சாதி! ஒரு சிறிய வார்த்தைதான்! ஆனால் இச்சாதியின் பெயரால் நிகழும் அநியாயங்களையும், அக்கிரமங்களையும் ஆயிரத்தில் ஒரு பங்கை எழுதினாலே பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். ஒரு சமூகமாக சாதியின் கொடுமைகளில் பலவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தாண்டி வந்திருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லைதான். ஆயினும் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு நம் கண்களுக்கு எட்டாத நெடுந்தொலைவாக இருக்கிறது என்பது மிகவும் திகைப்பூட்டுகின்றது. அண்ணல் அம்பேத்கார் என்னும் பேரறிவுச்சுடரால் வார்க்கப்பட்ட நம் அரசியல் சாசனம் வர்க்கப் பேதங்களைத் தண்டனைக்குரியக் குற்றச் செயல் என்று வரையறை செய்ததே ஒட்டுமொத்த தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் இறுகிக் கிடந்த சாதிய அழுக்கை அழுக்கு என்று அடையாளம் காட்டியது எனலாம். தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு மனிதநேயமற்றச் செயல் என்று நம் பாடப்புத்தகங்களிலே அச்சிடும் அளவு நாம் முன்னேறியிருக்கிறோம் என்றால் அம்பேத்கருக்கு முன்னும், பின்னும் தேசம் முழுதும் எழுந்த மனசாட்சியின் குரல்களுக்கு நாம் நிறையவே கடமைப்பட்டுள்ளோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தைப் பெரியாரே பகுத்தறிவு பகவன். அவரது ஒளியை உள்வாங்கி உதித்த திராவிட இயக்கங்களும் தமிழகத்தில் சமத்துவத்தை உருவாக்க நிறையவே பங்களிப்பு செய்துள்ளார்கள். தந்தைப் பெரியாரின் குரல் ஒரு புரட்சியாளனின் குரலாக ஒலித்தது என்றால், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தங்கள் அரசியல் அதிகாரங்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விளக்கேற்றினார்கள். சமூகத்தின் அடித்தட்டில் பிறந்தாலும் தன்னெழுச்சியாகப் போராடித் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொண்டதோடு 69 சதவிகித இடஒதுக்கீடு, சமத்துவபுரம் போன்ற அரசியல் காய்நகர்த்தல்களினால் சாதிய சக்திகளின் பேரரக்கனாக விளங்கியவர் கலைஞர்.
ஆயினும் சாதிப் பேய் ஒழிந்ததா? அது ஒரு வடிவில் அழிந்தாலும் மறுவடிவில் தக்கவைக்கப்படுகிறது. சாதியைப்பற்றி பொதுவெளியில் பேசுவதற்கும், சாதி அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதற்கும் நாம் தயங்குகிறோம். ஆனால் சாதிக்கொரு கோவில், சாதிக்கொரு சுடுகாடு இருப்பதை மிகவும் சகஜமாக எடுத்துக்கொள்கின்றோம். உன்னிடம் தீண்டாமையைக் காட்டிக்கொள்ள மாட்டேன்; ஆனால் உன்னைத் தீண்டவும் மாட்டேன் என்னும் அளவுதான் சாதியை நாம் கடந்திருக்கிறோம். சாதியைக் கட்டிக்காப்பது மதம் என்பதால்தான் தந்தை பெரியார் கடவுள் மறுப்பைக் கையில் எடுக்கிறார். ஆனால் மதத்தை விட அதிகமாகச் சாதியைத் தாங்கிப்பிடிப்பது நம் திருமண முறை என்பதே என் கருத்தாகும்.
உலகில் எங்குமே (எனக்குத் தெரிந்து) பிள்ளைகளுக்கு பெற்றோர் வரன் பார்ப்பதில்லை. தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்கள் பெற்றோருக்கு விட்டுக்கொடுப்பதில்லை. இரு அன்புகொண்ட உள்ளங்கள் இணைந்து வாழ சமூகத்தின் சாட்சியாக ஒப்பந்தம் செய்வதே திருமணம் ஆகும்.! நம் ஊர் திருமண வாழ்த்துப் பதாகைகளில் மட்டுமே அன்பு, காதல், 'இணைந்தது இருமணம்! வாழ்த்துவது அன்பு மனம்' போன்ற கவித்துவங்களைப் பார்க்க முடிகிறது. உண்மையிலேயே அன்பின் வாழ்நாள் ஒப்பந்தமாக இருக்க வேண்டிய திருமணங்களை முதலில் நிர்ணயிப்பது சாதியாகத்தான் இருக்கிறது. அதன் பின்னர் பொருளாதாரம். அதன் பின்னர் மதம், கவுரவமானக் குடும்பம் போன்ற இன்னபிற இத்யாதிகள்! அன்பு!? அது எங்கேப் போய்விடப் போகிறது? திருமணத்திற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்! சாதி தீர்மானிக்கும் திருமணமே, சாதியின் இருப்பையும் தீர்மானிக்கிறது. இன்னும் சாதியத்திருமணங்கள் அவசியம் தானா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக