சிறுவயதிலிருந்தே ஒரு நபரைத் தெரியும். ஒரு இந்து நண்பராகத்தான் அறிமுகம். ஆனால் மிகுந்த கால இடைவெளியில் தான் அவரை சந்திப்பதுண்டு. குருமடத்திலிருந்து விடுமுறைக்கு வரும்போது எங்கு பார்த்தாலும் நின்று பேசாமல் செல்ல மாட்டார். எப்போதும் ஒருவித ஆச்சர்யத்தோடும், தயக்கத்தோடும் நிறைய கேள்விகள் கேட்பார். அவரது பணிவான உடல்மொழியாலும், நம்மை வானதூதர் அளவுக்கு வைத்துப் பேசுவதையும் தாங்க முடியாமல் அவரைக் கண்டாலே ஓடிவிடுவதுதான் வாடிக்கையாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் போது அவரிடம் ஒரு தன்னம்பிக்கை ஒளி தென்பட்டதைக் கவனித்தேன். பழைய சமஸ்கிருதம் - தமிழ் கலந்த (தேவ பாசை) பைபிள் மொழியில் நிறைய வசனங்களைக் கூறி விளக்கம் கேட்டார். எந்தப் பதிலிலும் ஒரு திருப்தியற்று, சரி அதை விடுங்கள், என்று அடுத்தக் கேள்விக்குத் தாவினார். தப்பித்துப் பிழைத்தேன் என்று தான் ஞாபகம். கடந்த வருடம் இன்னும் மாறிவிட்டிருந்தார். வழியில் நிறுத்தி, தம்பி கொஞ்சம் நில்லுங்கள்! கர்த்தர் உங்களை அழைக்கிறார். நீங்கள் உடனே கிறிஸ்தவராக மாறவேண்டும் என்றார். ஒருமாதிரி முழித்தேன். கர்த்தருக்குள் நீங்கள் முழுக்கு ஞானஸ்நானம் பெற வேண்டும். சிலை வழிபாட்டை விட வேண்டும். சாத்தானின் பாதையிலிருந்து விலகி ஆவிக்குள் வர வேண்டும் என்றார். முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்டு வேறொரு ஆளாக நிற்கும் அந்த மனிதரின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்து வியந்துவிட்டேன்.
இதே மாற்றத்தை சீமானின் தம்பிகளாக மாறியிருக்கும் சில நண்பர்களிடம் பார்க்கிறேன். எல்லோருக்கும் ஒரு அரசியல் தரப்பு பிடித்தமானதாக இருக்கலாம். எனக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பது போல. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் தமிழ் இனத்தின் கட்சி என்றும், மற்றவை எல்லாம் வந்தேறிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மராத்தியர்கள் கட்சி என்று சொல்வதையும் எப்படி ஏற்றுக் கொள்வது? தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் 30 எம்.பி.க்களில் 39 பேர் தமிழர் அல்லாதவர் என்று ஒரு படித்த அண்ணன் சொன்னார். தங்கமான மனிதர். தேடிப்போனால் அவரே சமைத்து சாப்பாடு போடாமல் விடமாட்டார். ஏதாவது ஒரு ப்ரூப் காட்டுங்க என்று சீரியசான முகத்தோடு கேட்டேன். வாட்ஸ்-அப்பைத் திறந்து ஒரு அகல விரித்த கையோடு மைக் முன் நிற்கும் சீமானின் முகம் கொண்ட ஒரு மீம் எடுத்துக் காட்டினார். இப்போது அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். அவர் முகம் சட்டென்று மாறிவிட்டது. அவரது அரசியல் நிலைப்பாடு நன்றாகத் தெரியும் என்பதால் அவரோடு விவாதிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தும் சில வேளைகளில் காமெடியாகிப் போய்விடுகிறது.
இன்னொரு சொந்தக் கார மனிதரும் சில நாட்களாக முகநூலில் சீமானிசத்தில் திளைத்திருப்பதைக் கவனித்தேன். ஒரு நாள் அவர் பகிர்ந்த ஒரு உணர்ச்சிகர மீம்-க்கு கீழே சீமானைச் சிரிதாகக் கலாய்த்துவிட்டேன். வாட்சப்பில் பத்து மெசேஜ் அனுப்பினாலும் வேலைப்பளுவால் பதிலே வராது. ஆனால் அந்தக் கமெண்டுக்கு ஒரு பத்து முழத்திற்கு உணர்ச்சியைக் கொட்டியிருந்தார். அதோடு விட்டிருக்கலாம். நமக்கு சனி. அடுத்த நாளும் சீமானின் இன்னொரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் சீமான் தன் தம்பிகளுக்கு உணர்ச்சிப் பாலூட்டிக்கொண்டிருந்தார். ஒரே இரவில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மோடி அவர்களால் (மிகுந்த மரியாதையோடு) ஏன் ஒரே இரவில் சாதி இல்லை என்று அறிவிக்க முடியாது என்பது தான் சாரம். நான் கமென்டில் அது எப்படிங்க சாத்தியம்? வாயைத் திறந்தா பொய்! என்று எழுதினேன். (பிரபாகரன் அனுப்பிய 29 கிலோ ஆமைக்கறி, சீமானின் விருப்ப சாப்பாட்டைத் தெரிந்துகொள்ள பிரபாகரனால் நியமிக்கப்பட்ட ஒரு தனிச்செயலாளர் விடுதலைப் புலி- ஒளிஞ்சி இருந்து பாப்பாரு போல, காளிமுத்து காளிமுத்து-னு கூவும் ஆஸ்திரேலிய கிளி, அரிசி கப்பலைச் சுட்டு சுடப் பழகியது - சத்தியமாக இது எதுவும் எழுதவேயில்லை). கடைசியாக வாய்நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டது திமுக தலைவர் ஸ்டாலின் தான். சாரி சார். என்னால தானே எல்லாம்!
சீமானின் அரசியல் வரலாறே பத்து சொச்சம் ஆண்டுகள் தான். இதுவரையில் தமிழகத்தில் அவர் அடைந்திருக்கும் அரசியல் வெற்றி ஒரு வார்டு மெம்பர் மட்டுமே. ஆனால் அவர்தான் நாளையத் தமிழகத்தின் விடிவெள்ளி என்ற நம்பிக்கைக்கு ஒரு நபர் வர முடிகிறது என்றால் அதற்கு பின்னால் என்ன இருக்கிறது? உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். கூசாமல் பொய் சொல்ல வேண்டும்.
பின்குறிப்பு: சங்கிகளைப் பற்றி நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது? நீங்களே கனெக்ட் பண்ணிக்கோங்க!
(அடுத்தக் கட்டுரை - சீமானிசம் என்னும் பொய்க்குவியல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக