ஞாயிறு, 31 ஜனவரி, 2016

தமிழ்மன்ற நான்காம் அமர்வு : 'பெருகி வரும் மாண்புக்கொலைகள்'

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமிகு.கிறிஸ்டி சுபத்ரா அவர்கள்
கிரியா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளர்.
அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர்.
1978ஆம் ஆண்டு முதல் குழந்தைகள், பெண்களுக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருபவர். இவரது கவிதைப் படைப்புக்களான 'எந்தன் தோழா', 'சுட்டும் விழி' போன்றத் தொகுப்புகள் பல்கலைகழகங்களில் பாடத்திட்டங்களாக இருந்த பெருமை பெற்றவை. இத்தகைய அரிய மனிதர் நம் சிறப்பு விருந்தினராக வந்திருப்பதில் தமிழ்மன்றம் நெஞ்சம் மகிழ்கின்றது. அந்நாரை என் சார்பாகவும், தமிழ்மன்றத்தின் சார்பாகவும் வருக, வருக என்று வரவேற்கின்றேன்.

இளைய தமிழ் நெஞ்சங்களே! இனிய காலை வணக்கம்

மனிதம் பெரிது-பெரிது
மனித மாண்பு அதனினும் பெரிது
பெற்ற பிள்ளையை, கட்சித்தொண்டனை
காதலென்னும் பெருங்குற்றம் செய்த இளைஞனை
இன்னும் இது போன்ற மனித பூச்சிகளை
வெட்டியோ, வெடித்தோ அல்லது
எரித்தோக் கொன்று, தங்கள் கவுரவம் காக்கும்
பரிணாம வளர்ச்சியில் பங்குபெறாத மனிதர்களைப் பற்றி
'பெருகி வரும் மாண்புக்கொலைகள்' என்னும் தலைப்பில், 4-12-2010 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு 'ஞான இருக்கை' அரங்கில் இனிதே நடைபெற்றது தமிழ்மன்ற நான்காம் அமர்வு.

சாளரத்திற்கு வெளியே சின்னதாய் மழைத்தூற கடவுள் அன்பில் அரங்கை நனைத்தது சகோ.ஆரோக்கியராஜ் அவர்களின் இறைவணக்கப்பாடல்.
ஆர்ப்பாட்டமில்லாமல் அவையை வரவேற்று அமைதியாய் அமர்ந்தார் சகோ.நிக்கோலஸ்.

கடந்த அமர்வின் அறிக்கையினை வழக்கம் போல் வாசித்தவர் மன்றச் செயலர்.

மாண்புக்கொலைகளை நிகழ்த்துவது மதம் என்னும் வெடிகுண்டாகவோ, பணம் என்னும் வெட்டரிவாளாகவோ, குடும்பம் என்னும் தூக்குக் கயிறாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றின் பின்னணியில் அமைத்து ஜாதிகளின் ஆதிமூலமாக விளங்கும் பார்ப்பனியம் செயல்படுவதை அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகளாலும், உணர்ச்சி ததும்பியக் குரலிலும் சகோ. சகேஷ் சந்தியா உரையாற்றிய போது அரங்கமே அமைதி காத்தது.

சுயகௌரவத்துக்காக, பிறர் உயிரைப்பறிக்கும்
அறிவிலி மனிதர்கள் இருந்தென்ன? இருந்தென்ன?
என்னும் பொருளில் ஓர் விழிப்புணர்வு பாடலை அரங்கேற்றியவர் சகோ. அருள் சூசை.

மாண்புக் கொலைகளின் துயரப்பக்கங்களை கோர முகங்களை, சிதைந்து போகும் மனித மாண்பினை திரையில் காட்சிகளாக்கி அவையை துயரத்தின் உறைநிலைக்குத் தள்ளியது சகோ.இமான் அவர்களின் ஒளிப்படக்காட்சி.

ஒரு பெண்ணுக்கான ஒழுக்கத்தை ஒரு ஆண் தீர்மானிக்க ஆரம்பித்த அன்றே மாண்புக்கொலைகள் தொடங்கி விட்டன. ஆணின் பேசா சொத்து ஆடு-மாடுகள்... பேசும் சொத்து பெண்கள் என்னும் அவலக்கருத்தியல்கள் அவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியிலேயே இன்றளவும் பெண் உரிமைகள் புறந்தள்ளப்படுவதும், கட்டமைப்புகளை மீறும் பெண்கள் கொன்றழிக்கப்படுவதும்  அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன, என்று கணீர் குரலில் உரையாற்றியவர் சிறப்பு விருந்தினர் திருமதி. சுபத்ரா அவர்கள். தொடர்ந்து மாணவர்களின் ஐயப்பாடுகளை தம் சொந்த அனுபவங்களைக் கூறி தீர்த்து வைத்தது அவரின் சிறப்பு.

அழகானப் புன்னகை முகத்தில் அரும்ப
தெளிவானத் தமிழ் நாவில் தவழ
நல்ல முறையில் சகோ. பிரான்சிஸ் சேவியர் நன்றி நவிழ இறுதியில் மன்றப்பண் பாடப்பட்டது.

மழைக்கு முந்தைய மின்னலாக, மழை விட்டபின்னும் இலையில் சொட்டும் நீராக நிகழ்ச்சியைப் பாங்குறத் தொகுத்தளித்தவர்கள் சகே. பாஸ்கா மற்றும் சகோ.மைக்கிள்.

நிகழ்ச்சி தயாரித்த வைகைக் குழுவினருக்குத் தமிழ்மன்றத்தின் 1000 பாராட்டுக்கள்!

நன்றி!
என்றும் தோழமையுடன்,
செயலர்
ம.ஆன்றனி பிரான்சிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக