தமிழ் மன்ற ஐந்தாம் அமர்வு : 'இளையோரும் இணையதளமும்'
இளைய தமிழ் நெஞ்சங்களே! இனிய காலை வணக்கம்.
'உள்ளங்கை நெல்லிக்கனியாய்
சுவர்களற்ற ஓர்சுருங்கிய உலகம்
படைத்தது இணையதளம்'
தூரங்களைக் குறைத்தாலும் உறவுகளைத் தூரமாக்கி விட்ட இணையதளத்தில் இளைஞர்களின் பங்கேற்பு, பாதிப்பு, மற்றும் எதிர்பார்ப்புகளை அலசும் நோக்கில் 08-01-11 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு, ஞான இருக்கை அரங்கில் இனிதே தொடங்கியது தமிழ் மன்ற ஐந்தாம் அமர்வு.
அன்னை முத்தமிட்டக் கன்னங்களின் ஈரத்தைத் தொட்டுப்பார்த்துக்கொண்டே பள்ளி வரை செல்லும் பிள்ளைகளைப் போல், அமர்வின் தொடக்கத்தில் நம்மை இறையன்பில் நனைத்தது சகோ.பெனிட்டோ மற்றும் சகோ.ராஜேஷ் இணைந்து பாடிய இறைவணக்கப்பாடல்.
நதியின் அழகினை அதிகப்படுத்தும் உதிர்ந்த மலர்களைப் போல் வார்த்தை மலர்களால் அவையை வரவேற்றவர் சகோ.சேசு பிரபு.
கடந்த நான்காம் அமர்வினை கடகடவென நினைவுக்குக் கொண்டு வந்தது செயலரின் அறிக்கை.
கோகுலத்தில் கண்ணன் வாய் திறக்க, அதில் அகிலத்தைப் பார்த்த அன்னை யசோதை, கேட்டதைத் தரும் கற்பகத் தரு போன்ற மனிதக் கற்பனைக்கு மட்டுமே எட்டியவற்றை, இன்று கையகலக் கணிப்பொறியில் சாத்தியப்படுத்துகிறது இணையதளம். உலகின் கடையெல்லையைக் கண்முன் காட்டவும், உலகளாவிய உறவுகளை உருவாக்கவும், உரையாடவும் தளம் செய்து கொடுத்த இணையதளத்தின் நன்மைகளை சிரித்த முகத்துடன் எடுத்துரைத்தவர் சகோ.நெப்போலியன்.
'இளைஞர்களே! இதைக்கொஞ்சம் கேளுங்களேன்' என்ற எழுச்சிப் பாடலை ஒரு பெரிய மலைத்தொடரைப் போல வரிசையாக நின்று பாடினர் சகோதரர்கள் பிரான்சி;ஸ், மனோஜ், ரெக்ஸ்டன், மற்றும் செல்வன்.
காலவிரயம், வீண்பேச்சு, கருத்து அத்துமீறல், தரமற்றத் தகவல்கள், அந்தரங்கம் பகிரங்கமாதல், வியபார நோக்கம், நூலகப் பயன்பாடு குறைதல், வக்கிரம், விரக்தி போன்ற இணையதளத்தின் எதிர்விளைவுகளை முகத்தில் தெறித்தக் கோபத்தோடு வெளிப்படுத்தினார் உரைவீச்சாளர் சகோ.சுரேஷ் பாபு.
நெருப்பு... விளக்கில் பற்றினால் வெளிச்சம்
வீட்டில் பற்றினால் அழிவு
கடல்... கரை வரையில் இருந்தால் வாழ்வு
கரை கடந்த கணமே அழிவு
தீட்டிய ஈட்டி முனைகளான இளைஞர்கள், இணையம் என்னும் கடலை கரைகடக்காமல் பயன்படுத்தினால், அவர்கள் வெற்றி வெகுதொலைவில் இல்லை என்றும் வரம்புகளைக்; கடந்து விட்டால் மீண்டும் மீள்வது கடினம் என்றும் உரையாற்றி, பின் மாணவர்களின் வினாக்களுக்கு விடையளித்தவர் சிறப்பு விருந்தினர், தூய சிலுவைக் கல்லூரி பேராசிரரியர், அருட்பணி.ரொசாரியோ.
தினையளவு வார்த்தைகளால், பனையளவு பேசிவிடும் சகோ.ரெக்ஸ்டன் நன்றியுரை கூறியபோது, 'இன்னும் இவர் பேச வேண்டும்' என்பது போல அனைவரின் கண்களிலும் ஆவல் தெரிந்தது.
சகோ.சலேத், மற்றும் சகோ.செல்வனின் நிகழ்ச்சி தொகுப்பு இளமை, இனிமை, புதுமை, என்று களைகட்ட, மன்றப்பண்ணுடன் இனிதே கலைந்தது ஐந்தாம் அமர்வு.
நிகழ்ச்சி தயாரித்த வைகை குழவினரை நன்றியோடு நினைத்துப்பாரக்கிறது தமிழ் மன்றம்.
நன்றி!
என்றும் தோழமையுடன்,
செயலர்
ம.ஆன்றனி பிரான்சிஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக