செவ்வாய், 8 டிசம்பர், 2015

கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பு யூபிலி ஆண்டுகள் (Jubilee Year of Mercy -1)

(அன்பு நண்பர்களே! காலம் கருதியும், நிகழ்வின் முக்கியத்துவம் கருதியும், கீழ்வரும் இந்தக் கட்டுரையானது முழுக்க முழுக்க இணையதளங்களிலும், வத்திக்கான் வானொலியின் செய்திகளிலிருந்தும் எடுத்து பதிவிடப்பட்டுள்ளது.-நன்றி)
ஒரு சிறிய 'ஃபளாஷ் பேக்':
பழங்கால யூத மரபில் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்டது. இஸ்ரேல் மக்கள் அனைவர் மத்தியிலும் சமத்துவத்தை நிலைநாட்டவும், தங்களின் சொத்துக்களையும், ஏன் தனிப்பட்ட சுதந்திரத்தையும் இழந்தவர்கள் மீண்டும் அதைப் பெறவும், அடிமைகளும் கைதிகளும் விடுதலை பெறவும் இவ்வாண்டு கொண்டாடப்பட்டது.
கத்தோலிக்கத்தில் யூபிலி ஆண்டு எழுநூறு வருட வரலாற்றைக் கொண்டது. திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், 1300ம் ஆண்டில் யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்தார். நூறு ஆண்டுக்கு ஒருமுறை இது கொண்டாடப்படுமாறு இவர் விரும்பினார். ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த ஆண்டைச் சிறப்பிக்க வேண்டும் என்று சொல்லி, 1475ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி ஆண்டு கொண்டாடப்பட்டு வந்தது. இதுவரை 26 சாதாரண யூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. 2000மாம் ஆண்டில் கடைசியாக இது நிகழ்ந்துள்ளது.
ஆயினும், 16ம் நூற்றாண்டில், சில குறிப்பிட்ட நிகழ்வை வைத்து சிறப்பு யூபிலி ஆண்டு அறிவிக்கும் பழக்கம் ஆரம்பமானது. மீட்பின் 1950ம் ஆண்டை முன்னிட்டு திருத்தந்தை 2ம் ஜான் பால் 1983ம் ஆண்டில் சிறப்பு யூபிலி ஆண்டை அறிவித்தார். இதே காரணத்திற்காக 1933ம் ஆண்டு சனவரி 6ம் தேதி திருத்தந்தை 11ம் பயஸ் அறிவித்தார். 20ம் நூற்றாண்டில் இரு சிறப்பு யூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. 21ம் நூற்றாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை அறிவித்துள்ளார்.
சிறப்பு யூபிலி ஆண்டுகள் சாதாரண யூபிலி ஆண்டுகளைப் பாதிப்பதில்லை. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும் சேர்த்து இதுவரை கத்தோலிக்கத் திருஅவையில் 65 சிறப்பு யூபிலி ஆண்டுகள் இடம்பெற்றுள்ளன.
முதல் சிறப்பு யூபிலி ஆண்டு 1585ம் ஆண்டு மே 25ம் தேதி திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ்(1585-1590) அவர்களால் அறிவிக்கப்பட்டது. இவர் தனது பாப்பிறைப் பணியின் ஆரம்பமாக இதனை அறிவித்தார். கிறிஸ்தவர்கள் மத்தியில் அமைதியை ஊக்குவிக்கவும், திருஅவைத் தலைவர்களின் சிறப்புத் தேவைகளுக்குப் பதிலளிக்கவும், பொதுச் சங்கத்தின் வெற்றி, துருக்கிக்கு எதிரான மோதல், அன்னையின் அமல உற்பவக் கோட்பாட்டு அறிக்கையின் 50ம் ஆண்டு நிறைவு போன்ற வரலாற்றின் சிறப்பு தருணங்களைக் குறிக்கவும் சிறப்பு யூபிலி ஆண்டுகள் அறிவிக்கப்பட்டன.
1. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு ஆரம்பத் திருப்பலி
 அமல அன்னை விழாவாகிய டிசம்பர் 08, இச்செவ்வாய் அகில உலக கத்தோலிக்கத் திருஅவைக்கு மிக முக்கியமான நாள். இன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் புனிதக் கதவின் முன் நின்று, நீதியின் கதவுகள் திறக்கட்டும் என்று சொல்லி புனிதக் கதவை தனது இரு கரங்களாலும் தள்ளித் திறந்து வைத்து இரக்கத்தின் சிறப்பு யூபிலி  ஆண்டை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 'கடவுளின் நன்மைத்தனம் மற்றும் அன்புக்கு அருகில் இரக்கத்தின் யூபிலி நம் எல்லாரையும் அழைத்துச் செல்வதாக!' என்ற டுவிட்டர் செய்தியையும் இச்செவ்வாயன்று வெளியிட்டு இந்நாளை மேலும் சிறப்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டுத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. இன்று காலையில் வானம் மந்தாரமாக,கார்மேகங்களால் நிறைந்திருந்து இலேசாக தூறல் விழுந்தாலும், அதிகாலை இருளான நேரத்திலே வத்திக்கானைச் சுற்றி ஏராளமான திருப்பயணிகள் கூட்டம். கடந்த நவம்பர் 13ம் தேதி பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னிட்டு, இத்தாலியில், குறிப்பாக, உரோமையில், இன்னும் குறிப்பாக வத்திக்கானைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் காவல்துறையினர் அதிகப்படியாக பணியில் இருந்தனர். பயங்கரவாத அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது, இச்செவ்வாய் விழாத் திருப்பலியில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இம்மக்கள் எல்லாரும் நன்றாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும் கொன்சிலியாசியோனே நெடுஞ்சாலையின் துவக்கத்திலே மக்கள் பரிசோதிக்கப்பட்டனர். இப்படி நாலா பக்கங்களிலிருந்தும் பரிசோதனைகள் நடந்தன. இத்தாலிய காவல்துறை, இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புத் துறையினரும், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். இத்திருப்பலி நேரத்தில் விமானங்கள் எதுவும் வத்திக்கான் பகுதியில் பறக்கக் கூடாது என்ற ஆணையையும் இத்தாலிய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்தது.
இத்திருப்பலியில் கலந்து கொள்ள இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ மத்தரெல்லா தனது மகள் லவ்ராவுடன் வந்திருந்தார். இத்தாலியப் பிரதமர் மத்தேயோ ரென்சி, அவரின் மனைவி அஞ்ஞேசே, இன்னும் பல முக்கிய அரசுப் பிரதிநிதிகள், பெல்ஜிய நாட்டு அரசர் ஆல்பர்ட், அரசி பவுலா, இளவரசர் லொரென்ஸ், இளவரசி Astrid, செக் குடியரசின் செனட் அவையின் உதவித் தலைவர் Miluse Horska, நாடாளுமன்ற உதவித் தலைவர் Petr Gadzikஜெர்மனியின் உதவி அரசுத்தலைவர் Bundestag johannes Singhammer, சான் மரினோ குடியரசின் தலைவர்கள் Nicola Renzi  மற்றும் Lorella Stefanelli  உட்பட பல பிரிதிநிதிகள் வந்திருந்தனர். உரோம் யூதமதத் தலைவர் Riccardo Di Segni அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டுக்கு நல்வாழ்த்துச் செய்தியும் வெளியிட்டுள்ளார். யூதர்கள் Chanukka'h ஒளி விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இந்த யூபிலி ஆண்டு ஆரம்பிக்கின்றது. இருளும்,அடக்குமுறையும், சகிப்பற்றதன்மையும் உள்ள இடத்தில் இந்த யூபிலி ஆண்டு ஒளியைக் கொண்டு வருவதாக என வாழ்த்தியுள்ளார் ரபி Di Segni. இன்று காலை 9.15 மணிக்கு வத்திக்கான் பசிலிக்காவிலுள்ள பியத்தா அன்னை மரியா பீடத்திற்கு முன்பாக, இத்திருப்பலியில் கலந்து கொள்ள வந்திருந்த நாடுகளின் பிரதிநிதி குழுக்களைச் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்குப் பின்னர், கர்தினால்களுடன் பவனியாக திருப்பலி மேடைக்கு வந்து விழாத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலி தொடங்கியதும் கார்மேகம் இலேசாக கலைந்து கதிரவனின் ஒளி வீசத் தொடங்கியது. மலயாளம், சீனம், அரபு, ஸ்வாகிலி உட்பட பல மொழிகளில் விசுவாசிகள் மன்றாட்டு இடம்பெற்றது. குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன் காணிக்கைப் பவனியில் காணிக்கைகளை எடுத்துச் சென்று திருத்தந்தையின் ஆசிர் பெற்றனர். பச்சிளங்குழந்தையையும், பிள்ளைகளையும் முத்தமிட்டார் திருத்தந்தை. இத்திருப்பலியின் இறுதி ஆசிருக்கு முன்னதாக புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு தொடங்கியது.
2. இரக்கத்தின் யூபிலி ஆரம்பத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஆரம்பத்தில் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை தலைமையேற்று நடத்திய திருப்பலியில் அவர் வழங்கிய மறையுரை:
அன்பு சகோதர, சகோதரிகளே, இன்னும் சிறிது நேரத்தில், இரக்கத்தின் புனிதக் கதவைத் திறக்கும் மகிழ்வைப் பெறுவேன். இந்த எளிமையான சடங்கினை, இன்றைய இறைவார்த்தையுடன் இணைத்துச் சிந்திக்கும்போது,அடையாளச் செறிவு மிகுந்ததாய் தெரிகிறது. ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்த ஓர் இளம்பெண்ணிடம், 'அருள் நிறைந்தவரே வாழ்க!' என்று (லூக்கா 1:28) வானதூதர் கபிரியேல் சொன்னதை, இன்றைய இறைவாக்கில் கேட்டோம்.
வானதூதர் கபிரியேல் மரியாவின் இல்லத்தில் நுழைந்தபோது, மிக ஆழமான, அறியமுடியாத மறையுண்மைகள்,மரியாவின் மகிழ்விற்குக் காரணமாக அமைந்தன. நிறைவான அருள், மனித வரலாற்றை மாற்றக்கூடிய வகையில், மனித மனங்களை உருவாக்கக்கூடும்.
அமல உற்பவப் பெருவிழா, கடவுளின் அன்பை வெளிப்படுத்துகிறது. இந்த அன்பு, பாவத்தை மன்னிப்பது மட்டுமல்ல, அந்தப் பாவத்தின் கறையே மரியாவின் மீது விழாதவாறு காத்தது. எதிர்வரும் ஆபத்தை முன்னோக்கிப் பார்த்து, காப்பது  இறைவனின் அன்பு.
தொடக்க நூலில் நாம் கேட்ட வார்த்தைகள், நம் தினசரி வாழ்வை படம்பிடித்துக் காட்டுகிறது. நம் வாழ்வை நாமே சமாளிக்கமுடியும் என்ற உணர்வில், இறைவனின் திட்டங்களுக்கு கீழ்ப்படியாமல் இருக்கும் நம் அனுபவம்,இந்த வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பாவத்தின் வரலாற்றை, இறைவனின் அன்பு, மன்னிப்பு என்ற வரலாற்றின் ஒளியில் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். இறைவன் தரும் இந்த வாக்குறுதியின் உன்னத சாட்சியாக, அமலியாய் பிறந்த கன்னி நமக்கு முன் நிற்கிறார்.
இந்த சிறப்பான புனித ஆண்டு, அருளின் கொடை. புனிதக் கதவு வழியே நாம் செல்லும்போது, நம் ஒவ்வொருவரையும் தனித் தனியே சந்திக்க வரும் இறைவனின் அளவற்ற அன்பை மீண்டும் கண்டுணரப் போகிறோம். கடவுளின் இரக்கத்தைக் குறித்து நாம் இந்த ஆண்டில் உறுதி பெறுவோம். கடவுளின் இரக்கத்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று பேசுவதற்கு முன், அவரது தீர்ப்பினால் தண்டிக்கப்படுவோம் என்று பேசும்போது, இறைவனுக்கும், அவரது இரக்கத்திற்கும் நாம் தவறிழைக்கிறோம் (புனித அகுஸ்தீன்). தீர்ப்புக்கு முன், இரக்கத்தை வைக்கவேண்டும்; இரக்கத்தின் ஒளியில்தான் அவரது தீர்ப்பு எப்போதும் செயலாற்றும். அன்பு செய்யப்படுகிறவர்கள், பயம் கொள்ளக்கூடாது என்பதால், புனிதக் கதவின் வழியே செல்லும்போது, நமது பயத்தை ஒதுக்கிவிடுவோம்.
இன்று நாம் புனிதக் கதவைக் கடந்து செல்லும்போது, மற்றொரு கதவையும் நினைவுகூருவோம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் கலந்துகொண்ட தந்தையர், 50 ஆண்டுகளுக்கு முன், இவ்வுலகிற்குத் திறந்துவைத்த அக்கதவை நினைவில் கொள்வோம். இந்தச் சங்கம், அனைத்திற்கும்  மேலாக, ஒரு சந்திப்பின் சங்கமாக அமைந்தது. இன்றைய உலகின் மனிதர்களுக்கும், திருஅவைக்கும் இடையே நிகழ்ந்த உண்மையான சந்திப்பு அது. பல ஆண்டுகளாக தனக்குள்ளேயே வாழ்ந்துவந்த திருஅவை, தூய ஆவியாரின் தூண்டுதலால், வெளியேறி வந்து, மக்களுடன் மேற்கொண்ட சந்திப்பு அது. மக்களை, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சந்திக்க திருஅவை வந்தது.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், மக்களைச் சந்திக்கும் மறைப்பணியை நாம் அதே சக்தியோடு, ஆர்வத்தோடு மீண்டும் மேற்கொள்கிறோம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழி வெளிப்பட்ட திறந்த மனநிலையை புறக்கணிக்கக் கூடாது என்ற சவாலை இந்த யூபிலி நமக்கு முன் வைக்கிறது. அருளாளர் 6ம் பவுல், சங்கத்தின் இறுதியில், சொன்ன நல்ல சமாரியரின் உணர்வு, நம்மிடமும் விளங்குவதாக. புனிதக் கதவின் வழியே நாம் கடந்து செல்லும்போது, நல்ல சமாரியரின் இரக்கம் நமதாக விளங்க, நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.
 3. தூய பேதுரு பசிலிக்கா புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு
இச்செவ்வாய் வத்திக்கான் வளாகத்தில் இடம்பெற்ற திருப்பலியில் இறுதி ஆசிருக்கு முன்னதாக புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு தொடங்கியது. சகோதர சகோதரிகளே, நம் மீட்பர் இயேசுவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தால் வழிநடத்தப்பட்டு மற்றும் அமல அன்னை மரியின் பாதுகாவலில் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை ஆரம்பிக்கிறோம். நம் முன்னால் புனிதக் கதவு திறக்கிறது. இப்புனிதக் கதவு கிறிஸ்துவே. நம் இதயங்களை தூய ஆவியாரின் செயலுக்குத் திறந்து வைப்போம். கிறிஸ்துவின் பெயரில் அமைதியில் புனிதக் கதவை நெருங்கிச் செல்வோம் என்று ஒரு தியாக்கோன் முதலில் வளாகத்தில் வாசித்தார். 
பின்னர் பீடப் பரிசாரகர் குழுவைத் தொடர்ந்து, அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் பிரதிநிதிகள் குழுக்களும், ஆயர்களும், கர்தினால்களும் பவனியாக, தூய பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவின் முன் சென்று நின்றனர். அதன்பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் சென்று புனிதக் கதவின் முன்நின்றார். அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை வாழ்த்திய பின்னர் செபம் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எல்லாம் வல்ல இறைவா, இரக்கமும் மன்னிப்பும் நிறைந்தவரே, நற்செய்தியின் மகிழ்வில் சகோதர சகோதரிகளை அன்பு கூரவும், அருளின் ஆண்டில் வாழவும் எங்களுக்கு வரம் தாரும். தூய ஆவியாரைத் தொடர்ந்து எம்மில் பொழிந்தருளும் என்று செபித்து அமல அன்னையின் உதவியையும் நாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் நீதியின் கதவுகள் எனக்குத் திறக்கட்டும் என்று சொல்லி, மரபுப்படி தனது இரு கரங்களாலும் புனிதக் கதவை மூன்று முறை தள்ளித் திறந்தார். பின்னர் அவ்விடத்தில் நின்று சிறிது நேரம் செபித்தார். பின்னர் அவர் பசிலிக்கா உள்ளே போய் நிற்க, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் புனிதக் கதவு வழியாகச் சென்றார். பின்னர் கர்தினால்களும் ஆயர்களும், மற்றவர்களும் புனிதக் கதவு வழியாகச் சென்றனர். பசிலிக்காவில் தூய பேதுரு கல்லறைப் பீடத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரிய சிலுவை முன்நின்று தலைவணங்கிச் செபித்து தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில்,உங்கள் தந்தை இரக்கமுள்ளவராக இருப்பது போல் நீங்களும் இரக்கமுள்ளவராக இருங்கள், அமைதியில் செல்லுங்கள் என்று தியாக்கோன் ஒருவர் கூறினார். அத்துடன் புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு நிறைவடைந்தது. அதன்பின்னர் இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ மத்தரெல்லா உட்பட இத்திருப்பலியில் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் குழு புனிதக் கதவு வழியாகச் சென்று செபித்தனர்.

இச்செவ்வாய் காலை திருப்பலிக்குப் பின்னர் பகல் 12 மணிக்கு மூவேளை செப உரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். புனிதக் கதவு திருவழிபாட்டில் கலந்துகொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நன்றி சொல்லியதோடு அனைத்து விசுவாசிகளும் அவரை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்பு நேயர்களே, 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தொடங்கியுள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நிறைவடையும். இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு காலத்தில் கருணைச் செயல்களில் ஈடுபடுவோம். 'நம் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல்...(லூக்.6:36)' நாமும் இரக்கமுள்ளவர்களாக வாழ்வோம். 
 4. அமல அன்னை விழாவன்று, திருத்தந்தையின் மூவேளை செப உரை
இச்செவ்வாய், கொண்டாடப்பட்ட அமல அன்னை பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோருக்கு வழங்கிய மூவேளை செப உரை:
அன்பு சகோதர, சகோதரிகளே, நம் முதல் பெற்றோரின் வழி வந்த பாவத்திலிருந்து மரியன்னை காக்கப்பட்டார் என்பதை இன்று தியானிக்க வந்துள்ளோம். இறைவனின் அளவற்ற இரக்கத்தால் காப்பற்றப்பட்ட முதல் மனிதப் பிறவி, மரியா. இரக்கத்தின் யூபிலி துவங்கும் இந்நாளில், மரியாவை அன்போடு தியானிக்க விழைகிறோம்.
நாம் வாழ்வில் 'ஆம்' என்று சொல்லும்போது, அமல அன்னையின் விழாவில் நாம் முழுமையாகப் பங்கேற்கிறோம். வாழ்வில் நம்பிக்கை இழந்துள்ள நம் சகோதர, சகோதரிகளின் கண்ணீரைத் துடைக்க முன்வருவதன் வழி, நம் 'ஆம்' வெளிப்படுகிறது. இவர்களைக் குறித்தே இயேசு, 'நான் பசியாய் இருந்தேன்,நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன்,என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்;நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' (மத்தேயு 25: 35லி36) என்று கூறினார்.
நாம் வாழ்வில் பெற்றுள்ள அனைத்தும் கொடை, அனைத்தும் இரக்கம் என்பதை, இன்றைய விழா நமக்கு உணர்த்துகிறது. இறைவனின் இரக்கத்தை மீண்டும் நாம் கண்டுகொள்ள, அன்னை மரியா நமக்குத் துணை புரிவாராக.
 5. இரக்கத்தை நிரம்பப் பெறும் ஓர் புனித ஆண்டாக அமையச் செபிப்போம்
நற்செய்தியின் முதன்மைச் சொல் இரக்கம் என்று இச்செவ்வாய் நண்பகல் மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் உரோம் ஸ்பானிய வளாகத்திலுள்ள அமலமரி நினைவுச் சின்னம் முன்நின்று செபிக்கவிருப்பதை அறிவித்தார்.
அன்னை மரியாவிடம் பிள்ளைக்குரிய பக்தியின் செயலாக, உரோம் மேரி மேஜர் பசிலிக்காவுக்கும் இச்செவ்வாய் மாலையில் தான் செல்லவிருப்பதாக அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவிடம், திருஅவையையும், முழு மனித சமுதாயத்தையும், குறிப்பாக, உரோம் நகரையும் அர்ப்பணித்துச் செபிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நாளில் இரக்கத்தின் கதவு வழியாக நான் சென்றேன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் சென்றார்கள்,நாம் எல்லாரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நம் வாழ்த்தைத் தெரிவிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரக்கத்தை நிரம்பப் பெறும் ஓர் புனித ஆண்டாக உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இருப்பதற்குச் செபியுங்கள்,இதேபோல் எனக்கும் இருப்பதற்கு இயேசுவிடம் கேளுங்கள், எனக்கு இவ்வருள் அதிகம் தேவைப்படுகின்றது என்றும் வத்திக்கான் வளாகத்தில் மூவேளை செப உரைக்குக் கூடியிருந்த எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் 

(வத்திக்கான் வானொலியின் தமிழ் பிரிவிற்கே இந்த முதல் கட்டுரை சொந்தமாகும். நன்றி)

யூபிலி ஆண்டும் விவசாயமும்,  நான் ஆண்டவரின் அடிமை, சென்னை-கடலூர் மழை வெள்ள சூழலில் இரக்கத்தின் யூபிலி ஆண்டின் சிந்தனைகளை உள்ளடக்கிய  'இது இரக்கத்தின் ஆண்டு -2' என்னும் எனது இரண்டாவது கட்டுரையினை வாசிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.
http://antonyfrancisomd.blogspot.it/2015/12/jubilee-year-of-mercy-2.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக