திங்கள், 2 நவம்பர், 2026

தெலைந்து போனவர்களின் உலகம்

 


ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதி உலகப்புகழ் பெற்றவர் ஜே.கே.ரவுலிங். அவர் எழுதிய "The Christmas Pig" என்ற புத்தகத்தை வாசித்து இரண்டு ஆண்டுகளாவது இருக்கும் என்று நினைக்கிறேன். இப்புத்தகம் கிறிஸ்மஸ் கால சிறார் புத்தக வகையில் வருகிறது. அப்படி ஒரு வகை இருக்கிறதா என்று தெரியவில்லை. இருப்பினும் இக்கதை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்தைய இரவில் நிகழ்வதால் அப்படி வகைப்படுத்துகிறேன்.

நவம்பர் இரண்டாம் தியதியாகிய இன்று உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மரித்த நம்பிக்கையாளர்களின் நினைவை அனுசரிக்கிறார்கள். தங்கள் குடும்பங்களில் இறந்து போனவர்களின் கல்லறைகளுக்குச் சென்று சுத்தம் செய்வது, மலர்கள் வைப்பது, மெழுகுவர்த்தி ஏற்றுவது, திருப்பலியில் செபிப்பது போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள். இந்த நாளில் இந்தப் புத்தகம் ஏன் நினைவுக்கு வரவேண்டும்? சிறிய கதைச் சுருக்கத்தைப் பார்க்கலாம்.

ஜாக் - இக்கதையின் நாயகனான சிறுவன். அவன் தனது விவாகரத்தான தாயுடன் வசிக்கிறான். ஹோலி - அவளது விவாகரத்தான தந்தையுடன் வசிக்கிறாள். இருவரும் தங்கள் படிக்கும் பள்ளியில்  தான் முதன் முதலாகச் சந்திக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு பிடித்தம் உருவாகிறது. ஆனால் விதியின் வலிய விளையாட்டால் ஹோலியின் தந்தை ஜாக்கின் தாயை இரண்டாவது திருமணம் செய்து சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள். தன் தந்தையின் அன்பு ஜாக்கிற்கு கிடைப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஹோலி, ஜாக்கை மிகவும் வெறுக்கத் தொடங்குகிறாள். வெறுப்பின் உச்சமாக ஜாக்கின் உற்ற நண்பனான, உயிர்த்துணையாக அவன் கருதும் டி.பி (Darling Pig) என்னும் ஒரு பன்றிப் பொம்மையை வேகமாகச் செல்லும் காரின் சன்னலைத் திறந்து பனி மூடியிருக்கும் ஒரு விரைவுச் சாலையில் வீசிவிடுகிறாள். ஜாக் சோகக்கடலில் மூழ்கிவிடுகிறான். அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனது அழுகையைக் குறைக்க, கிட்டத்தட்ட அதே வடிவிலான இன்னொரு பன்றி பொம்மையை அவனுக்கு பரிசளிக்கிறார்கள். 

சி.பி (Christmas Pig) என்ற அந்த பொம்மையை அவனால் டி.பி. யின் இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. ஜாக் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், டி.பி. யின் மீதான அவனது அன்பையும், பற்றையும் சி.பி.யால் புரிந்துகொள்ள முடிகிறது. ஜாக்கின் பழைய நண்பனான தொலைந்து போன அல்லது தூக்கி வீசப்பட்ட டி.பி.யைக் கண்டுபிடிக்க உதவிசெய்ய சி.பி முன்வருகிறது. ஜாக் மற்றும் சி.பி இருவரும் கிறிஸ்மஸ் மாயாஜாலத்தினால் மிகச் சிறியவர்களாக உருமாறி 'தொலைந்து போனவர்களின் நகரம்' என்னும் பாதாள இடத்திற்குள் நுழைகிறார்கள். 

IKEA என்னும் வணிக வளாகத்திற்குள் சென்றிருக்கிறீர்களா? அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கானப் பொருட்களை குண்டூசி, குத்துவிளக்கு என்று விவரப்பட்டியலிட்டு பல்லடுக்குகளில் வைத்திருப்பார்கள். IKEA-விற்குள் நுழைந்தால் வெளியில் வருவதற்கு ஒரு நாளாகும். அந்த அளவிற்கு தொழில்நுட்பம், பொறியியல், வணிகம் போன்ற துறைகளின் உச்சம் தொட்ட பெருவியப்பினைத் தரும் IKEA னுபவம். 

அது போலவே தொலைந்து போன நகரத்தில் எல்லா பொருட்களும் அதனதன் இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உங்கள் பேனா மூடி தொலைந்து போய்விட்டதா? அது அங்கே ஸ்டேசனரி பொருட்களின் பகுதியில் தான் இருக்கும். குடோனில் கூட்டி வைத்திருப்பது போலல்ல. அதற்குரிய இடத்தில் வரிசை எண்ணோடு அழகாக வைக்கப்பட்டிருக்கும். உங்கள் பள்ளி காலத்துக் காதலி தந்த ஒரு சிறிய மணிபர்ஸ் தொலைந்து போயிருக்கும். இப்போது உங்களுக்கு கல்லூரி செல்லும் வயதில் மகள் இருக்கக் கூடும். அந்த மணிபர்சை நீங்கள் இப்போது தேடுவதில்லை. அது 'யாரும் வருந்தாத பொருட்களின் பாழ்நிலத்தில்' யாரேனும் தன்னைத் தேட மாட்டார்களா? என்று ஏக்கத்தோடு காத்திருக்கும். 

வாழும் நிலத்து மனிதர்களோ, பொருட்களோ இங்கு நுழைவது மிகவும் ஆபத்தானது. அவர்கள் இங்கேயே மீண்டு வரமுடியாதபடி சிறை வைக்கப்படக்கூடும். 'தி லூசர்' என்னும் கொடூர ஆட்சியாளனின் கையில் சிக்கினால், அன்றே அவர்களுக்கு மரண தண்டனைதான். திரும்பிச் செல்வதற்காக வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை அறிந்துதான் ஜாக்கும், சி.பி.யும் தங்கள் உயிரைப் பணயம் வைத்திருக்கிறார்கள். டி.பி.யை மீண்டும் ஜாக்கின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்பது மட்டும் தான் சி.பி.யின் மனதில் இருக்கிறது. 

இந்த மாய உலகில் தொலைந்து போன பொருட்கள் மட்டுமல்ல. தொலைந்து போன காதல், மகிழ்ச்சி, அமைதி போன்ற உணர்வுகளுக்கும் உருவம் கொடுத்து உலவ விட்டிருப்பார்கள். ஒரு மாயஉலகம் இந்த அளவிற்கு நம் நிஜ உலகத்தை நெருக்கமாக உணரச் செய்யுமா என்றால், முடியும் என்கிறது இந்தப் புத்தகம். ஸ்குயிட்கேம் என்ற வெப்சீரிசும் எனக்கு இத்தகைய உணர்வைத்தான் தந்தது என்று நினைக்கிறேன். 

கடைசியாக டி.பி வைக்கப்பட்டிருக்கும் 'அன்புக்குரியவர்களின் தீவிற்குள்' 'நம்பிக்கை' என்னும் கதாபத்திரத்தின் உதவியோடு ஜாக் நுழைகிறான். அங்கே டி.பி.யை சந்திக்கிறான். டி.பி. அங்கே தனியாக இல்லை. அவர்களது வீட்டின் கிறிஸ்மஸ் மரத்திலிருந்து காணாமல் போன தேவதை பொம்மையோடு மகிழ்சியாக இருப்பதைப் பார்க்கிறான். ஒரு அழகான விடைபெற்றலுக்குப் பின், நிறைய சாகசங்கள், மாயாஜாலங்கள் என்று கதையின் முடிவில் ஜாக், சி.பி.யுடன் வீடு திரும்புகிறான். எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஹோலியும் இப்போது ஜாக்கை நேசிக்கத் தொடங்குகிறாள் என்பதை அவள் கூறும் 'இனிய இரவு வணக்கம்' கட்டியம் கூறுகிறது.

இத்தனை நம்பகத்தன்மையோடு ஒரு மாய உலகை உருவாக்கி, அதன் மூலம் இவ்வளவு அழகான, உணர்வுப்பூர்வமானக் கதையை நெய்திருக்கும் ஜே.கே. ரவுலிங்கை வணங்குகிறேன். 

இறந்தவர்களை நினைவு கூறும் இந்த நாளில், இறந்து போனவர்களும், நம் வாழ்விலிருந்து தெலைந்து போனவர்களும் ஏதொவொரு 'அன்புக்குரியவர்களின் உலகில்' டி.பி.யைப் போல மகழ்ச்சியோடும், அமைதியோடும் இருக்கிறார்கள் என்று நம்ப விரும்புகிறேன். 

நான் என்றும் மறக்க முடியாத மரணங்கள் நிறைய இருக்கின்றன. முதலாவது சுவாதி கொலை வழக்கில் போலிஸ் காரர்களால் கொல்லப்பட்ட ராம் குமாரின் மரணம். என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் நல்லவனோ, கெட்டவனோ, கொலை செய்தானே, செய்யவில்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் அவனைக் கைது செய்யும் போதே அவனது குரல் வளையை அறுத்துவிட்டார்கள். அவன் சிறையில் இறக்கும் வரை அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவன் கூறியதாக இவர்களே ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தார்கள். உண்மை எதுவும் வெளியில் தெரியவராதவாறு பார்த்துக்கொள்வதில் நம் வாழ்நிலத்தின் 'தி லூசர்' அரசி வெற்றிபெற்றுவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். இந்த நூற்றாண்டில் மக்களாட்சி நடைபெறும் எந்த நாட்டிலும் இது போன்ற கொடுமைகளை இவ்வளவு அப்பட்டமாக நிகழ்த்த முடியுமா? உண்மைகளை மறைக்க முடியுமா? கொலைகாரர்களைக் காப்பாற்ற முடியுமா?

இந்த நாளில் இப்படி உண்மைகள் வெளியில் வராமல் கொல்லப்பட்டவர்கள், உலகம் முழுவதும் போர்களினால், மணிப்பூரில் நடப்பது போன்ற வலிந்து தூண்டப்பட்ட இனக்கலவரங்களினால், அரசியல், சாதி, மத, குடும்ப வன்முறைகளினால் கொல்லப்பட்டவர்கள், சக மனிதர்களின் வெறுப்பால், துரோகத்தால், கீழ்மையினால் தற்கொலை செய்துகொண்டவர்கள், பாலியல் வன்புணர்வுகளின் போது கொல்லப்பட்ட அப்பாவி சிறுமிகள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லா மனிதர்களையும் நினைவு கூர்கிறேன். ஒரு வீடியோவில் பார்த்தேன். ஒரு சிறுமி தன் தாயின் கையைப் பிடித்துக்கொண்டே ஒரு மாலைப்பொழுதில் பள்ளியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருக்கிறாள். ஒரு லாரி அந்தத் தாயை இடித்துத்தள்ளி நிகழ்விடத்திலேயே, அந்தக் சிறுமியின் கண்முன்னே கொன்றுவிடுகிறது. அந்தச் சிறுமியின் வலியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தத் தாயைப்போல அநியாயமாக விபத்துக்களில் உயிரை இழந்தவர்களையும் நினைத்துக்கொள்கிறேன். அவர்கள் யாரும் நினையாத பாழ்நிலங்களிலிருந்து, 'அன்புக்குரியவர்களின் உலகிற்குள்' நுழைந்து தங்கள் சமாதானத்தைக் கண்டடைவார்களாக! இந்த வாழ்நிலத்து லூசர்களின் ஏமாற்றுக்களிலிருந்து எம்மக்கள் தங்களையேக் காத்துக்கொள்ளட்டும்.