திங்கள், 21 நவம்பர், 2022

தொட்டில் பழக்கம் (Impacts of habits in our life)


அதிகாலையில் எழும்புதல், பல் துலக்குதல், நகங்களை வெட்டுதல், காலந்தவறாமை போன்றவற்றை நல்ல பழக்கங்கள் என்றும், சோம்பேறித்தனம், கடமை தவறுதல், கை கழுவாமல் உண்ணுதல் போன்றவற்றை கெட்டப் பழக்கங்கள் என்றும் சிறுவயது பாடப்புத்தகத்தில் முதன் முதலாகப் படித்ததாக நினைவிருக்கிறது. அதன் பிறகு பழக்கவழக்கம் என்ற வார்த்தையை அதிகம் கேட்டதில்லை.

2013 ஆம் ஆண்டு புனேயில் ஒரு வகுப்பிற்காக சென்றிருந்த போது அருட்பணி. விக்டர் பழக்கவழக்கங்கள் என்ற தலைப்பில் பேசும் போது இவ்வாறு கூறினார் : It is very difficult to change a HABIT; because if you remove the H, A BIT is there; if you remove the HA, BIT is there; if you remove the HAB, still IT is there!

பழக்கவழக்கங்களை மாற்றுவது கடினம். எவ்வளவு முயன்றாலும் சிறிதளவேனும் நமது பழக்கவழக்கங்கள் நம்மைப் பின்தொடரும் என்பது தான் இதன் பொருள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது எவ்வளவு உண்மை என்பதை நாம் அனைவருமே அறிந்திருப்போம்.

நமது சூழ்நிலைகளுக்கேற்ப ஒருமுறை நம் பழக்கவழக்கங்களை நாம் தீர்மானிக்கிறோம். பிறகு பழக்கவழக்கங்களே நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன. ஆயினும் நாம் பிறக்கும் போதே நம் பழக்கவழக்கங்களோடு பிறக்கவில்லை. காலப்போக்கில் கற்றுக்கொண்டவையாக இருப்பதால் நம்மால் அவற்றைக் காலப்போக்கில் கைவிடுவதும், புதிதாகக் கற்றுக்கொள்வதும் இயலும் என்பதே கற்றறிந்தோர் கருத்தாகும்.

இப்போது பழக்கவழக்கங்கள் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம். வெற்றி, தோல்வி போன்ற புறவயமானக் கணக்கீடுகளை மட்டுமல்லாது, ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளான மகிழ்ச்சி, அமைதி, நிறைவு உணர்வு போன்ற அகவயமான மனநிலையிலும் பழக்கவழக்கங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது கண்கூடு.

அண்ணன் ராஜராஜன் Rajarajan RJஅவர்கள் அடிக்கடி இதைப்பற்றி முகநூலில் எழுதுகிறார். Duolingo போன்ற மொழி கற்றல் செயலிகள் ஒரு தொடர் செயல்பாட்டை நமக்குள் பழக்கப்படுத்த உதவுகின்றன என்று ஒரு முறை எழுதியிருந்தார். அங்குதான் முதன் முதலாக Duolingo பற்றி கேள்விப்பட்டேன். இன்றோடு 306 நாட்கள் ஸ்பேனிய மொழியைத் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. இங்கு இலக்கு ஒரு மொழியைக் கற்றல் என்பதைக் காட்டிலும், ஒரு தொடர் செயல்பாட்டை, ஒரு பழக்கவழக்கத்தை நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என்பதே ஆகும்.

எழுத்தாளர் சரவண கார்த்திக்கேயன் Saravanakarthikeyan Chinnadurai அவர்கள் ஒரு மென்பொருள் பெருநிறுவனத்தில் வேலை செய்பவர். பணி அழுத்தங்கள், குடும்பக் கடமைகள் எல்லாவற்றிற்கு மத்தியிலும் அவர் ஆற்றுகின்ற தொடர் செயல்பாடுகள் (ஒரு கோடி காலடிகள், பிரியங்கா மோகன் பதிவுகள் உட்பட) என்னை வியக்க வைக்கின்றன. முகநூலில் அன்றாடம் நான்கைந்து பதிவுகளையாவது எழுதிவிடுகிறார். இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட தனது பணியின் அழுத்தங்கள் தனது பழக்கவழக்கங்களையோ, எழுத்துச் செயல்பாடுகளையோ பாதிப்பதாக புலம்பியதே இல்லை. எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கையாள்வது நிச்சயம் எளிதல்ல. ஆயினும் முயன்றால் முடியாததும் அல்ல.

அவரது தாக்கத்தில் இன்று வெற்றிகரமாக எனது முதல் நாள் 10,000 காலடிகள் நடைபயிற்சியைத் தொடங்கியிருக்கிறேன். அதுவும் பென்குயின் பதிப்பகம் 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட James Clear அவர்கள் எழுதிய Atomic Habits என்ற ஒலிப்புத்தகத்தை Spotify செயலியில் கேட்டுக்கொண்டே! நல்லது நடக்கிறதா பார்ப்போம்!
 #OKK (ஒரு கோடி காலடிகள்) #Day01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக