மீண்டும் தனிமையைப் பற்றி எழுதுவது அயற்சியாக இருக்கின்றது. இருப்பினும் தனிமைக்கு ஒரு முடிவுகட்டியே ஆக வேண்டுமல்லவா? தனிமைக்கு மாற்றம், பிரிவு, புரிதலின்மை என்ற மூன்று காரணங்களோடு கடைசியாக ஒன்று புறக்கணிப்பு.
4. புறக்கணிப்பு
இதனை விளக்குவது எனக்கு கடினமாகப் படுகிறது. மனது சொல்ல நினைப்பதை இந்த வார்த்தை அப்படியே சொல்லிவிடும் என்று நான் நம்பவில்லை. ஒரு சிலரை நாம் நம் வாழ்வில் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதுகிறோம். அது ஒருதலைக் காதலாக இருக்கலாம். அல்லது ஒரு சிலர் நம்மோடு நீண்ட காலமாக நல்ல நட்போடு பழகுகிறார்கள். பரஸ்பர உறவாக இருக்கலாம். மொத்தத்தில் நல்ல பாசத்தில் ஊறித்திளைத்து, ஒருவர் மற்றவருக்கு ஒரு சமூக அடையாளமாக இருக்கும் அளவு முக்கியமான ஒரு உறவு. ஏதோ ஒரு சிறு காரணத்தால் உங்கள் உறவில் கடுகு விதையினும் சிறியதாக ஒரு விரிசல் ஏற்படுகிறது. நாளைடைவில் ஓர் நாள் திரும்பிப் பார்க்கும் போது எல்லாம் கடந்த காலமாகிப் போயிருக்கிறது. உறவு புதுப்பிக்க இயலாத வண்ணம் முடிந்து போயிருக்கிறது. எதிர்காலத்திற்கான எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் நண்பரை நீங்கள் முழுவதுமாய் இழந்து இப்போது தனித்துவிடப்பட்டிருக்கிறீர்கள். உங்களைத் தவிர யாராலும் உணர்ந்து கொள்ள முடியாத இந்த வலியை, எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியாமல் உங்கள் இதயம் கனத்துப் போய் கிடக்கிறது.
சில துரோகங்கள் திட்டமிடப் படாமலே நடந்தேறிவிடுகின்றன ஒரு கொடிய விபத்தைப் போல. இருப்பினும் இரக்கமற்றதாய் இருக்கின்றன அதன் வலிகள். அதற்குப் பின்னரான உங்கள் காலம் தனிமையின் கனத்தைச் சுமந்தவாறே பயணிக்கின்றன. கூறப்பட்ட நான்கு காரணங்களிலும் நெருங்கிய நட்பு ஒன்றால் மிக எளிதாகப் புறக்கணிக்கப்படுதலே கனமானதாகவும், வலி நிறைந்ததாகவும், உங்கள் செயல்பாடுகளை முடக்கிப் போடுவதாகவும் அமைகின்றன.
உலகப் பிரச்சனைகளைக் கூடத் தீர்த்து வைப்பதில் கையாளப்படும் முக்கிய ஆயுதங்கள் இரண்டு. ஒன்று போர். இன்னொன்று பேச்சு வார்த்தை. ஒரு புறக்கணிப்பை விட கருணை மிக்கதாய் இருந்தாலும் அவனோடு போர் புரிய வேண்டாம். உங்கள் நண்பன் மிக எளியவன். மேலும் உங்களது பிரச்சனை ஒரு போருக்கான காரணத்தைக் கொண்டிருக்கவில்லை. சிறந்த வழி பேச்சுவார்த்தைதான். பேசிப் பாருங்களேன்!
தனிமையைக் கையாள்வோம்!
நிறைய பாதிப்புகளைத் தனிமை ஏற்படுத்தவில்லையென்றால் நாம் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் நீங்கள் அல்லாத ஒன்றாக அது உங்களை மாற்றிவிடுகிறதென்றால் உடனடியாக செயல்பட வேண்டும். தனிமை தனது கொடிய ஆக்டோபஸ் கரங்களால் உங்களைச் செயல்பட விடாமல் சிறைபிடிக்குமுன் அதன் விலங்குகளை உடைத்து நீங்கள் விடுதலைக்; காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
தனிமை நம்மை பல கரங்களால் பிடித்து வைக்கிறது. வேலை வேலை என்று வேறு எதையும் பற்றி கவலைப் படாதவர்கள் ஒரு ரகம். இவர்கள் சிறிது காலத்திலேயே கடுமையான உடல் உழைப்பால் களைப்பும், மனச் சோர்வுமடைகிறார்கள். மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முயற்சிப்போர் இன்னும் சிலர். நமக்குள்ளிருந்து உருவாகும் ஒன்றை எந்த சந்தையிலும், எந்த விலையுயர்ந்த பொருட்களிலும் வாங்க முடியாது என்பதை உணர்ந்து ஏமாற்றமடைகிறார்கள். இன்னும் சிலர் எதையுமே செய்யாமல் உண்பதும், உறங்குவதுமாக தங்களுக்குள் புதைந்திருக்கும் அபரிமிதமான ஆற்றலைக் கண்டுகொள்ளாமல், தங்களது வாழ்வை வீணாக்குகிறார்கள். இவையெல்லாவற்றிலும் கொடியது சிலர் குடிப்பழக்கத்திற்கும், ஒழுக்கமற்ற வாழ்விற்கும் தங்களைக் கையளிப்பது. மரணத்தை விடத் துயரமானது வாழும் போதே மரணிப்பது.
தனிமை நோயிலிருக்கும் ஒருவர் முதலில் இழப்பது வாழ்வின் மீதான நம்பிக்கையை. அன்பும், அரவணைப்பும் அந்த நபருக்குத் தேவைப்படுகிறது. இன்றைய அறிவியல் கடவுள் துகளைக் கண்டடைந்துவிட்டதாக சந்தோஷப்படுகிறது. உலகின் மிக மிகத் தாமதமானக் கண்டுபிடிப்பு இதுவாகத்தான் இருக்கும். கடவுளின் உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்ட கடவுளின் துகள் தான் நீயும், நானும். உன்னைப் புதிதாகப் படை. உனது உலகம் உன்னில் பருகட்டும் நாளைய வாழ்வுக்கான நம்பிக்கையை!
தனிமையைத் துரத்த சில வழிகள்
1. காற்றுள்ள போதே
எந்த காரணத்தாலும் வந்திருக்கலாம் உங்கள் தனிமை. எதுவும் நிரந்தரமாக உங்களைத் தனிமைப் படுத்த முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் எந்த காரணமுமின்றியும் தனிமையாய் இருக்க நீங்கள் பழகிவிட்டிருப்பீர்கள். ஆகவே காரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், உங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை வலிந்து ஏற்படுத்துங்கள். எதுவுமே செய்யமலிருக்கத் தூண்டும் சோதனையைக் குறித்து கவனமாயிருங்கள். 'சும்மா இரு! சும்மா இரு!' என்று சொல்லும் தனிமையின் குரலைக் கட்டாயமாகத் தள்ளி போடுங்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல கிடைத்த தனிமையை (நேரத்தை), அருமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் ஏதேனும் ஒரு பயனுள்ள ஆற்றலை முழுமையாக, எந்த இடைஞ்சலுமின்றி, செயல்படுத்துங்கள். புத்தகம் வாசிப்பது, இசை ஆர்வமுள்ளவர்கள் அதில் கவனம் செலுத்துவது, புதிய இடங்களுக்குச் செல்வது, புதிய மக்களைச் சந்திப்பது போன்றவை சில பயனுள்ள பொழுது ஆக்கங்கள்.
பெரும்பாலும் தனிமை நோயால் அதிகம் பாதிக்ப்பட்டிருப்போர் தங்களை கவனிக்கத் தவறுகிறார்கள். சரியான நேரத்தில் சரியான உணவு, அன்றாட உடற்பயிற்சி, சரியான உறக்கம் போன்றவற்றை அவர்கள் தவிர்க்கிறார்கள். ஆனால் பவுலடியார் தனிமையில் வாடிய போதும் தனது நண்பருக்கு கடிதம் எழுதுகிறார்;. போர்வையையும், புத்தகத்தையும் எடுத்து வருமாறு கூறுகிறார். போர்வை உடலின் மீதான அக்கறை, புத்தகம் மனத்தின் மீதான அக்கறை. முப்பது வருட மறைபரப்புப் பணிக்கான பரிசு கடைசி காலத்தில் சிறை வாழ்வு, நண்பர்களின் எதிர்ப்பு, புறக்கணிப்பு என்பதைப் பற்றி அழுது வடியாமல் தான் செய்ய வேண்டியதைச் செய்கிறார். நமக்கு கிடைத்தது புதிய ஏற்பாட்டில் ஒரு புத்தகம். இதுதான் காற்றுள்ள போதே தூற்றுவது. செயல்பாட்டிற்கு அதிகம் வாய்ப்பில்லை என்று புலம்பும் அருட்பணியாளர்கள், புதிய செயல்பாடுகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தைப் பவுலடியாரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
2. புன்னகை பழகுங்கள் நண்பர்களே!
'நான் முதன் முறையாக வழக்காடிய போது எவரும் என் பக்கமிருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றார்கள். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக' (2தெச 4:16) என்று பவுலடியார் கூறுகிறார். தனிமை உங்கள் எளிய மனத்தைக் கடினமாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பூக்கூடையில் யாரும் கறி வாங்குவதில்லை. வெறுப்பால் உங்கள் இதயத்தை நிரப்பிவிடாதீர்கள். எப்போதும் சலிப்பாகவும், கசப்பாகவும் பேசிக்கொண்டிருந்தால் உங்களோடு இருப்பவர்களும் விரைவில் ஓட்டமெடுத்துவிடுவார்கள். வலிகளில்லாத வாழ்க்கையில்லை. வைரமுத்து சொல்வார்: 'எனக்கு எதிரிகளில்லை. அவர்கள் தூரத்து நண்பர்களென்று'. உங்களைப் புறக்கணிப்பவர்களை தூரத்து நண்பர்களாக்குங்கள். அவர்களுக்கு உங்கள் நேரத்தைச் செலவழிக்காதீர்கள். பக்கத்துக் கதவில் உங்கள் அன்பிற்காக ஒரு உள்ளம் காத்திருக்கலாம். புன்னகை பழகுங்கள் நண்பர்களே!
3. செபம் என்னும் ஆயுதம்
'நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்' (யோவான் 14:18) என்பது நம் தலைவரின் வாக்குறுதி. 'தனிமையில் இனி நான் இல்லை. தலைவன் இருக்கின்றான்' என்ற பாடல் நான் அடிக்கடி கேட்கும் ஒரு பாடல். ஆடம்பரம் எதுவும் தெரியாத ஒரு எளிய இளம் அருட்பணியாளரை எனக்குத் தெரியும். செய்வதற்கென்று எதுமே இல்லாதது போல உணர்கிறேன். நான் என்ன செய்வது என்று ஒரு முறை அவரிடம் கேட்டேன். சிறப்பான பதில் எதையும் எதிர்பார்க்காமல், விளையாட்டுத் தனமாகத்தான் கேட்டேன். அவர் சொன்னார்: ' செபம் செய் தம்பி!' என்று. பங்குத் தளங்களுக்குச் சென்ற பின் நீயே ஆசைப்பட்டாலும் செபம் செய்வதற்கு சரியான நேரமும், தேவையான தனிமையும் கிடைப்பதில்லை. ஆகவே கிடைக்கும் நேரத்தில் செபம் செய்யக் கற்றுக் கொள் என்றார். ஒவ்வொரு நிகழ்வையும் கவனமாக உற்று நோக்கினால் கடவுள் பேசுவதைத் தெளிவாகக் கேட்கலாம். ஏனென்றால் 'கடவுள் நம்மோடு' என்பதுதான் இம்மானுவேல் என்ற நம் தலைவரின் பெயராம். தனிமையைத் துரத்தும் தலைச் சிறந்த ஆயுதம் செபம் தான். உங்கள் தோல்வியை, வலிகளை இதயத்தோடு, இதயம் பேசுவது போல் கடவுளிடம் பேசுங்கள். செபம் என்னும் ஆயுதம் கொண்டு தனிமை என்னும் பேயை விரட்டுங்கள்.
4. உங்களுக்குள்ளிருந்து வெளியேறுங்கள்
உங்களை விடவும் பெரிய ஏமாற்றங்களையும், துன்பங்களையும் அநியாயமாக அனுபவித்து வருபவர்கள் உங்கள் அருகாமையிலேயே இருக்கலாம். உங்களது வாழ்வைப் பற்றி எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உங்கள் பெற்றோராகக் கூட இருக்கலாம். அவர்களது கதைகளைக் கேட்டால் உங்களது காரணங்களெல்லாம் ஒன்றுமேயில்லாததாகிவிடும். உங்களுக்குள்ளேயே புதைந்துவிடாமல், பிறருக்காக உயிர்த்தெழுங்கள்.
'கோரி டென் பூம்' என்பவர் ஆம்ஸ்டர்டம் என்னும் நெதர்லாந்து (டச்சு) நாட்டின் தலைநகரில் பிறந்தவர். எழுத்தாளர், சமூக சேவகி, என்று பன்முக ஆளுமை கொண்ட பெண்மணி என்றாலும் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் இனப்படுகொலையிலிருந்து பல யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றியவர் என்பதற்காகவே மிகவும் அறியப்படுகிறார். அவரைப் புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வினை 'புகலிடம்' (The Hiding Place) என்னும் புத்தகத்தில் பதிவு செய்கிறார். இளவயதில் இவரை எட்டிப்பார்க்கிறது காதல். தலைகீழாகக் காதலிக்கிறார்கள். திடீரென்று அவர்களுக்குள் ஒரு பிரிவு. சிறிது காலத்திலேயே அவரது நெருங்கியத் தோழியுடன் அவரது காதலருக்குத் திருமணம் என்னும் செய்தி இவரது செவிகளை எட்டுகிறது. புறக்கணிப்பின் உச்சத்தில் உடைந்து போய்விடுகிறார் கோரி. அப்போது அவரது தந்தையின் ஞானமிகுந்த அறிவுரை அவரைக் காப்பாற்றுகிறது. 'கோரி! உனது அன்பிற்கான வழியானது இப்போது அடைக்கப்பட்டுவிட்டது. இதனை உனக்குள் நீ புதைத்துவிடாலம். அது உன்னையே தின்று விடும். அல்லது மானுட சமூகத்திற்கானச் சேவையில் உனது அன்பை நீ அர்ப்பணிக்கலாம் என்றார். கோரி இரண்டாவது வழியைத் தேர்வு செய்கிறார்.
விவிலியத்தை தனது வாழ்வின் மையமாக கொண்டு செயல்பட்ட இந்த அம்மையார், சிறப்பாக 'மன்னிப்பு' என்னும் கோட்பாட்டினை முதன்மையாகப் பரப்புகிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சமூகங்களிடையே இணைப்பை ஏற்படுத்தியச் சேவைக்காக உலகின் பல நாடுகளிலும் உயர்ந்த விருதுகளைப் பெற்று அமெரிக்காவில் தனது நிறைந்த வயதில் இறைவனில் அமைதி கண்டார். இத்தகைய பெருவாழ்வு வாழ்ந்தோரின் கதைகளை வாசிப்தே ஒரு உற்சாகம் தரும் நன் மருந்தாகிறது.
5. இயேசுவில் இணைவோம்
வாழ்வில் எப்போதும் யாரையும் தனிமைப்படுத்தாமல் சமூகத்தில் பாலங்களை ஏற்படுத்தியவர்தான் நம் ஆண்டவர் இயேசு. தனிமையின் அனைத்து வலிகளையும் தனது வாழ்வில் அறிந்தவர். 'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்' (யோவான் 11:16) என்ற சீடரும், 'எல்லோரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும், நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்' (மத்தேயு 26:34) என்றவரும், இயேசுவைப் பிடிக்க வந்த காவலர்கள் முன்னிலையில் 'ஆடையின்றி தப்பியோடியதை' (மாற்கு 14:52) விவிலியம் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. தனிமையில் அவதிப்படும் நண்பர்களுக்கு விவிலியம் ஒரு அற்புதமான நண்பனாக இருக்கமுடியும். குறிப்பாக திருப்பாடல்கள், யோபு புத்தகம், மற்றும் பிற இறைவாக்கினர்களின் புத்தகங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனித அனுபவங்களின் அடிப்படை குணங்கள் எதுவும் மாறிவிடவில்லை என்பதை நமக்குச் சுட்டிக்காட்டி நமது பார்வைகளை விரிவாக்குகின்றன. இன்னும் ஆழமான, அற்புதமான, ஒரு பகுதி இயேசுவின் பாடுகளை ஒட்டிய விவிவலியப் பகுதிகள். ஒவ்வொரு நற்செய்தியின் கடைசி நான்கு அல்லது ஐந்து பிரிவுகளில் இயேசுவின் சிலுவைப் பாடுகளை வாசித்து தியானிப்பதும், நமது துன்பங்களை இயேசுவின் பாடுகளோடு தியானிப்பதும் நம்மை உயிர்ப்பை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. இயேசுவைக் காட்டிக்கொடுத்தல், தலைமைச் சங்கத்தின் முன் நிறுத்துதல், பிலாத்துவிடம் கொண்டு செல்லுதல், படைவீரர்கள் ஏளனம் செய்தல், சிலுவையில் அறைதல், உயிர்விடுதல் எதிலுமே இயேசு தனது இயல்பை மாற்றிக்கொள்ள வில்லை. அவரோடு பயணித்துப் பார்த்தால் அவரது இதயம் உணர்ந்த தனிமையின் வலியானது, அவரது உடல்வலியைக் காட்டிலும் அதிகமாக அவரை வருத்தியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கையறு நிலையிலும் அவர் தனக்காக அழ வேண்டாம் என்கிறார். இன்றே வான்வீட்டில் என்னோடு இருப்பாய் என்று கள்வர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார். தந்தையே இவர்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை. எனவே இவர்களை மன்னியும் என்று தன்னை சிலுவையில் அறைந்தவர்களையே மன்னிக்கிறார். தனிமையில் நாம் நம்மைத் தொலைத்துவிடாமலிருக்க, சூரியனிடமிருந்து ஒளிபெரும் நிலவு போல, இயேசுவோடு உடனிருந்து, அவரது ஒளியை பெற்று பிறருக்கும் வழிகாட்டுவோம்.
நன்றி!
(தனிமை பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரானது ரிக் வாரன் (Rick Warren)அவர்கள் எழுதிய 'வாழ்வின் கடினமானக் கேள்விகளுக்கு கடவுளின் பதில்' (God's Answers to Life’s Difficult Questions) என்னும் ஆங்கிலப் புத்தகம் வழங்கிய உள்ளுணர்விலிருந்து எழுதப்பட்டது. இப்புத்தகம் எழுப்பும் இன்னும் பல கேள்விகளோடும், பதில்களோடும் தொடர்ந்து சில கட்டுரைகளை எழுதலாம் என்று இருக்கின்றேன். உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக