தலைப்பு : அரசின் இலவசத்திட்டங்கள் தேவையா? தேவையில்லையா?
தலைமை : பேரா.சுந்தரவள்ளி, கருமாத்தூர்
நாள் : 06-11-2010 (சனிக்கிழமை) காலை 11.30 மணி
இடம் : ஞான இருக்கை மன்றம்
அரசுக்கு ஒரு வேண்டுகோள்
கல்வியை நீ கொடு! மதிப்பெண்கள் எங்கள் பாடு
பாதைகளை சரி செய்ளூ பயணங்களை தீர்மானிப்பதை எங்களிடம் விடு
மின்சாரம் வருமா? கவனி தொலைக்காட்சி வாங்குவது எங்கள் விருப்பம்
வாய்ப்பு தருவது உன் கடமை வாங்கிக்கொள்வது எங்கள் உரிமை
பரிதாபப்படுவதல்ல உன் வேலை பலப்படுத்து அரசே! பலப்படுத்து!'
இளைய தமிழ் நெஞ்சங்களே! இனிய காலை வணக்கம்!
அரசின் இலவசத்திட்டங்கள் தேவையா? தேவையில்லையா? என்னும் தலைப்பில் 6-11-2010 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு, 'ஞான இருக்கை' அரங்கில் இனிதே தொடங்கியது தமிழ்மன்ற மூன்றாம் அமர்வு.
இறைவணக்கம் பாடிய சகோ.ஞானப்பிரகாசம் அவர்களின் இனிய குரலுக்கு உருகியது எங்கள் மனங்கள் மட்டுமல்ல மேகங்களும்தான் என்பதற்கு இன்றளவும் பெய்யும் மழையே சாட்சி.
அரசியல்வாதி, முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர், பண்ணையார் என்று பல்வேறு அரசியல் கதாபாத்திரங்களை மேடைக்கு அறிமுகம் செய்யும் நாடக இயக்குநர் அருண் ரெக்ஸ் அவையை வரவேற்றார்.
இரண்டாம் அமர்வு எப்படி இருந்தது என்பதைச் செயலரின் அறிக்கையிலிருந்து அறிந்து கொண்டோம்.
ஒரு நாளுக்கு ஒரு முகம் காட்டும் நிலவு
ஒரு அமர்விற்கு ஒரு புதுமை நிகழ்த்தும் தமிழ்மன்றம்.
கடந்த அமர்வின் தனிச்சிறப்பு பட்டிமன்றம்.
அரசின் இலவசத்திட்டங்கள் தேவையே என்று நண்பர்கள் பாபு, ஜெரி, மற்றும் தினகரன் ஆகியோர் பேசிய போது நாமும், 'அட! தேவைதானே!' என்று மனதிற்குள் சொல்லும் வண்ணம் தங்கள் வாதங்களை அடுக்கினர். குறிப்பாக, 'கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கிறது அரசு', ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றும் அவசர ஊர்தி 108, குழந்தைகள், முதியோர், நோயாளிகள் என சமூகத்தின் வறியோருக்கான தனித்தனிச் சிறப்புத்திட்டங்களைப் பட்டியலிட்டு இலவசமாகக் கரவொலி வாங்கினர்.
இலவசத்திட்டங்கள் தேவையில்லை என்று நண்பர்கள் இராபர்ட், கலை, மற்றும் 'கலைவிழா நடனப்புகழ்' மரியதாஸ் பேசிய போது, அவர்கள் பேச்சில் கோபம் தெறித்தது. நாமும் கோபப்பட்டோம். எதிரணியைக் கேலி செய்தனர். நாமும் சிரித்தோம். 'கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கிறார்களாம் எங்களுக்குத்தான் கூரையே இல்லையே', அரசுத் திட்டங்கள் வெறும் வெங்காயம் போல....உரிக்க உரிக்க ஒன்றும் மிச்சமில்லை', உயரத்திலிருந்து உமிழப்படும் எச்சிலைக் கூட எதிரணியினர் இலவசம் என்று எடுத்துக்கொள்ளுவர்' என்று கருத்துத் தீ வைத்தனர். இந்த அறிக்கையில் முதலில் வாசிக்கப்பட்ட கவிதையும் இவர்களின் குரலே.
அடுத்து பேசியது பட்டிமன்ற நடுவர் பேரா.சுந்தரவள்ளி. இவர் இல்லாத பட்டிமன்ற மேடைகளைத் தமிழகத்தில் பார்ப்பது அரிது. 99 சதவிகிதப் பெண்கள் இரத்த சோகையினால் அவதிப்படும் இந்தநாட்டில் கருவுற்றப் பெண்களுக்கு 6000 ரூபாய் என்பது நிச்சயம் ஓர் அற்புதத்;திட்டம் என்று சிறந்த திட்டங்களின் பட்டியலோடு ஆரம்பித்த இவர் 'இலவசக்கல்வி என்பது இலவசத்திட்டமல்லளூ அரசின் கடமை', மனிதனை மழுங்கடிக்கும் தொலைக்காட்சி பெட்டி' 'நவீனத்தீட்டாக ஒதுக்கப்படும் சேரி மக்கள்', 'நிலப் பண்ணைகளுக்கு மட்டுமே பயன்பட்ட விவசாயக்கடன் நீக்கம்', 'நகல் எடுக்க மட்டுமேப் பயன்படும் பொது வினியோக அட்டைகள்' என்று இலவசங்களின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு, இலவசங்களைத் தள்ளுபடி செய்வோம், உரிமைகளுக்காகப் போராடுவோம் என்றுத் தன் தீர்ப்பினைக் கூறினார்.
தீர்ப்பு தான் நினைத்தது போலவே அமைந்துவிட்டது என்பது போன்ற மகிழ்ச்சியை முகத்தில் காட்டி, வகுப்புத் தலைவர் செல்வம். நன்றி நவிழ, மன்றப்பண்ணுக்காக எழுந்து நின்றது அரங்கம்.
இளந்தமிழில், இனியக்குரலில் 'இப்படித்தான் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க வேண்டும்' என்று பெரு ஊடகங்களுக்குப் பாடம் நடத்துவதாய் அமைந்திருந்தது நண்பர்கள் பன்னீர், ரினால்டோ ஆகிய இருவரும் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்த விதம். இதம்.
நிகழ்ச்சி தயாரித்த தாமிரபரணி குழுவினரை மகிழ்ச்சியோடு நினைத்துப்பார்க்கிறது 'தமிழ்மன்றம்'.
நன்றி!
நன்றி!
என்றும் தோழமையுடன்,
செயலர்
ம.ஆன்றனி பிரான்சிஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக