வெள்ளி, 20 நவம்பர், 2015

எல்லோருக்குமானது தனிமை - 1 (EVERYONE FEELS LONELINESS AT TIMES IN LIFE -1)

தனிமை உணர்வே மனிதனை நம்பிக்கை இழக்கச் செய்யும் மிகப்பெரியக் காரணியாகும். சில சமயங்களில் நம்மை யாருமே அன்பு செய்யவில்லையோ, நம்மைக் கவனிப்பார் யாருமில்லையோ என்று கழிவிரக்கப்படுகின்றோம். நீங்கள் தனிமையாக உணர, தனியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நல்ல மக்கள் கூட்டத்தின் மத்தியிலும் தனிமையாக உணர முடியும். எத்தனை பேர் உங்களைச் சுற்றி இருக்கின்றனர் என்பதைப் பொறுத்தல்ல. அவர்களுடனான உங்கள் உறவே உங்கள் தனிமை உணர்வைத் தீர்மானிக்கின்றன.  

நீங்கள் நிறைய பணம் வைத்திருந்தும் தனிமையாக உணர முடியுமா? நம்மைப் போல் இல்லாமல் பணக்காரர்கள் ரொம்பப் பாவம். அவர்கள் தனிமை நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள். நீங்கள் மிகவும் அழகாக இருந்தும் தனிமையை உணர முடியுமா? தற்கொலை செய்துகொண்ட மர்லின் மன்றோ முதல் சில்க் சுமிதா வரையிலும் கேட்டுப்பாருங்கள். திருமணமாகியும் தனிமை வருமா? தனிமைக்குப் பயந்து திருமணமாகி, பின்னர் அதே தனிமை நோயினால் விவாகரத்து வாங்கும் தம்பதியினரைக் கேட்டுப் பாருங்கள்.

எல்லோரும் தங்கள் வாழ்வில் எப்போதேனும் நிச்சயமாகத் தனிமை நோய்க்குட்படுகிறார்கள். அதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பது போலவே, குணப்படுத்தும் காரணிகளும் பல இருக்கின்றன. சில தருணங்களில் தனிமையை நாமே வருவித்துக்கொள்கிறோம். தவிர்க்க முடியாத இன்னும் சில தருணங்கள் நம்மைத் தனிமைப்படுத்துகின்றன. இத்தகைய தனிமை நோயைத்தான் திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலே அனுபவிக்கிறார். சாவை எதிர்பார்க்கும் முதியவர் பவுல் தன் இளைய நண்பர் திமோத்திக்கு இரண்டாவது கடிதத்தை எழுதுகிறார். தனிமைச் சிறையிலிருக்கும் தன்னை வந்து பார்க்குமாறு ஏக்கத்தோடு எழுதுகிறார் பவுல்.

தனிமை நோய்க்கான காரணங்களைப் பார்ப்போமா?

1. மாற்றம்

வாழ்வின் பருவ மாற்றம் சரியாக ஏற்றுக் கொள்ளப்படாத வரையிலும் தனிமை தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. பல்வேறு நிலை மாற்றங்களையும், பருவ மாற்றங்களையும் உள்ளடக்கிய தொகுப்பே ஒரு முழு மனித வாழ்வாகிறது. எந்த மாற்றங்களும், தனிமையையும் சேர்த்தே கொண்டு வருகிறது. தாயின் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப் படுவதைத்தான் பிறப்பு என்று கொண்டாடுகிறோம். வாரி அணைத்துத் தடவிக்கொடுக்கும் வரையிலும் குழந்தை அழுதுகொண்டுதானிருக்கிறது. பள்ளி வாழ்வின் முதல் நாளில் தனிமைப்படுத்தப்பட்டதன் பயத்தை இப்போதும் அடிவயிற்றில் கை வைத்துப் பார்த்தால் உணர முடிகிறது. வேலையில் சேர்வது தனிமை. வேலையை மாற்றுவதும் தனிமை. வேலை செய்தது போதும் என்று ஓய்வெடுக்கச் சொன்னாலும் தனிமை. போராட்டமெல்லாம் போதும் இனி ஓய்ந்து இளைப்பாறு என்று மரணப்பெண் தழுவினாலும் தனிமை. எல்லோருக்குமானது தனிமை.

வயது முதிர்ச்சியென்னும் பருவ மாற்றம் தானாகவே கொண்டு வரும் தனிமை போதாதென்று, பெற்றெடுத்தப் பிள்ளைகளே கவனியாது புறக்கணிக்கும் போது, அந்த இருபக்கத் தனிமை என்பது சுமக்கவே முடியாத சுமையாகிப் போகிறது. முதியோர் இல்லங்களிலிருக்கும் பெரியவர்களில் எழுபது சதவிகிதத்தினருக்கு ஒரு பார்வையாளர் கூட வருவதில்லை. காலச்சக்கரம் சுழலும் போது இதன் வலியை எல்லோரும் புரிந்து கொள்வோம். ஏனெனில் எல்லோருக்குமானது தனிமை.


                                                                                   தனிமை நீங்கும்....கட்டுரை தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக