திங்கள், 5 அக்டோபர், 2020

யாவரும் கேளிர்!


கடந்த வாரம் புதன் கிழமை! ரோமிலிருந்து செரினோலா வந்து கொண்டிருந்தேன். மாடிப்பேருந்தின் மேல் பகுதியில் இடதுபுறம் ஒரு சன்னலோர இருக்கை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மதியம் 4 மணிக்கு பேருந்து திபுர்த்தினா நிலையத்திலிருந்து ஆமை தன் வீட்டைச் சுமந்துகொண்டு செல்வது போல அசைந்து நகரத் தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் பயணிகள் அமர வேண்டிய இருக்கையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வெண்ணிற உறையிட்டிருந்தார்கள். பக்கத்து இருக்கையைக் காலியாக விட்டிருந்தார்கள். 

பேருந்து அவ்வப்போது பெருமூச்சு விட்டுக்கொண்டு முன்னோக்கி விரைந்துகொண்டிருந்தது. அப்பொழுதுதான் கவனித்தேன். எனது முன் இருக்கையில் ஒரு நபர் தொடர்ந்து இருமிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட உறையிடப்பட்ட இருக்கையில் அமராமல் சன்னலோரத்தில் சாய்ந்து கொண்டு, இருமும் போது மட்டும் அந்த இடுக்கில் முகத்தை என் பக்கம் திருப்பிக்கொள்வார். பார்ப்பதற்கு பங்களாதேசி போலிருந்தார். அவரிடம் மெதுவாக "ஸ்கூசி, ஸ்கூசி" (மன்னிக்கவும்! மன்னிக்கவும்) என்று பவ்யமாகக் கூப்பிட்டு, வலது பக்கத்தில் உறையிடப்பட்ட இருக்கையில் இருக்குமாறு கூறினேன். முதலில் நான் சொல்வது காதில் விழாதது போல அப்படியே இருந்தார். பிறகு வேகமாக ஒரு யூ-டர்ன் போட்டுத் திரும்பி, "உன் வேலையைப் பார்த்துக்கொண்டு இரு" என்றார். "இல்லை தாங்கள் செய்வது தவறு! நடத்துனர் பார்த்தால் திட்டுவார்" என்றேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. 

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் கூட விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று என்னுள் ஒரு சினம் எழுந்தது. நடத்துனரிடம் சென்று முறையிடப்போவதாச் சொன்னேன். யாரிடமும் சொல் என்னும் தொனியில் ஒரு சூயிங்கத்தைச் "சவுக், சவுக்"கென்று சவைத்துக்கொண்டே ஒரு ஏளனப்பார்வை பார்த்தார். எழுந்து சென்று படியிறங்கி, கீழே ஓட்டுநரிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த நடத்துனரை இடைமறித்து விவரத்தை சொன்னேன். அவரும் வந்தார். அந்த நபரிடம் கடுமையானக் குரலில் இருக்கையை மாற்றி அமருமாரு கூறினார். அதற்கு அவர், "நீங்கள்தான் எனக்கு கட்டளையிட வேண்டும்! அவனல்ல!" என்று திரும்பத் திரும்பக் கூறினார். நடத்துனர் கடுப்பாகி "அவர் செய்தது மிகச்சரி. நீ உடனடியாக இருக்கையை மாற்று! அல்லது இறக்கிவிடப்படுவாய்" என்றார். 

வேறுவழியில்லாமல் இடம் மாறி அமர்ந்துவிட்டு, "இப்ப உனக்கு மகிழ்ச்சியா? நாப்பொலியில் பார்த்துக்கொள்கிறேன்!" என்றார். நாங்கள் நாப்பொலி என்னுமிடத்தில் இறங்கி வேறு பேருந்து மாறவேண்டியிருந்தது. திருட்டு, மிரட்டி பணம் பறித்தல், ரவுடியிசம் போன்றவற்றிற்கு பெயர் போன ஊர் நாப்பொலி. உடனடியாக இரண்டு மூன்று போன் பேசினார். கொஞ்சம் பயம் வந்துவிட்டது. எனது கைப்பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். மணி பர்ஸ் மற்றும் பிற டாக்குமென்டஸ் எல்லாம் லக்கேஜில் இருந்தது. நினைவுபடுத்திக்கொண்டேன்.

சிறிது நேர பயணத்திற்குப் பிறகு திரும்பி என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். "எந்த நாடு" என்றார். நான் பதில் சொல்லவில்லை. "போனில் தமிழில் பேசினாய் என்று நினைக்கிறேன். இலங்கையா?" என்றார். பயத்திலும், பதில் சொல்ல விரும்பாமலும் "ஆமாம்" என்றேன். உடனே அவர் "நானும் இலங்கைதான். ஆனால் தமிழ் இல்லை. நீ இலங்கையில் எந்த இடம்?" என்றார். நான் "கொழும்பு" என்றேன். அவர் ஏதோ ஒரு ஊர் பெயர் சொன்னார். நான் மிகவும் குழம்பிவிட்டேன். பின் "இத்தாலியில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்றார். நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து "உங்களிடம் என் தனிப்பட்ட விசயங்களைச் சொல்ல விரும்பவில்லை" என்றேன். அவர் "பயப்படாதே! பழையதை மறந்துவிடு! நாம் இருவரும் ஒரே நாட்டினர். அதனால்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என்ன வேலை செய்கிறாய்?" என்றார். "நான் சொல்ல விரும்பவில்லை. உன்னிடம் பணிவாகத்தான் சொன்னேன். ஆனால் உனக்குக் கட்டளையிட்டதாகப் புரிந்துகொண்டு தகராறு பண்ணினாய். ஆகவே உன்னிடம் பேச விரும்பவில்லை" என்றேன். பத்துநிமிடம் பேருந்து ஒரு தேநீர் விடுதியில் நிற்கும் என்று நடத்துனர் அறிவித்தார். 

கீழே இறங்கியதும் வாசலில் எனக்காக அந்த நபர் காத்திருந்தார். "காபி குடிக்கிறாயா?" என்றார். நான் காபி குடிப்பதில்லை என்று முறித்துப் பதில் சொன்னேன். கழிப்பறை பயன்படுத்திவிட்டு வருவதைப் பார்த்து அந்த நபர் "பேருந்திலேயே கழிப்பறை இருக்கிறதே" என்றார். "நான் இல்லை விடுதியில் சுத்தமாக இருக்கும்" என்றேன். அவர் ஆயிரம் பேர் பயன்படுத்தும் இடமா சுத்தமாக இருக்கும்? என்று ஏதேதோ பேச்சிழுத்துக்கொண்டே இருந்தார். நான் முகம் கொடுக்காமல் எனது இருக்கைக்கு வந்தமர்ந்தேன். 

நாப்பொலியில் பேருந்து மாறவேண்டும். கைப்பையை பலமுறை செக் செய்து தோளில் மாட்டிக்கொண்டேன். பேருந்தின் வயிறு திறந்திருந்தது. மறக்காமல் எனது லக்கேஜை எடுத்து, ஸிப் எல்லாம் சரியாக மூடியிருக்கிறதா? என்று செக் செய்து கொண்டு விறுவறுவென்று நடக்க ஆரம்பித்தேன். அந்த நபரும் என் பின்னாலேயே வந்தார். அடுத்த பேருந்தில் கீழறையில் லக்கேஜை வைத்துவிட்டு எனது இருக்கையில் வந்தமர்ந்தேன். இன்னும் இரண்டு மணி நேரப் பயணம். இரவு 9.10 மணிக்கு செரினோலா வந்தடைந்தது. 

மென் துயிலில் திளைத்துக்கொண்டிருந்த என்னை நடத்துனரின் கரகர குரல் எழுப்பிவிட்டது. இரண்டு மூன்று பேர்கள் மட்டும் தான் இந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியிருந்தது. சாலையில் மறுபக்கம் என்னை அழைத்துச்செல்ல சகோதரர் லூயிஜி நின்றுகொண்டு, என்னைப் பார்த்துவிட்டார் என்ற அர்த்தத்தில் கையசைத்துக்கொண்டிருந்தார். வேகமாக எழுந்து கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கினேன். அந்த நபரிடம் நான் விடைபெறவில்லை. ஒருவித அலட்சியத்தோடும், எரிச்சலோடும் முகத்தைத் திருப்பிக்கொண்டு பிசியான அந்த சாலையை சட்டென்று கடந்து காரில் ஏறிக்கொண்டேன். 

கார் கிளம்பவும் தான் நெஞ்சே அடைத்துவிடும் படி திக்கென்று நினைவுக்கு வந்தது. லக்கேஜ் எடுக்கவில்லை. லூயிஜி காரை நிறுத்தினான். தூரத்தில் பேருந்து இன்னும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியோடும், மறதியை நினைத்து வெட்கத்தோடும் ஓடினேன். அங்கு பேருந்து எனக்காக காத்திருந்தது. அந்த நபருக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. "இது என் சகோதரனின் பை. அவன் எப்படியும் வந்துவிடுவான். ஒரு நிமிடம் காத்திருங்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தான் அந்த பெயர் தெரியாத சகோதரன். 


4 கருத்துகள்: