புதன், 16 டிசம்பர், 2015

சாமியார்கள் கதை (A Story Of Priests)

ஒவ்வாமை எச்சரிக்கை: "சாமியார்கள்" என்ற வார்த்தை இந்த இரவில் எத்தனை முறை எண்ணினாலும் குழம்பும் படியாக எண்ணற்ற முறைகள் திரும்ப திரும்ப வருகின்றன.

உரோமிலுள்ள பழமை வாய்ந்த ஓர் ஆலயம் தான் புனாரி தெருவிலுள்ள புனித கத்ரீனமாள் ஆலயம். 1192 ஆம் ஆண்டிலிருந்து இதன் வரலாறு நமக்குத் தெளிவாகக் கிடைத்துள்ளது. அதன் பின்னர் 1536 இல் இவ்வாலயத்தை அப்போதையத் திருத்தந்தை மூன்றாம் பவுல் என்பவர் புனித லயோலா இஞ்ஞாசியாரிடம் ஒப்படைக்கிறார். புனிதர் இவ்வாலயத்தில் ஏழை இளைஞர்களுக்கான ஓரு மடத்தை நிறுவியதோடு, இவ்வாலயத்தைப் புதிதாகக் கட்டி, அதனை புனித கத்ரீனம்மாளின் பெயரில் அர்ப்பணிக்குமாறு கர்தினால் பெடரிக்கோ சேசி என்பவரிடம் கோரிக்கை விடுக்கிறார். உடனடியாக ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கி 1564 ஆம் ஆண்டு இந்த ஆலயமானது கட்டி முடிக்கப்பட்டது. உரோமையின் மற்ற ஆலயங்களைப் போன்று மிகவும் பிரம்மாண்டமாக இல்லாவிடினும், மத்திய கால இத்தாலியக் கலைநயத்தின் ஓர் அற்புதமான அடையாளமாகத் திகழ்கிறது. 

இந்த ஆலயத்தில் கடந்த இரண்டு வாரமாக கிறிஸ்மஸ் குடில்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். ஒரு சிறுவன் அரைவட்ட வடிவில் வைக்கப்பட்டிருந்த குடில்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்தான். தனக்கு முன்னால் நீண்டு கிடக்கும் தனது நிழலைத் தனது சிறிய கால்களால் மிதித்துவிட ஒரு அடி எடுத்து வைத்தான். நிழல் ஒரு அடி முன்னால் செல்ல, அவனும் தனது முயற்சியை விடாது செய்துகொண்டிருந்தான். முக்கால் சதுர அடி சிவப்பு ஓடுகளால் வேயப்பட்ட தரையின் தளமானது, குறைந்த வெளிச்சத்தில் அவனது விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக்கியது. 

அவனது தனிமையைக் குலைத்தவாறு ஒரு தம்பதியினர் ஆலயத்தில் நுழைந்து அந்தக் குடில்களைப் பற்றி அவனிடம் கேட்டனர். அவன் அவர்களிடம் அவர்கள் எங்கிருந்து வருவதாகக் கேட்டான். அவர்கள் இஸ்ரேலிலிருந்து வருவதாகக் கூறினர். 'ஓ! நிஜமானக் குடிலிலிருந்து வருகிறீர்களோ?' என்றான். சிறுவனின் கேள்வியில் அவர்களின் மொட்டுவாய் பூவாய் பூத்தது . சிறுவன் தனது கதையைச் சொல்லத் தொடங்கினான்.

அவனது ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவரது பெயர் அமல்ராஜ். அரைகுறை சிற்பி ஒருவன் பெரியாருக்கு ஒரு சிலை செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தார் அந்த சாமியார். வேறு எந்த சாமியாரையும் அவன் பார்த்ததேயில்லாத காரணத்தால், சாமியார் என்றால் நீண்ட தாடியும், வழுக்கைத் தலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நரைத்த முடியும் இருக்க வேண்டுமென்று அவனே நினைத்துக்கொண்டான். மேலும் சாமியார்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றிய எந்த விபரங்களையும் யாரும் அவனுக்குச் சொல்லித் தரவேயில்லை. சாமியார்கள் எங்கிருந்தோ, எப்படியோ சாமியாராகவே வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். 

அவனது நண்பர்கள் இந்தச் சாமியார் மிகவும் கண்டிப்பானவர் என்றனர். மந்திர கிளாஸில் சரியாகப் படிக்கவில்லையென்றாலோ, தினசரி காலைப் பூசைக்கு வரவில்லையென்றாலோ குடைக் கம்பியால் அடிப்பார் என்றனர். குடைக்கம்பி என்றால் குடையைக் கொண்டு அடிப்பாரா? அல்லது குடையின் கைப்பிடி வளைந்த நடுக்கம்பியாலா அல்லது மற்ற சின்னச்சின்னக் கம்பியைக் கொண்டா என்று கற்பனை செய்து பார்த்தான். அந்த எண்ணமே அவனைப் பயறுத்தியதால் அதைப் பற்றி மேலும் அவன் விசாரிக்க விரும்பவில்லை. அவனை அந்தச் சாமியார் ஒருபோதும் அடித்ததோ, கண்டித்ததோ இல்லை. அந்தச் சிறுவனின் புதுநன்மை பூசையில் அவன்தான் முதல் வாசகம் வாசிக்க வேண்டுமென்று முடிவானதால், சாமியாரிடம் வாசித்துக் காட்ட வேண்டுமென்று  அவனது நண்பர்கள் கூறினர். மிகவும் பயம் காட்டினர். குடைக்கம்பி வேறு நினைவுக்கு வந்து அச்சுறுத்தியது. 

அக்காளைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு பைபிளும் கையுமாக சாமியாரின் அறைக் கதவைத் தட்டியச் சிறுவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாமியாரை முதன் முறையாக லுங்கியிலும், பனியனிலும் பார்த்தான். சாமியார்கள் எப்போதும் அங்கியில் தான் இருப்பார்கள் என்றே அதுவரையிலும் நினைத்துக்கொண்டிருந்தான். வீட்டிற்கு வரும்வரையிலும் சாமியர் லுங்கி கட்டியிருந்ததை ஒரு விநோதத்தை தான் மட்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து போல எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தான். அவர்களில் பலரும் அப்படியா என்று வாயைப் பிளந்தனர். சிலர் தாங்களும் அப்படி பார்த்திருப்பதாகக் கூறினர். பயம் மனதின் ஆழத்தில் உறைந்து கிடந்தது. திக்கென்ற அமைதி அறையில் நிலவியது. சாமியார் ஒரு பழைய தட்டச்சு எந்திரத்தை 'டொக், டொக்' என்று தட்டிக்கொண்டிருந்தார். புகை கலைவது போல மெதுவாக அவரது தாடி விலகியது. 'வாசிப்பா' என்றார். சூரைச் செடியின் அடியில் எலியா படுத்துறங்கியதும், வானதூதர் அவருக்கு உணவு கொடுத்ததுமான முதல் அரசர் புத்தகத்தின் ஒரு பகுதியே வாசகம். தனக்கு இன்னும் எப்படி அது ஞாபகம் இருக்கிறது என்று அவனுக்கேத் தெரியவில்லை. இரண்டு முறை வாசித்து முடிக்கும் முன்னரே போதும் என்று சொல்லி அழகான ஒரு புன்னகையோடு அனுப்பி வைத்தார். 

இன்னொரு சமயம் வீட்டில் ஒரே சண்டை. எல்லாம் பற்றாக்குறைதான் காரணம். அவனது தந்தை அவ்வூர் ஆலயத்தின் சுவர்களில் சிமெண்ட் மூலம் மார்பிள் போன்ற வேலைப்பாடு செய்யும் காண்டிராக்ட் எடுத்திருந்தார். அந்தக் காலத்தில் அது ஒரு ஆடம்பரமான வேலைதான். வேலைக்குத் தகுந்த பணம் தரவில்லையோ, அல்லது பணம் தந்துவிட்டதாக கூறி கணக்கில் தவறு நடந்ததோ தெரியவில்லை. ஏதோவொன்றைக் கூறி அந்தச் சாமியாரைத் திரும்பத் திரும்ப திட்டிக்கொண்டிருந்தார் அவனது தந்தை. இந்த சாமியா(ன்) இருக்கும் வரை தான் கோவிலுக்கு வருவதில்லை என்றார். ஞாயிறு காலை கோவிலில் பூசை தொடங்கியதும் கிழட்டு சாமியார்தான் என்று சரியாகக் கணித்துச் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா.

