புதன், 14 அக்டோபர், 2026

பற்றியெறியும் முட்செடியின் வெப்பம்

 


பற்றியெறியும் முட்செடியின் வெப்பத்தில்

முட்செடிக்கு எதுவும் நிகழவில்லை

நிகழ்ந்தது அனைத்தும் மோயீசனுக்குத்தான்

பாரவோனிடம் சண்டையிட

ஒரு சிறிய கைத்தடியோடு கிளம்பிப்போனான்

கோலியாத்தைச் சாய்த்துவிட

தாவீது ஒரு கூழாங்கல்லோடு போனது போல


அந்த வெப்பம் தட்டியெழுப்புவதில்லை

மென்காற்றில் கூட அதன் வெப்பத்தை

கண்டவர் எலியா

ஆமணக்குச் செடியில் யோனா

ஆற்றுநீரில் நாமான்

ஆடையின் விளிம்பில்

ஒரு நோயுற்ற பெண்


அந்த வெப்பம் எங்கும் இருக்கிறது

ஆனால் அது யாரையும் சுடுவதில்லை

யாரையும் கருக விடுவதில்லை

யாரையும் எதுவும் கேட்பதில்லை

அது எரிந்துகொண்டேயிருக்கிறது


நமது தோல் அந்த வெப்பத்திற்கு

மிகவும் பழகிவிட்டதாலோ என்னவோ

அந்த வெப்பத்தைக் குறித்த

உணர்ச்சிகள் மழுங்கிவிட்டன


அதன் வெப்பம் விறகுகளையோ

சாம்பலையோ உருவாக்குவதில்லை

ஆயினும் விறகு தள்ள 

பெரிய மனிதர்கள் முன்வருகிறார்கள்


நெருப்பின் சூட்டில்

ஒருவன் செல்பி எடுக்கிறார்

ஒருவன் தன் சிகரெட்டைப்  பற்றவைக்கிறான்

ஒருவன் போர்வையை எடுத்து மூடிக்கொண்டு 

அசந்து தூங்கிப்போகிறான்


நெருப்பு 

எரிந்துகொண்டேயிருக்கிறது

ஒருவன் எங்கோ பறந்து கொண்டிருக்கும்

மின்னட்டாம் பூச்சிகளைக் கனவு கண்டுகொண்டிருக்கிறான்