்கின் வழியாக நாமும் அதே ஆவியையும், அதே வாழ்வையும் பெற்றுக்கொண்டுள்ள படியினால் இனி நாம் சாக முடியாது. இவ்வுலகில் நமது வாழ்வு முடிவுக்கு வரலாம். ஆனால் அதுவே அனைத்துக்குமான முற்றுப்புள்ளி அல்ல. இயேசுவை உயிர்த்தெழச் செய்த அதே ஆவியானவர், நமக்குள்ளும் குடிகொண்டிருப்பதினால், நமது அழியக்கூடிய உடல்களுக்கும் நித்தியமான வாழ்வைத் தரவல்லவராக இருக்கின்றார்.

(நற்செய்தி பகுதிக்கான விளக்கத்தைப் பகுதி 2 இல் பார்க்கலாம்)

வியாழன், 19 மார்ச், 2026

புனித யோசேப்பு பெருவிழா - தத்தெடுத்தல்


புதிய மொழிபெயர்ப்பில் என்ன இருந்தாலும் 'சூசையப்பர்' திருவிழா என்று சொல்லும் போது இன்னும் நெஞ்சுக்கு நெருக்கமாகிவிடுகிறது இந்த நாள். இராமனாதிச்சன்புதூர் சிறுமலர் ஆரம்பபப் பள்ளியில் படிக்கும் போது புதன்கிழமைகளில் சூசையப்பர் தினம் கொண்டாடப்பட்டதாக ஞாபகம். பெரிய வகுப்பு (5-ம் வகுப்பு) மாணவர்கள் 'பெரிய' குளத்திலிருந்து அல்லி மலர்களைப் பறித்து கொண்டுவருவார்கள். கைதேர்ந்த மாணவிகள் அதனை அழகான மாலையாக மாற்றுவார்கள். சிறிய இடைவெளியில் அதன் தண்டினை ஒடித்து நீக்கினால் மாலை தயாராகிவிடும். கலை, கயிறு இன்னபிற காரியங்களுக்கெல்லாம் தேவை இருக்காது. செபம் முடியும் போது 'எங்கள் காவலாம் சூசை தந்தையின், மங்களங்கள் எங்கும் சொல்லி இன்று பாடுவோம்' என்ற பாடலை மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கத்திப்பாடுவோம். அந்தப் பழக்கம் விடவேயில்லை. வீட்டுக்கு போகும் போது இனிப்பு பொங்கல் என்று நினைக்கிறேன். ஏதோவொன்று சாப்பிடத் தருவார்கள். சூசையப்பரோடு நமக்குள்ள முதல் தொடர்பு இதுதான்.

அதன் பிறகு நமது குருமடத்தில் செபமாலை, நவநாள்கள் என எல்லாவற்றிலும் மரியாளுக்குதான் முதலிடம். பக்கத்தில் எங்கேனும் கன்னியர் மடங்களுக்குச் செல்லும் போது முற்றத்துத் தோட்டத்தின் நடுவில் அழகிய சுரூபமாகத்தான் சூசையப்பரைப் பார்க்க முடியும். அங்கு அவர் மகிழ்ச்சியோடு இருப்பது போலத் தோன்றும். இதைத் தவிர சூசையப்பரை இப்படி ஏதாவது விழா நாட்களில் நினைத்துக்கொள்வதோடு சரி. 

ஆனால் இன்று நின்று யோசிக்கும் போது சூசையப்பர் என்னும் 'நேர்மையாளர்' நமக்கு எவ்வளவு பெரிய உந்து சக்தியாக இருக்கமுடியும் என்று தோன்றியது. அதுதான் இந்தக் கட்டுரை.

தத்தெடுத்தல் நற்செயல்தான் என்றாலும் எனக்குத் தெரிந்தமட்டில் ஒரு 'உடனடி' நல்ல உணர்வைத் தருவதில்லை. யாரோ யாரையோ தத்தெடுக்கிறார்கள் என்றால் யாரோ யாரையோ கைவிட்டிருக்கிறார்களே என்ற எண்ணமும் கலந்து விடுவதே காரணமாக இருக்காலாம். ஆனால் அனைத்தையும் கடந்து தத்தெடுத்தல் என்பது தன்னிலே ஒரு மிகப்பெரிய மனிதநேயத்தைக் கொண்டிருக்கின்றது.

சூசையப்பர் இயேசுவின் வளர்ப்புத்தந்தை. மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் மரியாள் தூய ஆவியினால் இயேசுவைக் கருத்தாங்கியிருக்கும் போது, சூசையப்பர் என்னும் நேர்மையாளரின் முன்பு மூன்று வாய்ப்புகள் இருந்தன. முதலாவது மரியாளைச் சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும். விளைவாக அவர் கல்லெறிந்து கொல்லப்படக்கூடும். அவரது 'நேர்மைத்தன்மைக்கு' இதனால் எந்தக் களங்கமும் நேராது. மாறாக சமூகத்தில் அவரது மதிப்பு கூடவே வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது தான் விரும்பியப் பெண்ணுக்கு கெடுதல் விளைவிக்காமல் மறைவாக விலகி சென்றுவிட வேண்டும். கண்காணாத தொலைவிற்கு. ஒரு ஏமாற்றத்தை கடந்து செல்ல எளியவழி அதுதான்.  சூசையப்பரும் அதையே செய்ய நினைத்தார். ஆனால் அவரை ஏதொவொன்று மிகவும் குழப்பியது.  அவர் மரியாளை நன்கு அறிவார். அவர் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவரது உள்ளுணர்வு சொல்கிறது. ஆனாலும் இந்தச் சூழ்நிலையில் மரியாளை முழு மனதோடு  எப்படி ஏற்றுக்கொள்வது?

உறைந்து போனார் சூசையப்பர். பேச்சு மூச்சற்று போனார் என்று கூட சொல்லலாம். கதியற்றவனுக்கு கதி இறைவன் தானே. அவரது கனவில் இறைவனின் குரலைக் கேட்டார். 'மரியாளை ஏற்றுக்கொள்ளத் தயங்க வேண்டாம். அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்'. அந்தக் குரல் மிகவும் தெளிவானக் குரல். மனிதன் தனித்திருக்கும் போது கேட்கும் குரல் சக்தி வாய்ந்தது. உறைந்து போனவர் உருகத் தொடங்கினார். உயிர் பெற்று எழுந்தார். HE BECAME UNSTOPABLE. தான் இனி என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யத் தொடங்கினார். 

மரியாளை ஏற்றுக்கொண்டார். அவரது திருவயிற்றின் கனியாகிய இயேசுவை ஏற்றுக்கொண்டார். 'மாணிக்கம் இங்கு பாட்சா' ஆகிய மொமன்ட். மரியா இனி என் உயிரின் பாதி. என் அன்பு மனைவி.  ஆம்! ஆனால் எல்லோரையும் போல திருமணம் செய்து, தானுண்டு, தன் குடும்பம் உண்டு என்று நாங்கள் வாழப்போவதில்லை.

இந்த உலகம் மீட்படைய வேண்டுமென்றால், இங்கு அன்பு தழைக்க வேண்டுமென்றால், மனிதன் சுயநலம் களைந்து, முற்சாற்பு எண்ணங்கள் களைந்து எல்லோரும் சமத்துவத்திலும், சகோதரத்துவத்திலும், சேவை மனப்பான்மையிலும் வளர வேண்டுமென்றால் இங்கு கிறிஸ்து பிறக்க வேண்டும்.  

இந்த இறைத்திட்டத்தில் நான் மரியாளின் பங்காளி. பாதுகாவலர். அதற்கெதிராக யார் வந்தாலும், ஏரோது என்னும் அரசனே வந்தாலும், எகிப்து நாட்டிற்கே தப்பியோட வேண்டியிருந்தாலும், மரியாள் என் மனைவி. இயேசு என் மகன். இருவரையும் நான் பாதுகாப்பேன்.  

பணி சிறப்பானதுதான். ஆனால் அதற்காக எந்த 'சிறப்புரிமையும்' கோரமுடியாது. அந்தப் பணித்திட்டத்தின் முழுவரைவு (Blueprint) எதுவும் தெரியாது. எல்லோரையும் போல கூலிக்கு அன்றாடம் உழைக்க வேண்டும். நோய் நொடி என்றால் கவனிக்க வேண்டும். அன்பு செய்ய வேண்டும். தன் பிள்ளை, தத்துப் பிள்ளை என்ற பேதம் ஏதுமின்றி தந்தை என்னும் நிலைக்கேற்ப முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவை அனைத்திலும் அசைக்க முடியாத அளவிற்கு ஸ்கோர் செய்தார் சூசையப்பர்.  

கலில் ஜிப்ரானின் புகழ்பெற்ற ஒரு கவிதை நினைவுக்கு வந்ததும் சாட் ஜிபிடி-யில்  தமிழ்பெயர்த்தேன்! 

உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல!

அவர்கள் 'வாழ்க்கை' தன்னைத் தேடும்

ஏக்கத்தின் மகன்களும் மகள்களும்!

அவர்கள் உங்களால் வருகின்றனர்;

ஆனால் உங்களிடமிருந்து அல்ல!

அவர்கள் உங்களுடன் இருந்தாலும்,

அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!

நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை அளிக்கலாம்;

ஆனால் உங்கள் எண்ணங்களை அல்ல!

ஏனெனில் அவர்களுக்கு அவர்களுடைய

சொந்த எண்ணங்கள் உள்ளன.

நீங்கள் அவர்களின் உடல்களுக்கு வீடு கொடுக்கலாம்;  

ஆனால் அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல!
அவர்களின் ஆன்மா நாளைய வீட்டில் வாழ்கிறது

உங்கள் கனவுகளிலும் கூட செல்ல முடியாத இடத்தில்!

ஆம். இயேசுவை ஏற்றுக்கொள்ளச் சொன்னக் கடவுள், இயேசுவின் பணிவாழ்வைக் குறித்தோ, சிலுவைச் சாவைக் குறித்தோ கனவிலும் சொல்லவில்லை. சூசையும் கேட்கவில்லை. அவர் பேசிய எந்தந் சொல்லும் விவிலியத்தில் இடம்பெறவில்லை. 'மனிதர்கள் பேசுவதே வீணானது. இதில் வீண்பேச்சு வேறு' என்று ஜெயகாந்தன் ஒரு புத்தகத்தில் சொல்கிறார். சூசை ஒரு செயல் முனிவர். கர்ம யோகி.

இயேசு கடவுளை 'அப்பா! தந்தாய்!' என அழைக்கக் கற்றுத்தந்ததிலிருந்தே சூசையப்பரின் சிறப்பினை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.  

மனைவி குழந்தை பெறும்போதே தாயாகி விடுகிறார். ஆனால் அவரது கணவர் அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மட்டும் தான் தந்தையாகிறார். 

அக்குழந்தையை தன் கரங்களில் ஏந்தி, பெயரிட்டு, தான் இன்னாரின் மகன் அல்லது மகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளும் படியான செயல்களைச் செய்து, வளர்த்து ஆளாக்கும் போதுதான் உண்மையில் தந்தை பிறக்கிறார். பெற்றெடுத்தல் இயல்பானது. தத்தெடுத்தல் மிகவும் புனிதமானது. இங்கு விரும்புதல், முடிவு செய்தல், பொறுப்பெடுத்தல் என்று நிறைய கடமைகள் இருக்கின்றன. பெற்றும் ஒருவர் தந்தை ஆகாமல் போகலாம். பெறாமலே ஒருவர் தந்தையாகலாம் சூசையப்பரைப் போல!!


செவ்வாய், 3 மார்ச், 2026

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

அவையை அலங்கரித்து அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களே! ஆர்வமுடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் அன்பு மகளிரே! ஆன்றோரே, சான்றோரே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தினை உரித்தாக்கிக் கொண்டு எனது உரையைத் தொடங்குகிறேன்!

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்!” கொன்றை வேந்தன் நூலில் தமிழ் பெரும்புலவர் ஒளவையார் பாடிய இவ்வரிகளே இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு!

பண்டைய தமிழகம் கல்வியைக் கண்ணெனக் கண்டது. அவ்வையாரைப் போலவே வெள்ளிவீதியார், வெண்ணிக்குயத்தியார், காக்கைப்பாடினியார், ஆண்டாள், அள்ளூர் நன்முல்லையார் போன்ற எண்ணற்றக் கவிதாயினிகளால் வண்ணத்தமிழ் வனப்பும், செழிப்பும் கொண்டது.

காலப்போக்கில் ஆரியர்களின் வரவால், மூடநம்பிக்கைகளில் முடங்கிப்போன நம் சமூகத்தில் பெண்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டது. “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற காலம் போய், “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்ற மடமைத் தனத்திற்குள் இவுலகம் தள்ளப்பட்டது.

கல்வியைக் கண்ணுக்கு ஒப்பிட்டார் அவ்வைப்பாட்டி. சூழ்ச்சியினால் கல்வியைக் கைவிட்ட நம் சமூகம் தன் அறிவுக் கண்ணை இழந்து அடிமைத்தனத்துக்குள் அகப்பட்டுக் கொண்டது.

அரசியல் அடிமைத்தனம்,  

ஆன்மீக அடிமைத்தனம்,  

சாதிய அடிமைத்தனம்,  

சடங்குகளின் அடிமைத்தனம்,

என்று கல்விச் சூரியனை இழந்த நம் சமூகத்தினை இருளின் சங்கிலிகள் சூழ்ந்து கொண்டன. பசியிலும், பஞ்சத்திலும் நாம் வீழ்ந்ததை விட, படிப்பின்றி நாம் வீழ்ந்ததே அதிகம் என்பதை உணர்ந்துகொண்ட விடிவெள்ளிகள் நம்மிடையே தோன்றினர்.

தமிழ்த்தாத்தா உ.வே. சுவாமிநாத அய்யர், மறைமலை அடிகள், முத்துலட்சுமி அம்மையார், தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி என்று எத்தனையோ விடிவெள்ளிகள் நம் இருண்ட வானத்தை வெளுக்கச் செய்தனர்.

கால்டுவெல், ஜி.யு. போப், வீரமாமுனிவர் போன்ற இறைப்பணியாளர்கள் இச்சமூகத்தின் அறிவுப் புதையலைத் கண்டெடுத்து அகில உலகமும் அறியச் செய்த அரும்பணியை ஆற்றினர்.

ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுகளை, சாதி, மத தீண்டாமைக் கொடுமைகளை, போக்குவரத்து, பொருளாதாரத் தடைகளை, இந்தி ஆதிக்க அரசியல் சூழ்ச்சிகளைக் கடந்து நாம் இன்று கல்வி வளர்ச்சியில் எட்டியிருக்கும் சாதனைகள் சாதாரணமானதல்ல!

எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடிக்கல்வி, பேரா. அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், உலகம் உங்கள் கையில், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் என்று எத்தனையோ அருமையானத் திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டினைக் கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்ற நம் அரசு எடுத்துவரும் முயற்சிகள் இந்தியாவிற்கே முன்உதாரணமாக இருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

கோயில் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி.  

“கூகுள் இல்லா ஊரிலே குடியிருக்க முடியாது” என்பது புதுமொழி. இணையதள உலகை அசைக்க முடியாத உச்ச நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை போன்ற எத்தனையோ தமிழர்கள் உலகெங்கும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு மிகவும் அடிப்படையானக் காரணம் எண்ணையும், எழுத்தையும் அவர்கள் கண்ணெனக் கொண்டது தான்.

இன்றும் தமிழுக்கு எதிராக, தமிழ்நாட்டிற்கு எதிராக எத்தனையோ சூழ்ச்சிகளை முயற்சித்துப் பார்க்கிறார்கள். இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் செலவிடப்படும் தொகையில் பத்தில் ஒரு பங்கைக் கூட தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்க மறுக்கிறார்கள். இங்கும் சிலர் “ஆடு, மாடு மேயுங்கள்! அரசு வேலை தருகிறேன்” என்று கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் அடிப்படைவாதக் கூட்டத்திற்கு கொடிபிடிக்கும் எட்டப்பன் வேலை பார்க்கிறார்கள்.

பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக நாம் இருக்கின்றோம். இந்நிலை இன்னும் தொடர வேண்டும். கல்வி என்னும் ஆயுதமேந்தி, இவ்வுலகை ஆளும் நல்ல தலைவர்கள் நம் மண்ணிலே உருவாக வேண்டும்.

கல்வியின் பொறுப்பை அரசின் கைகளில் மட்டுமே ஒப்படைக்காமல் நம் ஊர்களில் இருக்கும் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கவனிக்கவும், உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவற்றை உடனே சரிசெய்யவும் நமது பங்களிப்பைத் தர வேண்டும்.

வளமான எதிர்காலம் தரமானக் கல்வியால் மட்டுமே உருவாகும் என்று கூறி அமர்கிறேன்!

நன்றி வணக்கம்!