அந்த ஊரில் எப்போதாவதுதான் புதுவீட்டில் பால்காய்ச்சும் நிகழ்வு நடக்கும். வருடத்திற்கு ஒன்றோ, இரண்டோ தான். அப்போது சொல்லிக் கொள்வார்கள் சாமியார் கட்டிக் கொடுத்த வீடு என்று. சிறுவனின் வீட்டில் அந்த சமயத்தில் மீண்டும் சண்டை நடக்கும். தங்களுக்கு ஒரு வீடுகட்டித் தரவில்லையே இந்த நன்றி கெட்ட சாமியார் என்று சாமியாருக்குக் கேட்காத தூரத்தில் அம்மாவிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருப்பார் சாமியார். அவருக்கு இதைப் பற்றியெல்லாம் நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை. பின்னர் ஒரு சமயம் ஊரில் நிறைய பேருக்கு சாமியார் ஆடு வாங்கிக் கொடுத்தார். சிறுவனது வீட்டிற்கும் ஒரு ஆடு கிடைத்தது. சிறுவன் ஊர் பிள்ளைகளோடு வயல் காடுகளுக்கு ஆடு மேய்க்கப் போனதை நினைவுபடுத்திக்கொண்டான். 

சாமியார் ஊரிலிருந்து மாறிப் போய்விட்டார். பதினைந்து ஆண்டுகளில் இப்போது அவனது ஊரில் நிறைய வீடுகள் கட்டுகிறார்கள். அடிக்கடி பால்காய்ப்பு விசேஷ வீடுகளுக்கு மொய் செலவு என்று அம்மா குறைபட்டுக்கொள்கிறாள். மேலும் இப்போது ஆடுகள் யாரும் வளர்க்க விரும்புவதில்லை. அது வேலையற்ற வேலை என்கிறார்கள். பங்கிலிருந்த எல்லா கோவில்களையும் புதிதாகக் கட்டிவிட்டார்கள். முன்பை விட கோவிலில் நிறைய நிகழ்ச்சிகள், இயக்கங்கள், அலங்கார விளக்குகள், பளிங்கு தரைகள். மொத்தத்தில் ஊருக்கு ஒரு பணக்களை வந்து விட்டது. சிமெண்ட் மார்பிள் அலங்காரம், சிப்ஸ் சுவர் வேலைப்பாடுகள் போன்றவையெல்லாம் இல்லாவழக்காகிவிட்டன. 

அக்காளைக் கட்டிக் கொடுத்திருக்கும் வீடு இருக்கும் தெருவுக்கு சாமியாரின் பெயரை விட்டிருக்கிறார்கள். இப்போதைய குட்டீஸ்களுக்கு சாமியாரைத் தெரியாது. நிறையபேர் மாதா இல்லை, புனிதர்கள் இல்லை, சாமியார் இல்லை என்று சொல்லும் பெந்தகோஸ்து சபையில் சேர்ந்துவிட்டார்கள். நிறைய வீடுகளில் வேற்றுமொழி பேசும் விநோத சத்தங்கள் கேட்கின்றன. புனிதரின் சிலையை இவ்வளவு கஷ்டப்பட்டு தூக்குகிறார்களே! இந்தப் புனிதரா இவர்களைக் காப்பாற்றப் போகிறார் என்றெல்லாம் கேள்விகேட்கும் அளவுக்கு நிறைய தத்துவஜீவிகள் பெருகிவிட்டனர். கத்தோலிக்கம் பொய், இயேசுவே மெய் என்று நிறைய கோஷங்கள் கேட்கின்றன.

சிறுவன் இப்போது மிகவும் கலங்கிப் போயிருந்தான். அவனது நண்பர்களும் நிறைய தத்துவங்களைப் பேசுகிறார்கள். சாமியார் திண்டுக்கல்லில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போயிருந்தார். கிராம அனுபவத்திற்காக திண்டுக்கல் போன போது கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தாலும் அவரைப் பார்த்திருக்கலாமே என்று ஏங்கினான். நீங்கள் அன்பு செய்த ஊரை வந்துப் பாருங்கள் என்று கெஞ்சினால் கல்லறையிலிருந்தும் அவர் எழுந்து வரக்கூடும் என்று அவன் நம்பினான். ஆடுகள் கலைந்து போனாலும், ஆயனுக்கு ஆடுகளின் மேல் அன்பு மாறாதுதானே. 

இப்போது அவனுக்கு சாமியார்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று நன்றாகத் தெரியும். அவர்கள் லுங்கி, பேண்ட், சட்டை எல்லாம் போடுகிறார்கள். பார்ப்பதற்கு எல்லோரையும் போலவே இருக்கிறார்கள். இப்போது சாமியார் என்ற வார்த்தை முன்பு போல பயமூட்டுவதாக இல்லை. அவர்களின் மனது அவனுக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்களும் குடும்பங்களிலிருந்தே வருகிறார்கள். அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை அன்பு செய்கிறார்கள். மக்களும் பெரும்பாலும் சாமியார்களை முன்பு போலவே அன்பு செய்கிறார்கள். உணவில் கண்ணுக்குத் தெரியாத உப்பு போல, சிறுவனின் ஊரில் அமல்ராஜ் சாமியார் கரைந்திருக்கிறார். நிறைய தத்துஜீவிகளின் தத்துவ விகல்பனங்களுக்கு மத்தியிலும், சாமியாராக இருப்பதில் கிடைக்கும் அமைதியைச் சிறுவன் இப்போது ரசிக்கத் தொடங்கியிருக்கிறான். 

அவன் பார்க்காத பல சாமியார்கள் பிற தளங்களிலும் தங்கள் பெயரைப் பதித்துள்ளது பற்றி அவன் பேசத் தொடங்கினான். சிறுவன் நின்று கொண்டிருக்கும் இந்த ஆலயத்தில் இருபது, முப்பது ஆண்டுகள் உலாவிய புனித இஞ்ஞாசியார் என்னும் சாமியாரின் பெயரில்தான் சிறுவனின் ஊரில் பங்கு கோவில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அவர் நிறுவிய இயேசு சபைச் சாமியாரான புனித சவேரியாரால் தான் இன்று இந்தியாவில் பலரும் கிறிஸ்தவர்களானோம். பல்லாயிரம் பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்த அவருடைய வலது கையானது இங்கே பக்கத்தில் இன்னொரு கோவிலில் பாதுகாக்கப்படுகிறது. அதே இயேசு சபையின் ஒரு தமிழ் சாமியார் தான் சிறுவன் கூறிய பங்குச் சாமியார் அமல்ராஜ். 

இயேசு சபையின் இன்னொரு சாமியார்தான் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் இத்தாலி நாட்டின் ஜோசப் பெஸ்கி. 1709 இல் குருவாகி ஒரே ஆண்டில் தமிழகம் வந்த இளம் சாமியார். அவருக்கு என்ன கட்டாயமா? தேம்பாவணி உட்பட 23 தமிழ் நூல்களை எழுதியதோடு, தமிழ் இலக்கணத்திலும், தமிழ் எழுத்துக்களிலும் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார் என்றால் நம்பமுடிகிறதா? இதைப்போன்ற இன்னொரு இயேசுசபைச் சாமியார் தத்துவப்போதகர் என்றழைக்கப்பட்ட இராபர்ட் டி நோபிலி. இப்படி முகம் தெரியாத சாமியார்களை மட்டுமல்லாது எல்லா சாமியார்களையும் சிறுவனுக்குப் பிடித்திருந்தது.

ஒரு ஆண்டில் ஒரு முறை கூட விடுமுறை எடுக்காத, அப்படியே எடுத்தாலும் அடுத்த நாளே பதறியடித்து வேலை இடத்துக்கு ஓடிவரும் சாமியாரை அவன் பார்த்திருக்கிறான். அவரது இடத்தை வேறு யாரும் பிடித்து விடுவார்கள் என்பதால் அப்படி ஓடிவருவதாக ஊரில் சாமியாரைப் பற்றி பேசிக்கொண்டார்கள்.

கல்லூரியில் படித்த காலத்தில், உன்னை வளர்த்துக்கொள்ள எந்த வாய்ப்பு வந்தாலும் தைரியமா எடுத்துச் செய்யுங்க என்று சுதந்திரம் கொடுத்த சாமியாரை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவரது பட்டப் பெயரை அவன் இப்போது சொல்ல விரும்பவில்லை. 

எல்லா வேலைகளையும் ஒருவர் செய்யமுடியுமென்று நினைக்கிறீர்களா? அந்த ஆல்ரவுண்டர் சாமியாருக்கு வண்டி ஓட்ட தெரியும். ஆறேழு மொழிகள் தெரியும். மர வேலைப்பாடுகள் செய்யத் தெரியும். ஐம்பது வயதிலும் நன்றாக கால்பந்து விளையாடத் தெரியும். இது எதுவுமே தனக்குத் தெரியாதது போல எளிமையான, சிரித்த முகத்துடன் எல்லோரிடமும் பேசவும் அவருக்குத் தெரியும். யாருமே பார்த்தேயிராத இல்லாத பொல்லாத கதைகளை அவருக்கும் கிளப்பிவிட்டிருந்தனர்.

ஒருமுறை கோவிலில் பணிந்து வணங்கவில்லை. இதைக் கண்டித்த சாமியாரிடம் தான் யாரிடமும் பணிவதில்லை என்றும், தான் திருச்சி பவுல் கல்லூரி மாணவன் என்றும் சிறிது தத்துவம் பேசிப்பார்த்தான் சிறுவன். 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்று, ஆண்டவரிடம் தாழ்ந்து பணிவதற்கும் அவனருள் வேண்டும். அது உனக்கு இல்லை போல என்று அவனது பார்வையை தத்துவத்திலிருந்து அன்புக்கு மாற்றிய சாமியாரையும் அவனுக்குத் தெரியும். சொல்வதற்கு எதுவுமில்லை என்பதால் அவர் தவறுகளைத் துணிவாகத் தட்டிக்கேட்பதில்லை என்று சொல்லினர்.

புதிய இடத்துக்கு சிறுவன் மாற்றப்பட்டபோது அங்கிருப்பவர்கள் தன்னிடம் எப்படி பழகுவார்களோ என்று பயந்திருந்த சமயத்தில், அங்கிருந்த இளம் சாமியார்கள் கூட முன்பு தான் ஏற்கனவே பார்த்திருந்த பல பெரிய சாமியார்களைப் போலவே மிகவும் அருமையானவர்களாக இருப்பது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

அந்தச் சிறுவனைச் சில சாமியார்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்கு அந்தச் சிறுவனைப் பிடிக்கவில்லை என்பதை விட அந்தச் சிறுவனை விட பிறரை அவர்களுக்கு அதிகமாகப் பிடித்திருந்தது. அதில் பிழையொன்றுமில்லை என்பதால் அந்தச் சாமியார்களையும் அவனுக்குப் பிடிக்கும். 

இப்படி அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போது இன்னொரு பெண்ணொருவர் வந்து இந்தக் குடில் கண்காட்சியைப் பற்றி சிறுவனிடம் கேட்டார். சிறுவன் சொன்னான்: இந்தக் குடில்கள் அனைத்துமே எங்கள் சபையின் அதிபர் சாமியாரின் கைகளால் செய்யப்பட்டவை. அவருக்கு சபையின் எல்லா இல்லங்களையும் சந்திக்கும் வேலை உண்டு. அத்தோடு அன்னை மரியாளைப் பற்றி பல புத்தகங்களையும் எழுதுகிறார். இந்தக் குடில் கண்காட்சி மூலம் கிடைக்கும் வருவாயை மறைபரப்புப் பணிக்காகச் செலவிடுகிறார். சிறுவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இரண்டு அழகிய குடில்களை 380 யூரோ கொடுத்து சந்தோஷமாக வாங்கி சென்று கொண்டிருந்தார் அந்தப்பெண். 

பிடித்தல், பிடிக்காமை, பாரபட்சங்கள், தத்துவங்கள், தேவபாஷைகள், குறைபாடுகள் எல்லாவற்றையும் கடந்து சாமியார்களும் எல்லோரையும் போலவே குடும்பங்களிலிருந்து வருகிறார்கள் என்பது தெரிந்த நாளிலிருந்து அவனுக்கு அவர்களை இப்போது மிகவும் பிடித்திருந்தது. சாக்கடை சுத்தம் செய்பவர்கள், சுனாமி போன்ற சமயங்களில் உதவும் தன்னார்வலர்கள் மருத்துவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் போலவே சாமியார்களும் இந்த சமுதாயத்திற்கு அவசியமானவர்களாக இருப்பதாக அவன் உணர்வதால் அவர்களை அவனுக்குப் பிடித்திருந்தது. எல்லாவற்றிலும் முக்கியமான இன்னொன்று. இந்தப் பிறவியில் சாமியாராக இருத்தல் என்பது ஒரு வரம். யாருக்குமே கிடைக்காத எண்ணற்ற அன்பு அனுபவங்களும், அருள் அனுபவங்களும் சாமியார்களுக்கு கிடைப்பதால் அவனுக்கு சாமியார்களைப் பிடித்திருந்தது. 


3 கருத்துகள்: