சனி, 30 நவம்பர், 2019

அந்த மரணம் ஒரு இறகைப் போல காற்றில் உதிர்கிறது (When a man dies alone...)


நவம்பர் மாதம் இன்றோடு முடிகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இறந்து போனவர்களின் ஆன்மாக்கள் இறைவனில் இளைப்பாற வேண்டி இந்த மாதத்தில் செபிப்பார்கள். மனிதன் தீர்க்க முடியாத பிரச்சனைகளில் முதன்மையானது இறப்பு. இடஒதுக்கீடு, வயது மூப்பு போன்ற நடைமுறையில் உள்ள எந்த ஒழுங்குகளையும் மரணம் கடைபிடிப்பதில்லை. அது ஒரு தனி டிபார்ட்மென்ட். யாரும் கேள்வி கேட்க முடியாது. செய்யும் வேலைகளை, செல்லும் பயணங்களை அந்த இடத்தில் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட வேண்டியதுதான். வேறு யாராவது பார்த்துக்கொள்வார்கள். மரணம் சில வேளைகளில் தேன் கூடு போல அமைதியாக இருக்கும். கொலைத்தொழிலை விட்டுவிட்டு எமன் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டது போல, எல்லாரும் கொஞ்சம் மரணம் மறந்திருப்போம். திடீரென தேன்கூடு கலைவது போல தெரிந்தவர்கள் கலைந்து போவதைப் பார்த்து திக்கற்று நின்றிருப்போம். 

ஒரு நடுவயது பெண்மணி அழுதுகொண்டே வந்தார். பேச ஆரம்பிக்கவே சிலபல நிமிடங்கள் ஆயிற்று. தனக்கு கொடிய புற்று நோய் இருப்பதாகவும், தான் அடுத்த ஈஸ்டருக்கு இருப்பேனோ, இல்லையோ என்று தேம்பிக்கொண்டிருந்தார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. சில துன்பங்களைக் குறுக்கிடாமல் கேட்டாலே போதும். புத்தி சொல்ல எதுவும் வரவில்லை என்றால் அமைதியாக இருந்துவிட வேண்டும். அவர் அமைதியாகும் வரையில் காத்திருந்து சொன்னேன். உண்மையைச் சொன்னால், நானும் அடுத்த ஈஸ்டருக்கு இருப்பேனா என்றே தெரியாது. இந்தக் கோவிலில் நீங்கள் பார்க்கும் எல்லோருக்கும் இது பொருந்தும். இருக்கும் வரையில் வாழ்வு மதிப்பிற்குரியது. வாழ்ந்து விட்டு செல்வோமே! என்ற பதிலில் சற்று திருப்தியடைந்தவராய் சென்றார்.

போனவாரம் இரவு 8 மணி அளவில் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். கட்சிகாரார். கடந்த 20 வருடங்களாக தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து பேசி, பழகி, காலநேரமின்றி கட்சிக்காக உழைத்து தேர்தலுக்குப் பின் பார்வைக்கு அதிகம் தென்படாத பக்கத்து ஊர்க்காரர். மொத்தம் நான்கு பேர்கள். அம்மா தேனீர் போட செல்ல, ஒவ்வொருவரும் கடுங்காப்பி போதும், சீனி சேர்க்க வேண்டாம் என்று வரிசையாக சொல்ல ஆரம்பிக்க, நண்பர் மட்டும் தனக்கு எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னாராம். 65 வயதிலும் தனக்கு சர்க்கரை, கொழுப்பு போன்ற பிரச்சனைகள் எதுவுமின்றி நலமாக இருப்பதாக சொன்னாராம். தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனதால், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்திருக்கிறார். இரவு வீட்டிற்கு செல்லும் போது கடையில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு சென்று படுத்திருக்கிறார். காலையில் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மாலை சந்திரன் மறைந்தார்.

இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் வந்தார். கிளைமேட் எப்படி இருக்கிறது என்று விசாரித்தார். அவ்வளவாக குளிரவில்லை. பாதம் மட்டும் வெறைக்கிறது என்றேன். உடனே நினைவுபடுத்தி ஒரு நிகழ்வினைச் சொன்னார். அவரது சிறுவயதில் அவரது தாத்தா இறந்துவிட்டார். அவரும் அவரது தங்கையும் இறந்த தாத்தாவின்  அருகில் நிற்கிறார்கள். தங்கை தாத்தாவின் பாதங்களைத் தொட்டுப்பார்த்துவிட்டு, தாத்தாவுக்கு குளிரும்! கால்களை மூடுங்கள் என்றாராம். சொல்விட்டு அவரே சிரித்தார். நீங்களும் கால்களை மூடிக்கொள்ளுங்கள் என்று என்னிடம் சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். நான் என் கால்களையேப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 

இலவச இணைப்பு: ஒரு கவிதை (எடையற்ற மரணங்கள்- மனுஷ்யபுத்திரனின் புலரியின் முத்தங்கள் புத்தகத்திலிருந்து)
எதிர்பாராமல் இறந்த
நண்பனைப் பற்றி
சொல்லிக்கொண்டிருந்தேன்
"இறந்தவனுக்கு குழந்தைகள் உண்டா?"
என்று கேட்டாள்
"இல்லை
அவனுக்குத்
திருமணமே ஆகவில்லை"
என்று நான் பதிலளித்தபோது
"நல்லவேளை" என்று சொல்லிவிட்டு
நாக்கைக் கடித்துக்கொண்டாள்
தனித்து வாழ்பவர்கள்
இறக்கும்போது
அந்த மரணம்
ஒரு இறகைப் போல
காற்றில் உதிர்கிறது
அது
அவ்வளவு எடையற்றதாக இருக்கிறது!