ஞாயிறு, 10 ஜனவரி, 2016

செரின்டாவும், ஃபாதர் மாமாவும் (Sherinda And Father Uncle)

மகிழ்வுந்தின் முன் இருக்கையில் இருந்தார் ஃபாதர் மாமா. எங்கள் ஊரில் ஃபாதரை ஃபாதர் மாமா என்று தான் பிள்ளைகள் அனைவரும் கூப்பிடுவோம். இதனால் ஃபாதரும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வு தானாகவே வந்து விடும். அவர்களும் எங்களிடம் நெருங்கிய உறவுக்காரர் போன்ற பாசத்தில்தான் பழகுவார்கள். குட்டிப்பிள்ளைகள், பீடச்சிறுவர்கள், இளைஞர்கள் வரையிலும் ஃபாதர் மாமா என்று அழைக்கும் மாத்திரத்தில் அவரும் அப்படியே உருகிவிடுவார். அப்பா ஃபாதர் மாமாவை ஏர்போர்ட்டில் கொண்டுவிட சம்மதித்திருந்தார். அப்பா கிளம்பியதுமே நானும், அக்கா மெலின்டா, தம்பி லெனோன் மூவரும் வண்டியில் ஏறிவிட்டு, நாங்களும் ஃபாதர் மாமாவை வழியனுப்ப வருகிறோம் என்று சம்மதம் வாங்கிவிட்டோம். கடைசி தம்பி எவின் குழந்தை என்பதால் அம்மா அவனை விடவில்லை. அப்பா நேரத்தைப் பார்த்துக் கொண்டே வண்டியை வேகமாக செலுத்த, ஃபாதர் மாமா அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தார்.

முன் இருக்கையில் இருந்த ஃபாதர் மாமாவின் கன்னங்களை என் இரு கைகளால் வருடிக்கொண்டே 'நான் உங்களை மிஸ் பண்றேன்' என்று சொல்லிக்கொண்டேயிருந்தேன். நான் இப்பொழுதுதான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் குழந்தை எப்படி இத்தகைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்? அப்படியே உணர்ந்தாலும் எப்படி அதை துல்லியமான வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறாள் என்று அப்பாவிடம் கேட்டார் ஃபாதர் மாமா. நிறைய சினிமாக்களில் வரும் சொற்கள் தானே என்று அவரே விடையும் சொல்லிக்கொண்டார். அப்பாவின் எண்ணமெல்லாம் சரியான நேரத்திற்கு விமான நிலையம் சென்றுவிட வேண்டுமென்றுதான் அடித்துக்கொண்டது. 

ஃபாதர் மாமா ஒரு பக்கமாக திரும்பி என்னிடம் அப்பாவியாகச் சிரித்து எல்லோரையும் அன்பால் கட்டிப்போடுகிறேன் என்று சொன்னார். ஒன்றிரண்டு தினங்கள் கோவிலில் பார்த்த போதே ஃபாதர் மாமாவுடன் சகஜமாக விளையாட ஆரம்பித்துவிட்டோம். வீட்டிற்கு ஒருநாள் சாப்பிட வந்திருந்தார். அம்மா புரோட்டா, பான், பீஃப் போன்ற அயிட்டங்களைச் செய்து அசத்தியிருந்தார். அத்தையும், இரண்டு அண்ணிமார்களும் வந்திருந்தனர். ஃபாதர் மாமா அத்தையிடம் பேசிக் கொண்டிருந்தார். இக்குழந்தைகள் சிரிக்க வேண்டுமென்ற சிரத்தையெல்லாம் எடுக்கத் தேவையேயில்லை. இயல்பாகவே சிரித்துக்கொண்டேயிருக்கின்றன அவர்களின் முகங்கள் என்று எங்களை வியந்துகொண்டும், எங்களோடு விளையாடிக்கொண்டும் இருந்தார் ஃபாதர் மாமா.

மெல்லிசாக பனி விழுந்து கொண்டேயிருந்தது. ஃபாதர் மாமா பேச்சை நிறுத்தி எதையோ யோசித்தவாறு இருந்தார். லெனோன் ஃபாதர் மாமாவின் தோளில் கை வைத்து அவரது யோசனையைக் கலைத்தான். அவரும் அவனது கையைப் பிடித்து இழுத்து அவனுக்கு விளையாட்டு காட்டினார். சரியான நேரத்தில் ஏர்போர்ட்டை அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை வந்ததும் அப்பா ஃபாதர் மாமாவிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். லக்கேஜ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டார். ஃபாதர் மாமா தன்னிடம் ஒரு செண்ட் பாட்டில் இருப்பதாகக் கூறினார். வெறும் 'ஹேண்ட் லக்கேஜ்' என்பதால் அதை எடுத்துப் போட்டுவிடுவர் என்று அப்பா பயம் காட்டினார்.  ஜெர்மனியின் க்லோன் நகரத்தின் சிறப்பான 'ஆ.டீ.க்ளோன் 4711' என்ற செண்ட் பாட்டில் எனவும், முக்கியமான ஒருவர் அன்போடு பரிசளித்தது எனவும் சொன்னார் ஃபாதர் மாமா. ஏற்கனவே பாரிசில் ஒரு நிவ்யா டப்பாவை எடுத்துப் போட்டுவிட்டனர் என்றும் வருத்தப்பட்டார். செண்ட் பாட்டில் அதோ கதிதான் என்பது போல் சோகமாகிப் போனார். 

லெனோனின் சேட்டைகள் அதிகமாகியிருந்தது. ஏதாவது சத்தமிட்டோ, அல்லது ஃபாதர் மாமாவின் தோளில் தட்டியோ கவன ஈர்ப்பு செய்துகொண்டிருந்தான். பனி பெய்துகொண்டிருந்ததால் வாகன நெரிசல் இருக்கவில்லை. குறித்த நேரத்திற்கு முன்னதாகவே ஏர்போர்ட் வந்து சேர்ந்துவிட்டோம். குளிரில் இறங்க மனமின்றி எல்லோரும் அப்படியே காரில் இருக்க, கதவுகளைத் திறக்குமாறு லெனோன் அடம்பிடித்தான். அப்பா அவனிடம் திரும்பி ஆங்கிலத்தில் 'ஐ காட் இட்' என்று சொல்லுமாறு கேட்டார். அவன் நிறைய ஆங்கில வீடியோகேம் விளையாடுவதால் சில ஆங்கில வசனங்களை மிகவும் ஸ்டைலாக உச்சரிப்பான். அவனும் அப்படியே சொல்ல அனைவரும் சிரித்துக் கொண்டே ஏர்போர்ட்டில் நுழைந்தோம். 

நான் ஃபாதர் மாமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். மெலின்டாவுக்கும் ஆசைதான். ஆனால் அவள் வழக்கம் போல் மெலிதாகச் சிரித்துக் கொண்டே எங்களுக்கு அருகில் நடந்து வந்தாள். நான் ஃபாதர் மாமாவிடம் மீண்டும் 'நான் உங்களை மிஸ் பண்றேன்' என்றேன். அவரும் முன்பு போலவே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது கைகளில் சிலதுளி கண்ணீர் பட்ட பின்னர்தான் ஃபாதர் மாமாவால் தாங்க முடியவில்லை. எப்படி இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை இவ்வளவு அன்பாக பழக முடியும்? எப்படி ஒரு சில நாள்களே பழகிய ஒரு மூன்றாம் நபரின் பிரிவுக்காக 'நான் உங்களை மிஸ் பண்றேன்' என்று சொல்வதோடு, கன்னம் நிறைய கண்ணீர் விட முடியும்?  ஃபாதர் மாமா செய்வதறியாது திகைத்தார். என்னை இறுக்க அணைத்துக் கொண்டார். ஏதாவது தர ஆசைப்பட்டார். அதற்குள் அவரது 'லக்கேஜ்' பரிசோதனைக்காக எந்திரத்திற்குள் சென்றது. அவர் மனம் லக்கேஜ்-க்கும், எனக்குமாக தாவிக்கொண்டிருந்தது. அவர் கைகளில் என் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பெண் அதிகாரி 'ஆ.டீ.க்ளோன் 4711' செண்ட் பாட்டிலைக் கொண்டு செல்ல இயலாது எனக் கூறி அதைக் கூடையில் போடப் போனாள். அவளது கையிலிருந்து அதைப் பறிக்காதக் குறையாக வாங்கி, தடுப்புகளில் குனிந்து, வேகமாக என்னிடம் வந்து இதை என் அன்புப் பரிசாக வைத்துக் கொள் என்றுக் கூறிவிட்டு மீண்டும் தடுப்புகளில் குனிந்து சென்று வேகமாக மறைந்தார் ஃபாதர் மாமா. அவரது முகம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

(வெறும் பயணக் கட்டுரையாக இல்லாமல், கதை வடிவில் நார்வே பயணத்தைப் பதிவு செய்யும் முதல் முயற்சி. இன்னும் நிறைய கதைகளோடு தொடர்வோம். நன்றி)

5 கருத்துகள்: