திங்கள், 29 மே, 2017

தமிழ் மரம் (சிறு நாடகம்) A small skit on Tamil Tree

காட்சி 1
(மேடையின் நடுவில் ஒரு மரம். அதன்மீது தமிழ் என்று எழுதப்பட்டுள்ளது.. அதன் கிளைகளில் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்று பல தமிழ் நூல்களின் பெயர்கள் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கின்றன. இரு பெண்கள் கையில் கூடை, விளக்குமாறுடன் வருகின்றனர்)

பெண்1: இங்க பாருடி, எவ்வளவு அழகான மரம்! இப்படி நடுவீதியில வச்சிட்டுப் போயிருக்காங்க. யாருமே கண்டுக்க மாட்டேங்குறாங்க (சுற்றி சுற்றி பார்க்கின்றனர்)

பெண்2: அய்யயோ! வெயில்லயும் மழையிலயும் காஞ்சு கிடக்கே! எங்க ஒருத்தரையும் காணோம்.

பெண்1: இந்த மரத்திலிருக்கும் எண்ணற்றக் கனிகளைப் பார். உலகப் பொது மறையான திருக்குறள் என்ன? சிலப்பதிகாரம் என்ன? கம்பராமாயணம் என்ன? இன்னும் எத்தனை எத்தனை இலக்கியச் செல்வங்களைக் கொண்ட இந்த அழகிய மரத்தின் இன்றைய நிலையைப் பார். 

பெண்2: யாருமே இதன் கனிகளை உண்பதும் இல்லை. இதன் அருகில் வருவதையே அவமானமாகக் கருதி பிற சாதாரண மரங்களையேத் தேடி ஓடுகின்றனர். இப்படியே விட்டுவிட்டால் இம்மரம் விரைவில் வாடி வதங்கி பட்டுப்போய்விடுமே!!! 

பெண்1,2: தமிழ் என்னும் இந்தச் சிறப்புமிக்க மரத்தை வளர்த்தெடுக்க நாம் ஏதாவது செய்யவேண்டுமடி!


காட்சி 2
(4 பெண்கள் பேய் வேடத்தில் பேசிக்கொள்கின்றனர்)

பேய் 1: பேய்களே, இங்க பாருங்கள். ஒரு அழகான மரம்
2: பாக்குறதுக்கு பளபளன்னு அழகாக இருக்கிறதே!.
3: ஆமாம். இது இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் பழமையான மரம். 
4: இதன் கனிகளைப் பார்த்தீர்களா? வேறு எந்த மரத்திலும் இத்தனைச் சிறப்பு வாய்ந்த கனிகளை நாம் பார்த்ததே இல்லை.

பேய் 1: இந்த மரம் இந்த மக்களின் பெருமை. இந்த மரத்தை அடியோடு அழித்துவிட வேண்டும்.
2: ஆம். ஆனால் அதை நேரடியாகச் செய்தால் இந்த மக்கள் நம்மைத் தூக்கி எறிந்து விடுவார்கள். மறைமுகமாக அழிக்க வேண்டும்.
3: இதன் வேறில் இந்தி, சமஸ்கிருதம் என்னும் கழிவு உரங்களைப் போடவேண்டும். 
4: அதனால் இந்த மரம் வளரும் என்று பெய்யைப் பரப்ப வேண்டும்.

(பெண் 1, 2 பின்வரும் பாடலைப் பாடிக்கொண்டு வருகின்றனர்)

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

பேய்கள் 1,2,3,4 : ஏதோ சத்தம் கேட்கிறது. அந்த முட்டாள்கள் வருகின்றனர். வாருங்கள் நாம் நடிக்கத் தொடங்குவோம்
(பேய்கள் மரத்திற்கு உரம் போடுவது போல நடிக்கின்றனர்)

பெண்1: அடியே இங்கே பாருடி. நம் அழகிய மரத்தைச் சுற்றிலும் காவி நிறப்பேய்கள். இங்கு என்ன செய்கிறார்கள்?

பெண்2: ஆமாம். வா. என்னவென்று பார்ப்போம்.

(இருவரும் மண்வெட்டியால் பேய்களைத் தாக்குகிறார்கள்)
பேய்1: ஐயோ எங்களை ஏன் தாக்குகிறீர்கள்! நாங்கள் உங்கள் மரத்திற்கு நன்மைதான் செய்வோம்.

பெண்1 : அப்படியா? நீங்கள் யார்? 

பேய் 2 : நாங்கள் பேய்கள். நாங்கள் வடக்கிலிருந்து வருகிறோம். வரும் வழியில் இதைப் போல் நிறைய மரங்களைப் பார்த்தோம். எல்லா மரங்களுக்குள்ளும் இந்தி, சமஸ்கிருதம் போன்ற போன்ற உயர்ரக மரபணுக்களைத் திணித்துக்கொண்டு வருகிறோம். இதன் மூலம் உங்கள் மரத்தை தரம் உயர்த்தப் போகிறோம்.

பெண்2 : அப்படியா? மிக்க மகிழ்ச்சி. .

பேய்3 : அதுமட்டுமில்லை. நாம் எல்லோரும் இந்தியர்கள். நாடு முழுவதும் இந்தியைப் புகுத்திவிட்டால் நாம் எல்லோரும் ஒரே மொழியில் பேசலாம். இது நல்லது தானே?

பெண்1 : அட அட! என்னே அருமையான யோசனை. 

பேய் 4 : இந்தியில் நீங்கள் பேசினால் நிறைய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

பெண்1,2 : அடடே! எல்லோருக்கும் ஒரே மொழி. வேலை வாய்ப்பு. என்ன அருமையான யோசனை. உடனே எங்கள் குழந்தைகளுக்கு இந்தி பேச கற்றுத்தரப் போகிறோம்.

பேய்கள் 1,2,3,4 : அப்படியே செய்யுங்கள். சென்று வாருங்கள்!
(பெண்கள் இருவரும் சென்றுவிடுகிறார்கள்)

பேய் 1: ஹ ஹ ஹ! மாபெரும் வெற்றி. இவ்வளவு எளிதாக வென்றுவிட்டோம் இம்முட்டாள்களை.
2 : இம்மரத்தை இன்றே வேறோடு சாய்த்து என் முதுகுக்கு இதமாக சாய்வு நாற்காலி செய்யப்போகிறேன்.
3 : எம் இம்மூடர்களின் மொழியை அழித்துவிட்டால் இவர்கள் காலத்துக்கும் நம் அடிமைகளாக இருப்பர். இதன் கனிகளை நெருப்பிலிட்டு அழிக்க வேண்டும்.
4 : இப்படி ஒரு மரம் இங்கு இருந்த தடமே இருக்கக் கூடாது.
பேய்கள் 1,2,3,4 : சத்தமாகச் சிரிக்கிறார்கள் 

காட்சி 3
(பெண்கள் இருவரும் ஊருக்குள் சென்று குழந்தைகள் அனைவரையும் அழைக்கிறார்கள்.)

பெண் 1,2 : பள்ளி செல்லும் குழந்தைகளே! எல்லோரும் இங்கே வாருங்கள். வெல்லம் போன்ற இனிப்பானச் செய்தியொன்றைச் சொல்லப்போகிறோம்.
குழந்தைகள்: அப்படியா! ஆர்வம் தாங்கவில்லை. உடனேச் சொல்லுங்கள்.

பெண் 1: இனி நம் ஊரின் மரத்தில் இந்தி மரபணுவைத் திணிக்கப்போகிறார்களாம். நாம் எல்லாரும் இனி இந்தியா முழுவதும் இந்தியிலியே பேசலாம்.

குழந்தை 1: நாம் ஏன் இந்தியா முழுவதும் பேசப் போகிறோம். இந்தி பேசும் இடங்களுக்கு செல்பவர் மட்டும் படித்தால் போதாதா? எல்லோரும் ஏன் படிக்க வேண்டும்? நாங்கள் தமிழில் தான் பேசுவோம்.

பெண் 2: சரிடா செல்வமே! இந்தி பேசினால் நிறைய வேலை வாய்ப்புகள் பெருகுமாமே!

குழந்தை 2: ஹஹஹ! அப்படியென்றால் இன்று நம் ஊரின் மூலை முடுக்கெல்லாம் சேறு மிதித்து சோறு உண்பவர்கள் அவர்கள் ஊரிலேயே வேலை பார்த்திருக்கலாமே? என்ன முரண்!

பெண் 1: சரி அதை விடுங்கள்! இந்தி நாடு முழுவதும் ஒரு தொடர்பு மொழியாக இருக்குமே!?

குழுந்தை 3: நாடு முழுவதும் ஆங்கிலம் கற்றுத் தரப்படுகிறது. இதனால் நம் நாடு மட்டுமல்ல. அதுவே உலகம் முழுக்கப் பேசும் தொடர்பு மொழியாக இருக்கிறது. ஆகவே ஒழுங்காக எல்லாரும் தாய்மொழியோடு இணைப்பு மொழியாக ஆங்கிலம் மட்டும் படித்தால் போதுமானது. ஒரு ஆற்றைக் கடக்க இரண்டு பாலங்கள் வேண்டுமா?

பெண் 1 : வேலை வாய்ப்பு, இணைப்பு மொழி, எல்லாம் சுத்தப் பொய் போன்றல்லவா இருக்கிறது. 

பெண் 2 : நம் முன்னோர்கள் போற்றிப் பாதுகாத்த நம் மொழியை நாமே வளர்ப்பதுதான் முறை. நம் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலைத் தாய்மொழியே வளர்க்க முடியும். 

பெண் 2: அப்பேய்கள் நம்மை ஏமாற்றுவது போல எனக்குத் தோன்றுகிறது. வாருங்கள் எல்லோரும் சென்று என்ன ஏதென்று பார்ப்போம்.

காட்சி 4
(பேய்கள் மரத்தை வேக வேகமாக வெட்ட முயற்சி செய்கிறார்கள்.) 

குழந்தைகள் : பெண்களே பாருங்கள்! நாம் சந்தேகப்பட்டது சரிதான். அவர்கள் நம் பெருமை மிக்க மரத்தை வெட்டப் பார்க்கிறார்கள்.

பெண்கள் : அடித்து விரட்டுங்கள். இந்த ஆதிக்க வெறி பிடித்த ஓநாய்களை! இந்தியத் தாய் மொழியால், இனத்தால், கலாச்சாரத்தால் பல வண்ணங்களைக் கொண்டவள். அவளை ஒற்றை வண்ணத்தில் வெள்ளையடிக்க நினைப்பவர்கள் யாராயினும் அடித்து விரட்டுவோம். 

(அடித்து விரட்டுகிறார்கள்)

பின்னர் அனைவரும் இணைந்து சொல்கிறார்கள்:

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!
எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!
(நன்றி கவிஞர் வைரமுத்து)

பின்குரல்:
இந்தப் பெண்களும், குழந்தைகளும் எப்படி முழுச்சிக்கிட்டாங்களோ, அதுபோல இங்க இருக்கிற ஒவ்வொரும் முழுச்சிக்கிறவரைக்கும்...
சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டை போடுறது நிறுத்திட்டு தமிழன் என்ற உணர்வால் நாமெல்லாம் ஒன்னா கை கோர்த்து நிக்கிற வரைக்கும்....
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கும்.

சனி, 27 மே, 2017

நன்றி ஐயப்பா! நன்றி இயேசுவே!

திருச்சி தூய பவுல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அருட்தந்தை ஜான் பீட்டர் அவர்கள் அறநெறி இறையியல் பயிற்றுவித்தார். கற்றறிந்த ஆசான்கள் நிறைய பேர் இருந்தாலும், ஒரு மணி நேர வகுப்பில் மூளையின் ஜி.பி. முழுவதையும் நிரப்பவல்ல கல்விப் பெருமான்கள் இருந்தாலும் தந்தை ஜான் பீட்டர் கொஞ்சம் வித்தியாசமானவராகத் தெரிந்தார். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அதை எல்லாரும் சிந்திப்பது போல் அல்லாமல் மற்றொரு கோணத்தில் தான் பார்ப்பதோடு, நம்மையும் அவ்வாறு பார்க்கத் தூண்டுபவர் அவர். வகுப்பு நேரம் தவிர்த்து அவரை நீங்கள் அவரது அறையில் சந்திப்பது மிகவம் கடினம். நூலகத்தில் எப்போதாவது பார்க்கலாம். மற்றபடி மாட்டுக்கொட்டகையில் சாணி அள்ளும் போதோ, மண்புழு உரத்தொட்டியிலோ, கோழி அல்லது பன்றிக் கூட்டிலோ பார்க்க முடியும். அவரைப் போலவே அவரது வகுப்பும் மிகவும் எளிமையாக இருக்கும். சமகாலத்தில் அதிகமாகப் பேசப்படும் அறநெறி தொடர்பான கேள்வி ஒன்றில் வகுப்பு ஆரம்பிக்கும். முதலில் மாணவர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். மேலோட்டமாக எதையாவது சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட முடியாது. உண்மையாகவே நம் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும், நமது கருத்தினைக் கூர்மைப் படுத்துவதற்காகவும் மிகவும் ஆர்வமாக விவாதத்தை நடத்துவார். பின்னர்தான் பாடம் சம்பந்தமான கோட்பாடுகளுக்குள் செல்வார். மிகவும் செறிவுமிக்க  சிந்தனைகளைக் கூட 'நான் சொல்கிறேன். நன்றாகக் கேட்டுக்கொள்' என்ற பாணியில் அல்லாமல், உரையாடல் தளத்திலேயே வகுப்பு செல்லும். மொத்த வகுப்பில் ஒரு சில வார்த்தைகள் மனதில் அப்படியேத் தங்கிவிடும், ஒரு கல்வெட்டைப் போல. 

கல்வெட்டுக்கள் மறைவதில்லை. அவற்றில் எழுதப்படும் செய்தியானது அரியணையில் இருக்கும் ஒரு அரசியைப் போல தனி வசீகரம் பெற்றுவிடுகிறது. தந்தை ஜான் பீட்டர் ஒருமுறை எங்களை இயற்கை இறையியல் வகுப்பிற்காக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். எந்த இடமாக இருக்கும்? காவிரி ஆற்றங்கரை? முக்;கொம்பு? புளியஞ்சோலை? இப்படி ஏதாவது இடமாக யோசித்தீர்கள் என்றால் நீங்கள் சரியாக சராசரியான மனிதர்தான். ஆனால் தந்தை ஜான் பீட்டர் அவருக்கேயுரிய பாணியில் அழைத்துச் சென்ற இடம் தான் திருச்சி நீதிமன்றத்திற்கு எதிர்புறமாக இருக்கும் ஐயப்பன் சுவாமி திருக்கோவில். ஆம்! பரபரப்பான திருச்சி நகரின் மையத்தில் இப்படி ஒரு இடமா என்று மலைக்கும் படியான அமைதி கோவிலில் நுழைவு வாயிலிலேயே நம்மை ஆட்கொண்டு விடுகிறது.

ஒரு அற்புதமான இடம். கடவுளைத் தேடும் எந்த மனிதரும், அவர்களின் அனைத்துவிதமான நம்பிக்கைகளுக்கு அப்பால், தங்கள் கடவுளை இந்தத் தலத்தில் கண்டுகொள்ளலாம். ஆண்டுகள் கடந்தும் நினைத்து நினைத்து இன்புற முடிகிறதென்றால், இக்கோவிலின் சிறப்பினை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அது மனதில் பதிந்த கல்வெட்டு. நீங்களும் முடிந்தால் ஒரு எட்டு சென்று பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். 

'கோவில் ஒரு பள்ளிக்கூடம் போன்றும், பள்ளிக்கூடங்கள் ஒரு கோவில் போன்றும் இருக்க வேண்டும்' என்பதுதான் இக்கோவிலின் இலக்கு என்பது போன்று பார்க்கும் இடமெல்லாம் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கின்றது இந்தக் கோவிலில். 'அமைதியைப் போல சக்தியைச் சேமிக்கும் சாதனம் வேறு எதுவும் இல்லை', 'குரு ஒருவரின் அமைதிப் பிரசங்கம்', 'இலஞ்சம் வழியாகப் பெற்றப் பணம் மகிழ்ச்சியைத் தராது', 'வில்மா ருடால்ஃப் தன் அன்னையின் உத்வேகத்தால் போலியோவால் சிறுவயதில் பாதிக்கப்பட்டவராயிருந்தும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றக் கதை', 'அர்த்தமுள்ள முறையில் கார்த்திகை நோன்பிருத்தல்' 'குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பாடல்' இது போல எத்தனையோச் செய்திகளை அங்கே கல்வெட்டில் ஏற்றியுள்ளனர். வேறு எந்த ஊடகத்தின் வழியாக அவை சொல்லப்பட்டிருந்தாலும் கல்வெட்டுக்களைப் போல அவை மனதில் நீண்ட காலம் நிற்க முடியாது என்றே நினைக்கிறேன். உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவரின் நேற்றைய வாட்ஸ்அப் நிலைத்தகவல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இல்லைதானே! இதுதான் கல்வெட்டுக்கள் என்னும் கெத்து ஊடகத்தின் வலிமை.

ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் கண்களை நனைத்துவிடும் ஒரு கல்வெட்டு அங்கு இருக்கிறது. (பின்னாள்களில் திருச்சியில் இருந்தவரையிலும் அடிக்கடி அந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது). அம்மாவின் தியாகத்தைப்பற்றி அங்கே கல்வெட்டு ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்த பின்வரும் வரிகள் ஒரு நிமிடம் நம்மை உலுக்கிவிடும். உள்ளிருக்கும் கல் ஒன்று உருகி கண்ணில் வழிந்தோடி நீராக நம்மை நனைக்கும். வாசிக்க:

'வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.



அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. 'எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டேன். 
'அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.
அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.
அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.
இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.
அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.
ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.
சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.
கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.
முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.
அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.
'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.
அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?' என்றார்.
ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.
இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.
'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? முடிவு நம்மிடமே இருக்கிறது!

இதை எழுதியது யார் என்ற விபரங்கள் எதுவும் அக்கல்வெட்டில் இல்லை. பின்னர் ஒருநாள் தற்செயலாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறிது வெளிச்சம் என்னும் புத்தகத்தை வாசிக்கும் போது மேற்கண்ட வரிகளை எழுதியக் கைகளைத் தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா! நன்றி கல்வெட்டு! நன்றி அதன் நிர்வாகிகளே! நன்றி தந்தை ஜான் பீட்டர்! நன்றி ஐயப்பா! நன்றி இயேசுவே! நன்றி என் பெற்றோர்களே! நன்றி உலகின் எல்லா அம்மாக்களே!

செவ்வாய், 9 மே, 2017

பாஸ்கா காலம் நான்காம் வாரம் செவ்வாய் (9-5-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 10:22-30

22 எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம்.
23 கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருந்தார்.
24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, 'இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்' என்று கேட்டார்கள்.
25 இயேசு மறுமொழியாக, 'நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன.
26 ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல.
27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.
28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.
29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.
30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்' என்றார்.

சிந்தனை :

ஞாயிறு, 7 மே, 2017

பாஸ்கா காலம் நான்காம் வாரம் திங்கள் (8-5-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 10:11-18

11 நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
12 கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல. ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.
13 கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.
14 நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன்.
15 அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
16 இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.
17 தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.
18 என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.

செபம் :  உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு என்று கூறிய இறைவா! எங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தியருளும். உமது விருப்பத்திற்கு எங்கள் வாழ்வை நாங்கள் கையளித்து நன்மையின் பாதையில் நாங்கள் நாட்டம் கொள்வதற்கான அருளைத்தாரும்! பலவீனமான ஆட்டுகுட்டிகளை அன்போடு  உமது தோள்களில் சுமந்து செல்பவரே! நாங்களும் எங்களது பலவீனங்களால் சோர்ந்து போய்விடாமல் உமது அன்பில் நம்பிக்கை கொண்டவர்களாக உமது குரலைக் கேட்டு உமதருகில் திரும்பி வரச் செய்தருளும். எங்கள் சகோதர சகோதரிகளின் பலவீனங்களை நாங்கள் மன்னித்து, அவர்களை உம்மைப் போல அன்பு செய்திட மன ஆற்றலைத் தாரும். எங்கள் நல்ல ஆயனே, இயேசு ஆண்டவரே! எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.