செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்- Part 2


படம் 1: திருத்தந்தை பிரான்சிஸ் தெற்கு சூடான் அரசு தலைவர் பாதத்தை முத்தமிட்டு போரினைக் கைவிட்டு அமைதி ஏற்படுத்த வலியுறுத்திய போது
 படம் 2: பெரிய வியாழனன்று இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ புலம் பெயர் அகதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்ட போது

கத்தோலிக்கர்கள் ஏன் தங்கள் அருட்பணியாளர்களை தந்தை என்று அழைக்கின்றனர்? என்று வெறுமனே கேட்டிருந்தால், முதல் கட்டுரையில் கூறப்பட்ட இறைவார்த்தை, திருச்சபை மரபு போன்றவற்றைப் பற்றிய நீண்ட விளக்கம் தேவைப்பட்டிருக்காது. நேரடியாக பதில் அளித்திருக்கலாம். ஆனால் கேள்வி, மத்தேயு நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம் 'உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்' என்று கூறும்போது, கத்தோலிக்கர்கள் ஏன் அருட்பணியாளர்களை தந்தை என்று அழைக்கின்றனர்? என்பதாகும்.

ஆகவே விவிலியத்தை நாம் சரியாக வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் பயிற்சி பெற வேண்டியது அவசியமாகிறது. திருத்தூதர் பணிகள் 8, 30-31 இல் 'பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா? என்று கேட்டார். அதற்கு அவர், யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்? என்று கூறித்தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.' ஆகவே பொருள்பட வாசித்து விளக்க வேண்டுமென்றால் அதற்கு நிச்சயமாக பயிற்சி தேவைப்படுகிறது. இல்லையென்றால் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, தங்களை நியாயப்படுத்துவதற்காக விவிலிய வார்த்தைகளை தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. வரலாற்றில் இன மேட்டிமை, அடிமை முறை போன்ற அநீதிகள் சில விவிலிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் கத்தோலிக்கத் திருச்சபையினருக்கும் பொருந்தும். ஆகவேதான் திருப்பலி போன்ற பொது வழிபாடுகளில் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட இறையியல் கல்லூரியில் பயிற்சி பெற்ற திருநிலையினர் மட்டுமே விவிலியத்திற்கு விளக்கம் அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விவிலியம் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில், இறைத்தூண்டுதலால் ஏவப்பட்ட பல்வேறு மனிதர்களால் எழுதப்பட்ட பல நூல்களின் தொகுப்பே ஆகும். இந்நூல்கள் அவற்றின் மொழியால், அரசியல் சூழலால், இலக்கிய வடிவத்தால் நாம் வாழும் சூழலிருந்து தொலைவிலிருக்கிறது. இவையனைத்தையும் பற்றிய கூர் உணர்வோடு வாசிக்கும் போதுதான் விவிலியத்தை புரிந்துகொள்ளவும், அவை இன்றைய நமது வாழ்க்கைச் சூழலுக்கு அவை என்ன கூறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடியும்.

பொறுமையைச் சோதிப்பது போல் இருந்தாலும் விவிலித்தை எல்லோரும் ஆழமாக வேரூன்றி வாசிக்கவும், அதன் முழுச்சுவையையும் பெற்றுப் பயனடையவும் ஆர்வம் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

நம் கேள்விக்கு வருவோம். இயேசு அவ்வாறு மத்தேயு நற்செய்தியில் கூறும் போது அக்காலத்தில் மக்களை சட்டத்தின் பெயரால் அடக்கி ஆண்ட, ஏழைகளைச் சுரண்டி வாழ்ந்த சதுசேயர்கள், பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்றோரின் வெளிவேடத்தைத் துகிலுரிக்கிறார். அவர்கள் போதிப்பது ஒன்றாகவும், கடைபிடிப்பது வேறொன்றாகவும் இருக்கின்றது என்று சாடுகின்றார். அவர்கள் இறைவனுக்குப் பணிபுரியவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களிடம் தாழ்ச்சியுடனும், தாராள உள்ளத்துடனும்  நடந்துகொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளதை மறந்து பொது இடங்களில் மரியாதையும், முன்னுரிமையும் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதைக் கடுமையாகச் சாடுகின்றார்.

இந்தச் சூழலில் தான் இயேசு கடவுளுக்குரிய பண்புகளாகிய தந்தை, போதகர், ஆசிரியர் போன்ற பெயர்களால், அவற்றிற்கு முரணாக, தங்கள் அதிகாரத்தை ஏழை, எளியோர் மேல் செலுத்துவோரை அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

(நண்பர் இந்தக் கேள்வியை எழுப்பியது நல்லது தான் என்று தோன்றுகிறது. நாம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.)

ஆகவே இந்த பின்னணியைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி, குறிப்பிட்ட ஒரு இறைவார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு வரிக்கு வரி பொருள் கொண்டோமென்றால் அது மிகவும் சிறிதான குழப்பத்தையோ, அல்லது பெரிய ஆபத்தையோ ஏற்படுத்திவிடும். எப்படியென்றால்...

1. மேற்குறிப்பிட்ட இறைவார்த்தையின் படி, நாம் பள்ளியில் கற்பித்தல் பணி செய்பவர்களை ஆசிரியர் என்று அழைக்க முடியாது.

2. அது ஏன்? நம்மைப் பெற்றத் தந்தையைக் கூட அப்பா என்று அழைக்க முடியாது.

3. ஆயினும் அழைக்கிறோம். அப்படித்தானே! ஏன் அழைக்கிறோம் என்றால் அவர்கள் இயேசு கூறியது போல விண்ணகத் தந்தையின் பண்புகளைச் செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். விண்ணகத் தந்தை ஒருவரே! அவரே தந்தைகளுக்கெல்லாம் தந்தை. ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்.

4. இதே தர்க்கத்தின் அடிப்படையில் தான் கத்தோலிக்கத் திருச்சபையின் அருட்பணியாளர்களை தந்தை என்று அழைக்கின்றோம். வெளிப்படையாக அப்படி அழைக்கப்படுவதற்கு தங்கள் திருநிலைப்பாட்டால் அவர்கள் தகுதி பெற்றாலும், அவர்கள் உண்மையிலேயே உள்ளார்ந்த தகுதி பெறுவது அவர்கள் வாழ்க்கை முறையால் தான்.

5. இந்த தகுதி எல்லா தந்தைகளுக்கும் பொருந்தும். பிள்ளை பெறுவதால் ஒருவர் தந்தை என்ற தகுதி பெற்றாலும், பொறுப்பற்ற வாழ்வால், குழந்தைகளை வளர்ப்பதில் அக்கறையின்மையால், குடிப் பழக்கத்தால், தவறான நடத்தையால் அவர்கள் அத்தகுதிக்கு களங்கம் விளைவிக்கின்றனர். 'நீயெல்லாம் ஒரு அப்பனா?' என்று கேட்கும் பிள்ளைகளின் ஓலத்தை தினசரி கேட்கின்றோம்.

6. இதுபோலத்தான் 'நீயெல்லாம் ஒரு சாமியார் போலவா நடந்துக்கிற!' என்று கேட்கும் இறைமக்களின் குரலையும் கேட்க முடிகின்றது.

7. ஆகவே தந்தைகள், ஆசிரியர்கள், போதகர்கள் என்ற தகுதிப் பெயர்களெல்லாம் அவர்கள் எந்த அளவிற்கு தந்தையாம் கடவுளைப் பிரதிபலிக்கின்றனர் என்பதைப் பொறுத்துதான் அளவிடப்படுகின்றது. அந்த அடிப்படையில் நிறைய புனித குருக்களின் தியாகத்தால், அர்ப்பணிப்பால், அநீதியைச் சாடும் இறைவாக்கினர் பண்பால், மன்னிப்பு வழங்கி குணப்படுத்தும் பண்பால், வீழ்ச்சியுற்றாலும் தாங்கிக் கொள்ளும் உடனிருப்பால், மந்தையில் தொலைந்த ஆடுகளைத் தேடும் பாசத்தால், மறைபரப்பும் வேட்கையால், அருளடையாளங்களை செயல்படுத்தும் ஆர்வத்தால், ஒட்டுமொத்த திருச்சபையும் தந்தையாம் கடவுளின் கருணை மிகுந்த முகத்தினைக் கண்டு மகிழ்கின்றது. இன்று குருக்களின் பாதுகாவலராகிய புனித ஜான் மரிய வியான்னியின் திருவிழா! முக்கியமானக் கேள்வி! இன்று உங்கள் அருட்பணியாளர்களுக்காக செபித்தீர்களா? 
'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கின்றோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை. அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.' (2 கொரிந்தியர் 4, 7)

 
பின்குறிப்பு:

1. கேள்வியை எழுப்பிய நண்பன் பாஸ்டர் பிரவினுக்கு முதற்கண் நன்றி.

2. என்னை என் பெயர் மட்டும் சொல்லி அழைத்தாலே மிகவும் மகிழ்ச்சி அடைவேன். உண்மையில் பெரும்பாலான மக்கள் தந்தை என்று உணர்ந்து அன்புடன் தான் அழைக்கின்றனர். வெகு சிலர்தான் அதை ஒரு பழக்க தோஷத்தால் பெயரளவுக்கு அழைக்கின்றனர். இன்னும் சிலர் கடமைக்கு! நிறைய அருட்பணியாளர்கள், திருத்தந்தை உட்பட இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

3. அருட்பணியாளராக விரும்புபவர்கள் நம்மால் எப்படி இயலும் என்று நினைத்தே நாளைக் கடத்தாமல் உடனே செயலில் இறங்குங்கள். கடவுளால் எல்லாம் இயலும்.


Related Articles