ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

வெளியே ஒலிக்கட்டும் மனதின் குரல்: 1 (Let's speak out)


நாம் மனிதர்கள். மனதால் வாழ்பவர்கள்! இந்த மனது என்ற ஒன்றுதான் நம்மை இயக்குகிறது. மனதின் விதை வேண்டுமானால் நம் படைப்பிலேயே இருக்கலாம். ஆனால் இன்று நாமாக நாம் நினைக்கும் நம் மனது காலப்போக்கில் வளர்கிறது. காலத்தாலும், கல்வியாலும், இடத்தாலும், பொருளாலும் தன்னையேப் புதுப்பிக்கின்றது. இந்த மனது உருவாக்கத்தில் சமூகமும், சட்ட திட்டங்களும் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த மனதைக்கொண்டே சரி, தவறு, இன்பம் தருவது, துன்பம் தருவது போன்ற நீதி நியாயங்களைக் கற்பித்துக்கொள்கின்றோம். இந்த மனதுருவாக்கம் மனிதன் இணைந்து வாழ்வதற்கு இசைவான ஒத்தமைவுகளை உருவாக்கி தனி மனிதனை சமூக மனிதனாக்குகின்றது.

ஆயினும் தனி மனிதன் தன் சொந்த  அனுபவங்களின் மூலம், வாசிப்பின் மூலம், சந்திக்கும் நபர்களின் மூலம் தனக்கென்று ஒரு தனிமனதினை உருவாக்கிக் கொள்கிறான். அந்தத் தனி மனது தனக்கான முதன்மைகளை உருவாக்கிக்கொள்கிறது. எதிர்வரும் எல்லாவற்றையும் தன் முதன்மைகளின் கண்கொண்டே புரிந்துகொள்கிறது. அதற்கேற்பவே எதிர்வினையாற்றுகிறது.

தனியாக அமர்ந்திருக்கும் போது தனக்குள்ளே தனி மனதும், ஒரு சமூக மனதும் மோதிக்கொள்ளும் சிற்றொலியைக் கேட்கிறான். தனி மனதின் முதன்மைகளால் சமூக மனதைச் சாடுகிறான். தனது முதன்மைகளுக்கு நியாயம் கூறும் எல்லாத் தரவுகளையும் திரட்டுகிறான். இதனை அறிவு என்னும் கருவியால் செய்கிறான். சேகரித்தத் தர்க்கங்களைக் கொண்டு பொது மனதைக் கடுமையாகச் சாடுகிறான். சிற்றொலி நாளடைவில் பேரொலியாக மாறி மனதிற்குள் எப்போதும் ஒரு இரைச்சலைக் கேட்கிறான்.

எடுத்துக்காட்டாக நம் சமூகம் அல்லது மிகப்பெரும்பாலானோர் சாதியை ஏற்றுக்கொள்கின்றனர். தனி மனது அதை ஏற்றுக்கொண்டால் அங்கே குழப்பமில்லை. ஆனால் தனிமனது அதை அறவே மறுக்கின்ற போது இரண்டு விளைவுகளை எதிர்பார்க்கலாம். ஒன்று சமூகத்திற்காக தனிமனதோடு சமரசம் செய்து கொண்டு வாழையடி வாழையாக வாழ்வது. இன்னொன்று உள்ளொலிக்கும் குரலைத் துணிச்சலோடு வெளிப்படுத்துவது. குரவளையைச் சமூகம் கடித்துக் குதறும் அபாயம் அறிந்தும் சமரசம் செய்யாதக் குரலாக ஒலிப்பது.

அப்படிப்பட்டக் குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கி பெரும் போராட்டமாக உருவெடுத்து கடைசியில் சமூகம் தன் மனசாட்சியை மாற்றி எழுதிய பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும். இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடுஞ்செயல்கள் தனிமனிதர்களின் குரலால், போராட்டத்தால், தியாகத்தால் இன்று இல்லாமல் போன நல்வரலாறும் நாம் அறிந்ததே!

ஆனால் அக்குரல்களை அதிகாரம் கொண்டிருப்போர் தங்கள் அதிகாரத்திற்கு எதிரானதாகப் பார்க்கின்றனர். உரக்க ஒலிக்கும் முன் ஒழிக்கப்பார்க்கின்றனர். ஒருகாலத்தில் அக்குரலுக்கு உரிய ஒருவனைச் சிலுவையில் ஆணியால் அறைந்தனர். நடுவீதியில் அக்குரல்களுக்குரியவர்கள் தீ வைக்கப்பட்டனர். பஜனை முடிந்து வந்த எலும்பும் தோலுமாக இருந்த ஒருக்கிழவனைத் துப்பாக்கியால் சுட்டனர். அவனை அழிப்பதல்ல நோக்கம். அவன் மனதின் குரலலை வெளியே ஒலிக்காமல் செய்வது. ஆனால் சிலுவைகளுக்குப் பின்னும், துப்பாக்கிகளுக்குப் பின்னும் உண்மையின் குரல்கள் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக