திங்கள், 23 நவம்பர், 2015

எல்லோருக்குமானது தனிமை -2 (EVERYONE FEELS LONELINESS AT TIMES IN LIFE -2 )

கடந்த கட்டுரையில் பார்த்தது போல தனிமைக்கு முதன்மைக் காரணம் சரியாக ஏற்றுக்கொள்ளப்படாத வாழ்க்கை மாற்றமே ஆகும். பவுல் தன் வாழ்வின் கடைசி மாற்றத்தின் காலத்தில் இருந்தார். அவருடைய காலம் நீரோ மன்னனின் கையிலோ, வயது முதிர்ச்சியிலோ அல்லது நோயிலோ முடிவுற போகிறது என்பதை உணர்ந்த பவுல், தனிமையை அனுபவிக்கிறார். 'ஏனெனில், நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கின்றேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்.' (2திமோ 4:7). 

2. பிரிவு

இரண்டாவது காரணம் பிரிவு. நண்பர்கள், மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தொழில் காரணமாகவோ, வாழ்க்கைச் சூழ்நிலையாலோ பிரிந்திருக்க வேண்டிய நேரத்தில் தனிமை உணர்வு ஏற்படுவது இயல்பே. 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?' என்ற பாடலை வெளியூரிலிருந்து கேட்டால் தனி இன்பம் தான். மனிதர்கள் நலமோடு வாழ மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். உறவுகளோடு உறவாடுவதும், நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் அத்தியாவசியத் தேவைகளே! 

பவுல் சிறையிலிருந்து எழுதுகிறார், 'விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய்' (2திமோ 4:9). பவுல் ஒரு மக்கள் விரும்பி. எப்போதும் அவரோடு நண்பர்கள் இருந்தனர். அவரோடு பயணித்தனர். திருத்தூதுப் பயணத்தில் அவர் தனியாக எங்கும் சென்றதே இல்லை. செல்லுமிடமெல்லாம் அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தனர். ஆனால் வாழ்வின் கடைசி காலத்தில் அவரோடு யாருமில்லை. இன்று போல 'சாப்பாட்டுக் குழு', 'லவ்லி ஃப்ரெண்டஸ்', 'பாசக்காரங்க' போன்ற வாட்ஸ்அப் குழுக்களுக்கான வசதிகளும் இல்லை. 'நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும், நூல்களையும், குறிப்பாக தோற்சுருளையும் எடுத்துவா' (2திமோ 4:13). 'குளிர் காலத்திற்கு முன் வர முழு முயற்சி செய்' . (2திமோ 4:13). பவுலின் இதயம் உயிர்த்த இயேசுவை அறிவிப்பதற்காகவே துடித்தது. அந்த இதயம் உணர்ந்த கனத்த தனிமையை இவ்வரிகள் படம் பிடித்துக் காண்பிக்கின்றன. தனிமையைச் சூடேற்றும் குளிர்காலம், அதைத் தணிக்கத் தடித்த போர்வை, கால அட்டவணைக்குட்படாத தூக்கம், அவ்வப்போது புத்தகம் படிப்பது, அறையின் மேல் விட்டத்தை வெறித்துப் பார்ப்பது, பிரிவு தருகின்ற தனிமையின் அங்க அடையாளங்கள். 

'விரைவில் வர முழு முயற்சி செய்' என்ற வார்த்தைகள் வெறும் அழைப்பு மட்டுமல்ல. அது ஒரு ஏக்கம். நீ வரும் வரை நான் இருப்பேனா என்றே தெரியவில்லை. சீக்கிரம் வா! உன்னைப் பார்க்க வேண்டும் என்ற இந்த ஏக்கம் இன்றும் நம்மில் எதிரொலிக்கிறது. வெளிநாடுகளில் வேலை செய்யும் பிள்ளைகளுடைய தாய், தகப்பனின் இந்த ஏக்கம், அந்திநேர அலைப்பேசி அழைப்புகளில் எதிரொலிக்கிறது. நம்மை விரும்பும் யாரிடமாவது நீண்ட நாள்களாக தொடர்பே இல்லாமல் இருக்கிறோமா? ஒரு சிறிய பாராட்டைத் தருவதற்கும் தாமதிக்கிறோமா? விரைவாக செய்துவிடுவோம். அந்த நபரோ அல்லது நாமோ நிரந்தரமானத் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் செல்வதற்கு முன்.

3. புரிதலின்மை

உறவுகளிடையே சரியான புரிதலின்மையும் தனிமைக்குத் தீனி போடும் இன்னொரு காரணியாம். உங்கள் திறமைக்கு ஒரு சவால் என்று தோழி ஒருவரிடமிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி. H0W 0UR M1ND C4N D0 AM4Z1NG 7H1NG5 என்று தொடங்கி ஒரு ஏழெட்டு வரிகளுக்குச் செல்கிறது அந்த குறுஞ்செய்தி. சந்தேகத்திற்கிடமின்றி உங்களால் இந்த ஆங்கில வரியை வாசிக்க முடிகிறது தானே. இது தான் நமது மூளையின் வலிமை. கறாரான ஆங்கில ஆசிரியரின் பார்வையில் நிறைய எழுத்துப் பிழைகள் இவ்வரியில் இருப்பினும், நம்மால் இதைப் படித்து புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இந்த வார்த்தைகள் நமக்குப் பழக்கப்பட்டவை. இப்படி இருந்தால் இது இந்த வார்த்தைதான் என்ற முன் முடிவிற்குச் சென்றுவிடுகிறது நமது அறிவு. இது மிகவும் பயனுள்ள ஒரு செயல்பாடாக இருந்தாலும், எப்படி எழுத்துப் பிழையுள்ள தவறை, மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறோமோ, அது போலவே மிகச் சரியான ஒன்றை, தவறாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. நமது சமூக உரையாடல்களில் அடிக்கடி நிகழும் புரிதலின்மைக்குக் காரணம் நமது பழக்கப்பட்ட பார்வைகளும், அதனால் தானாக நிகழும் முன்முடிவுகளுமே!

அலுவலகத்தில் எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது. திடீரென்று ஒருநாள் எல்லாம் மாறிவிடுகிறது. உங்களிடம் உங்கள் மேலதிகாரி நட்புடன் பழகுகிறார் என்ற சாதாரண நிகழ்வானது, நீங்கள் மற்ற ஊழியர்களைப் பற்றி மேலதிகாரியிடம் போட்டுவிடுகிறீர்கள் என்று ஒரு பெரிய மனசுக் காரரால் கிளப்பி விடப்படுகிறது. உங்களிடம் உங்கள் அலுவலக நண்பர்கள் கூட கொஞ்சம் 'கவனமாகவே' நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். நீங்கள் மட்டும் அழைக்கப்படாத மாலைநேர விருந்துகள் அடிக்கடி நடக்கின்றன. அவர்களது போதை நேர பேச்சு முழுவதும் உங்களைப் பற்றியும், உங்கள் கடந்தகாலத் தவறுகள் பற்றியும், நீங்கள் மேலதிகாரியின் நம்பிக்கைக்குரியவராக இருப்பதற்கான காரண, காரியங்கள் பற்றியதாகவுமே இருக்கின்றன. நீங்கள் தனித்துவிடப்படுகிறீர்கள். 

நமது மூளை பழக்கப்பட்ட செயல்களை விளக்குவதற்கு நேரம் எடுத்துக்கொள்வதில்லை. பார்த்த மாத்திரத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றது. இவை பல நேரங்களில் தவறாகவே இருப்பதால் பிறரைப் பற்றிய தவறான புரிதலுக்கு மிக எளிதாக வந்துவிடுகிறோம். பிறரது செயல்பாடுகள் நமக்கு பயத்தை வருவிக்கின்றன. நமது முன்னேற்றத்திற்கு அது முட்டுக்கட்டையாவது கூட நமக்கு தெரிவதில்லை. 

'கன்னாவாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான்' (2திமோ 4:14) என்று பவுலடியார் குறிப்பிடுகிறார். எத்தகையத் தீமைகள் என்ற குறிப்புகளின்மையால், நம்மால் யூகிக்க மட்டும்தான் முடிகிறது. பவுலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்திருக்கலாம். அவரது நற்செய்தி அறிவிப்புப் பணியில் முட்டுக்கட்டையாக இருந்திருக்கலாம். மக்களை அவருக்கு எதிராக திருப்பிவிட்டிருக்கலாம். இதனால் ஏற்கனவே தனிமைச் சிறையிலிருக்கும் பவுலடியாருக்கு இதுவும் ஒரு மனப்பாரமாகிப் போகிறது. குடும்பங்களை, நண்பர்களை, சொந்த ஊரை, அன்னை ஊட்டும் உணவை எல்லாம் துறந்து, நற்செய்திக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் குருக்களுக்கும், துறவிகளுக்கும் எதிராக பங்குகளில் கிளப்பிவிடப்படும் கதைகளுக்கு ஒரு அளவே இருப்பதில்லை. புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக, தவறாக புரிந்து கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்வது எளிதாக இருக்கிறது. மனம் விட்டு பேசி, புரிதலை சரி செய்வது கடினமாக இருக்கிறது. ஈகோ அதனை ஒத்துக்கொள்வதில்லை. 

பிறரை தனிமைப் படுத்தாமலும், நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்ளாமலும் இருக்க உறவுகளில் புரிதல் அவசியம். சிலரை புரிந்துகொள்ளவே முடியவில்லையென்றாலும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தவறாக புரிந்துகொள்ள வேண்டாமே.!

தனிமை நீங்கும்.......கட்டுரை தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக