திங்கள், 3 அக்டோபர், 2022

Schindler's List : சக மனிதனின் மீதான அன்பும், அக்கறையும்

 


ஹிட்*லர் ஆட்சியின் பெருமைகளை வியந்தோதும் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். சீமான் போன்ற கட்சித்தலைவர்கள் அவரை மேற்கோள் காட்டிப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். கோவல்கர், ஹெட்கேவர் போன்ற தலைவர்களும் ஹிட்*லரை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியதாக வாசித்திருக்கிறேன்.

மிக நீண்ட காலமாக பார்க்க வேண்டும் என்று அவ்வப்போது நினைத்து இயலாமல் போன Schindler's List என்ற திரைப்படத்தை நேற்று இரவு பார்த்தேன். இரண்டாம் உலகப்போரில் யூத மக்கள் ஜெர்மனியில் SS என்னும் நா.ஜி படையினரால் கூட்டம் கூட்டமாகக் கொன்றழிக்கப்பட்ட நிகழ்வினையும், Schindler என்னும் ஜெர்மானிய தொழில் அதிபர் தன்னுடைய செல்வாக்கால், அஞ்சாத உள்ளத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களைக் கொலைக்களத்திலிருந்து காப்பாற்றிய வரலாற்று நிகழ்வினைக் காட்சிப்படுத்தியது திரைப்படம்.
ஒரு தீய கருத்தியல் எந்த அளவிற்கு மனித சமூகத்திற்கு தீங்கினை விளைவிக்கும் என்பதை நெஞ்சைப் பதறவைத்து பாடம் நடத்திய திரைப்படம். சாதிப்பற்று, மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, தேசப்பற்று எல்லாவற்றிற்கும் மேலானதாக ஒருவர் தேர்வு செய்ய வேண்டியது சக மனிதனின் மீதான அன்பும் அக்கறையும், மரியாதையும் என்று உணர்த்தும் ஒரு நேர்த்தியான திரைப்படம்.
முதல் காட்சியில் யூதர்களின் தொழுகைக்கான மெழுகுவர்த்திகள் மெல்ல மெல்லக் கரைந்து, அணைந்து புகையாக எழும்புவதையும், அதைத் தொடர்ந்து யூத வதை முகாம்களுக்கு செல்லும் மரணப்பாதையின் இரயில் வண்டி புகை எழுப்புவதையும் காட்டுவதிலேயே படத்தின் முழு சாரம்சத்தையும் உணர்த்திவிடுகிறார்கள்.
ஜுராசிக் பார்க் திரைப்படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான் இப்படத்தின் இயக்குநர். ஜுராசிக் பார்க் படத்தில் வரும் பெரிய பெரிய டைனோசர்களும், பயங்கரமான இடியோசை போன்ற அதன் பின்னணி இசையும் துளியும் பயமுறுத்தவில்லை. ஆனால் Schindler's List தொடங்கிய நொடியிலிருந்து மனதில் திக்திக் என்று ஒரு அச்சமும், பதற்றமும், பயமும் தொற்றிக்கொண்டன. பின்னணி இசை பாறையைப் பிளக்கும் வேர்களைப்போல மெல்ல மெல்ல நமக்குள் ஏதோவொன்றைக் கோருகின்றது. நீதியையா? இரக்கத்தையா?
கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைத் தன் எதிரியாகக் கருதி நகத்தால் பிராண்டும் பூனையைப் போல சக மனிதனை வெறுக்கும் ஒருவர் தன்னையே வெறுக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக