நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். பதின் பருவத்தின் நுழைவு வாயில். சாதாரணமாக எதிர் பாலின ஈர்ப்பு தொடங்கும் ஒரு வயது. எங்கள் பள்ளி இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்த போதிலும், ஆண், பெண் நட்பு பாராட்டுதல் முற்றிலும் பழக்கமில்லாத ஒரு காலகட்டம். அரசு பள்ளியாயிருந்த போதும் மாணாக்கர் எண்ணிக்கையின் காரணமாக ஒவ்வொரு வகுப்பும் ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஏ பிரிவு ஆண்கள் மட்டும், பி பிரிவு பெண்கள் மட்டும், சி பிரிவு ஆண்-பெண் இருபாலருக்கும் என்ற விகிதமுறையானது இப்போது வரையிலும் என்னால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. அறிவுப் பெருந்தகையினரின் ஒப்பற்ற தீர்க்கத்தரிசனங்களைப் புரியாமலே வியக்கிறேன்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்த வினைப்பயனோ என்னமோ தெரியவில்லை! எனக்கு ஏழு-ஏ தான் கிடைத்தது. விரும்பத்தகாத ஒரு பிரிவு. வருணாசிரம தருமத்தின் அடிப்படையில் ஏ பிரிவுதான் சூத்திரர்களுக்கு அடுத்து வரும் கீழ் அடுக்கு. சரியான சேவல் பண்ணை. கரடுமுரடுகள் கல்விபயிலும் ஏ பிரிலும், கவித்துவத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லாத அப்பாலை நிலத்திலும் காதல் முளைத்தது. ஏழு-சி பயின்ற அந்தக் குழந்தையோடு (12 வயது சட்டப்படி பச்சைக் குழந்தை) டியூசன் படிக்கும் நண்பனிடம் எனக்கு அந்தக் குழந்தையைப் பிடிக்கும் என்றும், அந்தக் குழந்தைக்கு என்னைப் பிடிக்குமா? என்றும் கேட்டு வரச் சொன்னேன். மருந்துச் செடியின் பெயரை மறந்த அனுமான் மலையைப் பெயர்த்து எடுத்து வந்தது போல அவன் அதை எழுத்தில் பொறித்து அவளிடம் கொடுத்துவிட்டான்.
மறுநாள் காலை அந்தக் குழந்தை ஒரு துண்டுக்காகிதத்தோடு முத்தம்மாள் டீச்சரை நெருங்க 'எல்லாம் நிறைவேறிற்று' என்று என்னையே டீச்சரிடம் கையளித்தேன். 'உங்க அம்மாவிற்கு இப்படி ஒரு பையனா? உங்க அக்காவிற்கும், அண்ணனுக்கும் இப்படி ஒரு தம்பியா?' என்று கேள்வி-47 மூலம் துளைத்தெடுத்தார்கள். காட்டுத்தீயாய் இந்தச் செய்தி பரவியது. சில பழைய படங்களில் விபச்சாரக் குற்றம் சாட்டப்படும் பெண்ணைச் சுற்றி நின்று ஊர்வாய் பேசுவதை ஓசையின்றி காட்டுவார்களே! அது உண்மையாகவே அன்று நிகழ்ந்தது. அதற்கு நானே சாட்சி.
ஒரு சிறிய வயதில் நடந்த ஒரு சிறிய நிகழ்வுதான். ஆனால் நிரந்தரத் தழும்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் அதற்கு இருந்தது. காதலைப் பற்றி எழுத வேண்டும் என்று சில நாட்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்காகத் தான் இந்த முன் கதைச் சுருக்கம்.
சமீபத்தில் இரண்டு தமிழ்ப் படங்களைப் பார்த்தேன். பரியேறும் பெருமாள் மற்றும் 96. சாதிய நோய் தொற்றியிருக்கும் சமூகம் காதலைப் பார்த்து எபோலாவை விட அதிகமாக அஞ்சுகிறது. அதனால் தான் அதனை உடனே நசுக்கிவிடத் துடிக்கிறது. காதலை அழிப்பதைத் தெய்வத்திற்கு செய்யும் தொண்டாகக் கருதுகிறது. மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவு ஒபாமா என்னும் கறுப்பினத்தவர் அதிபரான போது ஓரளவேனும் நிறைவேறியது போல, காதலுக்குத் தடை சொல்லாத தமிழ்ச் சமூகம் உருவாக இன்னும் எத்தனை தலைமுறைகள் நாம் காத்திருக்க வேண்டும்? காதலுக்கு எதிரான சமூக வன்முறைகளை புறநானூற்றின் போர்க்களம் போல வலியோடும், வலிமையோடும் ஆவணப்படுத்தியப் படம் பரியேறும் பெருமாள்.
96 ஒரு பதின் பருவக் காதலின் நினைவுகளை மென்மையாக அசை போடவைத்தது. அசைத்துப் போட்டது என்றும் சொல்லலாம். சொல்லத் துணிவில்லாமல், வெல்ல வழியில்லாமல், பெற்றோரைக் காயப்படுத்தக் கூடாது என்று, அக்காள்-தங்கையைக் கரை சேர்க்க என்று ராம்-களாலும், ஜானகிகளாலும் நிரம்பி வழிகின்றன நம் ஊரின் காதல் கதைகள். 96 ஒரு வலி(மை)மிகு அகத்துப் பாடல்.
திருமணத்தில் நிறைவேறாத இரண்டு காதல் கதைகளை இப்படங்கள் அற்புதமாகக் காட்சிப்படுத்தின. காதல் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் திருமணங்களில் கட்டாயம் காதல் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக நம்புகிறேன்.
நம் ஊரின் திருமணங்கள் விசித்திரமான பலவற்றை நம்புகிறது. சொந்த சாதியில் இருக்க வேண்டும். சாதகம் பொருந்த வேண்டும். சொத்து, பணம், வேலை வேண்டும். மிகவும் பக்கத்திலும் இல்லாமல், மிகவும் தூரத்திலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று திருமண தேர்வுக்கான எல்லைகளை ஒரு தீப்பெட்டி அளவில் சுருக்குகிறது. 27 அல்லது 29 என்ற ஒற்றைப்படை வயதில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம். குழந்தை திருமணங்கள் தான் ஒழிக்கப்பட்டுள்ளன. ஆனால் குழந்தைத் தனமானத் திருமணங்களை ஒழிப்பது பற்றி யாருக்கும் அக்கறையில்லை. எங்கு பார்த்தாலும் அழுகையும், அங்கலாய்ப்புமாக இருக்கின்றன. ஏன் இதைப் பற்றி நாம் பேச மறுக்கிறோம்?
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 1000 ஆவணக் கொலைகள் நடப்பதாகவும், வருடந்தோறும் இதன் எண்ணிக்கை 796 சதவிதம் அதிகரிப்பதாகவும் தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுபோக விபத்தாக, தற்கொலையாக குருதி சிந்தியக் காதலர்கள் எத்தனைபேரோ?
அப்படி மார்ச் 13, 2016 அன்று உடுமலைப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிகவளாகத்தின் வாயிலில் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டவர்தான் சங்கர். தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர்தப்பியவர் அவரது காதல் மனைவி கவுசல்யா. கூலிப்படையை ஏவிக் கொன்றது கவுசல்யாவின் தந்தை என்னும் மனிதநிலைக்கு இன்னும் பரிணாம வளர்ச்சி பெறாத ஒரு மிருகம். அந்தக் கொலைக்கு ஆதரவாக எத்தனை சாதிய மிருகங்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் குரூரக் குரலை எழுப்புகின்றன என்பதைப் பார்க்கும் போது, நம் சமூகத்தில் வாழ்வதை விட வடக்கு சென்டினல் தீவே பாதுகாப்பானது என்று கருதுகிறேன்.
கடைசியாக ஒரு நல்ல செய்தியோடு முடிக்கிறேன். எதிர்காலத்திற்கான எல்லா வெளிச்சங்களையும் பறிகொடுத்தப் பிறகும் இனி இருந்தென்ன என்று முடங்கிவிடாமல் சாதியக் கொடுமைகளுக்கெதிராக இந்தியா முழுமைக்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது அன்புத் தங்கச்சி கவுசல்யாவின் குரல். சங்கர் சமூகநீதி அறக்கட்டளை மூலம் ஆவணக்கொலைகளுக்கெதிராக தனிச்சட்டம் வேண்டி சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 9-12-2018 அன்று பறையிசைக் கலைஞரான சக்தி என்பவரை தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து சாதிமறுப்பு மறுமணம் செய்து கொண்டார். கொலையுண்ட சங்கரின் பாட்டி மாலை எடுத்துக்கொடுக்க, அவரது குடும்பத்தாரின் நல்லாசீரோடு இத்திருமணம் நிறைவுற்றது என்று பத்திரிக்கையில் வாசித்த போது கண்களில் நீர் கசிந்தது. நெஞ்சம் நெகிழ்ந்தது. நம் மண்ணில் இதைச் சாத்தியப்படுத்திய பெரியார்களின் கரங்களை இறுகப் பற்றி என் நன்றி நிறைந்த வணக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'சாதி ஆணவத்தால் தனது காதல் இணையரை இழந்ததை தனது சொந்த சோகமாக மட்டும் சுருக்கிப் பார்க்காமல் சமூகக் கட்டமைப்பு தான் இதற்குக் காரணம் என்று செயல்பட்டு வந்த சகோதரி கவுசல்யா - பறை இசைக் கலைஞர் சக்தியை வாழ்வு இணையராக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அறிந்து மகிழ்கிறேன். இந்நிகழ்வை உடுமலை சங்கரின் தந்தையும் தம்பியும் பாட்டியும் பங்கேற்றே நடத்தி வைத்திருப்பது கவுசல்யாவின் பொதுநோக்கத்துக்குக் கிடைத்த பாராட்டு. தமிழ்ச்சமூக வார்ப்புகளான கவுசல்யா - சக்தி இருவரும் இல்வாழ்விலும் சமூக வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். ஆயிரம் பணிகளுக்கு மத்தியிலும் சமூத்தின் கடைக்கோடியில் நல்லது ஒன்று கண்டாலும் உடனே பாராட்டும் அன்புத்தலைவர் கலைஞரின் பணியைத் தொடர்ந்து செய்யும் திரு.ஸ்டாலின் சாதிகளற்றச் சமுதாயத்தை உருவாக்க முனைப்புடன் செயல்பட வேண்டும். கவுசல்யா-சக்திக்கு அன்பு வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக