சனி, 8 அக்டோபர், 2016

கதை முடிந்தது

சிறு வயதில் சில கொடூரமானக் கனவுகளைக் கண்டு நடு இரவில் விழித்திருக்கிறேன். குறிப்பாக எங்கள் ஊரில் பலசரக்குக் கடை வைத்திருந்த ஒருவரை நான் கொலை செய்துவிட்டு போலீஸ் என்னைத் தேட ஆரம்பிக்கும் போது விழித்துக் கொள்வேன். அப்போது பயத்தில் உடம்பு விறைத்து கட்டை போல படுத்திருப்பேன். பக்கத்தில் படுத்திருக்கும் அம்மாவைக் கூப்பிட மூளை கட்டளை கொடுக்கும். ஆனால் தொண்டைக்குள் பயம் பந்து போல அடைத்துக் கொண்டு குரலை வரவிடாது. ஒரு உண்டியலில் காசு போடும் துளை அளவுதான் வாய் திறக்கும். எவ்வளவு முயன்றும் அதற்கு மேல் எதுவும் இயலாது. கை கால்களை ஒரு இம்மி கூட அசைக்க முடியாது. கனவில் கண்டது உண்மை என்றும், உண்மையிலேயே நான் அந்த மனிதரைக் கொன்றுவிட்டேன் என்றும், போலீஸ் என்னைத் தேடுகிறது என்றும் நினைத்து பயத்திலேயே மயங்கி காலையில் தான் இயல்பு நிலைக்குத் திரும்புவேன். கை, கால்களை அசைத்துப் பார்த்துக் கொள்வேன். வாய் திறந்து பேசியப் பிறகுதான் எதுவுமே நடக்கவில்லை, எல்லாமே கனவு என்பதை நம்புவேன். அப்படி ஒரு கனவு சமீபத்தில் வந்தது.

அன்று நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக இருந்தது. யாரோ டப் டப்பென்று கதவைத் தட்டினார்கள். நாய்கள் எப்படி கதவைத்தட்டும்? கதவை உடைத்துவிடுவது போலத் தட்டினார்கள். நடுவீட்டில் படுத்திருந்த அப்பா கதவைத் திறக்கவும், பசித்த மிருகங்களைப் போன்று வெறிபிடித்த போலீஸகாரர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள். கெட்ட கனவுகள் மட்டும் சீக்கிரம் பலித்துவிடுமோ? வீட்டின் பின்புறம் கறிவேப்பிலை மரத்திற்குப் பின்னால் குனிந்து நான் பதுங்க, கழனிப் பானைக் கவிழ்ந்து என்னைக் காட்டிக் கொடுத்தது. ஒரு கொக்கைப் பிடிப்பதைப் போலத் தூக்கி தரதரவென்று இழுத்தார்கள். வண்டியில் தூக்கிப் போடுவதற்குள் என் கழுத்தை அறுத்துவிட்டார்கள். நெஞ்சை நனைத்தச் சூடான இரத்தத்தில் என் சட்டை தொப்பென்று ஒட்டிக்கொண்டது. தொட்டுப்பார்த்ததும் பிசுபிசுத்து கைகளில் வேகமாகக் காய்கிறது இரத்தம். நான் ஒரு கனவுதானேக் கண்டேன். அதற்கு எதற்குத் தண்டனை என்றேன். ஒருவர் தனது கை மூட்டினைக் கொண்டு என் கன்னத்தில் ஓங்கி இடித்துக் கொண்டே ஒரு பத்திரிக்கைச் செய்தியைக் காட்டினார். எங்கோ ஒரு பெண்ணை இதே மாதிரி ஒரு அதிகாலையில் வாயிலேயே வெட்டி சாய்த்துவிட்டதாகக் கூறினார். 

ஆம்! இந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதிகம் பழக்கமில்லை. எனக்கு எதுவும் தெரியாது என்றேன். அடுத்த இடியில் இரண்டு பற்கள் உடைந்து கன்னத்துச் சதையைக் கிழித்து வாயிலிருந்தும் இரத்தம் ஒழுகியது. வண்டியில் சிந்திக்கிடந்த இரத்தத்தின் மேலேயே முகம் குப்புற விழுந்துவிட்டேன். ஒரு போலீஸ்காரர் பேண்டு ஜிப்பைக் கழற்றி என் மேல் ஒன்றுக்குவிட்டார். ஒரு வழியாக இந்தக் கேஸ் முடிந்துவிட்டது என்றார். இந்த நாய் இப்போது செத்துவிடக்கூடாது. வேற மாதிரி பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டே பூட்ஸ் காலால் இடுப்பில் ஓங்கி மிதித்தார். மூச்சு அடைத்துவிட்டது. 'அய்யோ! வலிக்கிறது' என்று மனதுக்குள் கத்தினேன். ஆனால் குரல் வரவில்லை. அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் கண் விழிக்கையில் நான் மட்டும் தான் குற்றவாளி என்று ஏதோவொரு உயரதிகாரி பேட்டி கொடுத்திருந்ததைப் பத்திரிக்கையில் பார்த்தேன்.

அதன் பிறகு சிறையில் தினமும் இரண்டு மூன்று பேர் வந்து பூட்ஸ் காலோடு நெஞ்சில் ஏறி வாயில் இரத்தம் கொப்பளிக்கும் வரை மிதித்துவிட்டு நாங்கள் சொல்வது போல நடந்து கொண்டால் உயிர் பிழைப்பாய். இல்லையேல் மண்டை உடைந்து மூளைச் சிதறிச் சாவாய்! என்று கெட்டவார்த்தையால் திட்டினர். ஒருவர் மிதிக்கும் போது மற்றவர் லத்தியால் அடிப்பார். பாம்பு நெளியும் போது, கொத்திவிடுமோ என்ற பயத்தில் அடிக்கும் ஆவேசத்துடன் மூச்சு வாங்க வாங்க அடிப்பார். கால் கரண்டையில் கடைசியாக விழுந்த அடியில் நடு மூளையில் கீறல் விட்டது போன்றக் கடுமையான வலி. 

என்ன நடக்கிறது என்பதை ஊகிக்கும் முன்னரே கதையில் பாதிக்கும் மேல் முடிந்துவிட்டது. தவறான முகவரியில் தபால் வந்தது போல ஆள் தெரியாமல் தன் பிள்ளையைப் போலீஸ் பிடித்துவிட்டது என்றும் உண்மை தெரிந்ததும், 'மன்னிக்க வேண்டும் தெரியாமல் தப்பு நடந்துடுச்சு' என்று சொல்லி உயர் போலீஸ் அதிகாரி வந்து பிள்ளையை ஒப்படைப்பார் என்று வெள்ளாந்தியாய் நம்பிக்கொண்டிருந்தனர் என் பெற்றோர்.

ஊரில் யாராவது சாகும் போது என் கை, கால்களைப் பிடித்துப்பார்த்துக் கொண்டு நண்பர்களிடம் சொல்வேன். 'எப்படித்தான் சாகிறார்களோ மனிதர்கள்!' என்று. நான் சாக இன்னும் நூற்றிருபது ஆண்டுகளாவது ஆகும் என்று நினைத்துக் கொள்வேன். அந்த பயில்வான் போன்ற வெள்ளைப் போலீஸ்காரர் ஒரு மதம் கொண்ட யானையைப் போல மர்ம உறுப்புக்கும் கொஞ்சம் மேலே அடிவயிற்றில் ஓங்கி மிதித்த போது தான் நான் முதன் முதலாக செத்துவிடுவேனோ என்று பயந்தேன். மூச்சுவிட்டே ஆக வேண்டும். ஆனால் முடியவில்லை. மிதித்த மிதியில் உள்ளே சென்ற வயிறு ஒட்டிக் கொண்டது. இப்படி சிறிது சிறிதாக நிறையச் செத்தேன்.

அந்தக் கொலையை நான் தான், நான் மட்டும் தான் செய்தேன் என்று சொன்னால் விட்டுவிடுவதாகச் சொன்னார்கள். அடிக்கு பயந்து நான் அப்படித்தான் சொல்வேன் என்ற நம்பிக்கையில்தான் இதுவரை என்னை விட்டு வைத்திருந்தார்கள். கனவில் அந்தப் பலசரக்குக் கடைக் காரரைத் தவிர்த்து நான் யாரையும் கொலை செய்யவில்லை. முகநூலில் நண்பனின் நண்பனின் நண்பியைக் கூட நண்பியாக்கும் வயது ஆர்வத்தில்தான் அந்தப் பெண் என் நண்பியானாள். அதற்கு மேல் அந்த மாநகரத்துப் பெண்ணுக்கும் எனக்கும் எந்த பழக்கமும் இல்லை. 'நான் கொலை செய்யவில்லை. என்னை விட்டுவிடுங்கள்' என்று அழுதேன். ஓங்கி முகத்திலே மிதிக்க உதடு கிழிந்தது.

ஒப்புக்கொள்கிறாயா என்று மீண்டும் கேட்டனர். எனக்குக் காதில் விழுந்தது. பதில் சொல்ல உடம்பில் தெம்பு இல்லை. விழுந்து விடுவேன் என்று நினைத்தேன். இதுவரை அடிக்காமல் அறையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரி விரக்தியின் உச்சத்தில் ஓடிவந்து என் இரு தொடைகளும் இணையும் இடத்தில் ஒரு உதை உதைத்தார். புறமண்டை பட்டென்று சுவரில் அடிக்க தரையில் முகம் குப்புற விழுந்தேன். பூமி அந்த அறையையும் பிடித்துக் கொண்டு சுற்றுவது போல இருந்தது. அதன் பிறகு நான் எதையும் பார்க்கவில்லை. எதையும் கேட்கவில்லை. ஓ! சாவது என்றால் இதுதானா? இப்படி தெரிந்திருந்தால் எப்போதோ செத்திருப்பேன். இந்த மிருகங்களின் பிடியிலிருந்து மறைந்து நான் எங்கோ ஒரு இருட்டுக்குள் பயணிக்கத் தொடங்கினேன்.

நாளை பத்திரிக்கையில் நான் என்னையேக் கொன்றுவிட்டதாகச் செய்திகள் வரும். தொலைக்காட்சிகளில் விவாதங்கள் சூடு பறக்கும். ஆளுங்கட்சி, நடுநிலையினர் என்னும் மாறுவேட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சாதிக் கட்சி, என்று எல்லோரும் கருத்து சொல்லிவிட்டு டி.வி காரன் தரும் பயணப்படியை வாங்கிவிட்டு வீடுகளுக்குச் செல்வர். பிறகு எல்லோருமாக யாரோ ஒருத்திக்காக மண் சோறு தின்னப் புறப்பட்டுபோவார்கள். ஒருவன் 'கதை முடிந்தது' என்று ஒரு கதை எழுதி தனது ப்ளாக்கில் போடுவான். கதை முடிந்தது.

புதன், 21 செப்டம்பர், 2016

நெகிழி மற்றும் எரிக்கப்படும் டயர்களின் தீமைகள் - ஓர் அலசல் (The hazards Of Plastics and burning tyres)

முன்னுரை

இயற்கையோடு இயைந்த வாழ்வால் வான்புகழ் கொண்டுத் திகழ்ந்தது நம் பண்டையத் தமிழர் இனமாகும். இங்கே உண்பதும், உடுத்துவதும், பக்தியும், பண்டிகையும், இறையும், இலக்கியமும், கலையும், கவிதையும், வீரமும், விளையாட்டும்  என்று யாவுமாகி நின்று அழகு செய்தவள் நம் இயற்கை அன்னையே! சங்க காலத்தில் மட்டுமல்ல. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய உங்கள் கிராமங்களை நினைத்துப் பாருங்கள். பூவரசு இலைகளில் 'பீப்பி', நுங்கு கூந்தலில் தள்ளுவண்டி, பத்து பைசாவுக்கு பம்பர மிட்டாய், வயல் வரப்புகளில் ஓடிப்பிடித்து, வாழைத் தோப்புகளில் திருடன்-போலிஸ் என்று அங்கே விளையாட்டுக்கு கூட இயற்கை இல்லாமலில்லை. பிறந்த குழந்தையின் தொட்டிலிருந்து கடைசியில் கிடத்தும் கட்டில் வரையிலும் இயற்கை என்றிருந்த நிலை மாறி இன்று எங்கும் பிளாஸ்டிக்! எதிலும் பிளாஸ்டிக்! என்றாகிவிட்டது. விலையோ குறைவு. உற்பத்தி செய்வது எளிது. இன்றைய உலகின் அன்றாடத் தேவையை ஈடுசெய்ய இதற்கு மாற்று எதுவுமில்லாத சூழலில் எங்ஙனம் பிளாஸ்டிக் இயற்கையின் பகைவன் ஆனது என்பதையும், இத்தகைய பிளாஸ்டிக் மற்றும் பயன்படுத்தப்பட்ட டயர்களை எரிப்பது இயற்கைச் சூழலை எங்ஙனம் பாதிக்கின்றது என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.

நெகிழியின் பிறப்பு

தமிழில் நெகிழி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் என்பது 'பிளாஸ்டிக்கோஸ்' என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது. வார்க்கத் தக்க அல்லது பிசைவு கொள்ளத் தக்கப் பொருள் என்று இதனை வரையறுக்கலாம். தொடக்கக் காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடுகள், சில வண்டு, பூச்சிகளில் இருந்து 'செராடின்' என்ற நெகிழியானது செய்யப்பட்டன. பின்னர் எவ்வாறு பிளாஸ்டிக்கானது முழுக்க முழுக்க செயற்கை வேதி மூலங்களிலிருந்து தயாரிகக்கப்படுகின்றன என்பதை கீழ்வரும் காலக்கோடு மூலம் அறிந்து கொள்ளமுடியும்.
  • பிளாஸ்டிக் முதன் முதலில் 1862 -ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் 'பார்க்ஸ்டைன்' என்ற பெயரிட்டார். 
  • பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 -ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற பிளாஸ்டிக் உருவானது. 
  • 1907-ல் லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், டுபாண்ட் என்னும் அமெரிக்க நிறுவணம் வெடி பொருள் பிளாஸ்டிக்; தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது.  
  • 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.
நெகிழியின் வகைகளும், பயன்களும்

வெப்பத்தால் எற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழிகளில் இரு பிரிவுகள் உண்டு. அவை முறையே இளகும் வகை, இறுகும் வகை என்பனவாகும்.

1.வெப்பத்தால் இளகி, குளிர்வித்தால் இறுகி பின் எத்துனை முறையும் இவ்வாறு மாற்றி மாற்றி செய்யமுடியக்கூடிய நெகிழி இளகும் வகை நெகிழி ஆகும். இவை மறு சுழற்சி செய்யக் கூடியவை. அவற்றின்  பெயர்களையும், பயன்பாடுகளையும் இங்கே காண்போம்.
  • செல்லுலாயிட்: எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள், தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.
  • பாலி புரோப்பிலின்:  கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், ஆரோக்கியப் பொருள்கள், குப்பிகள் ஆகியவை செய்யவும், இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள்,கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன.
  • பாலிவினைல் குளோரைடு:  மணமற்ற நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் இன்சுலேட்டர்கள், நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.
  • பாலிவினைல் அசிட்டேட்:  வண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் ஆகியவை பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • வினைல் : டெரிலின் இழை போலவே இதில் இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்காது. தூசி படியாது. அழுக்கை எளிதில் நீக்கலாம். வண்ணமேற்றலாம். இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள்.
  • அக்ரிலிக்: நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள் செய்யவும் பல்வேறு சாதனங்களிலும் பயன்படுகிறது. இதனை நாம் மீன் தொட்டி செய்ய பயன் படுத்தலாம்
  • செல்லுலோஸ் அசிட்டேன்: இதனுடன் வண்ணம் சேர்த்து பெருமளவில் மோட்டார் தொழிலில் தேவையான பல பொருள்களைச் செய்கின்றனர்.
  • ஈதைல் செல்லுலோஸ்: பொருள்கள் மீது மேல் பூச்சு அமைக்கவும், புகைப்படத் தகடுகள் செய்யவும் பயன்படுகிறது. 
2.இளக்கிப் பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழி இறுகும் நெகிழி ஆகும். இது எளிதில் நொறுங்கக் கூடியது. இது இளகும் வகையை விட தரம் குறைந்தவையாகக் கருதப் படுகின்றன. அவற்றின் சில எடுத்துக்காட்டுக்களை கீழே காண்போம்.
  • ஆல்கைடு ரெசின் : பொருள் வெப்பம், ஈரத்தால் பாதிக்கப்படாதது. மின்சாரம் கடத்தாது. உறுதியானது. கடினமானது. ஒளி புகும். எனவே விமானம், மொட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், தண்டுகள், இன்சுலேட்டர்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
  • மெலமின் ரெசின் : இது எளிதில் தேயாது மின்சாதன பாகங்கள் (குறிப்பாக மின்விசிறி) செய்யப் பயன்படுகிறது.
  • பீனாலிக் ரெசின் : மலிவு விலை மின்சுவிச்சுகள், பலகைகள், தொலைபேசிகள் செய்யப் பயன்படுகின்றது.
இவ்வாறு விலை மிகவும் மலிவாகவும், அனைவரையும் கவரும் பல வகை நிறங்களிலும், காற்று, நீர், ஈரம் இவற்றால் பாதிக்கப் படாமலும், மின்கசிவு ஏற்படாமலும் இருப்பதால் நெகழியானது நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன.

நெகிழியின் தீமைகள்

நாம்  அனைவருமே ஏற்கனவே அறிந்ததுதான். நெகிழிப் பொருள்கள் எளிதில் அழிவதில்லை. சராசரியாக ஒரு பாலித்தீன் பையின் பயன்பாட்டுக் காலம் 12 முதல் 20 நிமிடங்களே என்றும் அவை அழிய 1000 ஆண்டுகளுக்கும் அதிக காலம் பிடிக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. பயன்பாடற்ற ஒரு நச்சுவேதிப் பொருளின் நெடிய ஆயுட்காலம் என்பது இயற்கையின் நியதிக்கு மிகமிக ஆபத்தான முரண்பாடாகும். அதிலும் நெகிழியின் அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக இவை கற்பனைக்கெட்டாத அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளையும், மானுடரல்லாத பிற உயிர்களையும், இயற்கைச் சூழலையும் பற்றிய அக்கறையற்ற சுயநலமே இன்றைய நிலையாக இருக்கின்றது. மறுசுழற்சி என்பதும் பெரிதும் பயன்தரப் போவதில்லை. ஏனென்றால் நெகிழிப் பொருட்களில் 10 சதவீதப் பொருள்களே மீண்டும் பயன்படுத்தத் தக்கவையாக இருக்கின்றன. மற்ற 90 சதவீதப் பொருட்களும் வீணே எரிக்கப்பட்டுவிடுகின்றன. 'இன்சினரேசன்' என்னும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன.
  • தொழிற்சாலைகளில் இவை மறு சுழற்சி செய்யப்படும் போதும், எரிக்கப்படும் போதும்  வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதாக இருப்பதால், அருகிலுள்ள மக்களின் உடல்நலனாது பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. தோல்நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • பாலித்தீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. நிலத்தடி நீர் பெருகுவதைத் தடுக்கின்றன.
  • மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பைகளைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.
  • மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
  • கடலில் எறியப்படும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும் பாதிக்கின்றன.
டயர்கள் என்னும் இன்னொரு தலைவலி

வாகனப் பெருக்கம் நாம் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத அளவிற்கு அதிகரித்துவிட்டது. மக்கள் கல்வி, பணி நிமித்தமாக தினசரி பயணிக்க வேண்டியத் தேவையும், தரமில்லாத பொதுப் போக்குவரத்துச் சேவையும் தனியார் வாகனப் பெருக்கத்தை இன்றியமையாததாகச் செய்துவிடுகின்றன. தமிழகம் முழுவதும் 70 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 100 வாகனங்கள் என வைத்தால், ஒரு நாளைக்கு 7 ஆயிரம் புதிய வாகனங்கள். 20 வேலை நாள்கள் என கணக்கிட்டால் கூட, ஒரு மாதத்தில் 1,40,000 புதிய வாகனங்கள் தமிழகச் சாலைகளில் உலா வரத் துவங்குகின்றன. வாகனப் பெருக்கத்தின் விளைவாக காற்று மாசுபடுவதோடு, புவி வெப்பம் அதிகரிப்பதோடு, இன்னொரு தலைவலியாக பயன்படுத்தப்பட்ட டயர்கள் ஒவ்வொரு நாளும் மலை போலக் குவிந்து விடுகின்றன.

டயர்களும் இயல்பிலேயே அழிவதற்கு நிறைய காலம் எடுத்துக் கொள்கின்றன. அத்தோடு மறுசுழற்சியும் பெரிய பயன்தருவதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் மாசு என்னும் தீய விளைவையேக் கொண்டிருக்கின்றன. டயர்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் துத்தநாகம், குரோமியம், ஈயம், செம்பு, கேட்மியம் மற்றும் சல்பர் போன்ற வேதிப் பொருள்கள் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தவையாகும். இவை எரிக்கப்படும்போது காற்று மாசுபடுவதால் தோல் நோய்கள், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுக் காரணமாகின்றன.

பழைய டயர்கள் பெரும்பாலும் காகிதம், சிமென்ட் போன்ற தொழிற்சாலைகளில் மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகின்றன. போகி, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதும், கிளர்ச்சி போராட்டங்களின் போது தங்கள் எதிர்ப்பைக் காட்டவும் எரிக்கப்படும் டயர்கள் சுற்றுச்சூழலைப் மிகவும் மாசுபடுத்துகின்றன. பூமியில் புதைக்கப்படும் டயர்கள் நாளடைவில் பல்வேறு ரசாயனங்களை வெளியிடுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, மண்வளத்தையும் கெடுத்துவிடுகின்றன.

சட்டமும் சமூகமும்

அன்றாடப் பயன்பாடு, அதிவேக உற்பத்தி என்ற சுழற்சியில் டயர் மற்றும் பிளாஸ்டிக் பெருக்கமானது கட்டுக்கடங்காது சென்றுகொண்டிருக்கின்றன. பன்னாட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளின் தீவிர அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு நாடுகளும், நகரங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பல வரைமுறைகளை வகுத்துள்ளன. குறிப்பாக நமது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்ட அரசாணையில் இந்தியா முழுவதும் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுவதுமாகத் தடைசெய்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் சமுதாயத்தின் மனப்பூர்வமான சம்மதமின்றி, அரசின் சட்டப்பூர்வமான முயற்சிகள் முழு இலக்கினை அடைய முடியாது. எதிலும் அச்சமயத்திற்கு எளிதான, இலகுவான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நமது சாதாரண இயல்பு. ஆனால் பிளாஸ்டிக் விசயத்தில் நாம் மாற்றி யோசிக்க வேண்டும்.
  • கடைக்குச் செல்லும் போதே துணிப்பைகளை எடுத்துச் செல்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசே இத்துணிப்பைகளை பெருமளவு உற்பத்தி செய்வதோடு, கடைகளில் பயன்படுத்தப்படுவதைக் கட்டயமாக்க வேண்டும்.  நசிந்துவரும் நெசவுத் தொழிலை மீட்பதற்கும், கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இம்முயற்சியானது சிறந்த பலனளிக்கும்.
  • வீட்டு நல்ல காரியங்களில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளில் செய்யப்படும் குவளைகள், தட்டுக்களைப் பயன்படுத்தலாம். படித்த இளைஞர்கள் தனியாகவோ, கூட்டு முயற்சியாகவோ இத்தகையத் தொழில்களைச் செய்ய முன்வரலாம். கூட்டுறவுச் சங்கங்கள் வழியாக அரசும் தேவையான உபகரணங்கள் மற்றும் மானியங்கள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
  • பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதிலாக, மண்பானைகளைப் பயன்படுத்த வேண்டும். கடந்த 20-9-2016 அன்று தமிழக முதல்வர் அவர்கள் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி செலவில் விலையில்லா மின் சக்கரம் வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வேலையில்லை என்று காத்திருப்பதை விட இத்தகைய முயற்சிகளைச் செய்ய இளைஞர்கள் முன்வரவேண்டும். அரசும், பொது மக்களும் இதற்கு கைகொடுக்க வேண்டும்.
  • மக்கள் போராட்டங்களில் டயர்கள், உருவப்பொம்மைகள் எரித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதற்குப் பதிலாக தீங்கில்லாத மாற்று வழிகளைப் கடைபிடிக்க வேண்டும்.
உயிரன்பு என்னும் அறம்

கிறிஸ்தவர்களுக்கு சிலுவை மரமும், இந்துக்களுக்கு கற்பக மரமும், பௌத்தர்களுக்கு போதி மரமும் வாழ்வின் மரங்களாக இருக்கின்றன. வளரும் பிள்ளைகளுக்கு சமயக் கல்வியில் இயற்கை அன்பையும் கட்டாயம் போதிக்கவேண்டும். இறைவன் படைத்த இயற்கைச்சூழலில் ஒவ்வொரு உயிரும் அற்புதமானவையே. அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால் எல்லா உயிர்களுமே ஒன்றையென்று சார்ந்தே இயங்குகின்றன. அவை மலர்ந்தும், மடிந்துமே இந்தப் பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. இந்த உயிர்களின் உறவுச் சங்கிலிக்குப் பெரிதும் ஆபத்தான, மரணிக்க மறுக்கும் நெகிழியை நாம் கைவிட்டே ஆகவேண்டும். எழுத்தாளர் ஜெயமோகன் 'யானை டாக்டர்' என்னும் ஒரு சிறுகதையில் நெளியும் ஒரு புழுவைக் கையில் எடுத்து இவ்வாறு வருணனை செய்கிறார். 'குண்டு குண்டாக, மென்மையாக, புசுபுசுவென்று ஆவேசமாக நெளிந்து கொண்டிருக்கும் புழுக்களில் தெரியும் உயிரின் ஆவேசத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனம் மலைப்புறும். உண் என்ற ஒற்றை ஆணை மட்டுமே கொண்ட உயிர். அந்தத் துளிக்கு உள்ளே இருக்கின்ற சிறகுகள், முட்டைகள். ஒவ்வொரு கணமும் உருவாகும் ஆபத்துக்களை வென்று மேலெழுந்து அழியாமல் வாழும் கற்பனைக்கெட்டாத கூட்டுப்பிரக்ஞை' என்று ஒரு புழுவுக்குள் நெளியும் ஒரு துளி உயிரின் அதிசயத்தைப் பார்த்து வியப்படைகின்றார். உயிர்களின் மீதான அன்பே சிறந்த அறம். அந்த அறமே எல்லாவிதமான இயற்கை விரோதங்களையும் வென்றெடுக்கும்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ராம்குமார் தற்கொலை செய்யப்பட்டார். உண்மையே உன் விலையென்ன? -1

மனம் முழுக்க கோபம். ஒன்றுமே செய்ய இயலாமல் முடக்கிப் போடும் ஆற்றாமை. கையாலாகாத நிலைகண்டு எரிச்சல். கண்ணகி போல போல எரித்துவிடத்தான் ஆசை. குழந்தை போல அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாமை. பட்டப் பகலில் முழுவதும் பாதுகாக்கப்பட்ட ஓர் சிறை அறையில் ராம்குமார் என்னும் விசாரணைக் கைதி 'தற்கொலை செய்யப்பட்டிருக்கிறார்'. 

கேட்பதற்கு நாதியில்லாமலில்லை. தமிழகமே கேட்கிறது. ஏன் இந்த உலகமே கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம். போன உயிர்? எனக்கு என் மகன் வேண்டும் என்று கதறும் தாய்க்கும், தந்தைக்கும், உடன்பிறப்புகளுக்கும் இந்த தமிழ்நாட்டு அரசும், சமூகமும் என்ன செய்துவிட முடியும்? 

இவ்வளவு மோசமான நீதி பரிபாலனை இவ்வுலகத்தின் வேறு எந்த சனநாயக நாட்டிலும் நடக்குமா என்று தெரியவில்லை. எத்தனை வழக்குகளில் நீதி என்னும் மழை பொய்த்து மனம் வறண்டு வெடித்துப் போவதென்று தெரியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, மான் வேட்டை வழக்கு, நடைபாதையில் தூங்கியோர் மீதி கார் ஏற்றி ஒருவர் சாவுக்கும், நான்கு பேர் கை, கால் இழப்புக்கும் காரணமாகிய குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு, 257 பேரை பலிகொண்ட 1993 மும்பை குண்டு வெடிப்பிற்கு துணைபுரிந்த வழக்கு, கேரளாவில் ஓடும் ரெயிலிலிருந்து இளம் பெண் தள்ளிவிடப்பட்டு பின்னர் வன்புணர்வு செய்யப்பட்டு, தண்டவாளக் கற்களால் தலையைச் சிதைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கு என்று எல்லவற்றிலும் இந்திய நீதி தேவதை பணத்திற்கும், அதிகாரத்திற்கும் மண்டியிடுபவளாக ஒரு விபச்சாரனினும் கேவலமாக மாறிவிடுகிறாள். எல்லா பித்துவாளிகளையும் வரவேற்க ஒரு சனநாயகக் கூட்டம் கேட்க சகிக்காத குரலெழுப்பிக் காத்திருக்கிறது. மொத்தமாக மறுநாள் கோவிலில் காணிக்கை செலுத்திவிட்டு பத்திரிக்கைக்கு அவர்கள் சிரித்த முகத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள். செத்துப் போனவனின் இரத்தம் காய்ந்து சில நாட்களிலேயே மறைந்து விடுகிறது. ஊடக வெளிச்சத்தையும் பெறத் தகுதியில்லாமல் இது போல தினசரி எத்தனை வழக்குகளோ? 

ராம்குமார் 'தற்கொலை செய்யப்பட்டதை' 'தி இந்து' தமிழ் இணைய நாளிதழில் வாசித்தேன். கருத்துப் பகிர்வில் ஒரு வாசகர் 'உண்மையே உன் விலையென்ன' என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்தவர் 'உயிர்' என்று எழுதியிருந்தார். இயேசு பிலாத்துவிடம் 'உண்மையை எடுத்துரைப்பதே என் பணி' என்று கூறியபோது, பிலாத்து இயேசுவிடம், 'உண்மையா? அது என்ன?' என்று கேட்கிறான். அதிகாரப் பசி உண்மையை மறைத்துவிடுகிறது. உண்மை நிராதரவாக சிலுவையில் பலியாகிறது. 

எல்லோரும் செத்து ஒரு நாள் இன்னொரு உலகத்தில் சந்தித்துக் கொண்டால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பார்ப்பது பலியாடுகளாக கழுத்தறுபட்டவர்களின் முகத்தை? உண்மையைக் கொன்றது அதிகார வர்க்கம் மட்டுமல்ல. அவர்களுக்குத் துதிபாடும் அடிமைக் கூட்டமும் தான். அவர்கள்தான் எங்களுக்கு பரபாசே வேண்டும் என்று கூச்சலிட்டவர்கள். மக்களுக்குத்தான் நல்ல அரசு அமையும். அடிமைகளுக்கு இரத்த தாகம் கொண்ட அரக்கன்களும், அரக்கிகளுமே போதுமானவர்கள். இப்படித்தான் இருக்கிறது இன்றைய அடிமைத் தமிழகம். 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

இன்றைய அருட்பணியார்களிடம் இளைஞர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

தூய பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் படித்துக் கொண்டிருந்த போது இளையோர் மேய்ப்புப் பணி என்ற சிந்தனையில் ஒரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. சலேசிய அருட்பணியாளர்களால் வழிநடத்தப் பட்ட அந்நிகழ்விற்கு பங்குகளிலிருந்து இளைஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர் அவர்களின் பங்குத்தளங்களில் நடைபெறும் இளையோர் செயல்பாடுகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். ஒரு இளைஞர் தான் தன்னை வழிநடத்தும் அருட்பணியாளரிடம் எதிர்பார்ப்பது என்ன என்று கவிதை வடிவில் பகிர்ந்து கொண்டார். ஒரே அச்சில் வார்க்கப்பட்ட தலையாட்டி பொம்மைகள் போல நாட்கள் புதுமைகளற்றுத் தோன்றும் போது, என்னைத் தூசு தட்டுவதற்கு இக்கவிதையைப் பயன்படுத்துகிறேன். நன்றி நண்பரே! இக்கவிதை பூஞ்சைத் துடைப்பம் அல்ல. நல்ல குச்சி வெளக்குமாறு! மொத்தத்தில் இது ஒரு சுயவிமர்சனமே!

நீங்கள் இயேசுவைப் போல அல்ல
இயேசுவாக வாழ அழைக்கப்படுகிறீர்கள்
சிதைந்து போய்க்கொண்டிருக்கும் இந்த
மனித சமுதாயத்திற்கு உங்களைப் போன்ற
சீர்திருத்தவாதிகள் அவசியம் தேவைப்படுகிறார்கள்

மக்கள் பணத்தைக் கொண்டு மப்பில் மிதக்கின்ற
மடத்தனமான அரசியல் வாதிகளைப் போல
அடித்தட்டு மக்களின் அவலங்களை
அடையாளம் காட்டி
பணத்தைப் பெற்று பகட்டு வாழ்க்கை வாழும்
பிணந்தின்னிக் குருக்களைப் பார்க்கும் போது
இளைஞர் எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

ஃபாரின் சென்று பட்டப்படிப்புகள் பல முடித்து
பந்தங்களையும் சொந்தங்களையும்
பங்குப்பணத்தில் வாழவைத்துவிட்டு
பாமரர்களின் வயிற்றிலடிக்கும் பணியாளர்களைப் பார்க்கின்ற போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

செபமாலை உருட்டியக் கரங்களில் இன்று
செல்போன்கள் விதவிதமாய்
மறைநூல் தவழ்ந்த மடிகள்
இன்று மடிக்கணினிகளின் பிடியில்
திருவிருந்தைச் சிறப்பிக்க திருநிலைப்படுத்தப்பட்டவர்கள்
பெருவிருந்தில் மட்டுமே முன்னிலையில் பங்கெடுப்பு
இது போன்றக் காட்சிகளைப் பார்க்கின்ற போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

கள்ளக் காதலும் காதலித்து கற்பமாக்கிக் கைவிடுதலும் இன்றையக்
கலியுகத்து ஆண்களின் கைவந்தக் கலையாக இருக்கின்ற போது
அருள்பணியாளர்களும் துறவிகளும் இதில்
அளப்பரியச் சாதனை படைத்து வருவதைப் பாரக்கும் போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

பொன்னும் பொருளும் போதையும் ராதையும்
உங்கள் வாழ்வாகிப் போனால்
இயேசுவின் பாதையில் எம்போன்றோரை
வழிநடத்திச் செல்வது யார்?
சிக்சர் அடிப்பவர்களையும்
சிக்கென பஞ்ச் டயலாக் பேசும்
சினிமா கலைஞர்களையும்
தலைவர்களாய்ப் பாவித்து
தலைவிரிக்கோலமாய் அலைகின்ற
அந்நிய மயமாக்கலால் அலைக்கழிக்கப்பட்டு
ஆன்மீக வாசனையே அற்றுப்போன
தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தங்களைத் தொலைத்துவிட்ட -இளையோருக்கு
புரட்சியாளர் இயேசுவை எப்படி அடையாளம் காட்டப் போகிறீர்கள்?

அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை -வாழ்வில்
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
அருள்பணி வாழ்வு என்பது இக்காலத்தில்
சந்தி சிரிக்கின்ற பந்தா வாழ்வா - அல்லது
சரித்திரம் பேசும் தரித்திர வாழ்வா
இளையோராகிய எங்களுக்கு எப்படி உணர்த்தப் போகிறீர்கள்?

ஏழைகளின் வாழ்வு மிளிர
சமத்துவ சமுதாயம் மலர
சாதியத்தை ஒழித்து
நீதி தழைக்க
அரிதாரம் பூசியவர்களாக அல்ல
அவதாரம் எடுத்திடுங்கள் இயேசுவாக

இளைஞர்களை வழிநடத்த வாழ்வை உணர்த்த
இளைய குருக்களாகிய நீங்கள் அவசியம் தேவை
இயேசுவைப் போல அல்ல
இயேசுவாக வாழ

வெண்ணிற அங்கியும் அதிகாரமுமல்ல குருக்களின் அடையாளம்
ஏழ்மையும் எளிமையும் உண்மையும் உறுதியுமே உங்கள் உடைமையாகும்
திருநிலைப்படுத்தப் போகும் நீங்கள் முதலில்
உங்கள் மனதை ஒருநிலைப்படுத்துங்கள்
உலக மாயைகளில் உங்களைத் தொலைத்துவிடாமல் இருக்க
இயேசுவின் வார்த்தைகள் உங்கள் இடைக்கச்சையாகட்டும்
இறையன்பும் பிறரன்பும் உங்கள்
அருள்பணியில் படைக்கலனாகட்டும்
நன்னெறி கற்பித்தலும் நல்வழிகாட்டலும்
உங்கள் உன்னதப் பணியாகட்டும் - வெறும்
வார்த்தையால் மட்டுமல்ல - உங்கள்
வாழ்வின் வழியாக

பணத்திற்கும், பதவிக்கும்
பட்டத்திற்கும் சாதிக் கூட்டத்திற்கும்
சமரசம் செய்பவர்களாக அல்ல
உண்மைக்கும் நீதிக்கும்
உயிர் கொடுப்பவர்களாக
அநீதி கண்டு பொங்கி எழுந்த
அன்பர் இயேசுவாக
உங்களைக் காண ஆசைப்படுகின்றோம்

விலையுயர்ந்த ஓட்டல்களை நோக்கி அல்ல உங்கள் பாதங்கள் - வாழ்வில்
நிலைகுலைந்த ஓட்டை வீடுகளை நோக்கிச் செல்லட்டும்
எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்க
ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு பெற
குருத்துப் பணி மக்களின்
மனங்களைச் சீர்படுத்தும் மருத்துவப்பணி - எங்களுக்கு
இந்திய அரசும் வேண்டாம்
தமிழக அரசும் வேண்டாம்
இறையரசு இம்மண்ணில் மலர வேண்டும்

ஏழ்மையும் எளிமையும்
உண்மையும் மனிதத் தன்மையும்
உங்களில் வெளிப்பட
செபவாழ்வும் பணி வாழ்வும் எளியோர்க்குப் பயன்பட
இறையரசை இம்மண்ணில் அமைக்க
இயேசுவைப் பேல அல்ல
இயேசுவாகவே வாழ

இளையோராகிய எங்களின்
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ஒரு உன்னதமான மனிதர். - 1

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது சில சிந்தனைகள் என்று நம் மனதில் பட்ட சில கருத்துக்களைப் பதிவிட்டுக் கொண்டிருந்த வேளையிலே இன்னொரு காரியம் என்னை எழுதச் சொல்லி அடம்பிடித்துக் கொண்டேயிருக்கிறது. மனதில் பட்ட ஒரு கருத்தை, அடுத்தவரைப் புண்படுத்தும் நோக்கமில்லாத ஒரு மொழியில் அவ்வப்போது நம்மால் வெளியிட முடிந்தால் பல பிரச்சனைகளை நாம் தவிர்த்துவிடலாம் என்பதால் இதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிலரோடு இருக்கும் போது நேரம் போவதே தெரியாது. நாம் நன்றாக, மிகவும் இயல்பாக உணரும்படி ஜாலியாக பேசுவார்கள். இவை நல்லதுதான். ஆனால் பேசு பொருள் என்பது எப்போதும் மேலோட்டமானதாகவே இருக்குமென்றால் அந்தப் பேச்சினால் எந்தப் பயனும் இல்லை. இளையராஜா, தமிழ் சினிமா, கிரிக்கெட், வடிவேல், அரசியல் அல்லது இன்னொரு மூன்றாம் நபர் என்ற வகையாறாக்களிலே நம் பேச்சு நின்றுவிட்டால் அதற்குப் பெயர்தான் வீண்பேச்சு. ஒருவருக்கொருவர் உண்மையாகவே தாங்கள் என்ன உணர்கிறார்கள் என்பதையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்வதற்கான இயல்பான சுதந்திரமே உண்மையான உறவினையும், நட்பினையும் வளர்த்தெடுக்கும். 

சிலர் தங்கள் தனிப்பட்டப் பிரச்சனைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று கொள்கை வைத்திருப்பார்கள். கவலை, பயம், பலவீனம், அவமானம், அந்தரங்கம், குடும்பம் போன்ற உள்ளார்ந்த காரியங்களை எக்காரணம் கொண்டும் யாரிடமும் வெளியிடமாட்டார்கள். இந்த மாதிரியானத் தருணங்கள் அனைத்திற்கும் அவர்கள் மௌனமாக இருப்பார்கள். முதல் நாள் 'என்ன ஆச்சு, ஏது ஆச்சு' என்று கேட்ககூட முடியாத படி கடுப்பாக இருப்பார்கள். இரண்டாம் நாள் நாம் அப்படி கேட்டு பதட்டமடைவதை  விரும்புவார்கள். மூன்றாம் நாள் மீண்டும் அதே இளையராஜா, அதே வடிவேல் என்று கலகலப்பாக மாறிவிடுவார்கள். 

இப்படிப்பட்ட ஒரு மனிதர் எனக்கு நல்ல அறிமுகம். மிகவும் நல்ல மனிதர். எல்லோராலும் விரும்பப்படுபவர். அவரிடம் எனக்கு எப்போதும் பிடிக்காத ஒரு குணம் உண்டு. நம் மீது கோபம் என்றால் அந்தக் கோபம் தீரும் வரையிலும் நம்மிடம் பேசுவதைத் தவிர்ப்பார். பார்த்தாலும் அமைதியாகச் சென்று விடுவார். எக்காரணம் கொண்டும் காரணத்தைச் சொல்லமாட்டார். உண்மையிலேயே நம்மீது கோபம் இருக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. மேற்கூறிய வேறு எந்தப் பிரச்சனையாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். பிறகு இரண்டு மூன்று நாட்களில் எதுவுமே நடவாதது போல மீண்டும் வடிவேல், இளையராஜா என்று ஆரம்பித்துவிடுவார். இது ஒரு சுழற்சி முறையில் அவ்வப்போது வருடக்கணக்கில் நடந்து வருவதால், இதைப்பற்றி நானும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. 

இன்னொரு வாடிக்கையான விசயம் என்னவென்றால் அவ்வப்போது நாங்கள் ஏதாவது ஒரு வெட்டியானக் கருத்தைப் பற்றி காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். விவாதக்களம் யுத்தக் களம் போல இருக்கும். கருத்து எங்கள் ஊர் அழகா? உங்கள் ஊர் அழகா? பழைய படம் நல்லதா? புதிய படம் நல்லதா? என்ற வகையில் மிகவும் மொக்கையாக இருக்கும். காரசாரத்தின் உச்சியில் கோபதாபங்களும் வரும். பிறகு அதே மௌனப் புரட்சி. மூன்றாம் நாள் மீண்டும் இளையராஜா, அல்லது வடிவேல். இருந்தாலும் மிகவும் நல்ல கரிசனையான மனிதர். நம்மிடம் மட்டுமில்லாது நமது நண்பர்கள் யார் வந்தாலும்  உபசரிப்பிற்குப் பஞ்சமே இருக்காது. என்ன ஏதென்று சொல்லாமல், பேசாமல் இருந்து நம்மைக் கடுப்பேற்றும் இரண்டு நாட்களைத் தவிர்த்துப்  பார்த்தால் ஒரு உன்னதமான மனிதர்.

எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது வழக்கத்திற்கு மாறாக அந்த இரண்டு நாள் மெளனம் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் வரை. அதற்கு பின்னர் தற்செயலான ஒரு சந்திப்பில் வழக்கமான வடிவேல், இளையராஜா கதைகளைத் தொடர்ந்து, கேட்க வேண்டமென்ற எனது முடிவை மீறி கேட்டுவிட்டேன். " என்ன இளவுதான் நடந்துச்சு உங்களுக்கு? இரண்டு வருஷமா உயிரை வாங்குறீங்களே!" என்று கத்தினேன். அவர் குழைந்து குழைந்து சொன்ன விசயம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது! மனித வாழ்வில் என்ன வேண்டுமென்றாலும் நடைபெறலாம் தான். ஆனால் நாம் உயர்வாக நினைத்த ஒரு நட்பு இப்படி பரிதாபமாக முடிவுக்கு வரும் என்று என் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை!

இந்தக் கதை என்ன ஆனது என்பதை நாளைக்கு எழுதுகிறேன். மிகவும் நேரமாகிவிட்டது. எல்லோருக்கும் குட்நைட்.




16-9-2016, 5:6 AM

உன்னதமான மனிதர் 2

ஒரு தனிப்பதிவாக எழுதுவதற்கு இன்னும் நிறைய இருந்தாலும், முடிந்து போன ஒன்றிற்கு முற்றுப்புள்ளி ஒன்றுதான் சரியான முடிவுரை என்பதாலும், இன்னும் சில இங்கிதங்கள் கருதியும் உன்னதமான மனிதரின் இரண்டாம் பகுதியை எழுத மனம் விரும்பவில்லை. சொல்ல வந்த கருத்து இதுதான். உங்கள் மனதில் ஒருவர் மேல் கோபம் இருந்தால் உடனடியாக சொல்லிவிடுவது நல்லது. ஒரு வேளை உங்கள் கோபம் தவறான தகவல்களிலிருந்து வந்திருந்தால் நீங்கள் விளக்கம் பெற்றுக்கொள்ளக் கூடும். அல்லது உங்கள் கோபத்தில் அர்த்தமிருந்தால் அடுத்த நபர் தன்னைத் திருத்திக்கொள்ளக் கூடும். இந்த உடன்பாட்டிற்கு உடன்வராத உறவு எல்லாவிதமான நியாயங்களையும் இழந்து விடுகிறது. இதற்கு மாறாக கூரானக் கத்தியை கக்கத்திற்குள் வைத்துக் கொண்டு அலைவது மிகவும் ஆபத்தானது. 

புதன், 7 செப்டம்பர், 2016

நீங்கள் வேறு நாட்டில் இருக்கும் போது- சில சிந்தனைகள் - 2

இந்தக் கட்டுரை நிச்சயமாக ஒரு ஒட்டு மொத்த சமூகத்தைப் பற்றியப் பார்வையல்ல. அப்படி ஒரு பார்வையை வைத்துக் கொள்வதே தவறு. அதுவும் எதிர்மறையாக என்றால் மிகவும் தவறு. இருப்பினும் நீங்கள் வெளிநாடுகளில் இருக்கும் போது சில தவிர்க்க இயலாத அனுபவங்களைச் சந்திக்க நேரிடும். அப்படி சில அனுபவங்களைப் பொதுமைப் படுத்தி எழுதுகிறேன். அவ்வளவுதான்.!

இத்தாலியில் இருக்கும் போது என்னை மிகவும் கோபப்படுத்தியது இந்தியாவைப் பற்றிய அவர்களின் பார்வை. கோபம் என்றால் சாதாரணக் கோபம் அல்ல. கடுங்கோபம். கிணற்றுக்குள் இருக்கும் தவளைக்கு கிணறுதான் உலகம் என்பது போல, அவர்களுக்கு இத்தாலி மட்டும் தான் உலகம். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளெல்லாம் பக்கத்துக் கிணறுகள். அவ்வளவுதான். மற்றபடி உலகில் உள்ள அனைத்து நாடுகளும் துன்புறும் நாடுகள். உண்பதற்கும், உடுத்துவதற்கும் எதுவுமில்லாத ஏழை நாடுகள். எவ்வளவு பெரிய மூடத்தனம். கோபத்திற்கு காரணம் இந்த அறியாமை மட்டுமல்ல. அவர்களின் இந்த 'அறிவுசுரங்கத்திற்கு' மேல் கொஞ்சம் அதிகமாக அந்த நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள மூர்க்கத்தனமாக மறுக்கிறார்கள்.

முதலில் உங்களைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள். இரயில் நிலையங்களிலோ, மற்ற பொது இடங்களிலோ ஒரு சிலர் நம்மைப் பார்த்ததும் தங்கள் உடமைகளை பத்திரப்படுத்துகிறார்கள். தங்கள் கைப்பையை கக்கத்திற்குள் இடுக்கிக் கொள்கிறார்கள். நம் கண்களைப் பார்ப்பதை வலுக்கட்டாயமாக மறுத்து பிற 'அழகானக்' காட்சிகளுக்கு கடந்து போகிறார்கள். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறதென்றால், பலமுறை நம் ஊர்க்காரர்கள்தான் தங்கள் உடமைகள் இரயிலிலோ, பேருந்திலே பறிகொடுத்து வெறும் கையாய் வீடுதிரும்புகிறார்கள். சிலர் தங்கள் மடிக்கணிணி, மூக்குக் கண்ணாடி, களவுச்சீட்டு முதலியவற்றைக் களவுகொடுத்து வீடு திரும்பவும் வழியற்றவர்களாகின்றார்கள். வெளிப்படையாகத் தங்கள் வெறுப்பைக் காட்டிக் கொள்பவர்கள் மிக மிக சொற்பமானவர்கள்தான். அதுவும் உங்களுக்கு எந்தத் தொடர்பும், அறிமுகமும் இல்லாதவர்கள். இதனால் இவை உங்களை அதிகம் பாதிப்பதில்லை. 

தொழில் நிமித்தமாகவோ, அல்லது வேறு நிமித்தங்கள் காரணமாகவோ, உங்களிடம் தொடர்பில் இருக்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள் இந்த வெறுப்பை வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை. ஆனால் உங்களைப் பார்த்து ஒரு செயற்கையாக வருவித்தச் சிரிப்பும், தங்களுக்குத் தெரிந்த ஒன்றோ இரண்டோ ஆங்கில வார்த்தைகளும் பேசி உங்களை மகிழ்விப்பதாய் நினைத்துக்கொள்வார்கள். உங்களோடு சமத்துவம் பேணிக்கொள்வதாகக் காட்டிக்கொள்வார்கள். அவர்களின் கருணைக்கு அந்த ஆங்கில வார்த்தைகளுக்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது. இது இன்னொரு பார்வை. ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே, ஆங்கிலேயர்களால் காலனியாதிக்கத்திற்குட்பட்ட எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் தான் முதன்மை மொழி என்று எண்ணிக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் இன்னொரு மூன்றாம் நபர், 'ஓ! அவனுக்கு ஆங்கிலம் தெரியுமா?' என்று உயர்வு நவிற்சி செய்யும் போது, உலக அறிவில் பாண்டித்யம் பெற்ற முன்னவர் இவ்வாறு சொல்வார்: 'அவன் இந்தியா காரனாயிற்றே! அங்கே எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள்' என்று. கோபம் வருமா? வராதா?. இது தவறு. நாங்கள் எங்கள் மாநிலத்தின் மொழியைத் தான் பேசுகிறோம். தமிழ் எங்கள் தாய்மொழி. தொன்மையான செம்மொழி என்றெல்லாம் சொல்லத் தொடங்கினால், அதற்குள் அவன் வேறு பேச்சுக்குப் போயிருப்பான். சரியான மடச்சாம்பிராணிகள். ஒரு மண்ணும் தெரியாது. அவனுக்கு தெரியவில்லை என்பதற்காக வருத்தப்பட மாட்டான். தெரிந்து கொள்ளும் அளவுக்கு எந்தச் சிறப்பும் நம்மிடம் இருக்க வாய்ப்பில்லை என்பது அவனது கணிப்பு. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் 'மதர் தெரசாவும், கல்கத்தா சேரியும்' மட்டும் தான். அதே அன்னை பேசிய வங்க மொழி உலகின் 20 கோடி பேரின் தாய் மொழி என்பதும், தாகூர், தஸ்லிமா நஸ்ரின் போன்ற இலக்கியவாதிகள், இசை மேதைகள், எழுத்தாளர்கள் எண்ணற்றோரைப் பெற்றெடுத்த செழித்த மொழி என்பதைப் பற்றிய ஒரு துளி அறிவும் கிடையாது. வங்க மொழியும், மலையாள மொழியும் வெறும் ஆயிரம் ஆண்டு வரலாற்றை மட்டுமே கொண்டிருப்பினும், அம்மொழிகளில் வெளியாகும் சிறுகதைகளும், நாவல்களும் உலகத் தரம் வாய்ந்தவைகளாகும். இந்தியாவின் மொழிப் பன்மைக்கும், இலக்கிய வரலாற்றுப் பன்மைக்கும் முன் உலகத்தில் எந்த நாட்டை ஒப்பிட முடியும்? 

இன்னொரு வகையினர் இருக்கின்றனர். எளிய மக்கள். அவர்களுக்கும் 'படித்த மேதாவிகளுக்கும்' ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருக்குமே இந்தியா என்றால் ஏழை நாடு என்பது மட்டும் தான் தெரியும். எளிய மக்கள் கொஞ்சமேனும் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். யாரேனும் உண்மையாகவே கொஞ்சம் ஆர்வம் காட்டினால் தொல்காப்பியம், திருக்குறள், தஞ்சைப் பெரியகோவில், கல்லணை போன்ற பண்டையச் சிறப்புகள் முதல் கூகுள், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல்  அதிகாரிகள் தமிழர்கள் என்பது வரையிலும் என்னால் முடிந்த அளவு நம் தவிலை நானே வாசித்துக் கொள்கிறேன். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும். 

திங்கள், 5 செப்டம்பர், 2016

நீங்கள் வேறுநாட்டில் இருக்கும் போது - சில சிந்தனைகள் -1

எல்லோருக்கும் வணக்கம். எழுதி நிறைய நாட்கள் ஆகிவிட்டன. எழுத்து என்பது ஒரு திறமை என்பதை விட ஒரு பழக்கவழக்கம் என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தினமும் எழுதினால் ஒரு சிறிய காரியத்தைக் கூட அழகாக, கோர்வையயாக மிக எளிதாக எழுதிவிட முடிகிறது. ஆனால் எப்போதாவது எழுதினால் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான காரியத்தைக் கூட மனம் விரும்புவது போல எழுத்தில் கொண்டு வர முடிவதில்லை. இந்த நாட்களில் நிறைய சிந்தனைகள் அவ்வப்போது 'எழுது! எழுது!' என்று தூண்டிய போதும் அமர்ந்து எழுத மனம் ஒன்றாமல் பழக்கப்பட்டக் காரியங்களையே செய்யும்படியாகிவிட்டது. எத்தனை கவித்துவமானத் தருணங்களை இப்படி வீணடித்தேனோ?

கடந்த ஆகஸ்டு மாதம் 26 ஆம் தியதியோடு இத்தாலிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. எங்கள் சபையின் தலைமை இல்லத்தில், எங்கள் சபையின் சக அருட்பணியாளர்களோடு தங்கியிருப்பதால் புதிய சூழ்நிலைக்கேற்றவாறு என்னைத் தகவமைப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

சில புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். சில பழைய நண்பர்கள் நட்பு வட்டத்திலிருந்து விடுபட்டார்கள். மரங்களில் இலைகள் உதிர்வதும், பின்னர் தளிர்ப்பதும் மிகவும் இயல்பாக இருக்கிறது. மனித மனங்களுக்கு மட்டும் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. வேறு ஒன்றும் அதற்கு தேவைப்படவில்லை. அதில் வருத்தப்படவும் எதுவுமில்லை. அழகாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் ஒட்டி ஒட்டாமல் இரு என்று. தண்ணீர் வந்து போனத் தடங்களைக்  கூட அனுமதிப்பதில்லை தாமரை இலைகள். அது தண்ணீரின் பிழையுமில்லை. இலையின் பிழையும் இல்லை. நம் வாழ்வில் எதிர்வரும் எல்லேருக்குமான நியதியும் அதுதான். மலர்வதை மட்டும் மறந்து விட வேண்டாம்.

உலகம் முழுவதும் மனிதர்கள் நிறத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டாலும் சில அடிப்படையான காரியங்களில் அச்சு அசலாக ஒரே மாதிரி எதிர்வினையாற்றுகிறார்கள். வேறுபடுத்துபவற்றைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், அந்தப் பொதுவானப் புள்ளியைப் புரிந்து கொண்டு அந்தத் தளத்தில் உங்களை வைத்துக் கொண்டால் எந்த இடத்திலும், எந்த மனிதர்கள் மத்தியிலும் எளிதாக பழகிவிடலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. இன்பம், துன்பம் இந்த இரண்டும் எல்லோருக்கும் பொதுவானது. இவற்றைத் தருவிக்கும் காரணிகள்தான் ஒவ்வொரு சமூகத்தின் அரசியல், பொருளாதராம், பழக்கவழக்கம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன. நம் ஊர் பொருளாதாரப் பின்னணியில் ஞாயிற்றுக்  கிழமை சாயங்காலம் வட்டிப்பணம் கட்டவேண்டுமே என்ற கவலை. வளர்ந்த நாடுகளில் சனிக்கிழமை சாயங்காலம் நண்பர்களோடு ஊர்சுற்ற காசு வேண்டுமே என்ற கவலை. இதெல்லாம் ஒரு கவலையா என்று நாம் நினைப்போம். ஆம்! அவர்களைப் பொறுத்தமட்டில் அது கவலைதான்.

வளர்ந்த நாடுகளுக்கும் நமக்குமான மிக முக்கியமான வித்தியாசமாக நான் பார்ப்பது ஒன்றுதான். இங்கு நீங்கள் எங்கு சென்றாலும் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் தரமாகக் கிடைக்கின்றன. இதில் நகரம், மாநகரம், குக்கிராமம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு அவர்கள் யாரையும் நாடாமல் சுயமாக வாழ்வதற்குத் தேவையான ஓய்வூதியமும், நோய்வாய்ப்பட்டால் ஒரு காசு செலவில்லாமல் உயர்தரமான மருத்துவமும் கிடைக்கிறது. ஆயினும் நம்மைப் போலவே அவர்களும் கவலைப்படுகிறார்கள். பிள்ளைகள் வந்து பார்க்கவில்லையே! பிள்ளைகளின் திருமணம் ஒரு ஆறுமாதம் கூட நிலைக்கவில்லையே! அதிகமாக வெயில் அடிக்கிறதே! அல்லது அதிகமாக குளிர் அடிக்கிறதே என்று கவலைப்படுவதற்கு இவர்களிடமும் நிறைய இருக்கின்றன.

நிறைய காரியங்களில் இந்த மக்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். ஏற்றத் தாழ்வுகள் அதிகமில்லாத ஓரளவு சமூக சமநிலையை நாடு முழுவதும் கொண்டு வந்துவிட்டார்கள். மக்களின் உயிர் பாதுகாப்புக்கு எதை வேண்டுமானாலும் அடமானம் வைப்பார்கள். சாலைகளில் பாதசாரிகள்தான் எஜமானர்கள். மற்றவர்கள் நின்றுதான் செல்ல வேண்டும். ஹார்ன் அடிப்பதில்லை. எவ்வளவு மெதுவாக செல்ல வேண்டியிருப்பினும் பொறுமையாக ஒருவர் பின் ஒருவராக செல்வது என்று மிகவும் நாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். சாலை விதிகளை மதிப்பதில் நாம் இன்னும் பூஜ்யத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம். சாலை விதிகளை மதிப்பது என்பது சக மனிதர்களை, அவர்களின் விலைமதிப்பற்ற உயிரை, அவர்களின் குடும்பங்களை, பிள்ளைகளை, ஏன் ஒட்டு மொத்த சமுதாயத்தையே மதிப்பது என்பதை நாம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொது இடத்தில் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். நாம் நம் வீட்டின் வரவேற்பரையில் எச்சில் கழிப்பதோ, சாப்பாட்டு அறையில் சிறுநீர் கழிப்பதோ, பூஜை அறையில் குப்பை கொட்டுவதோ கிடையாது. ஆனால் பொது இடத்தில் எந்த உறுத்தலுமின்றி அவற்றைச் செய்கிறோம். இவர்கள் பொது இடங்களையும் தங்கள் வீடு போல போலவே பாவிக்கிறார்கள். எந்த கூச்சமுமின்றி ஒருவர் ஒருவரின் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். முத்தமிட்டுக் கொள்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் நாம் மிக இயல்பான அன்பின் வெளிப்பாடுகளுக்கு தேவையற்றுக் கூச்சப்பட்டுக் கொள்கிறோம். திரை மறைவான பல அசிங்கங்களைக் கூச்சமின்றிக் கடந்து செல்கிறோம்.

குப்பை மேலாண்மை பற்றி பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். உள்ளாட்சி  அமைப்புகள் மூலம் பொது இடங்களைப் பேண வேண்டிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டுக்காரனிடமிருந்து நம் மானத்தையும், டெங்கு, சிக்குன் குனியாக்களிடமிருந்து நம் மக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். குப்பைகளை முறையாக சேகரித்தல், எடுத்துச் செல்லுதல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றில் நமது உட்கட்டமைப்பு வசதிகள் எந்த நவீனத்தையும் எட்டவில்லை என்பதும் மிகவும் உண்மை. நாடு முழுவதும் ஐ.டி. துறைகள் வந்து பளபளப்பைக் கூட்டிவிட்டாலும், குப்பை சேகரிக்க இன்னும் துடைப்பமும், தூப்புக்காரியும் தான் என்றால் இதுதான் இந்தியாவின் முகம். 

இங்கே காவலர்கள் உங்களைப் பரிசோதிக்க வேண்டுமென்றாலும் 'தயவுசெய்து உங்கள் அடையாள அட்டையை நான் பார்க்க முடியுமா?' என்று மிகவும் அழகாக கேட்பார்கள். ஏதாவது சான்றிதழ்கள், இலவச சலுகைகள் என்று அரசு அலுவலகங்களுக்குச் சென்றாலும் உங்களுக்கு சிரமம் தந்து விடாமல் எளிதாக காரியத்தை முடித்துவிட மிகுந்த சிரத்தை எடுப்பார்கள். அரிதினும் அரிதாக, ஒருவேளை வாய்ப்பே இல்லாத பட்சத்தில் கூட 'மிகவும் வருந்துகிறோம். குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவு செய்து வாருங்கள். உடனே தந்துவிடுகிறோம்' என்று கூறுவார்கள். நம் ஊரில் பத்து ருபாய் விலை பெறாத இலவச வேட்டி, சேலை தருவார்கள். அதைத் தர வேண்டிய அலுவலர் தன் வீட்டிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தருவதைப் போல நடந்து கொள்வதைப் பார்க்கும் போது நாம் யாரை நொந்து கொள்வது என்று தெரியவில்லை.

உலகமே பெருமைப்படத்தக்க ஏராளம் விசயங்கள் நம்மிடம் இருக்கின்றன. இப்போது நன்றாக தூக்கம் வருகின்றபடியினால் மீதியை நாளைத் தொடர்கிறேன்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

விளையும் பயிர்(கள்)

மனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை உலகுக்கு உரத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது வேதாரண்யம் அருகே நடந்துள்ள இரு நிகழ்வுகள். தாங்களே எளிய, வறுமை நிலையில் இருந்தாலும் சக மாணவர், மாணவியின் துயரம் உணர்ந்து உதவிசெய்து நட்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர்.

நண்பனுக்காக கழிவறை…
வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி தெற்கு எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு அதேபள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கழிவறை கட்டித் தந்துள்ளனர். எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அகத்தியன். அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவதால், அகத்தியன் பள்ளிக்கு சரியாக வராததையடுத்து அதேவகுப்பில் படிக்கும் ஹரிஷ், ராகுல், வசிகரன், நவீன்ராஜ் ஆகியோர் அகத்தியனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.
அகத்தியனின் வீட்டில் கழிவறை இல்லாததால் திறந்தவெளியில் காலைக் கடன்களை கழிப்பதும், அதனால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்ததையடுத்து, இந்த நிலை குறித்து மற்றவர்களிடம் தெரிவித்த மாணவர்கள் நால்வரும் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் ரூ.5,000 நிதி திரட்டினர்.
பள்ளி சென்ற நேரம் போக மீதி நேரத்தில், ஒரு கொத்தனார் உதவியுடன் தாங்களே சித்தாள் வேலையைச் செய்து 3 நாட்களில் கழிவறையை கட்டி முடித்த மாணவர்கள் நால்வரும் அதனை அகத்தியன் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மாணவி சிகிச்சைக்கு உதவி…
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா, உப்பு நீர் நோயால் பாதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி, தஞ்சை, சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாவின் தந்தை செல்வம் இறந்துவிட்டார். தாய் விஜயலட்சுமி, 100 நாள் வேலைக்குச் சென்று, மகள் திவ்யா, மகன் தினேஷ் ஆகியோரைக் காப்பாற்றி வருகிறார்.
உப்பு நீரால் பாதிக்கப்பட்ட திவ்யா, சிகிச்சைக்குப் பணமில்லாத நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கு வருவதைக்கூட நிறுத்திக்கொண்டுவிட்டார். இதையறிந்த, அப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் தந்தையை இழந்த மாணவர்கள் மாரீஸ்வரன், அருண்ராஜ் ஆகிய இருவரும் திவ்யாவுக்கு மருத்துவ செலவுக்கு உதவ நினைத்தனர்.
பள்ளித் தலைமையாசிரியர் வசந்தியை அணுகி, திவ்யாவின் நிலைமையை எடுத்துக் கூறினர். அதனையடுத்து தலைமையாசிரியை ரூ.500 வழங்கினார்.
மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிக ளிடம் நிதிதிரட்டினர். வசூலான மொத்த தொகை ரூ.10,565-ஐ மாணவர்கள் இருவரும் திவ்யாவின் மருத்துவ செலவுக்காக வழங்கினர்.
சக மாணவியின் மருத்துவ செலவுக்காக உதவிய மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மனதாரப் பாராட்டினர். எனினும், மாணவி திவ்யா தொடர் சிகிச்சை பெறவேண்டிய நிலையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தமிழ் இந்து நாளிதழ், செப்டம்பர் 1, 2016 

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

அதிகாரம். அது ஒன்றுதான் அவனுக்கு எல்லாம்

மன்னர்  ஒருவர் ஒரு புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகம் எப்படி இருந்தது என்று சுருக்கமாக எழுதித்தருமாறு தன் நாட்டிலுள்ள அறிஞர் பெருமக்களிடம் கேட்டுக்கொண்டார். எல்லோரும் புத்தகத்தைப் ஆஹா ஓஹோ என்று புகழந்து தள்ளினர். ஆனால் ஒரே ஒரு அறிஞரின் விமர்சனம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தது. அவர் இவ்வாறு எழுதியிருந்தார். 'இந்தப் புத்தகம் மன்னரால் எழுதப்பட்டமையால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. இல்லையென்றால் விமர்சனத்திற்குத் தகுதியற்றது' என்று. நம் நாட்டில் மக்களாட்சியின் மன்னர்களும் இப்படிப்பட்டக் கேள்விகளை அவ்வப்போது எழுப்புகிறார்கள். ஆனால் பதிலையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். 

எல்லா எளிய கேள்விகளும்  ஓர் எளிய பதிலைக் கோரி நிற்கின்றன என்று கூற முடியாது. சில கேள்விகள் அறிந்து கொள்வதற்கான ஆவலில் எழுபவை. சில கேள்விகள் அறியாமையிலிருந்து எழுபவை. சில கேள்விகள் எதிராளியைக் கொல்வதற்காக எறியப்படும் ஏவுகணைகள். நாம் எத்தகையவர்கள் என்பதை நாம் எழுப்பும் கேள்விகளைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும்.

ஒருவர் தனது அதிகாரத்திற்கு கீழ் வருகிறார் என்பதை அவ்வப்போது அந்த நபருக்குத் உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக சிலர் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் அதனைத் தங்களுக்குத் தாங்களே உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். பதில் சொல்ல வேண்டியவர் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும், கேள்வி கேட்டவர் பதட்டமடைகிறார். தான் எதிர்பார்க்கும் பதில், தான் எதிர்பார்க்கும் தொனியில் வரவேண்டுமென்று நினைக்கிறார். அந்தப் பதிலுக்காக உண்மை, நீதி, இரக்கம் போன்ற எந்த மதிப்பீடுகளையும் விற்கத் தயாராக இருக்கிறார்கள். இருப்பினும் என்ன பதில் வந்தாலும் சிலரது பதிலில் அவர்களுக்குத் திருப்தி வருவதேயில்லை. அப்படியென்றால் சொல்லுங்கள் உண்மையிலேயே அதிகாரம் யாரிடம் இருக்கிறது? கேள்வி கேட்டவரிடமா? இல்லை பதில் சொல்பவரிடமா?

இயேசு வித்தியாசமான மனிதர். பிறரது பதிலைக் கொண்டு தனது அதிகாரத்தை உறுதி செய்து கொள்ள அவர் விரும்பவில்லை. அவரைக் கொல்ல வந்தவர்களிடம், 'யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார்?' அவர்கள் நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்' என்றார்கள். இயேசு அவர்களின் பதிலால் அச்சமடையவோ, பதற்றமடையவோ இல்லை. அவர் நினைத்திருந்தால் அப்படி யாரும் இங்கு இல்லை என்று சொல்லி கூட தப்பித்திருக்காலம்.  ஆனால் இயேசு, 'நான் தான் என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்' என்று எந்தத் தயக்கமும் இன்றி துணிச்சலாக பதிலளிக்கிறார். (யோவன் 18:7-8)

அதற்கடுத்த நிகழ்விலே 'பிலாத்து இயேசுவிடம் 'நீ எங்கிருந்து வந்தவன்?' என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. அப்போது பிலாத்து, 'என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு உன்னை சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' என்றான். (யோவன் 19:9-10). இயேசு குற்றமற்றவர் என்பது பிலாத்துவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவனது அக்கறை உண்மையோ, நீதியோ அல்லது இரக்கமோ அல்ல. அதிகாரம். அது ஒன்றுதான் அவனுக்கு எல்லாம். தனது அதிகாரத்தை இயேசுவின் பதிலைக்  கொண்டு உறுதிபடுத்த விரும்பினான். இயேசு பிலாத்து விரும்பியப் பதிலைத் தரவில்லை. பிலாத்துக்கள் விரும்பும் பதிலை இயேசு ஒரு போதும் தரப்போவதில்லை.  

சனி, 11 ஜூன், 2016

உணவும் தெய்வமே

அருட்தந்தை சேசுராஜ். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் தத்துவவியல் துறையில் பேராசிரியர். அவரது காரின் கண்ணாடியில் 'உறவே தெய்வம்' என்று எழுதியிருப்பார். அதற்கான விளக்கத்தை வகுப்பில் ஒரு முறை சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வாறு தெய்வத்தை பலரும் தங்கள் அனுபவங்களில் அடிப்படையில் உணர்ந்து கொள்வதுண்டு. தத்துவங்களை விட வாழ்க்கையின் அன்றாட அனுபவங்களில் இறைவனின் பராமரிப்பை உணர்ந்து கொள்ளப் பழகி விட்டால், நாளையைப் பற்றிய பயமின்றி இரவில் நன்றாக உறங்கி எழும்ப முடியும். அந்த வகையில் உணவும் தெய்வமாகும் ஒரு நிகழ்வினைப் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு ஒரு பெரியப்பா உண்டு. அவருக்கு மூன்று பிள்ளைகள். சிவா, ஆனந்த், ஆர்த்தி. இதில் ஆனந்துக்கும் எனக்கும் ஒரே வயது. அவர்களுடைய வீடு நாகர்கோவிலில் உள்ளது. நான் சிறுவயதில் விடுமுறை நாள்களில் செல்ல விரும்பும் ஒரே உறவினர் வீடு அவர்களுடையதுதான். நிறைய காரணங்கள் இருந்தாலும், ஆனந்துடன் சேர்ந்து கொண்டு அவனது நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவது மற்றும் சைக்கிள் எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவது என்றுமே மறக்காத நினைவுகள். ஊரில் மிகவும் சுமாராக விளையாடும் என்னை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள அங்கு போட்டியே நடக்கும். இது எனக்கு மிகவும் பிடித்தது. ஊருக்கு திரும்பியதும் ஊர் பையன்களிடம் நான் நாகர்கோவிலிலேயே சைக்கிள் ஓட்டினேன் என்று சொன்னால் அது ஒரு தனி கெத்து தான். பெரியப்பா எனக்கு தெரிந்த காலத்திலேயே மிகவும் வசதியானவர்தான். இப்போது சொல்லவே வேண்டாம். நாகர்கோவிலில் மிகவும் அறியப்பட்ட பில்டிங் கான்டிராக்டர். 

அவரைப் பற்றிய எனது முதல் நினைவு. குறைந்தது ஒரு பதினெட்டு வருடங்களாவது முன்னதாக இருக்க வேண்டும். ஒரு முறை நாங்கள் அங்கு சென்றிருந்த போது பெரியப்பா வீட்டில் இல்லை. 'இரவு எட்டு மணிக்குத்தான் வருவார். அவர் வரும் வரைக் காத்திருக்க வேண்டாம். சாப்பிடுங்கள்' என்று சொல்லி பெரியம்மா வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே பெரியப்பா வந்து விட்டார். எங்களைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் சந்தோஷம். உடனே சிவாவிடம் நூறு ருபாயை எடுத்துக் கொடுத்து புரோட்டா வாங்கி வரச் சொன்னார். அவன் எவ்வளவு என்றான். நூறு ருபாய்க்கும் வங்கிட்டு வா என்றார் பெரியப்பா. அப்போதைய எங்கள் பொருளாதாரக் கணக்கில் புரோட்டாவே பெரிய காரியம். அதிலும் நூறு ருபாய்க்கும் புரோட்டாவா? அதன் பின்னர் அவர் பேசியக் காரியம் தான் இக்கட்டுரைக்கான அவசியத்தை ஏற்படுத்தியது.

பெரியப்பா சிறுவயதிலேயே தனது அப்பாவை இழந்தவர். இவர் வீட்டிற்கு ஒரே பையன். அவரது அம்மா லெட்சுமி பாட்டிதான் இவரை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தவர். உறவினர்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட சூழ்நிலை. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இந்து சமுதாய பழக்கவழக்கங்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். லெட்சுமி பாட்டி ஒரு விதவை. அத்தோடு வறுமை. பல வேளைகளில் பசியோடுதான் உறங்கச் செல்வார்கள் தாயும், பிள்ளையும். வயிற்றுப் பசி ஒருபுறம், உறவினர்களின் புறக்கணிப்பு ஒருபுறம் என்று சபிக்கப்பட்ட வாழ்வின் கருகியப் பக்கத்திலிருந்து தான் அவர் துளிர்விட ஆரம்பித்திருக்கிறார். 

ஒரு நாள் தலையில் எண்ணைகூட தேய்க்காமல், மேல் சட்டையில்லாமல், ஒட்டிய வயிற்றோடு தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த போது தெருவில் கடை போட்டிருந்த நபர் ஒருவர் 'தம்பி! இங்க கொஞ்சம் வா!' என்று அழைத்து ஒரு பெரிய நேந்திரம் பழத்தைக் கொடுத்து சாப்பிடு தம்பி என்றாராம். அந்த சூழ்நிலைக்கு அது ஒரு பழம் அல்ல. அது ஒரு வாழ்க்கை. அது பல கோடிகளைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. இதை பெரியப்பா சொல்லிக் கொண்டிருந்த போது அந்தக் கடைக்காரர் ஏற்கனவே இறந்து போயிருந்தார். அவரது இரண்டு பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு பெரியப்பா நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்.

அவரது சிறுவயதில் அவரைப் புறக்கணித்த அவரது குடும்பத்தினர் பலரும் இன்று அவரிடம் தான் வேலை செய்கின்றனர். விதவை மகன் என்று புறக்கணித்த சமுதாயத்தில், இன்று நிறைந்த செல்வத்துடனும், செல்வாக்குடனும் வாழ்ந்து வருகிறார் பெரியப்பா. அவரிடம் நான் வியந்த காரியத்தில் ஒன்று எத்தனை பணம் வந்தாலும் இறைவனையே சரணாகதியாய் கொள்ளும் அவரது இறைபத்தி. இறைவன் முன்னிலையில் தான் ஒரு தூசு; நாளையே அவர் என்னை ஊதித்தள்ளிவிட முடியும் என்ற தெய்வபயம். ஓய்வறியா உழைப்பு, செய்யும் தொழிலில் நேர்மையும், நேர்த்தியும். பட்டினி காலத்தில் ஒரு நேந்திரம் பழத்தின் மதிப்பை இன்றும் உணரும் செய்நன்றி மறவா உள்ளம்.

பசித்திருப்போருக்கு உணவு தருதல் என்பது தருவோனுக்கும், பெறுவோனுக்கும் ஒரு சிறந்த இறையனுபவம் என்று நினைக்கிறேன். இதற்கு எத்தனை எத்தனையோ உதாரணங்களைத் தரமுடியும்.

ஞாயிறு, 20 மார்ச், 2016

உள்ளத்தனைய...

முற்சார்பு எண்ணங்கள் நம் சிறகுகளில் சுற்றியிருக்கும் சிலந்தி வலையைப் போன்றவை. அவை நம்மை குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடக்கிவிடும். நம் நாட்டில் வயல்களை விட வரப்புகளே அதிகம் என்று எங்கோ கேட்ட ஞாபகம். ஆம்! இந்தியா பல வண்ணங்களைக் கொண்ட வானவில் நாடு என்று நாம் வானளாவ புகழும் அதே நேரத்திலே, ஒவ்வொரு வேறுபாடுகளும் நம்மை அழகு படுத்துவதற்குப் பதிலாக, சில வேளைகளில் பிளவுபடுத்துவதையும் நாம் மறுக்க முடியாது. 

எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் நம் சகோதரர்கள் என்பதெல்லாம் வெறும் ஏட்டளவிலேயே நின்றுவிடுகின்றன. சில ஏடுகளில் கூட இந்த இணக்கங்கள் இருப்பதில்லை என்பது அனைத்திலும் வெட்கக் கேடு. பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக, பிற மதத்தவர்களுக்கு எதிராக, குறிப்பாக சாதி, மத, மாநில சிறுபான்மைக் குழுக்களுக்கு  எதிராக மிகவும் சாதாரணமாக இங்கு வெறுப்புக் கருத்துக்களைப் பரப்புவதில் நம் தலைவர்களில் சிலர் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். 

இதில் வேடிக்கை என்னவென்றால் நம்மவர்கள் வேறு இடங்களில் இரண்டாம் தரமாக நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டித்து, அத்தகைய மனநிலைக்கு எதிராகப் போராடும் அதே நேரத்தில் நம்மிடையே வாழும் பிறரை நாம் அவ்வாறே நடத்துவதில் இருக்கும் முரண்தான் நம்மை நகைக்க வைக்கிறது. எடுத்துக்காட்டாக மஹாராஷ்டிராவில் சிவசேனாவின் சாம்நா பத்திரிக்கையில் தென்னிந்தியர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற பதிவிற்குப் பதிலடியாக தமிழகத்தில் பால்தாக்ரேயின் உருவப்பொம்மைகளை எரிக்க அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சேலத்தில் செண்டை மேளம் அடிக்க வந்த கேரளக் கலைஞர்களை வாய்க்கு வந்தபடி திட்டி, நிராயுதபாணிகளாக இருந்த அந்த மிகமிகச் சிறு குழுவினரைக் காட்டுமிராண்டித் தனமாகத் திட்டி திருப்பி அனுப்பவும் நாம் தயங்குவதில்லை. அத்தகைய அத்துமீறல் நம் அரசியல் சாசனத்தின் அடிப்படையையே அப்பட்டமாக மீறியச் செயல் என்று எத்த பத்திரிக்கையும் இங்கு செய்தி வெளியிடவில்லை. சிவசேனாவின் பால்தாக்கரேக்கும், நாம் தமிழர் சீமானுக்கும். எச்சி ராசவுக்கும் இன-மத வெறியைப் பரப்புவதில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. அது தவறு என்றால் இதுவும் தவறுதானே?

மலையாளிகள் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருக்கிறது சிலரது மலர்ந்த முகத்தை நொடியில் சுருக்கிவிட. ஐந்து பேர் கூடும் இடத்தில் ஏதோ காரணத்தில் மலையாளிகளின் பேச்சு வந்து விட்டால் கொட்டும் வெறுப்பில் நமக்கு வியர்த்துக் கொட்டிவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் தாங்கள் கேள்விபட்ட, அல்லது தாங்கள் பார்த்த, அல்லது தங்களுக்கு நேர்ந்த ஏதாவது ஒரு நிகழ்வு நிச்சயமாக இருக்கிறது. அல்லது இந்த மாதிரி முக்கியமான விவாதத்தில் தேவைப்படுமே என்று சில நிகழ்வுகளைத் மெனக்கெட்டுத் தெரிந்து மறக்காமல் வைத்துக் கொள்கிறார்கள். 

உலகில் எங்கு சென்றாலும் மலையாளிகளாக இருக்கிறார்களாம். நிலவில் ஆம்ஸ்ட்ராம் கால் வைத்த போது அங்கு ஏற்கனவே ஒரு நாயர் சாயா கடை வைத்திருந்ததாக சில கதைகள் வேறு இருக்கின்றன. ஒரு மலையாளி ஒரு புதிய இடத்தில் குடியேறினால், சில ஆண்டுகளிலேயே அந்த ஊரில் பாதி பேர் மலையாளிகளாகி விடுகின்றனராம். குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையைச் சேர்ந்த மலையாளிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பார்களேயானால் உடனே அவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி மறைமாவட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்களாம். மலையாளிகள் நிறைய 'டாமினேட்' (அதிகாரம் செலுத்துதல்) செய்கிறார்களாம். மலையாளிகள் இருக்கும் இடத்திலே குழப்பம் தான் மிஞ்சுமாம். மலையாளிகள் தங்களை இந்தியர்கள் என்று சொல்வதில்லையாம். அவர்கள் தங்களை மலையாளிகள் என்றே சொல்கின்றனராம். மலையாளிகள் சாப்பிடுகின்றனராம். மலையாளிகள் உறங்குகின்றனராம். முடியலப்பா! இதில் எது, எதன் அடிப்படையில் தவறு என்று நான் சில இடங்களில் கேட்டுப் பார்த்தேன். அடிபடாதக் குறைதான். அதுமட்டுமல்ல என்னையும் ஒரு மலையாளிதான் என்று குற்றம் சாட்டிவிட்டனர். நாம் பார்க்காத குழப்பமா? நாம் பார்க்காத அதிகார வெறியா? நாம் பார்க்காத இனப்பாசமா? ஏன் இந்த பாசாங்கு போலிப் பரப்புரைகள்? 

உண்மையாகச் சொல்கிறேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே ஒரு நண்பர் அலைப்பேசியில் அழைத்தார். இன்று உரோமையில் மலையாளிகள் நடத்திய சிலுவைப்பாதையில் கலந்து கொண்டேன். மிக அருமையாக இருந்தது என்றேன். உடனே அவர் பதற்றம் அடைந்ததை உணர முடிந்தது. அவனுவ கள்ளப் பயலுவ. 'ஆர்கனைஸ்' பண்ணுவதற்கு இப்படி ஏதாவது பண்ணுவதாகச் சொன்னார். எதை 'ஆர்கனைஸ்' பண்ணுவதற்கு என்று கேட்கலாமா என்று நினைத்தேன். நானும் 'கள்ளப்பய' என்று பெயரெடுக்க விரும்பவில்லை என்பதால் கேட்மலே விட்டுவிட்டேன்.

எனக்கு ஒருவரைத் தெரியும். அவரிடம் ஒரு புரிந்து கொள்ளமுடியாத வரம் இருந்தது. அவர் சாலையில் செல்லும் போது எதிரே யார் வந்தாலும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று சொல்லிவிடுவார். இதோ வருகிறாரே இவர் பிரேசில் காரர் தான் என்று சொல்லிவிட்டு நம் முகத்தைப் பார்ப்பார். நாம் அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் முழித்தால், இவர் பிரேசில் காரர் தான் என்று மீண்டும் சொல்வார். அவருக்குத் திருப்தி ஏற்படும் வரை சொல்வார். எல்லா நாட்டினரையும், எல்லா மொழியினரையும் பார்த்த மாத்திரத்திலேயே இனம் பிரித்துச் சொல்லும் திறமை என்றால் சும்மாவா? இதில் மனிதர்கள் மட்டுமல்ல. எல்லாமும் அடங்கும். சன்னலுக்கு வெளியே தூரத்தில் செல்லும் விமானம் எந்த நிறுவனத்தினுடையது என்பதையும், அது எங்கிருந்து எங்கு செல்கிறது என்பதையும் அத்தனை உறுதியாகச் சொல்வார். என்னைப் பொறுத்தமட்டில் அது ஒரு விமானம் என்பது மட்டும் தான் ஓரளவு உண்மை. மனிதர்கள் விஷயத்திலும் அவர்கள் மனிதர்கள் என்பது மட்டும் தான் "ஓரளவு" உண்மை என்று நம்புகிறேன்.

சொல்ல மறந்து விட்டேன். இன்று உரோமையில் 'போக்கா தெல்லா வெரித்தா' என்னும் இடத்தில் தொடங்கி, வெனிஸ் சதுக்கத்தின் வழியாக கொலோசேயம் வரையிலும் ஒரு சிலுவைப்பாதை நிகழ்ச்சியை மலையாளிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு நானூறு பேருக்கு குறையாமல் கலந்து கொண்டனர். நமது ஊரில் செய்வது போன்றே தென்னங்குறுத்து ஓலையைக் கையிலே ஏந்தி மிகுந்த பக்தியோடு அவர்கள் அந்த வழிபாட்டினைச் செய்த விதம் உண்மையிலேயே மலைக்கச் செய்துவிட்டது. உரோமையின் மையத்தில் அத்தனை சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள், இரைச்சல்களுக்கு மத்தியிலும், அருமையான ஒலிபெருக்கி வசதியோடு, அற்புதமான குரலில் பக்திப் பாடல்கள் ஒலிக்க, மக்களின் ஒழுங்கானப் பங்கேற்போடு அசத்தி விட்டார்கள்.

 சீசர் போன்ற உரோமைப் பேரரசர்கள் தங்கள் கோட்டைக் கொத்தளங்களோடு ஆட்சி செய்த இடத்தில், பண்டைய கட்டிடங்களின் இடிபாடுகளை இருபுறமும் கொண்டு, கொலோசேயம் நோக்கிச் செல்லும் ஃபோரி இம்பரியாலி என்னும் சாலையில், 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி நிரம்பப் பெற்றவரே... இஸ்ராயேலின் பேரரசே! உன்னதங்களிலே ஓசான்னா' என்ற பாடல்களோடு, சிலுவையைத் தூக்கிக் கொண்டு இயேசு போன்று வேடமணிந்த ஒருவர் முன்செல்ல, அவரை நாம் பின்செல்ல, அந்த நிமிடங்கள் தந்த உணர்வுக்கு இணையேதும் இல்லை.

எத்தனை ஆயிரம் பேர் இந்நிகழ்வினை வியப்போடு பார்த்தனர்! புகைப்படங்கள் எடுத்தனர். சிலுவைப் பாதை சிந்தனைகள் வாசிக்கும் போது அத்தனை பேரும் சாலை என்றும் பாராமல், எல்லோரும் பார்க்கிறார்களே என்றும் பாராமல், முழுந்தாளிட்டு செபித்த விதம் நிச்சயமாக சிலரது நம்பிக்கையையாவது பாதித்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஒரு இடத்தில் பதின் பருவ பிள்ளைகள் கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தனர். சிந்தனைகள் வாசிக்கப்பட்ட போதும் அவர்கள் அவ்வாறே சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களாகவே பேசுவதை நிறுத்திக் கொண்டனர். யாராலும் இதனைக் கவனியாது செல்ல முடியவில்லை என்பதே இதன் மிகப் பெரிய வெற்றி. இறுதியில் ஒரு இத்தாலிய அருட்பணியாளர் இந்நிகழ்வினைப் பாராட்டிப் பேசும் போதும் இக்கருத்தையே கூறினார். உரோமையில் 'இந்தியர்கள்' இயேசுவுக்கு சான்று பகர்ந்த நிகழ்வு என்று திரும்பத் திரும்பக் கூறினார். நானும் அப்படித்தான் உணர்ந்தேன். 

வெள்ளி, 18 மார்ச், 2016

தீர்த்துக்கொள்வதென முடிவான பிறகு...

தீர்த்துக்கொள்வதென முடிவான பிறகு
பேசித் தீர்த்தாலென்ன?
பேசாமல் தீர்த்தாலென்ன?

நாவினால் சுட்ட வடுக்களை விட
ஆழமாயிருக்கின்றன
சுடாமல் விட்ட வடுக்கள்

எப்போதும் இருந்ததேயில்லை
வார்த்தைகளே இல்லாத
ஒரு தூய மௌனம்
பேசாத வார்த்தைகளே
மௌனம்

அவை பேசிய வார்த்தைகளை விட
இரைச்சலாய் இருக்கின்றன
மெல்ல முடியாதவாறு
கனமாய் இருக்கின்றன

இல்லாமல் போகட்டும்
அமைதியைக் குலைக்கும்
உக்கிரமான மௌனங்கள்!

ஞாயிறு, 13 மார்ச், 2016

என் நண்பன் அப்பாவான நாளில்

வறுவேல் அந்தோணி அவன் பெயர். குமரி மாவட்டத்துக் கிறிஸ்தவர்களிடம் வழங்கப்படும் பெயர். என் தாத்தாவின் பெயர் கூட அதுதான். புனித ஜார்ஜியாரைக் குறிக்கும் தமிழ் வடிவம் என்று நினைக்கிறேன். அவன் என் நண்பன்.

நேற்று மாலை  வழிபாட்டில் 'மாக்னிஃபிகாத்' (அன்னை மரியாவின் 'என் ஆன்மா இறைவனையே ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது' என்னும் பாடல்) பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று வறுவேலின் ஞாபகம் வந்து போனது. அதன் பின்னர் இதை எழுதும் வரையிலும் அவனோடு எனக்கான நட்பைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவனுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவன்தான் முதல் அப்பா. 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் ஐந்தாம் வகுப்பில் அவன் எங்களோடு சேர்ந்தான். பள்ளிக்கு வடக்கே ஓடிய நீரேரடைக்கு அந்தப் பக்கமாக இருந்தது அவனது வீடு. ரேஷன் கடை, பள்ளிக்கூடம், பங்கு கோவில், 'லண்டன்'(காரர்) வீடு என்று அடித்துப் போட்டாலும் மறக்காத இடங்களுக்கு அருகில் வயல்களுக்கும், வாழைத் தோப்புகளுக்கும் மத்தியில் பசுமை இல்லமாக இருந்தது அவனது வீடு. வீட்டு முற்றத்தில் கிடக்கும் பனை நார் கட்டிலில் இருந்து நொச்சி மரங்களின் ஒற்றைக் கால்களை வருடி சலசலவென்று ஓடும் ஓடையின் ஓசையைக் கேட்டுக் கொண்டே மேலே பார்த்தால் வானம் எப்போதும் மேக மூட்டத்தோடு காணப்படுவது ஏன் என்பது ரமணனுக்கே வெளிச்சம். உலகம் ஒரு நாள் நீரின்றி வறண்டு போகுமென்றால், ஆவியாகும் கடைசி சொட்டு நீர் அவன் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருக்கும் உயரமான வாழை தன் சுருண்ட குறுத்து இலைக்குள் ஒளித்து வைத்திருக்கும் குளிர்ந்த நீராகத்தான் இருக்கும். இயற்கை அன்னை தன் மொத்த அழகையும் அங்குதான் கொட்டி வைத்திருந்தாள். அங்கு அவன் தான் புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டை படமெடுத்து வாட்ஸ்அப்-பில் அனுப்பியிருந்தான்.

அவன் தந்தையை நான் பார்த்ததேயில்லை. வாதை அடித்து அவர் கடவுளிடம் சென்று விட்டதாக சிறு வயதில் சொல்லியிருக்கிறான். கணவனை இழந்தும், பிள்ளைகளை சிறப்பாக வளர்த்து, சமுதாயத்தில் ஆளாக்கும் தியாகத் தாய்மார்களில் அவனது அம்மாவும் ஒருவர். எங்கள் நண்பர்களின் அம்மாக்களுக்கு நாங்கள்  எல்லோரும் பிள்ளைகள் தான்.  அவனோடுதான் எத்தனை நினைவுகள்! ஐந்தாம் வகுப்பில் மதர் லவுரன்சியா ஒருநாள் ஏதோவொரு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தாலே எங்களுக்கெல்லாம் பயம். வறுவேலுக்கு அப்படியெல்லாம் எந்த தயக்கமும் இல்லை. அவர் கேட்கும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் அவனே பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனது ஆர்வத்தைத் தாங்க முடியாமல் அவரே சத்தமாக சிரித்துக் கொண்டு 'வறுவேல்! முந்திரி கொட்டை. எல்லோரையும் பதில் சொல்ல விடு' என்றார். வகுப்பே கலகலப்பானது. அவனோடு இருந்தால் நாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்காது. குழுவைத் தனது விருப்பத்தில் நயமாகவும், நலமாகவும் ஒருங்கிணைக்கும் திறமை அவனுக்கு உண்டு. 

ஓன்பதாம் வகுப்பு என்று நினைக்கிறேன். ஒரிசாவின் புவனேஸ்வரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றது. முத்துகுமார் ஆசிரியர் அவன் பெயரையும், என் பெயரையும் தலைமையாசிரியரிடம் கொடுத்திருந்தார். கடைசி நேரத்தில் பள்ளிக்கு ஒருவர்தான் என்ற போது வறுவேல் மட்டும் புவனேஸ்வரம் சென்று வந்தான். அவனோடு இருக்கும் நினைவுகளிலேயே அதி சாதாரணமானது இதுதான். தீவிரமான நிகழ்வுகள் அவனுக்கும், எங்கள் நண்பர்களுக்கும் நன்றாகத் தெரியும். இன்னும் எனக்கு அவை மறக்காமலிருப்பது யாரையேனும் காயப்படுத்தக் கூடும் என்பதால் தவிர்க்கிறேன். மொத்தத்தில் அப்போதிலிருந்தே அவன் வெளிப்படையானவன். எதிலும் அவசரக்காரன். எல்லோரையும் முந்திக்கொண்டு முன்னால் நிற்பவன். எப்போதும் மாறாமல் அதே வறுவேலாக இருப்பவன். அன்பானவன். இன்னும் அவன் நிறைய, நிறைய, உயர உயர வளர வேண்டுமென்று என் வலைப்பூவில் அவனுக்கு பூங்கொத்துக்களைத் தருகிறேன்.

கடந்த ஆண்டுதான் அவனுக்கும், ஜாஸ்மினுக்கும் திருமணமானது. ஜாஸ்மினும் எங்களோடு படித்தவள்தான். பள்ளியில் படிக்கும் போது அவளோடு எப்போதும் சண்டைதான். சண்டை போடுவதற்கு கூட நான் அவளோடு அதிகமாய் பேசியதில்லை. அவர்கள் திருமணத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்வு வரை அவர்களுக்கேத் தெரியாது அவர்கள் ஒரு நாள் திருமணம் செய்வார்கள் என்று. அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள். ஜாஸ்மினுக்கு என் பாட்டியின் பிறந்த ஊரான இராஜாவூர். என் தந்தையின் குடும்பக் காரர்கள் நிறைய பேர் இராஜாவூரில் தான் இருக்கிறார்கள். அப்படி ஏதோவொரு முறையில் அவளுக்கு நான் சித்தப்பா முறை. இப்போது வறுவேலும் ஜாஸ்மினும் பெற்றோரான தினத்தில், நானும் முதன் முறையாகத் தாத்தாவனோன்.

திங்கள், 7 மார்ச், 2016

இன்னும் எத்தனை மார்ச் எட்டுக்கள் தேவைப்படுமோ?

இன்று பெண்கள் தினம். தாயாக, சகோதரியாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, சக மனிதராக ஒவ்வொரு ஆணையும் செதுக்கிச் செல்லும் எல்லாப் பெண்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்! இயங்கும் இவ்வுலகிற்கான பெண்களின் பங்களிப்பு கண்டுகொள்ளப்படவும், பெண்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்படவும் எட்டுத்திக்கும் ஒலிக்கும் எல்லா பெண் சமத்துவக் குரல்களுக்கும் அன்பு வணக்கம்.

மகளிரை மதியாகவும், மலராகவும் வருணித்த கவிஞர்கள் அதற்கு மேல் அவள் யார் என்பதைச் சொல்லவேயில்லை. நாமும் அவள் நிலவைப் போல் தண்மையானவள் என்றும், பூவைப் போல் மென்மையானவள் என்றுமே நம்பியிருந்தோம். பெண்களைப் பற்றிய இத்தகையப் பார்வை ஒரு அழகியலாகத் தோன்றினாலும், அதுவே பெண்களின் ஏனைய எல்லாப் பரிமாணங்களையும் வேண்டுமென்றே கண்டுகொள்ள மறுக்கும் மறைமுக அரசியலாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பெண்களைப் பற்றிய இத்தகைய 'நளினப்' பார்வைகளுக்கு ஆண்டாண்டுகளாக நாம் நன்றாகப் பழகிப்போய்விட்டோம். இந்தப் பார்வைகள் எளிதில் மாறிவிடாதபடி மதம், மரபு, சாதியம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற சமூகக் கற்பிதங்கள் மிகவும் இறுக்கமாயுள்ளன. நமது சினிமாக்களும், சீரியல்களும், விளம்பரங்களும் 'பெண்மை-மென்மை' என்றப் புளித்துப் போனப் பார்வையைப் புதிது புதிதாகக் காட்டிப் பணம் சம்பாதிப்பதோடு, அதையே மீண்டும் மீண்டுமாய் உறுதி செய்கிறது. திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதால் வளரும் குழந்தைகளும் அப்படியே இதனை ஏற்றுக் கொண்டு பெண்களைப் பற்றியத் தங்கள் மனப் பிம்பங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். இப்பார்வைக்கு பலிகடா ஆவதில் படித்தவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடுகளே இல்லை. 

ஆனால் நம் நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும், அல்லது நாம் பார்த்து பார்த்து வளர்ந்த பெண்கள் இந்த நளினத்தையும் தாண்டி போர்க்குணம் கொண்டவர்களாகவும், மென்மையையும் தாண்டி குன்று போன்று எதையும் தாங்கும் துணிவு கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள். வீரம் ஆண்களுக்கானது என்று நம்பிக் கொண்டிருக்கும் ஆண் அறியாமையில் இருக்கிறான். எனக்குத் தெரிந்து வெளியில் மிகவும் விறைப்பாகத் திரியும் பல ஆண்கள், ஆழ்மனதில் மிகுந்த அச்சமுடையவர்களாக இருக்கிறார்கள். தனது பயம் வெளியில் தெரிந்து விடாமலிருக்கவே, அவர்கள் யாரும் நெருங்க முடியாதபடி தங்களைப் பத்திரமாக பார்த்துக்கொள்கிறார்கள். உண்மையாகவே பயமில்லாதவர்கள் தங்களைத் திறந்த வெளியில், அனைவரின் பார்வைக்கும், பழக்கத்திற்கும் எளிதானவர்களாக வைத்துக்கொள்கிறார்கள். நான் பார்த்த பல பெண்கள் இத்தகையவர்கள். பார்வைக்கு மிக எளிதானவர்கள். ஆனால் மனதளவில் பல ஆண்களைவிட பன்மடங்கு வலிமையானவர்கள். 

மனிதன் இனக்குழுக்களாகக் கூடி வாழத் தொடங்கியக் காலத்தில் பெண்ணே அந்த இனத்தின் தலைவியாக இருந்தாள். வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது ஆணாகவும், வேட்டைக்குச் சென்று உணவு கொண்டு வருவது பெண்ணாகவும் இருந்தது அந்தத் தாய்வழிச் சமூகம். மாதவிடாயும், குழந்தைப் பேறும் பெண்ணின் அபூர்வ சக்தியாகவும், ஆணுக்கு அச்சமூட்டுவதாகவும் இருந்தது. அம்மன், குமரி, போன்ற பலத் தமிழ் பெண் தெய்வங்களைப் போலவே ஒவ்வொரு ஆதிக் கலாச்சாரங்களிலும் பெண் தெய்வ வழிபாடுகளே இருந்துள்ளன. நாளடைவில் சமூக அமைப்புகள் மாறி, தனிக்குடும்பங்களாகவும், நிலவுடமைச் சமூகமாகவும் மாறியபோதே ஆணின் கட்டுக்குள் அதிகாரம் வருகிறது. பெண்ணின் ஆதி மரபணுவில் வீரம் புதைந்திருப்பதால்தான் பெண் சமூகத்தின் இத்தனை அடக்கு முறைகளுக்குள்ளும் வெற்றி பெறுகிறாள். 

இந்த சமூகம் அத்தனைப் பெண்களையுமே ஏமாற்றியிருக்கிறது. வஞ்சித்திருக்கிறது. நம்ப வைத்து அவளது வாழ்க்கையை வீணடித்திருக்கிறது. அவளது ஆற்றலும், திறமையும் சமயலறைக்கும், படுக்கையறைக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதிகளை சிறிதளவு மீற நினைத்தாலும் அவளை அத்தனை அவமானப்படுத்தியிருக்கிறது. ஒழுக்கம், புனிதம், கற்பு போன்ற விதிகளை அவளுக்கு மட்டும் சுமத்தி அவளைக் கூசிப் போகச் செய்திருக்கிறது. இத்தனைக்கு மத்தியிலும் அவள் நிமிர்ந்து நிற்கிறாள். வியக்க வைக்கிறாள். கோழைக் கணவன் ஓடிவிட்ட போதிலும் பெற்ற பிள்ளைகளை ஆளாக்குவதற்காக எத்தனை வீராப்போடு வாழ்கிறாள். காலச் சக்கரம் நத்தை போல் ஊர்ந்தாலும், அவள் கடைசி வரையில் பயணத்தை நிறுத்தவேயில்லை. கசப்புகளை மென்று தின்று விடுகிறாள். ஆனால் ஓடியக் கணவனின் முடிவு படுபயங்கரமானதாக, கேலிக்குரியதாகத் தோற்றுப்போய்விடுகிறது.

இன்று பெண்ணின் முகம் சமூகத்தில் வெளிச்சமாகத் தெரிகிறது. நல்ல மாற்றத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தவள் விண்வெளி வரையிலும் சர்வ சாதாரணமாகச் சென்று வருகிறாள். அரசியல், விளையாட்டு, கல்வி என்று அத்தனைத் தளங்களிலும் பெண்கள் பங்களிப்பின் அவசியத்தை உலகம் உணரத் தொடங்கிவிட்டது. இருப்பினும் பெண்களுக்கெதிரானக் அத்துமீறல்களும், அடக்கு முறைகளும் அன்றாடச் செய்திகளாகவே இருந்து வருகின்றன. 'உண்மையானச் சிகப்பழுகு', 'மென்மையானச் சருமத்திற்கு' போன்ற விளம்பரங்கள் இந்த யுகத்திலும் இருந்துகொண்டுதானிருக்கின்றன. இத்தனைப் பெண் எழுச்சிக்குப் பின்னரும், சாதாரணப் பொதுப்புத்தியிலும், கட்டமைக்கப்பட்டக் கற்பிதங்களிலும் எள்ளின் முனையளவே மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஒரு ஆணுக்கு இருக்கும் எல்லா வசதிகளும், வாய்ப்புகளும், சுதந்திரமும் பெண்ணுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கின்றன. இன்னும் எத்தனை மார்ச் எட்டுக்கள் தேவைப்படுமோ!
இந்த மாதம் பெண்களின் மாதம். பெண்களை மதிப்போம். அன்பு செய்வோம். அவள் அளவு இல்லையென்றாலும், நம்மால் இயன்றவரை! 

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! (A LETTER TO HANUMANTHAPPA - 2)

அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்!

நீ இறந்து விட்டதாக பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. நான் அதை நம்பவில்லை. நான் ஏன் அதை நம்ப வேண்டும்? எத்தனையோ மாவீர்ர்களை இந்த உலகம் கண்டிருக்கிறது. அலெக்ஸாண்டர், அக்பர், வீர சிவாஜி, சேர, சோழ, பாண்டியன் இவர்கள் எல்லாம் இன்னும் இறக்காமல் மக்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்து வாழ்வது போலவே, நீயும், உனது ஆறு நாள் உறைபனி வாழ்வும் இன்னும் பல நூறு ஆண்டுகள் பேசப்படும் என்று நான் நம்புவததால் நீ இறந்துவிட்டாய் என்ற செய்தியை நான் நம்பவில்லை.

சியாச்சின் மலை உச்சி. இந்த இடம் முதன் முதலாக என் கற்பனைக் கண்ணுக்கு எட்டியது, பேராசிரியர் பெர்னாட்ஷா கூறிய போதுதான். அவரது மகனும் அத்தகைய ஓர் இடத்தில் பணியாற்றுவதைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டிருந்ததாக ஓர் ஞாபகம். அப்போது நான் மதுரை அருளானந்தர் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். 

மிகவும் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்து, தெருவிளக்கில் பாடம் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அவர் கல்லூரி பேராசிரியர் ஆகும் வரையிலான அவரது கதைகள் நம்பிக்கையின் ஊற்றுக்கள். மிகவும் எளிமையானவராக, மாணவர்களுக்கு நண்பராக, கனிவோடு பழகுபவர். எனக்குத் தெரிந்து அவர் பெருமை பாராட்டுவதெல்லாம், அவரது மாணவர்களின் வெற்றியைப் பற்றித்தான். குறிப்பாக 'காதல்', 'வழக்கு எண்' போன்ற தமிழகத் திரைப்படங்களின் போக்கினை மாற்றிய படங்களின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது மாணவன் என்பதை எந்தப் பாடத்திற்கு இடையிலும் நாசூக்காகச் செருகிவிடுவார். இதை இப்போது உனக்குச் சொல்லக் காரணம் அவரும் உன்னைப் பேலவே ஒரு எளிமையானத் தொடக்கம் கொண்டு வலிமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர். உன்னைப் போலவே நம்பிக்கைக் கொடுப்பவர். உன் தம்பி, தங்கைகள் மாண்புடன் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க, அவர்களைத் தட்டிக்கொடுக்க நிறைய பெர்னாட்ஷாக்களை உன் தாய்நாடு கொண்டிருக்கிறது. என் சகோதரா நீ அமைதியில் இளைப்பாறு!

இன்னும் உன்னோடு பேச விரும்புகிறேன்.

வியாழன், 18 பிப்ரவரி, 2016

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! (A LETTER TO HANUMANTHAPPA - 1)

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! 
உன்னை எங்கள் சகோதரனாகக் கொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களுக்கு அந்தப் பெருமையைத் தந்து விட்டு நீ மட்டும் சென்றுவிட்டாயே! நாம் இன்னொரு உலகத்தில் நிச்சயம் சந்திப்போம் என்று நம்புகிறேன். அப்போது உனக்கு எங்கள் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். 

சியாச்சின் மலை உச்சியில் பசி கொண்ட பனிப்பாறைகள் உன்னையும் இன்னும் ஒன்பது வீரர்களையும் விழுங்கி விட்ட செய்தி கேட்டு நாங்களும் உங்களைப் போலவே உறைந்து விட்டோம். ஆறு நாள்களுக்குப் பின்னர், எல்லாம் முடிந்துவிட்டதென்ற அனுமானிக்கப்பட்டச் செய்தி வந்தது. சில மணி நேரத்திலேயே, ஹனுமந்த் மட்டும் இன்னும் தன் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறான் என்றதும் இந்த உலகமே மெய்சிலிர்த்துப் போனது. இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்ற உபரிச் செய்தியினால், இந்தியாவின் உதடுகள் நீ மீண்டு வரவேண்டுமென்று அதற்கு தெரிந்த எல்லா மொழிகளிலும், அதில் இருக்கும் எல்லா தெய்வங்களிடமும் இரந்துகொண்டிருந்தது. நிர்பயா என்னும் நம் சகோதரி டில்லியில் வல்லுறவு செய்யப்பட்டு, கயவர்களால் சிதைக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும், நாம் கையறு நிலையில் செபம்தான் செய்துகொண்டிருந்தோம். ஆனால் நமது நீதிமன்றங்கள் நம்மை ஏமாற்றுவது போலவே, கடவுளின் கருணை மன்றங்களும் நம்மை வஞ்சித்துவிடுகின்றன. பனிப் பாறைகளில் ஆய்வு செய்த அறிஞர்களெல்லாம் என்னென்ன காரணங்கள் சொன்னாலும், 35 அடி ஆழத்தில், சுழியிலிருந்து (-)40 பாகை குறைவான உறைபனியில், ஆறு நாள்கள் உன்னால் உன் உயிரைப் பிடித்து வைத்திருக்க முடிந்ததென்பதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

என்ன நினைத்து கொண்டிருந்தாய் எம் சகோதரா? பனிமலையின் வயிற்றுக்குள் ஆறு நாள்கள் என்று சொல்வதைவிட, பகலேயில்லாத பன்னிரண்டு இரவுகளை அல்லவா நீ உயிரோடு கடந்துவிட்டாய்? நினைத்தாலே மூர்ச்சையாகிவிடுகிறது நெஞ்சம். அந்த நேரத்தில், பனி உருகுவது போல், உயிர் உருகிக்கொண்டிருந்த ரண கணத்தில், சகோதரா யாரையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தாய். இந்தியத் தாயின் தலை மிதித்து எதிரிகள் நுழையாமல் நீ மதிலாய் நின்று கொண்டிருந்தாயே! பனிமலைக்குள்ளும் பாரதத்தைக் காக்கும் வேட்கையுள்ள வேங்கையைத் தன் பனிக்குடத்தில் சுமந்த உன் பாசத்தாய்க்கு இதைவிட எந்த பெருமையை நீ பெற்றுத்தர முடியும்! முடியாத இருட்டுக்குள் முடங்கி விடாமல், இதுவும் விடியும் என்று விழித்திருந்தாயே! இந்த நம்பிக்கையைத் தந்த உன் தந்தைக்கு இதுவல்லவோ மணிமகுடம். நீ  விட்டது உன் கட்டுக்குள் வந்துவிட்ட உயிர்தான். பாவம், பிழைத்துக்கொள்ளட்டும் என்று மரணத்திற்கு நீ போட்ட பிச்சைதானே உன் உயிர். உனது சாவே ஒரு சாவின்மைதான் சகோதரா!

உன்னோடு இன்னும் நிறைய நிறைய பேச விரும்புகிறேன். நீ தான் காலத்தை வென்றுவிட்டாயே! பேசுவோம்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

குமரிமுனை பங்கு கள அனுபவம்

வரவேற்பு
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கரையில் களப்பணி அனுபவம் பெற மூன்றாமாண்டு இறையியல் மாணவர்கள் நாங்கள் கால் பதித்த நாள் 17.09.2011 இரவு 10.30.  உச்சிவானை தொட்டுவிட்டதோ என எண்ணத்தூண்டுமளவுக்கு உயர்ந்து நின்ற தூய அலங்கார உபகார அன்னையின் ஆலயக்கோபுரம் பங்கு மக்களின் இறைநம்பிக்கைக்கு சான்று பகர்ந்து எம்மை பல எதிர்பார்ப்புகளுக்கு இட்டுச்சென்றது.  பங்குப் பணியாளர் அருட்பணி. லியோ கென்சன் மற்றும் இணைப் பங்குப்பணியாளர் அருட்பணி. அமல்ராஜ் மற்றும் பங்கு மக்கள் சிலர் அன்புடன் எம்மை வரவேற்றனர்.

முதல் நாள்
18.09.2011 ஞாயிரன்று காலைத் திருப்பலியில் பங்குப் பணியாளர் எம்மை இன்சொல் கொண்டு வரவேற்று எமது இருத்தலின் நோக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.  குமூகப் பகுப்பாய்வின் அடிப்படையில் பங்கில் பணித்திட்டம் உருவாக்க உதவும் இந்த கள அனுபவத்தின் தொடக்கமே உயிர்த்துடிப்புடன் அமைந்திருந்தது.

இருபது ஆண்டுகளாக வலுத்துவந்த கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் மக்கள் போராக வெடித்த நிகழ்வுதான் இடிந்தகரை என்னும் இடத்தில் 127 மக்கள் ஐந்து நாட்களாக இருந்த தொடர் உண்ணாவிரதம்.  இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணமும,; தங்களது எதிர்ப்பையும் காட்டும் வண்ணமும் கன்னியாகுமரி பங்கு மக்கள் இதை ஒட்டுமொத்த தமிழனின் வாழ்வாதாரப் பிரச்சனையாகப் பார்த்து போராட்டக் களத்தில் இறங்கினர்

முன்னதாக நடைபெற்ற தயாரிப்புக் கூட்டம் எமக்குத் தந்த அனுபவங்கள் பல.  பங்குப் பணியாளரும் மக்களும் இணைந்து சிந்தித்து, விவாதித்து, திட்டமிட்டு செயல்பட்ட விதம் கூட்டுத் தலைமைத்துவத்தையும், வழிபாடு கடந்து வாழ்க்கைப் போராட்டங்களுக்காக துணிவுடன் போராடுகின்ற வளர்ச்சியையும் படம் பிடித்துக் காட்டியது.  'மக்களோடு மக்களாய்' போராட்ட உணர்வை நாங்களும் பெற்று கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றோம்.  அன்றிரவு அன்பிய வழிகாட்டிகள் கூட்டப்பட்டு ஒரு அன்பிய வழிகாட்டிக்கு இரு மாணவர்கள் என்ற முறையில் பிரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்கு சென்று வந்தோம்.

மேதா பட்கர்
29.09.2011 திங்களன்று காலையில் முரண்பாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டுள்ள சமூகத்தைப் பகுப்பாய்வு செய்ய உதவும் வண்ணம் அமைந்திருந்தது அருட்பணி. வில்சன் அவர்களின் கருத்துரை. நண்பகலில் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்றோம். போராட்டத்தின் முத்தாய்ப்பாய் சமூக ஆர்வலர் மேத்தா பட்கரின் வருகையும், உரையும் எம்மை மேலும் உற்சாகப்படுத்தியது. மாலையில் சுனாமி காலனிக்கு 9 மாணவர்களும் அஞ்சுக்கூட்டுவிளை கிளைப்பங்கிற்கு 5 மாணவர்களுமாகப் பிரிந்து சென்று 4 சமூகப் பகுப்பாய்வு செய்தோம்.

பங்கேற்பு
20.09.2011 இன்று போராட்டத் தீ கொழுந்துவிட்டு எரிய சமயம் கடந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களோடு சமூக ஆர்வலர்களுடன் இறையியல் மாணவர்கள் நாங்களும் முழுமையாகப் பங்கேற்றோம். சிற்றுரை ஆற்றி, விழிப்புணர்வுப் பாடல்பாடி மக்களை உற்சாகப்படுத்தினோம். 

தரவுகள்  
22.09.2011 முதல் Ransom Town மற்றும் அஞ்சுக்கூட்டுவிளை பகுதிகளில் குமூகப் பகுப்பாய்வின் மூலம் மக்களின் சமய, அரசியல் சமூக, பொருளாதார நிலையைப் பற்றிய தரவுகளை சேகரித்தோம்.  மீண்டும் 25.09.2011 அன்று மாலை குழுவாக சேர்ந்து அருட்பணி. வில்சன், பங்குப்பணியாளர் மற்றும் அருட்பணி. ராஜா முன்னிலையில் தரவுகளின் அறிக்கையை சமர்ப்பித்தோம். இருவேறு இடங்களில் நடைபெற்ற ஆய்வின் அறிக்கை இயல்பாகவே வேறுபாடுகளைக் கொண்டிருந்தது

சகோதரர்களின் பகிர்விலிருந்து....
அஞ்சுக்கூட்டுவிளை கிளைப்பங்கு  
1875ல் புலம் பெயர்ந்த 5 குடும்பங்களால் உருவானதுதான் இக்கிராமம்.  சிறிய எண்ணிக்கையில் இருந்த இவர்கள் அருகிலிருந்த நிலங்களை விலைக்கு வாங்கி உருவாக்கப்பட்டதுதான் இக்கிராமம்.
மக்கள் தொகை     :  
தொழில்           :  கடைகள், உணவுவிடுதிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள்                                          தங்குகின்ற விடுதிகள் நடத்துதல். 
கட்சி; சார்பு     :  
சாதியம்            :  பெரும்பாலானோர் நாடார் சமூகம்.
கல்வி நிலை    :  மக்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்களாகவும், அரசு வேலையை நோக்கமாகக் கொண்டு படிப்பவர்களாகவும் உள்ளனர்
அடிப்படை வசதிகள்   : பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதால் அடிப்படைத் வசதிகள் இருக்கின்றன.
வாழ்வாதாரம்  :  கடின உழைப்பும், சிறப்பான திட்டமிடலும்
சமயம்                : பெரும்பான்மையானோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். தற்போது பெந்தகோஸ்து சபையின் தாக்கம் பெருமளவில் இருக்கின்றது. பிற சமூகத்தை சார்ந்தவர்களிடம் இவர்கள் வரி வாங்குவது இல்லை. அன்பியங்களில் அவர்களை சேர்த்துக் கொள்வதும் இல்லை. ஒரு சில குடும்பங்கள் இணைந்து பிறரை ஒடுக்குகின்ற சூழலும் உள்ளது. 

Ransom Town
2004 ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்குப் பின்னர் பாதிப்பிற்குள்ளான 34 வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டன.  பங்குத் தந்தையின் அரிய முயற்சியினாலும் புனித அன்னாள் சபைக் கன்னியர்கள் மற்றும் Salvation Army  போன்ற தொண்டு நிறுவனங்களால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உருவானதுதான் இப்பகுதி.
  • மக்கள் தொகை :  
  • தொழில்              : மீன்பிடித்தல் மற்றும் அவை சார்ந்த தொழில்கள் 
  • கட்சி சார்பு        : அ.இ.அ.தி.மு.க. அ.தி.மு.க. மற்றும் தே.தி.மு.க. இந்தப்பகுதிக்கென்ற சட்டமன்ற உறுப்பினர் இல்லை.தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில்தான் போட்டியிடுகின்றனர்.  மேலும்            இப்பகுதியானது  பஞ்சாயத்தை சார்ந்தது.
  • சாதியம்           :   பறவர், முக்குவர் மற்றும் நாவிதர்.
  • கல்வி நிலை  :  பெரியவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாக இருந்தாலும் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்குடன் தரமான கல்வி பெறச் செய்கின்றனர்
  • அடிப்படை வசதிகள் :   குடிநீர் வசதி குறைவாகவே உள்ளது.  குப்பைத்       தொட்டிகள் இல்லாததால் ஊர் முழுவதும் நெகிழிக்குப்பைகளால் நிறைந்துள்ளது. அனைத்து     அடிப்படை வசதிகளுக்கும் கன்னியாகுமரியை சார்ந்துள்ளனர்.
  • சமயம்             : அனைவரும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்.
இறைநம்பிக்கை
23.09.2011 அன்று காலை அருட்பணி. சகாயராஜ் மக்களின் இறைநம்பிக்கையை மதிப்பீடு செய்ய வழிகாட்டினார்.  சுனாமி எனும் பேரழிவை சந்தித்திருந்தாலும் மக்களின் இறைநம்பிக்கையானது வளர்ந்துள்ளதேயன்றி தளர்ச்சியுறவில்லை என்பதும் வியப்பிற்குரியதாகவே இருந்தது.  இறைமக்களின் ஈடுபாடு ஆலய வழிபாட்டில் மட்டுமில்லாமல் ஊரின் வளர்ச்சிப்பணிகளிலும்  இருக்கின்றது.  அன்பியங்கள் அவர்களின் உறவை வலுப்படுத்துபவையாகவும் அவர்களை ஒருங்கிணைக்கும் சிறந்த ஊடகமாகவும் திகழ்கின்றன.  மரபு ரீதியாக பெற்றுக்கொண்ட புரிதலுடன் புதிய இறையியல் புரிதல்களையும் உள்வாங்கிக்கொண்டு வாழும் இவர்களின் வாழ்வு எமக்கும் தூண்டுதலாக அமைந்தது.

பங்குப் பணியாளர்களின் பகிர்வு
27.09.2011 அன்று மாலையும் 28.09.2011 காலையும் அருட்பணி. லியோ கென்சன் மற்றும் இணைப்பங்குப் பணியாளர் அருட்பணி. அமல்ராஜ் இருவரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  தனது பத்தாண்டுகால அயராத உழைப்பாலும் இறைவனின் உடனிருப்பாலும் அமைதிப் பூங்காவாக இன்று கன்னியாகுமரி மாறியிருக்கிறது என்பதையும் அதற்கு முன்னதாக இப்பங்கில் இருந்த பல்வேறு ஆதிக்க சக்திகள், அரசியல்கள், போராட்டங்கள், பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றையும் அதை மாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் போன்றவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள். இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளநிகழ்வுகளை மகிழ்வுடன் மக்களும் பகிர்ந்து கொண்டார்கள். இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ள நிகழ்வகளை மகிழ்வுடன் மக்களும் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்கள். ஊரைப்பற்றிய தெளிவான புரிதலின் பின்னணியில் மக்களோடு இணைந்து வரைந்த ஆண்டுத்திட்டம், மறையுரை, அரசின் திட்டங்களை முறைப்படிப் பெற்று மக்களுக்கு வழங்கியது போன்றவற்றின் மூலமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய அருட்பணியாளரை மக்கள் நன்றியுடன் நினைவுகூர்கின்றனர்.
மேலும் மக்களின் கல்வி, சமய ஈடுபாடு, மற்ற சமயத்தவரோடு கொண்டுள்ள உறவு மற்றும் வளர்ச்சிகள் பற்றிய புரிதல்களை ஆழப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது அமர்வு. 

சிறப்பு அழைப்பாளர்களின் பகிர்விலிருந்து :
  • திரு. ராசையா நாடார் மற்றும் இஸ்லாமிய நண்பர்
சுனாமி குடியிருப்பு பகுதிக்கான நிலம் இவர்களால் மனமுவந்து அளிக்கப்பட்டது. ஆடிதடி, வன்முறை என்றிருந்த இப்பகுதி தற்போதைய அருட்பணியாளர் லியோ கென்சனின் சிறப்பான பணிகளால் அமைதியான நிலையை அடைந்துள்ளதை பகிர்ந்து கொண்டார். இந்து, இஸ்லாம், கிறித்தவ மக்கள் உறவு நல்ல முறையில் அமைந்துள்ளது என்றும் மார்வாடிகள் இந்துத்துவாவின் செயல்பாடுகள் அப்பகுதி வாழ் இந்து மக்களுக்கே விருப்பமில்லாத ஒன்றாக உள்ளதை பகிர்ந்து கொண்டார்கள்.
  • கிராம அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்
மக்கள் வாழ்நது வந்த அரை கிலோமீட்டர் பகுதி இன்று 5 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. எல்லாவற்றிலும் வளர்ந்துள்ளனர். பள்ளியில் அயரா உழை;பபம் அர்ப்பண உணர்வும் கொண்டவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தரமான கல்வி அனைவருக்;கும் வழங்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள், தனித்திறமைகள் நல்லொழுக்கம் போன்றவை மாணவர்களை சிறப்பாக உருவாக்குகின்றன.
  • பக்த சபைகள்
பொது நிலையினர் அதிகமான ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர். சிறப்பாக, புதுமையாக, செம்மையாக அனைத்து வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆண்களும், பெண்களும் பல பொறுப்புகளை வகித்தாலும் பங்குப் பேரவையில் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படாத நிலையும் உள்ளது. தொழில் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் இடம் என்பதால் பெண்களுக்கு பங்குப்பேரவை உறுப்பினராகும் தேவை எழவில்லை என்ற காரணம் முன் வைக்கப்படுகிறது.

மதிப்பீடு
30.09.11 இன்று ஒருசிறிய மதிப்பீடு குழுவில் நடைபெற்றது. 14 நாட்கள் கடந்த நிலையில் யாம் பெற்ற அனுபவங்களை திருப்பிப்பார்த்தோம். அனுபவ பகிர்விற்கு அருட்பணி சந்தியாகு ராசா மற்றும் அருட்பணி நார்பர்ட் தாமஸ் வந்திருந்தார்கள். அடுத்த வருடத்திற்கானப் பரிந்துரையாக பணியாளர் வில்சன் அவர்களின் வகுப்பினையும் பணியாளர் ஜஸ்டஸ் அவர்களே எடுத்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்றக் கருத்தினைப் பதிவு செய்தோம். அவ்வாறு செய்யும் போது பாடமும், பணியும் இன்னும் சிறப்பாக ஒன்றிப்போகும் வாய்ப்பு உள்ளதாகக் கருதினோம்.

கலை இரவு
1-10-11 அன்று மாலையில் உபகார அன்னைத்திடல் நிரம்பி வழிய பறை முழக்கத்துடன் தொடங்கிய கலை நிகழ்ச்சியின் மையக் கருத்தாக சுற்றுப்புறத்தூய்மை என்பது அமைந்தது அனைவரின் அடிமனதிலும் ஓர் மாற்றத்தை உருவாக்கியது. கலைகள் யாவும் வாழ்வோடு பின்னிப்பிணைந்து கிடப்பவை என்பதால் கலை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அமைந்திருந்தது அடுத்த நாள் நிகழ்வு.

மரம் வளர்ப்போம் மனம் வளர்ப்போம் 
2-10-11 இன்று காலை Ransom town பகுதியைச் சுற்றி ஆக்கிரமித்திருந்த நெகிழிக்குப்பகைள் மற்றும் கழிவுகளை மாணவர்களுடம் இணைந்து மக்களம் சுத்தம் செய்தனர். அன்பியத்திற்கு ஒரு மரக்கன்று என ஒவ்வொரு அன்பியத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. மக்கள் அக்கன்றுகளைச் சுற்றி வேலியமைத்து ஊற்;றிய நீர் எங்கள் இதயங்களையும் குளிர்விக்க மாற்றத்திற்கான வித்தை இட்ட மகிழ்வோடும், புதிய பல அனுவங்களை எதிர்காலப் பணிக்கான முன்சுiவையைப் பெற்றுவிட்ட நிறைவோடும் மாலையில் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினோம்.

இறுதியாக
கடற்கரை பகுதிவாழ் மக்களின் மத்தியில் வாழ்ந்து பணியாற்றிய அனுபவம் புதியதும், புதுமையானதுமாகக் கருதுகிறோம். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய கல்லூரிக்கும், வழிகாட்டியாக மட்டுமில்லமால், உடன் வழிநடப்பவராக உற்ற நண்பனாக எங்கள் எல்லாத் தேவைகளிலும் தந்தைக்குரிய வாஞ்சையோடு ஒவ்வொரு நாளும் எங்களை உடனிருந்து உற்சாகப் படுத்திய தந்தை சந்தியாகு ராசா அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் சமர்ப்பணம். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஏனைய அருட்பணியாளர்களான நார்பர்ட் தாமஸ் மற்றும் ஜான்சன் அவர்களுக்கும் எங்கள இதயப்பூர்வமான நன்றிகள். 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ஆண்டவரின் அர்ப்பண நாள்

இன்று ஆண்டவர் இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நாள்! அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்டோர் அனைவருக்கும் ஒரு மகத்தான நாள். இயேசுவின் பாதச்சுவடுகளில் தங்கள் பாதங்களைப் பதித்து, பிளவுபடா உள்ளத்தோடு, மற்ற எல்லோரையும் விட மிக நெருக்கமாக இயேசுவைப் பின்பற்ற சிறப்பு அழைப்பும், சிறப்பு அருளும் பெற்றிருக்கும் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் திருநாள். இந்த இனிய நாளை முன்னிட்டே நேற்று மாலை எம் இறையன்னை சபையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ், பாக்கியராஜ், செபராஜ் என்னும் மூன்று அருட்சகோதரர்கள் கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்னும் இறுதி வார்த்தைப்பாடுகளைக் கொடுத்து நற்செய்தியின் மகிழ்ச்சியை வாழ்ந்து காட்ட துணிவோடு முன்வந்திருக்கிறார்கள். தாயாம் திருச்சபையும், திருச்சபையில் நற்செய்தியின் மறுமலர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்த புனித லியோனார்தியாரால் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட எம் இறையன்னை சபையும் இந்த மூன்று துறவிகளையும் உச்சி முகர்ந்து பாராட்டுகிறது. இந்நாளையொட்டிய சில நிகழ்வுகள் எழுப்பிய சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

உரோமில் எங்கள் சபையின் தலைமையிடத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று மாலை சிறப்பு மாலை வழிபாடும், இன்று மாலை ஆடம்பர திருப்பலியும் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளையுமே மேன்மை தாங்கிய கர்தினால்களே தலைமையேற்று நடத்தினார்கள். இது போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது கிறிஸ்துவின் சகோதரர்கள் என்னும் குழுமத்திலிருந்து சில அருட்தந்தையர்களும், அருட்சகோதரர்களும் வந்து வழிபாட்டில் உதவி செய்வது வழக்கம். அவர்களில் ஒரு அருட்தந்தையின் தலைமையில் வழிபாட்டின் அனைத்து காரியங்களும்; அச்சு பிறழாமல் ஒழுங்கு செய்யப்படும். நல்ல உயரமான, மிடுக்கான தோற்றத்தோடு, முகத்தில் ஒரு துளியும் பதற்றமின்றி, எவ்வளவு பெரிய வழிபாடு என்றாலும் நேர்த்தியாக நடத்திக் கொடுப்பது அவரது தனிச்சிறப்பு. அவரது பெயர் தெரியவில்லை என்பதால் வளர்ந்த மனிதர் என்று பெயர் வைத்துக் கொள்வோம்.

நேற்று மாலையும் அந்த வளர்ந்த மனிதரும், அவரது சீடர்களும் வந்திருந்தனர். வத்திக்கானில் இருப்பதிலேயே மிகவும் அதிகமாக வழிபாட்டு மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்று அறியப்படும் புர்க் என்னும் கர்தினாலும் குறித்த நேரத்தில் வந்துவிட்டார். எல்லோரும் அவரது கையைப் பிடித்து சிறிது முதுகை வளைத்து முகம் தொடாமல் முத்தம் செய்தனர். அந்த வளர்ந்த மனிதர் முழந்தாள் படியிட்டு கர்தினாலின் மோதிரத்தை முத்தம் செய்தார். பின்னர் தன்னோடு இரண்டு சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு கர்தினால் வழிபாட்டு ஆடைகளோடு ஆயத்தம் செய்ய உதவிகள் செய்தார். அனைத்தும் தயாரான போது வளர்ந்தவர் கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைச் சரிசெய்யும் வரை திரண்டிருந்த அனைவரும் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். துல்லியமாகக் குறித்த நேரத்தில், தன் திருவாய் திறந்து, மிகவும் தெளிவான குரலில் சில அறிவுறுத்தல்களைக் கூறினார். குறிப்பாக வழிபாட்டில் உதவி செய்யும் தனது சீடர்களும், சபையின் அருட்பணியாளர்களும், கர்தினாலும் பலிமேடையை வணங்கிவிட்டு பீடத்தைச் சுற்றியுள்ள இருக்கைகளுக்கும், மற்றவர்கள் பீடத்திற்கு முன்னால் மக்களுக்கான பகுதியில் முதல் வரிசை இருக்கைகளுக்கும் செல்லுமாறு கூறினார்.

வருகைப் பவனி ஆரம்பமாகியது. பலிபீடத்தை வணங்கி அதற்கு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையின் ஒன்றில் என்னை நிலைநிறுத்திய பிறகுதான் தெரிந்தது எல்லா அருட்பணியாளர்களும் மக்கள் பகுதியின் முதல் வரிசைக்குப் போயிருந்தனர். சீடர்கள், பங்குத்தந்தை, கர்தினால் மற்றும் நான் மட்டுமே மேலே நின்றுகொண்டிருந்தோம். பாடல் நின்று போயிருந்தது. கர்தினால் வளர்ந்த மனிதரின் உத்தரவுக்காக காத்திருந்தார். மனம் திக்திக்கென்று அடித்துக்கொண்டது. வளர்ந்த மனிதர் எனது இந்த அறியாமையால் என்னைக் கடிந்து கீழே அனுப்பிவிடுவாரோ என்று நாணமாகவும், நடுக்கமாகவும் இருந்தது. அதற்குள் வழிபாட்டைத் தொடங்கியிருந்தார் கர்தினால். 

மேலே இருந்ததால் வளர்ந்த மனிதரின் செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்துவிடாமலும் பார்த்துக்கொண்டேன். அது பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடுமல்லவா? சீடர்கள் தங்கள் தலைவரின் கண்ணசைவைக் கூட மிகச் சரியாகப் புரிந்து கொண்டு துல்லியமாக அனைத்து காரியங்களையும் செய்தனர். வழிபாட்டின் எல்லா செயல்பாடுகளையும், வளர்ந்த மனிதர் அருகில் நின்று கவனித்து கொண்டிருந்தார். மரபுகளுக்கு பெயர் போன கர்தினாலே ஒரு கட்டத்தில் வளர்ந்த மனிதரின் கண் மொழிகளைப் புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக்கொண்டார். மாலை வழிபாட்டில், மரியாவின் புகழ்ச்சி பாடல் நேரத்தின் போது பீடத்தைச் சுற்றிலும் தூபம் போடும் தருணத்தில்தான் அது நிகழ்ந்தது.

கர்தினால் வழக்கமானத் திருப்பலியில் செய்வது போல பீடத்தின் நடுவில் நின்று திருச்சிலுவைக்கு தூபம் போட கையைத் தூக்கவும், பின்னால் கவனித்துகொண்டே நடந்து வந்த வளர்ந்த மனிதர் 'இல்லைஐஐஐ... முன்னே செல்லுங்கள்...இது மாலை வழிபாடுதான்...திருப்பலி அல்ல' என்று சொல்ல, கர்தினால் கைகளை மெதுவாகத் தாழ்த்திக்கொண்டார். அப்படியே சுற்றி என் அருகில் வளர்ந்தவர் வரும்போது வயிற்றைக் கலக்கிவிட்டது. இறங்கி கீழே போ என்று சொல்வார் எனத் தோன்றியது. என் அருகில் நின்றுகொண்டிருந்த சீடர் என்னிடம் மெதுவாக 'தாங்கள் விரும்பினால் இங்கேயே இருக்கலாம்' என்று சொன்னார். வழிபாடு முடிந்ததும் வளர்ந்தவர் கண்ணிலும், என் அருகில் இருந்த சீடரின் கண்ணிலும் படாமல் ஒருவழியாகத் தப்பிவிட்டேன்.

இன்று மாலைத் திருப்பலிக்கும், நேற்று மாலை போலவே கர்தினால் வருகை, அன்பு முத்தம், ஆடைகள் ஆயத்தம், வளர்ந்தவரின் முன் குறிப்பு போன்ற காட்சிகள் அச்சு பிசகாமல் நடந்தேறியது. நேற்றைய அனுபவத்தின் காரணமாக மக்கள் பகுதியின் முன்வரிசையில் வேகவேகமாகச் சென்று இடம்பிடித்து விட்டேன். இலத்தீன் வழிபாட்டு பாடல்களால் ஆலயமே அதிர்ந்தது. ஒரு பாடலை ஒரு ஏழு பேர் சேர்ந்து ஒரே கட்டையில் (சுதி) பாடுவது நம் ஊர் பாடல். அதே பாடலை ஒரு ஏழு பேர் தொடர்ச்சியாக ஏழு வேறு வேறு நேரத்தில் தொடங்கி, வேறு வேறு கட்டைகளில் பாடி ஒரே நேரத்தில் ஒன்றாக (ஒரு வழியாக) முடித்தால் அது இலத்தீன் பாடல். இப்படித்தான் நான் மிகவும் கடினமான இலத்தீன் பாடல்களை மிகவும் எளிமையாக்கி புரிந்துகொண்டுள்ளேன்.

கர்தினால் பீடத்திற்கு பின்னால் ஒரு பத்து அடி இடைவெளியில் இருந்த தனது இருக்கையின் முன் நின்று திருப்பலியைத் தொடங்க, பூசைப் புத்தகத்தை ஒரு சீடர் அவர் வாசிக்குமாறு பிடித்து கொண்டிருந்தார். கர்தினாலின் உயரத்திற்கு அவர் பிடித்த விதம் சரியாகவே இருந்தது. கர்தினால் பிதா, சுதன்... என்று ஆரம்பிக்கவும், சீடர் தன் தலைவரைப் பார்க்கவும் சரியாக இருந்தது. அடுத்த நொடியில் சீடர் முழந்தாள் படியிட்டு தன் தலை மேல் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். வளர்ந்தவர் சிறிய சிரிப்போ, சிறிய கோபமோ வெளிக்காட்டாமல் நிமிர்ந்து அப்படியே நின்றுகொண்டிருந்தார். 

அவர் மேலே இருந்தாலும் எங்கள் பகுதியையும் கவனித்து, வழிபாட்டை அழகாக்கும் வண்ணம், கீழிறங்கி வந்து முன் வரிசையில் மூன்று பேரும், பின் வரிசையில் மூன்று பேரும் நிற்குமாறு சரிசெய்து விட்டு மீண்டும் மேலே சென்றுவிட்டார். அவர் எங்கே நிற்கிறார் என்பதை அவ்வப்போது பார்த்து, நாம் சரியாகத்தான் நிற்கிறோம் என்பதைச் சரிபார்த்துக்கொண்டேன். திடீரென்று அவரைக் காணவில்லை என்றால் மனது மிகவும் பதட்டமாகிவிடுகிறது. திடீரென்று நம்முன் தோன்றி நமது இருத்தலின், அல்லது நிற்றலின் தவறுகளைக் கடிந்து கொள்வாறோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டது. அவர் மீண்டும் மேலே தென்படும் போதுதான் மனது அமைதியானது.

நற்கருணை நேரம் வந்தது. அவரது சீடர்கள் முதல் நபர்களாக பீடத்திற்கு முன் வந்து தயாராக நின்றார்கள். முதல் இரண்டு சீடர்கள் எரியும் மெழுகுத் தண்டுகளையும், பின் நின்றவர் கர்தினாலின் செங்கோலையும் தாங்கி நின்று கொண்டிருந்தனர். கர்தினால் நற்கருணையைத் தருவதற்கு வந்து நின்றதும், வளர்ந்தவரின் கண்ணசைவுக்கேற்ப சீடர்கள் மெழுகுவர்த்திகளை ஓரத்தில் வைத்து விட்டு முழந்தாளில் நின்று செவ்வனே நற்கருணை பெற்று கொண்டனர். செங்கோல் வைத்திருந்த சீடருக்கு செங்கோலைப் பிடித்து கொண்டே முழந்தாளிடவும் முடியவில்லை. தன் தலைவரின் கட்டளையை மீறவும் மனம் ஒப்பவில்லை. மிகவும் தர்மச்சங்கடமாகப் போய்விட்டது. முடிந்தவரை குனிந்துகொண்டே நற்கருணை வாங்கிவிட்டார். கர்தினால் உட்பட, ஒரு இருபது பேரை தனது கண்ணசைவில் ஒழுங்குபடுத்திய அந்த வளர்ந்தவரை வியப்பாகப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

திருப்பலி முடிந்து பீடத்தை வணங்கி வளர்ந்தவரின் அறிவுறுத்தலின் படி பவனியாக மக்கள் நடுவில் சென்று கொண்டிருக்கும் போது பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் மக்களைப் பார்க்கலாமா? வேண்டாமா? பார்த்தால் சிரிக்கலாமா? தெரிந்தவர்கள் நின்றால் கைகளைச் சிறிதாக அசைத்து அவர்களை நான் பார்த்துவிட்டேன் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்ளலாமா? என்றெல்லாம் தோன்றினாலும் வளர்ந்தவரின் அருகாமை அனைத்தையும் தடை செய்தது. கடைசி வரிசையில் ஒரு வயதானவர் நின்று கொண்டிருந்தார். அவரை பார்ப்பது மிகவும் எளிதான ஒரு உணர்வைத் தந்தது. அவர் அழுக்கான உடையில் நடுங்கிக் கொண்டே இருந்தார். பக்கத்து இருக்கையில் அவரது உடமைகளைக் கொண்ட ஒரு பொதியை வைத்திருந்தார். அவரது வரிசையில் அவரைத் தவிர வேறு யாருமே இல்லை. சிறிது கூன் விழுந்தவராக பவனியில் வந்து கொண்டிருந்த அருட்பணியாளர்களைப் பார்த்துக்கொண்டேயிருந்தார். நான் அவரை நெருங்கிய போது, அவரது முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். நடுக்கத்தில் அவரது தலை ஆடிக்கொண்டேயிருந்தது. கண்களில் கண்ணீர் திரண்டு விழவா, வேண்டாமா என்று நின்றுகொண்டிருந்தது. என்னால் அதற்கு மேல் அவரைப் பார்க்க முடியவில்லை. 

திருப்பலி முடிந்து நல்ல உணவு ஏற்பாடாகியிருந்தது. கர்தினால் வழிபாட்டு ஆடைகளைக் களைந்து வருவதற்கு சிறிது தாமதமாகிக்கொண்டிருந்தது. இதனால் எரிச்சலடைந்த என் பக்கத்திலிருந்த ஒருவர், தனது தினசரி கால அட்டவணையில் இவ்வாறு பிழைவிடுவது மிகுந்த கவலையளிப்பதாகக் குறைபட்டுக்கொண்டார். பின்னர் சாப்பிட்டுவிட்டு, குளிருக்கு இதமாக வெப்பமூட்டப்பட்ட எனது அறைக்குள் நுழைந்து, படுக்கையில் விழுந்ததும், அந்த அழுக்கு உடையணிந்த பெரியவரும், நடுங்கிய அவரது முகத்தில், கண்ணீரோடு நின்று கொண்டிருந்த அவரது கண்களும் வந்து நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தன. 

சில கேள்விகள்:
1. உனது அர்ப்பணத்தின் நோக்கம் என்ன? 
2. ஆன்மீகம் என்றால் தன்னைக் கடப்பது என்று உனக்குத் தெரியுமா?
3. உன்னைப் பற்றிய நினைவை நீ அகற்றாமல் என் போன்றோரை அன்பு செய்ய இயலும் என்று நினைக்கிறாயா?
4. அன்னைத் தெரசாவை உனக்குத் தெரியுமா? 
5. உங்களது இல்லங்களில் பணியாற்றுபவர்கள் உன் போன்றோரால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?
6. மனிதர்கள் மாண்புடன் நடத்தப்படாத இடத்தில் நீ யார் பக்கமாக நின்றுகொண்டிருக்கிறாய்?
7. நீதியா? இரக்கமா? என்ற சூழ்நிலையில் நீ எதைத் தேர்ந்தெடுப்பாய்?
8. உன் சகோதரனை மன்னிக்காமல், உனக்கு மன்னிப்பு உண்டு என்று எப்படி நம்பிக்கொண்டிருக்கிறாய்?