இன்னும் இரண்டு நாளில் கிறிஸ்மஸ் பண்டிகை. இரவு பூசைக்கு முன்பாக கோவில் கொடியேற்றி 1 ஆம் தியதி மாதாவுக்கு தேர் எடுத்து திருநாள் கொண்டாடுவது ஊர் வழக்கம். தெருவெங்கும் அலங்கார வளைவுகளும், வண்ண வண்ண விளக்குகளுமாக ஊரே களைகட்டத் தொடங்கியிருந்தது.
அசிசி மட்டும் எதிலுமே மனம் ஒன்றாமல் படுத்திருந்தான். பகலிலும் கதவு, சன்னலைச் சாத்தி கும்மிருட்டில் தூங்குவதே அவனது பழக்கமாகிவிட்டது. கம்யூட்டர் இஞ்சினியரிங் முடித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. முடித்துவிட்டான் என்று சொல்ல முடியாது. மூன்று முறை முயன்றும் இன்னும் ஒரு தாள் அரியர் வைத்திருக்கிறான். இருட்டில் துழாவி செல்போனை எடுத்து அழுத்தி மணி பார்த்தான். மணி மதியம் 2.50 ஆகியிருந்தது. திடீர் வெளிச்சத்தில் கண்கள் கூசி நீர் பெருகியது.
கதவு தட்டும் சப்தம் கேட்டது. இரண்டு மூன்று முறை தட்டிவிட்டு நிறுத்திவிட்டால் எழும்ப வேண்டாம் என்று அமைதியாக இருந்தான். காதைக் கூர்மையாக்கி யார் என்பதை யூகிக்க முயற்சி செய்தான். கோவிலில் 'யேசு ராஜா வந்திருக்கிறார்' என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. 'வந்த ஆள் போயாச்சு' என்று நிம்மதியாக உணர்ந்தான். தனது இரண்டு வயதுத் தாடியைப் பிடித்து நீவி விட்டான். கடுமையாக பசி எடுக்கவே, காலையில் ஆலி பாட்டி கொண்டு வந்த இட்லி மீதம் இருக்கிறதா என்று யோசனையில் ஆழ்ந்தான்.
அதற்குள் வாட்சப்பில் பிரிட்டோவின் அழைப்பு வெளிச்சத்தை மின்னி அதிர, ஆள்காட்டி விரலால் அலைப்பேசியின் தொடுதிரையை வலப்பக்கமாகத் தடவி 'சொல்லுடா நண்பா' என்றான். 'டேய் அசிசி! கதவ திற! நான் வாசலில் தான் நிக்கிறேன்' என்றான் பிரிட்டோ. இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டிலிருந்து நேற்றுதான் ஊருக்கு வந்திருந்தான். இருவரும் ஒன்றாம் வகுப்பு முதல் இஞ்சினியரிங் வரை ஒன்றாக படித்தவர்கள். பிரிட்டோ படிப்பில் கெட்டிக்காரன். தற்சமயம் பக்ரைனில் ஒரு பெரிய கம்பெனியில் மானேஜராக இருக்கிறான். 'அசிசி! நீ மட்டும் அரியரை முடித்தால் எனது கம்பெனியிலேயே வேலைக்கு எடுத்துக்கொள்வேண்டா நண்பா! தயசு செஞ்சு எக்சாம் கிளியர் பண்ணுடா!' என்று எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருப்பான்.
வேகமாகக் கைலியை இடுப்பில் சரி செய்துவிட்டுக் கதவைத் திறந்தான் அசிசி. மகிழ்ச்சியில் கட்டித் தழுவிக் கொண்டனர். தனது நண்பனுக்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த கைக்கடிகாரத்தை எடுத்து அசிசியின் கையில் கட்டிவிட்டுக்கொண்டே 'கிளம்பு! வெளியே போறோம்' என்றான் பிரிட்டோ. முகத்தைக் கழுவித் துண்டால் அழுத்தத் துடைத்து, வழக்கமான கறுப்பு ஜீன்ஸ், நீல சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே பிரிட்டோவின் பைக்கின் பின்னால் ஏறி அமர்ந்து 'எங்கே போலாம்' என்றான். 'வந்துதான் பாரேன். நான் உன்னை நல்ல இடத்துக்கு மட்டும்தான் கூட்டிட்டு போவேன்' என்றபடியே ஆக்ஸிலேட்டரை உறுமினான். ஐந்து நிமிடத்தில் வண்டி பங்கு மேடையின் அருகில் நின்ற புன்னை மர நிழலில் நின்றது.
பங்குத் தந்தை கிழவர் ஃபாதர் கையில் தீர்த்த செம்புடன் நின்று கொண்டிருந்தார். 'பிரிட்டோ! நீங்க டீக்கன் பிரதரைக் கூட்டிட்டு உங்க அன்பியம் போயிடுங்க! நானும் உங்க நண்பரும் ஏழாம் அன்பியம் போறோம்' என்றார்.
நண்பனின் பேச்சைக் கேட்டு வந்தது ரொம்ப தவறு என்று மனதிற்குள் நினைத்தான். ஃபாதர் சாப்பிடச் சொன்ன போதுதான் வயிறு பசி மீண்டும் ஞாபகம் வந்தது. நண்பன் தனக்காக வாங்கி வந்த வாட்சை இப்போது மிகவும் ரசித்துப் பார்த்தான். மணி 3.30 ஆகியிருந்தது.
'நான் இப்பதான் டவுனுக்கு போய்விட்டு வந்தேன். ஊர்த் தலைவர் வீட்டிலிருந்து இன்னைக்கு சாப்பாடு! பிரியாணி சாப்பிடுவீங்கதானே?' பரிமாறிக்கொண்டே பேசத் தொடங்கினார் ஃபாதர். 'என்ன தம்பி! எவ்வளவு நாள் தான் இப்படி அறைக்குள்ளேயே இருப்பீங்க?' அசிசி பதில் எதுவும் சொல்லவில்லை. அப்பாவின் நினைவு வந்தது. வேகமாக எழுந்து கிச்சன் வாசிலில் இருந்த வாளியைச் சரித்து கையைக் கழுவினான். 'எனக்கு ஏழாம் அன்பியத்தில் யாரையுமே தெரியாது. நான் கிளம்புறேன் ஃபாதர்' என்றான். 'தம்பி இன்னைக்கு ஒரு நாளும் என் கூட வாங்க! அதன் பிறகு உங்க விருப்பம்' என்று சொல்லிக் கொண்டே அவரும் சாப்பாட்டை முடிக்காமலே கையைக் கழுவினார்.
வாசலிலேயே ரெஜினா அக்கா காத்திருந்தார்கள். மூவருமாகக் நடக்க ஆரம்பித்தார்கள். தெரிந்தவர்கள் யாரையும் பார்த்துவிடக்கூடாது என்று கவனமாக இருவருக்கும் பின்னால் நடந்தான். எல்லோரும் தன்னையே பார்ப்பது போல இருந்தது அவனுக்கு. சொகுசான இடத்திலிருந்துதான் எத்தனைக் கேள்விகள்! 'இன்னும் வேலைக்கு போகலையா? இப்படியே எவ்வளவு நாள் இருக்கப் போற? இவனுக்குலாம் சோறு குடுக்கிறாளே அந்தக் கிழவியைச் சொல்லணும்.'
'இதுதான் முதல் வீடு. இங்கிருந்தே ஆரம்பிச்சா டீக்கடையோடு ஏழாம் அன்பியம் முடிஞ்சிரும்' என்ற ரெஜினாளிடம், 'நீ வீட்டுக்குள்ளே போய் ஊரு கதையெல்லாம் பேசாம இருந்தா வேகமா முடிச்சிரலாம்' என்றார் ஃபாதர். இப்போதே முகத்தில் வியர்க்கத் தொடங்கியிருந்தது.
'பையன் யாரு? புதுசா இருக்கான்' என்று எல்லா வீட்டிலும் ரெஜினா அக்காவிடம் விசாரித்தார்கள். 'கீழத்தெரு ஆட்டோக்காரர் பையன். பேரு அசிசி' என்று சொன்னவுடன் கையைப் பிடித்துக்கொண்டு 'இந்தக் காலத்துல அப்படி ஒரு நல்ல ஆள நான் பார்த்ததே இல்லை தம்பி! அவரு பிள்ளையா நீங்க! நல்லாயிருங்க!' கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் சொல்லிவிட்டார்கள். மந்திரிப்பு முடியும் போது எட்டு மணி ஆகியிருந்தது. ரெஜினா அக்கா அவரது வீடு வந்ததும் ஓடிச்சென்று ஒரு பையை எடுத்துக்கொண்டு வந்து ஃபாதரிடம் கொடுத்து காலையில் வருவதாகச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
தெருவில் ஆங்காங்கே 'ஃபாதர் போராரு! கூடவே அசிசியும் போறான்!' என்று சொல்வது அவனது காதில் விழுந்தது. இருப்பினும் தான் நினைத்த அளவு மோசமாக எதுவும் நடக்க வில்லை என்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தான். மேடையின் முன் டீக்கன் பிரதரும், பிரிட்டோவும் நின்றுகொண்டிருந்தார்கள். புதிதாக இரண்டு ஸ்டார்கள் வாசலில் மின்னிக் கொண்டிருந்தது. ஒரு பத்து பதினைஞ்சு சிறுவர்கள் குடிலைச் சுற்றி தொலைக்காட்சி விவாத அரங்கம் போல ஏதேதோ சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
டி.வி அறையில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஐந்து நட்சத்திர விடுதியின் பஃபே போல நீண்ட மேசை நிறைய உணவு வகைகளால் நிறைத்திருந்தார்கள். என்ன நடக்கிறது என்பது போல பிரிட்டோவைப் பார்த்தான். 'கிறிஸ்மஸ் இரவில் எல்லோரும் பிசி. இன்னைக்கு நீயும் வந்திருப்பதால் ஃபாதர் இன்றே கிறிஸ்மஸ் டின்னர் ஏற்பாடு செய்துவிட்டார். இவங்க எல்லோரும் ஆதரவற்ற சிறுவர்கள்' என்றான் பிரிட்டோ.
சிறுவர்களின் சத்தம், விளையாட்டு, கிறிஸ்மஸ் விருந்து என்று அசிசி இப்படி ஒரு நாளை எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பத்து மணி இருக்கும். விருந்து ஐஸ்க்ரீம் வரைக்கும் வந்திருந்தது. ஃபாதர் அவனை தனியாக அவரது அறைக்குள் அழைத்துச் சென்றார். என்ன என்பது போலப் பார்த்தான் அசிசி.
'தம்பி! உங்க அப்பா நிறைய பணம் சம்பாதிக்கலனாலும் நிறைய மனிதர்களைச் சம்பாதிச்சிருக்காரு. கொஞ்ச வருமானத்திலயும் நிறைய பேருக்கு உதவி செஞ்சிருக்காரு. சின்ன வயசிலேயே உன் அம்மாவை இழந்துட்டாலும் திரும்ப கல்யாணம் கூட பண்ணிக்காம உனக்கு தாயும், தகப்பனுமா இருந்தாரு அந்த மனுசன். அவரு இறந்தது உண்மையிலேயே துரதிஸ்டம் தான். ஆனா இரண்டு வருசமாகியும் நீ இப்படி வீட்டை பூட்டிக்கிட்டு உள்ளேயே இருந்தா நியாயமா? அதனாலதான் இந்த ஊரு அன்னம்மாள் சிஸ்டர்ஸ் நிறைய பேருகிட்ட உதவி கேட்டு இந்த தொகைக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நீ இத தர்மமா நினைக்க வேண்டாம் தம்பி! கடந்த முப்பது வருசமா இந்த ஊரு ஃபாதர், சிஸ்டர்ஸ் கிட்ட சவாரிக்கு அவரு காசு வாங்கினதே இல்ல! இது உங்க அப்பாவோட சொத்து' என்று சொல்லிக்கொண்டே ரெஜினா அக்கா கொடுத்த பையைத் திறந்து பணத்தை எண்ணினார். இருபத்தைந்து புதிய இரண்டாயிரம் நோட்டுக்கள். அசிசியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வடிந்தது. ஃபாதர் அவனது தோளைத் தொட்டதும்தான் தாமதம் அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு 'அப்பா! அப்பா! அப்பா!' என்று கதறினான். இரண்டு வருட அழுகையையும் மொத்தமாக அழுதான்.
மறுநாள் காலை பிரிட்டோ தனது பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்தான். ஃபோன் ஒலித்தது. 'சொல்லுடா அசிசி! எப்படி இருக்க? நைட் நல்லா தூங்கினியா?' என்றான். 'ஹலோ! பிரிட்டோ! என்கூட வரமுடியுமா? அப்பாவின் ஆட்டோவை ஒர்க்சாப்பில் விடனும். வரும்போது சிஸ்டம் சாப்ட்வேர் புக்ஸ், கிளாஸ் நோட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா! கிறிஸ்மஸ்-லிருந்து ஆட்டோ ஓட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்! ஏப்ரல் மாசம் எக்சாம் கிளியர் பண்ணிடுவேன்னு நினைக்கிறேன்! அதன் பிறகு கடவுள் பாத்துக்குவாரு பிரிட்டோ......!' பிரிட்டோ மிகுந்த மகிழ்ச்சியோடு அசிசியின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.
சுமைகளை சுமப்போரே! சோர்ந்து போனோரே!முடியாது என்று முடங்கிவிட்டீரோ!இனி விடியாது என்று நொடிந்துவிட்டீரோ!எல்லோரும் வாருங்கள் என்னிடம்! நான் இளைப்பாற்றுகிறேன்!காற்று விரும்பிய திசையில் வீசுகிறது!தூய ஆவியில் பிறந்தோர் யாவருக்கும் இது பொருந்தும்!என்றார் நம் ஆண்டவர் இயேசு!ஆம் நண்பனே! உனக்குத்தான் சொல்கிறேன்!குணப்படுத்த முடியாத காயங்களும்அழகுபடுத்தப்பட முடியாத அசிங்கங்களும்திருத்தி எழுதப்பட முடியாதத் தீர்ப்புகளும்இறையரசில் இல்லை!
Kathaiyaasiriyarukku manam niraindha Vaalthukkal...ennathilum eluththilum muthirchi therikirathu.. Thodarndhu aarvamum muyarchiyum selikka vaalthukiren
பதிலளிநீக்குVanakm Fr. Do you remember us?
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்கு