புதன், 26 செப்டம்பர், 2018

வெளியே ஒலிக்கட்டும் மனதின் குரல்: 4 (Let's speak out)

சாதியம் இந்தியாவின் சாபம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருவள்ளுவரும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கணியன் பூங்குன்றனாரும், சாதிகள் இரண்டொழிய வேறில்லை - இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்று ஒளவையாரும், சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாரதியாரும் நம் பெருமையின் முகங்களாக இருக்கும் அனைவருமே சாதியால் நமக்கு தலைக்குனிவே என்று சொல்லிவிட்டார்கள். பிறப்பால் எல்லோரும் சமமே என்று சொல்ல வேண்டியத் தேவை திருவள்ளுவருக்கே இருந்திருக்கிறது எனறால் சாதியம் நம் சமூகத்தில் எளிதாக பிடுங்கியெறிய முடியாதபடி வேரூன்றியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

தனிமனிதர்களுடைய மனசாட்சியின் குரலானது வரலாற்றில் சமூக மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது என்று பார்த்திருக்கிறோம். ஆனால் சாதியத்திற்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒலித்த தனிமனிதக்குரல்கள் சமூகத்தில் எந்த பெரிய மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்பது மலைப்பாக இருக்கிறது. நம்முடைய இலக்கியங்களும், மொழியின் சிறப்பும், எஞ்சியிருக்கும் வரலாற்றுச் சின்னங்களும் நாம் ஒரு மாபெரும் நாகரீகத்தின் பிள்ளைகள் என்று பெருமைப்பட வைக்கின்றன. ஆனால் அன்றாடம் எத்தனைக் காட்டுமிராண்டித் தனமான செய்திகளைக் கண்டு குறுகிப்போகிறோம்.

தேநீர் கடையில் தெறிக்கும் பேச்சுக்கள் முதல் பேஸ்புக், வாட்ஸ்அப் சலசலப்புகள் வரையிலும் நம் பேசுபொருளாக இருப்பவை மிகப்பெரும்பாலும் சினிமாவும், அரசியலுமே. அதை விட்டால் பழம்பெருமை, அல்லது நகைச்சுவை என்ற பெயரில் கேலி, கிண்டல். தவறில்லைதான். ஆனால் நாம் இன்னும் பேசவேத் தொடங்காத பல அடிப்படையானக் காரியங்கள் இருக்கும் போது சினிமாவும், அரசியலும் நம் கவனத்தை அளவுக்கதிகமாக இழுப்பது மிகவும் தவறாகப்படுகின்றது. 

நாம் சங்கோஜப்படும் சில காரியங்களை திறந்த வெளியில் பேசாத வரையிலும் சமூகத்தில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. சாதியின் பெயரால் அன்றாடம் நடக்கும் ஆணவக்கொலைகள், வறியவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகள், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்பு போன்றவற்றில் காட்டப்படும் பாராபட்சங்கள் இதைப்பற்றியெல்லாம் நாம் என்று பேசப்போகிறோம். தொல்.திருமாவளவன் போன்றவர்கள் வாழ்நாள் முழுவதும் பேசினாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குரலாக மட்டுமே முத்திரை குத்தப்படுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டப்படி வாய்ப்பிருந்தாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே அவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் சமத்துவ சமுதாயம் என்பது கண்களுக்கு எட்டாதத் தொலைவிலேயே உள்ளது. 

தனிமனித மாற்றங்கள் சமுதாயத்தை மாற்றிவிடும் என்பது ஒரு மிகையானக் கற்பனையே அன்றி வேறில்லை. சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்: தனி மனிதர்கள் மாறினால் அந்தக் குடும்பமே மாறும். குடும்பங்கள் மாறினால் அந்த ஊரே மாறும். ஊர், நாடு, உலகம் என்று ஒரு மாயத்தேர் ஓடும். ஆனால் நடைமுறையில் எத்தனையோ தனிமனிதர்கள் சாதியத்திற்கு எதிரானவர்களாக இருந்தாலும் இன்னும் சமூக வலைத்தளங்கள் முழுவதும் சாதியின் பெயரால் குழுக்குள் செயல்படுவதையும், இளைய மனங்களில் தீயவிதைகள் துவப்படுவதும், கிறிஸ்தவ சமயத்திற்குள்ளும் சாதியநோய் பீடித்திருப்பதையும் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. கடவுளை அப்பா என்று அழைக்கும் நாம் சாதியின் பெயரால் மனிதர்களைப் பிரித்துப் பார்த்தோம் என்றால் அந்தக்கடவுளையே இழிவுபடுத்துத்துகிறோம்.

சாதி மறுப்பு ஒரு ஒட்டுமொத்த நாட்டின் குரலாக ஒலிக்க வேண்டும். ஊடகங்கள் தொடர்ந்து இதைப்பற்றி பேச வேண்டும். அரசும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களை முனைப்போடு செயல்படுத்தவும்,சாதியக் குற்றங்களுக்கு இன்னும் தண்டனைகள் கடுமையாக்கப்படவும் வேண்டும். நீதி விசாரணைகள் விரைந்து நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பிற்கான நீதிமன்ற செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். குற்றமிழைத்தோரின் சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்கப்படவேண்டும். அரசுப்பணியில் இருப்போர் சாதிய ரீதியாக செயல்பட்டால் உடனடியாக அவரது பதவி பறிக்கப்படவேண்டும். சாதிய ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஓட்டரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். இறுகிப்போன சாதிய உணர்வுகளை தீவிரமான அரசியல், ஊடக செயல்பாடுகளால் மெல்ல மெல்லவேனும் நீக்கமுடியும். மக்களை எளிதில் அணுக வாய்ப்புள்ள சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள ஆன்மீகச் செயல்பாட்டாளர்களும், சாதியத்தைத் துரத்த சாட்டை எடுக்க வேண்டும். 

நீக்கமற நிறைந்திருக்கும் சாதியச் சாக்கடையைச் சுத்தம் செய்ய யாரோ ஒருவரால் நிச்சயம் முடியாது. ஆனால் எல்லோரும் இணைந்தால் முடியும். முதலில் சமுதாயத்தில் சாதிய நாற்றம் அடிக்கிறது என்று பேச முன்வருவோம்! 

திங்கள், 24 செப்டம்பர், 2018

வெளியே ஒலிக்கட்டும் மனதின் குரல்: 3 (Let's speak out)

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் ஓளவையார். தாய், தந்தைக்கு மரியாதை தருவதில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நாம் நன்கு அறிவோம். அது போலவே பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கல்வியிலும், ஒழுக்கத்திலும் வளர்ப்பதற்கு செய்கின்ற தியாகங்களுக்கும் எந்த எல்லையும் இல்லை. சொல்லப்போனால் நம் பெற்றோர்கள் தங்களுக்கென்று வாழ்வதே இல்லை. 

எல்லாம் பிள்ளைகளுக்காகவே என்று உழைக்கும் பெற்றோர்கள் தெரிந்தோ தெரியாமலோ நிறைய எதிர்பார்ப்புகளையும் சேர்த்தே வளர்க்கிறார்கள். தங்களது பிள்ளைகள் எதிர்காலத்தில் கலெக்டர் ஆக வேண்டும்! பெரிய அதிகாரி ஆக வேண்டும் என்று எல்லாப் பெற்றோருக்குமே சில கனவுகள் இருக்கின்றன. பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று விரும்புவதும், வாழ்த்துவதும் சரிதான். ஆனால் உன்னை வளர்க்க நாங்கள் எங்கள் வாழ்க்கையையே தாரைவார்த்தோம். நீ நாங்கள் விரும்பியபடிதான் உன் வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது என்பது பிள்ளைகளின் தனித்தன்மைகளை முற்றிலும் அழித்துவிடுகிறது. 

தங்கள் வாழ்வில் எட்ட முடியாதக் கனவுகளை தங்கள் பிள்ளைகள் மேல் சுமத்தி அவர்களைப் பந்தயக்குதிரைகளாக ஓடவிடுவது மிகவும் தவறானது. பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும், என்ன துறையில் வேலை செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி எந்த வீட்டில் திருமணம் செய்யவேண்டும் என்பது வரை முழுக்க முழுக்க பெற்றோர்களே முடிவு செய்கிறார்கள் அல்லது தங்கள் முடிவுகளை பிள்ளைகளே எடுக்கும் படி மூளைச்சலவை செய்கிறார்கள். ஒருகட்டத்தில் பிள்ளைகள் தங்கள் வாழ்வில் அடைய விரும்பிய இலக்கிலிருந்து முற்றிலும் வேறான ஒரு இடத்தில் நின்றுகொண்டு வாழ்வின் பார்வையாளர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்காவது தாங்கள் விரும்பியபடி நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க தியாகம் செய்யத் தயாராகிவிடுகிறார்கள். இந்தத் தியாகச்சுழற்சியினால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள்  பட்டியலில் இந்தியா 133-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 156 நாடுகள் பங்கேற்ற இந்த ஐ.நா.வின் ஆய்வில் நம் நட்பு நாடான பாகிஸ்தான் 75 ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.  

ஒன்றும் வேண்டாம்! நீங்கள் தினசரி நாளிதழ் படிக்கும் பழக்கம் உடையவர் என்றாலே நம் நாட்டில் நடக்கும் விநோதங்களுக்கும், முரண்களுக்கும் தலையைப் பிய்த்துக்கொண்டு ஓடிவிடுவிடலாமா என்று நினைப்பீர்கள். வேறு சாதியில் திருமணம் முடித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக பெற்றப் பிள்ளைகளையே கொல்லும் நிகழ்வுகள் வெறும் விதிவிலக்குகள் தான் என்று சொல்ல முடியாதபடி தினசரி செய்திகளாகிவிட்டன. தர்மபுரி இளவரசன்-திவ்யா, உடுமலைப்பேட்டை சங்கர்-கவுசல்யா என்ற துயரப்பட்டியலின் கண்ணீர் காயும் முன்னே சமீபத்தில் தெலுங்கானாவின் பிரனாய் நாயக்-அமிர்தவர்சினி என்ற இளம் தம்பதியினரும் சேர்ந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆவணக்கொலைகள் என்று தேடினால் வரும் முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. கல்வியறிவில் முன்னணியில் உள்ள கேரளா, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஆணவக்கொலைகள் அரங்கேறுகின்றன. ஆண்டிற்கு 500க்கும் அதிகமானக் கொலைக் குற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. வெளியுலகிற்கு தற்கொலைகளாக, விபத்துக்களாக, சந்தேக மரணங்களாக பதிவானக் குற்றங்கள் எத்தனையோ! 

இந்தியாவின் மனசாட்சியை நடுரோட்டில் சிந்தப்படும் இரத்தங்கள் உலுக்கவில்லையா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண உரிமையில் தலையிடுவதும், சொந்த சாதியில் திருமணம் செய்ய வற்புறுத்துவதும் சிந்தப்படும் சூடான இளம் இரத்தத்தைக் கண்டும் காணாமல் செல்வதைப் போன்றதுதானே?

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

வெளியே ஒலிக்கட்டும் மனதின் குரல்: 2 (Let's speak out)


சாதி! ஒரு சிறிய வார்த்தைதான்! ஆனால் இச்சாதியின் பெயரால் நிகழும் அநியாயங்களையும், அக்கிரமங்களையும் ஆயிரத்தில் ஒரு பங்கை எழுதினாலே பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். ஒரு சமூகமாக சாதியின் கொடுமைகளில் பலவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தாண்டி வந்திருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லைதான். ஆயினும் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு நம் கண்களுக்கு எட்டாத நெடுந்தொலைவாக இருக்கிறது என்பது மிகவும் திகைப்பூட்டுகின்றது. அண்ணல் அம்பேத்கார் என்னும் பேரறிவுச்சுடரால் வார்க்கப்பட்ட நம் அரசியல் சாசனம் வர்க்கப் பேதங்களைத் தண்டனைக்குரியக் குற்றச் செயல் என்று வரையறை செய்ததே ஒட்டுமொத்த தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் இறுகிக் கிடந்த சாதிய அழுக்கை அழுக்கு என்று அடையாளம் காட்டியது எனலாம். தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு மனிதநேயமற்றச் செயல் என்று நம் பாடப்புத்தகங்களிலே அச்சிடும் அளவு நாம் முன்னேறியிருக்கிறோம் என்றால் அம்பேத்கருக்கு முன்னும், பின்னும் தேசம் முழுதும் எழுந்த மனசாட்சியின் குரல்களுக்கு நாம் நிறையவே கடமைப்பட்டுள்ளோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தைப் பெரியாரே பகுத்தறிவு பகவன். அவரது ஒளியை உள்வாங்கி உதித்த திராவிட இயக்கங்களும் தமிழகத்தில் சமத்துவத்தை உருவாக்க நிறையவே பங்களிப்பு செய்துள்ளார்கள். தந்தைப் பெரியாரின் குரல் ஒரு புரட்சியாளனின் குரலாக ஒலித்தது என்றால், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தங்கள் அரசியல் அதிகாரங்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விளக்கேற்றினார்கள். சமூகத்தின் அடித்தட்டில் பிறந்தாலும் தன்னெழுச்சியாகப் போராடித் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொண்டதோடு 69 சதவிகித இடஒதுக்கீடு, சமத்துவபுரம் போன்ற அரசியல் காய்நகர்த்தல்களினால் சாதிய சக்திகளின் பேரரக்கனாக விளங்கியவர் கலைஞர்.

ஆயினும் சாதிப் பேய் ஒழிந்ததா? அது ஒரு வடிவில் அழிந்தாலும் மறுவடிவில் தக்கவைக்கப்படுகிறது. சாதியைப்பற்றி பொதுவெளியில் பேசுவதற்கும், சாதி அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதற்கும் நாம் தயங்குகிறோம். ஆனால் சாதிக்கொரு கோவில், சாதிக்கொரு சுடுகாடு இருப்பதை மிகவும் சகஜமாக எடுத்துக்கொள்கின்றோம். உன்னிடம் தீண்டாமையைக் காட்டிக்கொள்ள மாட்டேன்; ஆனால் உன்னைத் தீண்டவும் மாட்டேன் என்னும் அளவுதான் சாதியை நாம் கடந்திருக்கிறோம். சாதியைக் கட்டிக்காப்பது மதம் என்பதால்தான் தந்தை பெரியார் கடவுள் மறுப்பைக் கையில் எடுக்கிறார். ஆனால் மதத்தை விட அதிகமாகச் சாதியைத் தாங்கிப்பிடிப்பது நம் திருமண முறை என்பதே என் கருத்தாகும்.

உலகில் எங்குமே (எனக்குத் தெரிந்து) பிள்ளைகளுக்கு பெற்றோர் வரன் பார்ப்பதில்லை. தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்கள் பெற்றோருக்கு விட்டுக்கொடுப்பதில்லை. இரு அன்புகொண்ட உள்ளங்கள் இணைந்து வாழ சமூகத்தின் சாட்சியாக ஒப்பந்தம் செய்வதே திருமணம் ஆகும்.!  நம் ஊர் திருமண வாழ்த்துப் பதாகைகளில் மட்டுமே அன்பு, காதல், 'இணைந்தது இருமணம்! வாழ்த்துவது அன்பு மனம்' போன்ற கவித்துவங்களைப் பார்க்க முடிகிறது. உண்மையிலேயே அன்பின் வாழ்நாள் ஒப்பந்தமாக இருக்க வேண்டிய திருமணங்களை முதலில் நிர்ணயிப்பது சாதியாகத்தான் இருக்கிறது. அதன் பின்னர் பொருளாதாரம். அதன் பின்னர் மதம், கவுரவமானக் குடும்பம் போன்ற இன்னபிற இத்யாதிகள்! அன்பு!? அது எங்கேப் போய்விடப் போகிறது? திருமணத்திற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்! சாதி தீர்மானிக்கும் திருமணமே, சாதியின் இருப்பையும் தீர்மானிக்கிறது. இன்னும் சாதியத்திருமணங்கள் அவசியம் தானா?

வெளியே ஒலிக்கட்டும் மனதின் குரல்: 1 (Let's speak out)


நாம் மனிதர்கள். மனதால் வாழ்பவர்கள்! இந்த மனது என்ற ஒன்றுதான் நம்மை இயக்குகிறது. மனதின் விதை வேண்டுமானால் நம் படைப்பிலேயே இருக்கலாம். ஆனால் இன்று நாமாக நாம் நினைக்கும் நம் மனது காலப்போக்கில் வளர்கிறது. காலத்தாலும், கல்வியாலும், இடத்தாலும், பொருளாலும் தன்னையேப் புதுப்பிக்கின்றது. இந்த மனது உருவாக்கத்தில் சமூகமும், சட்ட திட்டங்களும் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த மனதைக்கொண்டே சரி, தவறு, இன்பம் தருவது, துன்பம் தருவது போன்ற நீதி நியாயங்களைக் கற்பித்துக்கொள்கின்றோம். இந்த மனதுருவாக்கம் மனிதன் இணைந்து வாழ்வதற்கு இசைவான ஒத்தமைவுகளை உருவாக்கி தனி மனிதனை சமூக மனிதனாக்குகின்றது.

ஆயினும் தனி மனிதன் தன் சொந்த  அனுபவங்களின் மூலம், வாசிப்பின் மூலம், சந்திக்கும் நபர்களின் மூலம் தனக்கென்று ஒரு தனிமனதினை உருவாக்கிக் கொள்கிறான். அந்தத் தனி மனது தனக்கான முதன்மைகளை உருவாக்கிக்கொள்கிறது. எதிர்வரும் எல்லாவற்றையும் தன் முதன்மைகளின் கண்கொண்டே புரிந்துகொள்கிறது. அதற்கேற்பவே எதிர்வினையாற்றுகிறது.

தனியாக அமர்ந்திருக்கும் போது தனக்குள்ளே தனி மனதும், ஒரு சமூக மனதும் மோதிக்கொள்ளும் சிற்றொலியைக் கேட்கிறான். தனி மனதின் முதன்மைகளால் சமூக மனதைச் சாடுகிறான். தனது முதன்மைகளுக்கு நியாயம் கூறும் எல்லாத் தரவுகளையும் திரட்டுகிறான். இதனை அறிவு என்னும் கருவியால் செய்கிறான். சேகரித்தத் தர்க்கங்களைக் கொண்டு பொது மனதைக் கடுமையாகச் சாடுகிறான். சிற்றொலி நாளடைவில் பேரொலியாக மாறி மனதிற்குள் எப்போதும் ஒரு இரைச்சலைக் கேட்கிறான்.

எடுத்துக்காட்டாக நம் சமூகம் அல்லது மிகப்பெரும்பாலானோர் சாதியை ஏற்றுக்கொள்கின்றனர். தனி மனது அதை ஏற்றுக்கொண்டால் அங்கே குழப்பமில்லை. ஆனால் தனிமனது அதை அறவே மறுக்கின்ற போது இரண்டு விளைவுகளை எதிர்பார்க்கலாம். ஒன்று சமூகத்திற்காக தனிமனதோடு சமரசம் செய்து கொண்டு வாழையடி வாழையாக வாழ்வது. இன்னொன்று உள்ளொலிக்கும் குரலைத் துணிச்சலோடு வெளிப்படுத்துவது. குரவளையைச் சமூகம் கடித்துக் குதறும் அபாயம் அறிந்தும் சமரசம் செய்யாதக் குரலாக ஒலிப்பது.

அப்படிப்பட்டக் குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கி பெரும் போராட்டமாக உருவெடுத்து கடைசியில் சமூகம் தன் மனசாட்சியை மாற்றி எழுதிய பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும். இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடுஞ்செயல்கள் தனிமனிதர்களின் குரலால், போராட்டத்தால், தியாகத்தால் இன்று இல்லாமல் போன நல்வரலாறும் நாம் அறிந்ததே!

ஆனால் அக்குரல்களை அதிகாரம் கொண்டிருப்போர் தங்கள் அதிகாரத்திற்கு எதிரானதாகப் பார்க்கின்றனர். உரக்க ஒலிக்கும் முன் ஒழிக்கப்பார்க்கின்றனர். ஒருகாலத்தில் அக்குரலுக்கு உரிய ஒருவனைச் சிலுவையில் ஆணியால் அறைந்தனர். நடுவீதியில் அக்குரல்களுக்குரியவர்கள் தீ வைக்கப்பட்டனர். பஜனை முடிந்து வந்த எலும்பும் தோலுமாக இருந்த ஒருக்கிழவனைத் துப்பாக்கியால் சுட்டனர். அவனை அழிப்பதல்ல நோக்கம். அவன் மனதின் குரலலை வெளியே ஒலிக்காமல் செய்வது. ஆனால் சிலுவைகளுக்குப் பின்னும், துப்பாக்கிகளுக்குப் பின்னும் உண்மையின் குரல்கள் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன.



செவ்வாய், 11 செப்டம்பர், 2018

கலைக்கப்பட்ட கூடு (Scattered Nest)


நீண்ட நாள்களுக்குப் பிறகு எதாவது எழுதலாம் என்று தோன்றுகிறது. பேசுவதும், எழுதுவதும் தகவல் பரிமாற்றமே! ஆனால் எழுதும் போது மனதால் பேசுவது போன்ற சுகம் இருக்கின்றது. இது பேச்சால் நிரம்பிய உலகு. கொஞ்சம் அமைதியாக இருப்போமா என்று வாயை இழுத்துக் கட்டிய போது மனமீன் கடந்தக் காலத்திற்குள் நீந்திச் சென்றது. 

மேலே இருக்கும் ஆலயமானது எல்லோருக்கும் ஒரு படம். அவ்வளவுதான். ஆனால் இதனோடு தொப்புள் கொடி உறவு கொண்டிருப்போருக்கு இது ஒரு தாயின் படம். இந்த ஆலயம் இப்போது இல்லை. இருந்த எந்தத் தடயமும் இல்லாமல் புதிய ஆலயம் கட்டி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. வெளிநாடுகளில் பெரும்பாலும் அவர்கள் எந்தக் கட்டிடத்தையும் முழுதாக இடித்து புதிதாகக் கட்டுவதில்லை. புதிதாகக் கட்டுவதற்கு ஆகும் செலவை விட பன்மடங்கு செலவு செய்து பராமரிக்கிறார்கள். அதற்கானக் காரணங்கள் எங்கள் ஊரின் பழைய ஆலயத்தின் படத்தைப் பார்க்கும்போதுதான் தெளிவாக விளங்கின.

இந்த ஆலயம் தான் எங்கள் குழந்தைப் பருவத்தின் அனைத்து நினைவுகளையும் தாங்கிநிற்கும் பழைய இரும்புப்பெட்டகம். இங்குதான் நாங்கள் விளையாடியது. இங்குதான் நாங்கள் மறைக்கல்வி பயின்றது. இங்குதான் எங்கள் உறவுகள் பலரின் திருமணம் நடைபெற்றது. இதன் முற்றத்தில் தான் நாங்கள் ஊராக அமர்ந்து விருந்துண்டது. கொடியேற்றியது. விழா நடத்தியது. இன்று ஊரைவிட்டு பிழைப்புக்காக பெரிய பளபளப்பான ஊர்களுக்கு இதன் பிள்ளைகள் சென்று அந்நியப்பட்டு நிற்கும் போது தங்கள் ஊருக்கான ஏக்கம் தொண்டைக்குழியை அடைக்கின்றது. நினைவுச் சிறகுகளில் சென்றாலும் அங்கே கூடுகள் கலைக்கப்பட்டு நெடுநாள்களாகிவிட்டன. எல்லாமும் இல்லாமல் போவதன் வலியை நாம் உணருவதே இல்லையா?

அப்பாமுடுவம் பெரியப்பா (அவரது பெயரா தெரியவில்லை! அப்படித்தான் கூப்பிடுவார்கள்) பெரிய குளத்து இறக்கத்தில் சைக்கிளில் இருந்து விழுந்து கொண்டை நரம்பு முறிந்து மருத்துவர்கள் கைவிட்ட பின் இக்கோவிலின் இடப்பக்கம் இருக்கும் குருசடியில் தான் கட்டிலில் படுக்கவைத்திருந்தார்கள். ஒரு நாள் காலை ஓவென்று அழுத அவரது மனைவியின் குரலில் தான் உறங்கிக் கிடந்த ஊரே முழித்தது. இன்று பெரியப்பாவும் இல்லை. கோவிலும் இல்லை. 

மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், மருத்துவமனை செல்ல வசதியில்லாவதவர்கள் ஆற்றுக்குக் கிழக்கே செல்வதற்கு முன் (கல்லறைத் தோட்டத்தின் இடுபெயர்) அவர்களுக்கு வழங்கப்பட்ட கடைசி இடம் இக்கோவில் முற்றம்தான். எல்லோரும் குணம் அடையாவிட்டாலும் இங்கு எல்லோருக்கும் இடமிருந்தது. நோயாளிகள் என்றில்லை. எங்கள் சிறுவயதில் பாதி ஊர் படுத்து உறங்கிய இடம் இந்தக் கோவில் முற்றம். இரவு ஏழு மணிக்கெல்லாம் பாயையும், ஜமுக்காளத்தையும் (பன்னெடுங்காலத்திற்கு முன்பு போர்வைக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது.) எடுத்துக்கொண்டு குடும்பசகிதமாக செல்வார்கள். குருசடிக்கு அருகில் ஒரு அம்மி கிடக்கும். அம்மைக்கட்டு, தோல் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேப்பிலை அறைத்துத் தடவிக்கொள்வதுதான்! மாலை ஆனால் இக்கோவில் குருசடியில் பெண்கள் பேய் ஆடுவார்கள்! படுவேகமாக ஓடி வந்து குட்டிக்கரணம் அடித்து, சுவரில் மோதி, அந்தோணியாரையும், மிக்கேல் சம்மனசையும் 'போல, வால' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்! இன்றும் அந்தப் பெண்கள் இருக்கிறார்கள்! ஆனால் ஏனோ பேயே பிடிப்பதில்லை! பேய்களும், கோவிலும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஊராக ஐ.நா சபை அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி! இப்போது புதிய கோவில்! ஆனால் இப்போது பேய்கள் சாதாரணமாகக் கண்களுக்குத் தெரிவதில்லை!

கோவிலை ஒருநாள் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடித்தார்கள். சுவர்கள் எல்லாம் இடிக்கப்பட்டப்பின் கோபுரம் மட்டும் மிச்சமிருந்தது. ஒரு வெறுமையானக் காட்சி அது. இரும்பு வடத்தால் கோபுரத்தின் கொண்டையில் கட்டி ஜேசிபியால் இழுத்தார்கள். விடாப்பிடியாக அடம்பிடித்தக் கோபுரம் இறுதியாக வீழ்ந்தது. செங்கல் செங்கலாக சிதறியக் காட்சியோடு கோவில் தொடர்பான எல்லா நினைவுகளும் திரும்பிச் செல்லமுடியாதபடி அலைகின்றன! நாம் பிறந்த ஊர் நம் காலத்திலேயே பிறந்து நம் காலத்திற்கு முன்பே மறைந்து இன்னொரு ஊராகிப் போவது நம் ஞாபகங்களை அடைகாக்கும் கூட்டினைக் கலைப்பது போன்றது தானே!