வியாழன், 29 அக்டோபர், 2015

ஒரு திருப்பயணமும், நிறைய நிறைய அனுபவங்களும் (A Pilgrimage Story)

இந்தக் கட்டுரை கடந்த ஜீலை 29 முதல் ஆகஸ்டு 9 வரையிலான எங்களது திருப்பயணத்தைப் பற்றியது. 'எங்களது' என்ற பன்மைச் சொல் இலண்டனில் வசித்துவரும் இலங்கைத் தமிழ் மக்களைக் குறிக்கிறது. மதிப்பிற்குரிய திரு.ரெக்ஸ் மற்றும் திரு.ஞானப்பிரகாசம் என்னும் அன்பர்களின் ஏற்பாட்டில் ஒரு பேருந்து நிறைய திருப்பயணிகளோடு முதல் நாளன்று லூர்து நகருக்குப் பயணமானோம். ரோமிலிருந்து பாரிசுக்குச் விமானித்து காமல் மேரி என்னும் தாயரின் இல்லத்தை அடைந்து, பின் அவரோடு சென்று இலண்டனிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்தை அடைந்தோம். உள்ளே நுழைந்ததும் 'என்ன ஃபாதர் இவ்வளவு சின்னவராக இருக்கிறாரே?' என்று அவர்களும், 'என்ன இவர்கள் எல்லோரும் இவ்வளவு பெரியவர்களாக இருக்கிறார்களே?' என்று நானும் பரஸ்பரம் வியப்படைந்தோம். நெடுநேரம் காத்திருந்து நீங்கள் செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தாமல் போனால் வயிற்றுக்குள் ஒருமாதிரி உருளும் தானே! அது மாதிரி ஒரு 'ஃபீலிங்'. எல்மோவுக்குப் பக்கத்து இருக்கை எனக்குத் தரப்பட்டது. பார்த்த மாத்திரத்தில் நண்பரானார் 76 வயது இளைஞர் எல்மோ.

மாலை 8.30 –க்கெல்லாம் நெவேரா என்னுமிடத்தில் புனித பெர்னதெத் அம்மையாரின் திருவுடல் வைக்கப்பட்டுள்ள கன்னியர் மட சிற்றாலயத்தையடைந்தோம். இந்தப் புனிதைக்குத்தான் லூர்து நகரின் மரியன்னைக் காட்சி தந்தார். அப்படியென்றால் லூர்து நகரை நெருங்கிவிட்டோம் என்றுதான் நினைத்தோம். ஆனால் அதன் பின் ஒன்பது மணிநேர பயணத்திற்குப் பின் இளங்காலை ஏழு மணிக்குத்தான் அன்னையின் புனித நகரை அடைந்தோம். அன்னை தன் இரு கரங்களை நீட்டித் தன் பிள்ளைகளை வரவேற்பது போல இயல்பாக, எளிமையாக, அழகாக அமைந்திருந்தது ஆலயம். அடர்ந்த, உயர்ந்த, செழிப்பு மிக்க மலைகளின் அடிவாரத்தில், நீரோடைக்கு அருகில் இயற்கையின் அங்கமாகவே மாறியிருந்தது அக்கோவில். ஒவ்வொரு நாளும் மாலையில் திருப்பலி, இரவுணவுக்குப் பின்னர் செபமாலை பவனி, பகலில் சிலுவைப்பாதை என்று அங்கிருந்த மூன்று நாள்களுமே செப உணர்வால் நிரம்பியிருந்தது. குறிப்பாக சில்லென்ற மழைத்தூறலையும் பொருட்படுத்தாது சக்கர நாற்காலியில் அமர்ந்து மெழுகுவர்த்தியைக் கையிலேந்தி, செபமாலை பவனியில் பக்தியோடும், நம்பிக்கையோடும் 'ஆவே மரியா!' என்று உணர்ச்சி பொங்க பாடல்களைப் பாடியும் கலந்து கொள்ளும் நூற்றுக்கணக்கான உடல் நலமற்றவர்களின் நம்பிக்கை, நம் ஆன்மீக நோய்களுக்கு நல் மருந்தாக அமைந்தது.

நண்பர் எல்மோவுக்கும் எனக்கும் ஒரே அறைதான் தரப்பட்டது. அறையில் இருக்கும் கொஞ்ச நேரங்களும் நம்பிக்கைக் கதைகளாலும், வாழ்க்கைப் பாடங்களாலும் நிரம்பியிருந்தது. எல்மோவுக்கு இறைஇரக்கத்தின் ஆண்டவரிடம் அசைக்க முடியாத நம்பிக்கை. இலங்கையிலிருந்து வெறுங்கையோடு வெளியேறி, பல தேசங்களிலும் அலைக்கழிக்கப்பட்டு, கடைசியாக கனடாவில் தஞ்சம் புகுந்த ஒன்றுமில்லாதவனை கடவுள் இன்று எல்லாமும் உள்ளவனாய் உருமாற்றியமைக்கு இறைவனின் அளவற்ற இரக்கமும், அவர்மீது தான் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கையுமே காரணம் என்று எப்போதும் கூறுவார்.

ஆகஸ்டு முதல் தியதி காலையில், லூர்து அன்னையின் புனிதத் தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இத்தாலியின் வடக்கு பகுதியில் மோன்திகியாரி என்னுமிடத்தில் அன்னை மறைபொருளான ரோஜாவாக காட்சியளித்த ஆலயம் நோக்கி பயணத்தைத் தொடங்கினோம். மாலையில் விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் ஞாயிறு காலையில் ஆலயத்தை அடைந்தோம். பார்ப்பதற்கு சிறிய ஆலயமாக இருந்தாலும், ஏராளமான திருப்பயணிகளால் நிரம்பியிருந்த ஆலயத்தில் பக்தி மணம் கமழ்ந்தது. அலுவலகத்தில் அனுமதி பெற்று நல்லதொரு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினோம். அன்னை மரியாள், மோன்திகியாரியில் வசித்து வந்த பியரீனா என்பவருக்கு, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ரோஜா மலர்களை சூடியவராக காட்சியளித்து, துறவியர்களுக்காகவும், குருக்களுக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் என்பது இவ்வாலயத்தின் சிறப்பு. இங்கு அன்னை மரியாள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒவ்வொரு ஜீலை மாதமும் 13 ஆம் நாளன்று பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதே நாளில் தான் நானும் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டேன் என்பதை நன்றியோடு நினைவுபடுத்திக்கொண்டேன்.

பின்னர் அனைவரும் வெனிஸ் நகர் நோக்கிப் பயணமானோம். வெனிஸ் நீர் சூழ் நகரம். பேருந்திலிருந்து இறங்கியதும் படகுப்பயணம். வழியில் வந்த குட்டி நகரம் போன்ற பிரமாண்டமான சுற்றுலாக் கப்பலைக் கண்டதும் அனைவரும் குழந்தைகளாகி, கப்பல் பயணிகளுக்கு கைகளை அசைத்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டது மறக்க முடியாத அனுபவம். பின்னர் புனித மாற்கு சதுக்கத்தில் அனைவரும் படகிலிருந்து இறங்கி, வெனிஸ் நகர கடைவீதிகளில் கரைந்தே போனோம். விதவிதமான, வண்ண வண்ணமான முகமூடிகள், கலைப் பொருட்கள் இந்நகரக் கடைகளை பெரிதும் ஆக்கிரமித்திருந்தன. இரவுணவை முடித்ததும் அன்றிரவே பதுவை நகரைச் சென்றடைந்தோம்.

ஆகஸ்டு 3, திங்கள் கிழமையில் கோடி அற்புதரின் திருவுடலையும், அழியாத நன்னாக்கினையும் தாங்கியிருக்கும் பதுவைப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி இறையன்பில் நெக்குருகிப் போனோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓர் எளிய துறவி அந்தோணியார் இன்னும் மக்களின் மனங்களில் அழியாத நினைவாகிப் போன அதிசயத்தை எந்த அறிவியலாலும் விளக்கிக் கூற முடியுமா?

அடுத்ததாக அசிசி நகரம். அமைதியின் கருவியாய் என்னையே மாற்றுமே! பகை உள்ள இடத்தில் அன்பையும், தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும், பிளவுள்ள இடத்தில் ஒற்றுமையையும் ஐயமுள்ள இடத்தில் உறுதியையும், விரக்தியுள்ள இடத்தில் நம்பிக்கையும், இருள் உள்ள இடத்தில் ஒளியையும், மருள் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும் நான் விதைப்பேனாக! என்ற மானுடப் பண்பாட்டின் மகத்துவமிக்க செபத்தை வாழ்வாக்கிய புனித அசிசியாரின் நகரம். உலகம் பகைமையையும், பிரச்சனைகளையும் முன்னிறுத்தும் இந்நாளில், அமைதியின் சின்னமாக அமைந்திருந்தது புனிதரின் நகரம். இறைவா அமைதியின் பாதையில் எங்களை வழிநடத்தும். வாழ்வின் போக்கில் நாங்கள் யாருடைய அமைதியையாவது குலைத்திருந்தால், அவர்களிடம் மன்னிப்பினை இறைஞ்சுகின்றோம். அவர்களுக்குத் தேவையான அமைதியை இரண்டு மடங்காகத் தாரும். யாரையேனும் நாங்கள் வெறுக்க நேர்ந்தால் அவர்களை இரண்டு மடங்கு ஆசீர்வதித்தருளும். எங்கள் தவறுகளை மன்னித்து, எங்கள் மனக்காயங்களைக் குணப்படுத்தும்.

எல்லா சாலைகளும் உரோமை நோக்கியே செல்கின்றன. ஆம்! பதுவையில் தொடங்கிய எங்களது பயணம், அசிசி வழியாக, இன்று மாலையே உரோமையை வந்தடைந்தது. திருச்சபையின் தலைமைப் பீடம் வத்திக்கானுக்கு அருகாமையில், அவுரேலியாவில் ஓர் விடுதியில் தங்கினோம். உரோமை நகரம் மனித நாகரீகத்தின் மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றுக் கருவூலம். இன்றளவும் உலகின் மொழி, அரசியல், அறிவியல், நிர்வாகம், வணிகம், சட்டம், உள்கட்டமைப்பு என்று அனைத்தும் விதைவிட்டது விவாதத்திற்கு இடமின்றி உரோமையில்தான் உள்ளது. வத்திக்கான் பேராலயம் கண்களை அகல விரிய வைக்கும் ஓர் வியப்பு. இவ்வளவு நுட்பங்களையும், உச்சங்களையும் மனிதன் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே எட்டிவிட்டானா என்ற ஆச்சரியம். பார்க்கும் இடமெல்லாம் ஓவியங்களும், தத்ரூபமானச் சிற்பங்களும். மைக்கிள் ஆஞ்சலோ, ரஃபேல், பெல்லீனி போன்ற இத்தாலிய மகாகலைஞர்களின் கைவண்ணங்களைத் தாங்கி நிற்கும் வத்திக்கான் அருங்காட்சியகம், சிக்ஸ்டைன் சிற்றாலயம் வாழ்நாளில் ஒருமுறையேனும் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

உரோமையிலிருந்து பிரிய மனமின்றி ஆகஸ்டு ஆறாம் தியதி காலை பைசா நகர் நோக்கி மீண்டும் பயணம். பைசா நகர தலைமைப் பேராலயத்தின் மணிக்கூண்டுதான் இன்று உலகமெல்லாம் அறியப்படும் பைசா சாய்ந்த கோபுரம். இதன் காலத்தில் உலகெங்கும் கட்டப்பட்ட சாயாத கோபுரங்களெல்லாம் இன்று தடயமின்றி மறைந்த பின்னரும், சாய்ந்தும் சரிந்து விடாமல், விடாப்பிடியாக வாழ்வைப் பற்றிக்கொண்டிருக்கும் நம்பிக்கைதான் இதன் கவர்ச்சிக்குக் காரணமென்று நினைக்கிறேன்.

இன்று இரவுக்குள் சுவிட்சர்லாந்து சென்றடைய வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். இருப்பினும் உரோமையில் தங்கியிருந்த விடுதியிலேயே திருப்பயணி ஒருவர் தனது கடவுச்சீட்டினை வைத்துவிட்டு வந்துவிட்டமையால், சூழ்நிலையை சுமூகமாக்க, அனைவரையும் திட்டமிட்டபடியே செல்லும்படி அனுப்பிவிட்டு, நான் உரேமைக்குத் திரும்பினேன். இரவே விடுதிக்கு வந்து அவரது உடமைகளைப் பெற்றுக்கொண்டு, வெரோனா, மிலான், கோமொ, தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் ஆர்த்-கோல்தாவு, பைபர்பர்க் வழியாக எயின்ஸ்டெல்ன் சென்று அங்குள்ள கறுப்பு மாதா பேராலயத்தை அடைந்தேன். பைசா நகரில் தொடங்கி ஆறு ரெயில்கள் மாறி மறுநாள் மதியம் 12 மணிக்கெல்லாம் குறித்த இடத்தை இறைவனின் வழிநடத்துதலின்றியும், எனக்காக பதற்றத்தோடும், குழப்பத்தோடும் காத்திருந்த மக்களின் செபங்களுமின்றி நிச்சயமாக அடைந்திருக்கவே முடியாது. மீண்டும் மகிழ்ச்சியும், உற்சாகமும் தொற்றிக்கொள்ள, இயேசுவின் பிறப்பு நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியிருக்கும் தியோரமா, மற்றும் ஆண்டவரின் பாடுகளை பண்டைய எருசலேம் விவிலியப் பின்னணியில் அச்சு அசலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் இடங்களையும் பார்வையிட்டு, சுவிட்சர்லாந்து அழகுக் காட்சிகளைப் கண்களால் களவாடிக்கொண்டே ஜெர்மனி நோக்கிப் பயணமானோம்.

ஜெர்மனியின் கிளெவே மாகாணத்திலுள்ள கெவலேயர் என்னுமிடத்தில் 'மடு மாதா திருவிழா' ஒவ்வொரு ஆண்டும் அன்னை மரியாவின் விண்ணேற்பு தினத்தை முன்னிட்டு நடைபெறுகிறது. இலங்கையின் மடு மாதா திருவிழாவின் ஐரோப்பிய பதிப்பாகிய இவ்விழாவில், தமிழ் கிறித்தவர்கள் மட்டுமல்லாது, இந்துக்களும் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தங்கள் உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பாகவும், தாய் தேசத்தின் நலன் கருதி ஒன்றுசேரும் கூட்டு முயற்சியாகவும் இத்திருவிழா இன்னும் உணர்வுப்பூர்வமான அழுத்தம் பெறுகிறது. பெருவிழா முதல் திருப்பலியை மட்டக்களப்பு ஆயரும், மதியம் நடைபெற்ற இரண்டாவது திருப்பலியை கார்மல் சபையைச் சார்ந்த சார்லஸ் அவர்கள் நிறைவேற்ற, 'தாய் வீட்டிற்கு வந்திருக்கிறோம்' என்ற சிந்தனையில் மறையுரை ஆற்றியதை இன்றளவும் மகிழ்வோடு நினைவுகொள்கிறேன். இறைனுக்கு நன்றி! வேறு என்ன சொல்ல!

அன்று மாலை ரினயசன்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் காலையே பெல்ஜியம் நோக்கி பயணித்தோம். வழியில் ஜெர்மனியின் கோல்ன் நகர பேராலயத்திற்கு சென்றோம். 1248 ஆம் ஆண்டு தொடங்கிய இவ்வாலயக் கட்டுமானப் பணி 1473 ஆம் ஆண்டுடன் முழுவதும் நிறைவடையாமல் நிறுத்தப்பட்டது. பின்னர் 1880 ஆம் ஆண்டில் ஏற்கனவே இருந்த திட்டப்படியே முழு ஆலயமும் கட்டிமுடிக்கப்பட்டது. 474 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்ட இவ்வாலயக் கோபுரத்தின் உயரம் வெறும் 515 அடிதான்! கடந்த ஆயிரமாண்டுகளில் ஜெர்மனியில் நிகழ்ந்த எத்தனையோ குழப்பங்களிலும், கத்தோலிக்க விசுவாசம் எந்த அளவு கட்டிக் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்பதை இவ்வாலயம் உயர உயர சொல்கிறது.

அங்கிருந்து கிளம்பி மதியவாக்கில் பெல்ஜியத்தின் லீஜெ மாகாணத்தின் பெனுவே என்னுமிடத்தில் உள்ள 'ஏழைகளின் கன்னித்தாய் அன்னை மரியாள்' என்னும் திருத்தலத்தை அடைந்தோம். மரியத்தே பெக்கோ என்னும் 11 வயது ஏழைச் சிறுமிக்கு அன்னை மரியாள் எட்டு முறைக் காட்சியளித்து தன்னை ஏழைகளின் தாயாக அறிவித்த அருள்மிக்க அவ்வாலயத்தில் ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றியதோடு, எங்கள் திருப்பயணத்தின் அனைத்து புண்ணியங்களுக்கும் இறைவனுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

அங்கிருந்து பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸை அடைந்தோம். இங்குதனர் பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organization) தலைமையகம் அமைந்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத் தலைமையிடத்தை இந்த நகரம் பிரான்சின் ஸ்ட்ராஸ்போர்க்குடன் பகிரந்து கொள்கிறது. விடைபெறும் தருணம் வந்ததும் அனைவரும் நன்றிப்பெருக்குடன் நல்வார்த்தைகள் பல சொல்ல, அன்போடு நன்றிசொல்லி நான் அங்கிருந்து பிரான்சு தலைநகரம் பாரிசு நோக்கி செல்ல, திருப்பயணிகள் இலண்டனுக்குத் திரும்பிச் சென்றனர்.

பாரிசில் நான் முதல் நாளில் சந்தித்த தாயார் காமல் மேரி அவர்களின் இல்லத்தை அடைந்தேன். அங்கு அவர்களது மூத்த மகள் மருத்துவர் பிரமிளா அக்கா அவர்களது இல்லத்தில் இரவுணவு ஏற்பாடு செய்திருந்தனர். மறுநாள் காலை காமல் அம்மா மற்றும் எங்களோடு திருப்பயணத்தில் கலந்து கொண்ட அவர்களது உறவினர் பிலோமினா அம்மா இருவரும் என்னை பாரிசு நகரைச் சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றனர். முதன் முதலில் திரு இருதய ஆண்டவர் பசிலிக்காவிற்கும், பின்னர் நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த ஈபிள் கோபுரத்திற்கும் சென்றோம். நகரின் எந்த மூலையில் நின்று பார்த்தாலும் ஈபிள் கோபுரத்தைப் பார்த்துவிட முடியும். எதிர்பார்த்ததை விட பிரமாண்டமான ஈபிள் கோபுரம், மிகுந்த பிரமிப்பை அளித்தது.

மதிய உணவானது பிரமிளா அக்காவின் ஏற்பாடு என்றபடியால் அவரது மருத்துவமனைக்குச் சென்றோம். வாசலில் இருந்த அறிவிப்பு பலகையில், தேசிய அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மருத்துவர் என்ற அடைமொழியுடன் மருத்துவர் பிரமிளா என பொறிக்கப்ட்டிருந்தது. இலங்கைப் போர்முனையிலிருந்து பதின்பருவத்தின் தொடக்கத்தில் பிரான்சு தேசம் தஞ்சம் புகுந்து, முற்றிலும் புதியதாக பிரஞ்சு மொழி பயின்று, தந்தை குடி நோயாளியாக இருந்தும், தாயாரின் தளராத தன்னம்பிக்கையினாலும், தியாகத்தினாலும், கடின உழைப்பாலும் படித்து தேசிய மதிப்பெண்ணுடன் மருத்துவராகி சேவை செய்யும் பிரமிளா அக்காவும், அவரது தாயாரும் பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்கிறார்கள். அருமையான மதிய உணவை முடித்து பாரிசு ஓர்லி விமான நிலையத்திலிருந்து கிளம்பி இரவு உணவிற்கு, உரோமை வந்தடைந்தேன்.

பன்னிரெண்டு நாள்கள் திருப்பயணத்தில் நிறைய நிறைய அனுபவங்கள். நிறைய நிறைய ஆசீர்வாதங்கள். நிறைய நிறைய மனிதர்கள். பயணம் முழுவதுமே இறைவனின் உடனிருப்பை உணர்ந்தோம்.  தடங்கல்கள் பலவும் தடங்களாக மாறின அற்புதங்கள் ஏராளம். முடியாது என்ற நிலையிலும் கடைசியில் ஏதோ ஒரு கதவு எங்களுக்காக எப்போதும் திறந்தே இருந்தது. நிறைய நிறைய கற்றுக்கொண்டேன். இறைவனுக்கு கோடி நன்றிகள். இதனை செவ்வனே ஏற்பாடு செய்திருந்த திரு. ரெக்ஸ் அவர்களுக்கும், திரு. ஞானபிரகாசம் அவர்களுக்கும், வழியெங்கும் பகிர்வதற்கென்று ஏதேனும், எப்போதும் வைத்திருந்த அனைத்து திருப்பயணிகளுக்கும், கலகலப்பும், திறமையும் கொண்டு பாதுகாப்பான பயணத்தை நல்கிய இரு ஓட்டுநர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இந்த அருமையான மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திய அருட்பணி ஜான்சன், எஸ்ரோன், ஜெகன் மற்றும் நார்வேயைச் சார்ந்த பாசத்திற்குரிய திருவாளர் ஞானன் பிரான்சிஸ் அனைவருக்கும் நன்றிகள். எப்போதும் செபத்தில் இணைந்தே பயணிப்போம்.