புதன், 15 டிசம்பர், 2010

கடற்கரை மணலில்...எழுதப்பட்டக் கவிதை

கடற்கரை மணலில்
கரைஒதுங்கிக் கிடக்கும்
ஓர் கடற்கன்னியின்
புகைப்படத்திற்கு 
எழுதப்பட்டக் கவிதை
அலைப் போர்வைக்குள்
ஓர் அபலை உறங்குகிறாள்
என் உறக்கத்தைக் கெடுத்துவிட்டு..

இவள் இயற்கை அன்னையா?
தமிழ்த் தாயா?
தேச மாதாவா?
விடுதலை தேவியா?
கடல் கன்னியா?
என் காதலியா?
இவள் மௌனத்தில்
ஏன் கலையவேண்டும்
என் தூக்கம்?

திறக்க மறுக்கும்
இவள் இமைகளைப் பார்த்து
என் கண்கள்
மூட மறுப்பதன்
நோக்கம் என்ன?

இவள்
கரை ஒதுங்கிய
கடலின் உயிரா?
இழுத்துச் செல்லப்படும்
புவியின் பயிரா?
அய்யகோ
இரண்டுமே இழப்புதானே?

உலக மயமாக்கலுக்கு
'கால்' முளைத்துவிட்டது
உலக(ம்) மாயமாகிவிட்டது
மனிதமும் தான்..

அலைக்கற்றையில்
அடிபட்டு
சிட்டுக்குருவிகள்
செத்துப்போனது பற்றி
சட்டசபைக்கு
என்ன கவலை?

திரையில் சலனமில்லை
காட்சிகள் விரயவில்லை
பின்னர் என்ன சப்தம்?
ஓ! குப்பை கொட்டுகிறான்
மனிதன்

மனிதனின்
நவீனக் கழிவுகளுக்கு
'மக்கும் மற்றும் 'மக்கா' என்று
மாபெறும் குப்பைத்தொட்டி
சகல வசதிகளுடன் கூடிய
கடல்
அங்கே
பயமுறுத்தும் கண்களில்எனக்கு
துளிகூட பயம்வரவில்லை
சில மனிதர்களோடு
வாழ்ந்து பழகிவிட்டது

இனிமேல்
குழந்தைகள் மீதும்
நம்பிக்கையில்லா தீர்மானம்!
விரல், ரேகை,
விழித்திரை, முகவரி என்று
பிறப்புச் சான்றிதழில் ஓர்
நவீன சோதிடம்...

இனிவரும்
பேரப்பிள்ளைகளுக்கு
பால்சோறு, பருப்பு சமைக்க
கணிப்பொறியில்
மென்பொருள் தயாரிக்க வேண்டும்!

விவசாயிகள் காட்சிசாலை
அமைப்பது கோரி
ஒருநாள் அடையாள
இணைய விரதப்போராட்டம்
அறிவிக்கப்படும்...

சிரிப்பதா?
அழுவதா?
நான் ஏன் புலம்புகிறேன்?

இவள் மௌனத்தில்
ஏன் கலையவேண்டும்
என் தூக்கம்?

இவள் இயற்கை அன்னையா?
தமிழ்த் தாயா?
தேச மாதாவா?
விடுதலை தேவியா?
கடல் கன்னியா?
என் காதலியா?

அலைப் போர்வைக்குள்
ஓர் அபலை உறங்குகிறாள்
என் உறக்கத்தைக் கெடுத்துவிட்டு...