புதன், 26 செப்டம்பர், 2018

வெளியே ஒலிக்கட்டும் மனதின் குரல்: 4 (Let's speak out)

சாதியம் இந்தியாவின் சாபம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருவள்ளுவரும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கணியன் பூங்குன்றனாரும், சாதிகள் இரண்டொழிய வேறில்லை - இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்று ஒளவையாரும், சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாரதியாரும் நம் பெருமையின் முகங்களாக இருக்கும் அனைவருமே சாதியால் நமக்கு தலைக்குனிவே என்று சொல்லிவிட்டார்கள். பிறப்பால் எல்லோரும் சமமே என்று சொல்ல வேண்டியத் தேவை திருவள்ளுவருக்கே இருந்திருக்கிறது எனறால் சாதியம் நம் சமூகத்தில் எளிதாக பிடுங்கியெறிய முடியாதபடி வேரூன்றியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

தனிமனிதர்களுடைய மனசாட்சியின் குரலானது வரலாற்றில் சமூக மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது என்று பார்த்திருக்கிறோம். ஆனால் சாதியத்திற்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒலித்த தனிமனிதக்குரல்கள் சமூகத்தில் எந்த பெரிய மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்பது மலைப்பாக இருக்கிறது. நம்முடைய இலக்கியங்களும், மொழியின் சிறப்பும், எஞ்சியிருக்கும் வரலாற்றுச் சின்னங்களும் நாம் ஒரு மாபெரும் நாகரீகத்தின் பிள்ளைகள் என்று பெருமைப்பட வைக்கின்றன. ஆனால் அன்றாடம் எத்தனைக் காட்டுமிராண்டித் தனமான செய்திகளைக் கண்டு குறுகிப்போகிறோம்.

தேநீர் கடையில் தெறிக்கும் பேச்சுக்கள் முதல் பேஸ்புக், வாட்ஸ்அப் சலசலப்புகள் வரையிலும் நம் பேசுபொருளாக இருப்பவை மிகப்பெரும்பாலும் சினிமாவும், அரசியலுமே. அதை விட்டால் பழம்பெருமை, அல்லது நகைச்சுவை என்ற பெயரில் கேலி, கிண்டல். தவறில்லைதான். ஆனால் நாம் இன்னும் பேசவேத் தொடங்காத பல அடிப்படையானக் காரியங்கள் இருக்கும் போது சினிமாவும், அரசியலும் நம் கவனத்தை அளவுக்கதிகமாக இழுப்பது மிகவும் தவறாகப்படுகின்றது. 

நாம் சங்கோஜப்படும் சில காரியங்களை திறந்த வெளியில் பேசாத வரையிலும் சமூகத்தில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. சாதியின் பெயரால் அன்றாடம் நடக்கும் ஆணவக்கொலைகள், வறியவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகள், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்பு போன்றவற்றில் காட்டப்படும் பாராபட்சங்கள் இதைப்பற்றியெல்லாம் நாம் என்று பேசப்போகிறோம். தொல்.திருமாவளவன் போன்றவர்கள் வாழ்நாள் முழுவதும் பேசினாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குரலாக மட்டுமே முத்திரை குத்தப்படுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டப்படி வாய்ப்பிருந்தாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே அவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் சமத்துவ சமுதாயம் என்பது கண்களுக்கு எட்டாதத் தொலைவிலேயே உள்ளது. 

தனிமனித மாற்றங்கள் சமுதாயத்தை மாற்றிவிடும் என்பது ஒரு மிகையானக் கற்பனையே அன்றி வேறில்லை. சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்: தனி மனிதர்கள் மாறினால் அந்தக் குடும்பமே மாறும். குடும்பங்கள் மாறினால் அந்த ஊரே மாறும். ஊர், நாடு, உலகம் என்று ஒரு மாயத்தேர் ஓடும். ஆனால் நடைமுறையில் எத்தனையோ தனிமனிதர்கள் சாதியத்திற்கு எதிரானவர்களாக இருந்தாலும் இன்னும் சமூக வலைத்தளங்கள் முழுவதும் சாதியின் பெயரால் குழுக்குள் செயல்படுவதையும், இளைய மனங்களில் தீயவிதைகள் துவப்படுவதும், கிறிஸ்தவ சமயத்திற்குள்ளும் சாதியநோய் பீடித்திருப்பதையும் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. கடவுளை அப்பா என்று அழைக்கும் நாம் சாதியின் பெயரால் மனிதர்களைப் பிரித்துப் பார்த்தோம் என்றால் அந்தக்கடவுளையே இழிவுபடுத்துத்துகிறோம்.

சாதி மறுப்பு ஒரு ஒட்டுமொத்த நாட்டின் குரலாக ஒலிக்க வேண்டும். ஊடகங்கள் தொடர்ந்து இதைப்பற்றி பேச வேண்டும். அரசும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களை முனைப்போடு செயல்படுத்தவும்,சாதியக் குற்றங்களுக்கு இன்னும் தண்டனைகள் கடுமையாக்கப்படவும் வேண்டும். நீதி விசாரணைகள் விரைந்து நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பிற்கான நீதிமன்ற செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். குற்றமிழைத்தோரின் சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்கப்படவேண்டும். அரசுப்பணியில் இருப்போர் சாதிய ரீதியாக செயல்பட்டால் உடனடியாக அவரது பதவி பறிக்கப்படவேண்டும். சாதிய ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஓட்டரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். இறுகிப்போன சாதிய உணர்வுகளை தீவிரமான அரசியல், ஊடக செயல்பாடுகளால் மெல்ல மெல்லவேனும் நீக்கமுடியும். மக்களை எளிதில் அணுக வாய்ப்புள்ள சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள ஆன்மீகச் செயல்பாட்டாளர்களும், சாதியத்தைத் துரத்த சாட்டை எடுக்க வேண்டும். 

நீக்கமற நிறைந்திருக்கும் சாதியச் சாக்கடையைச் சுத்தம் செய்ய யாரோ ஒருவரால் நிச்சயம் முடியாது. ஆனால் எல்லோரும் இணைந்தால் முடியும். முதலில் சமுதாயத்தில் சாதிய நாற்றம் அடிக்கிறது என்று பேச முன்வருவோம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக