சனி, 8 அக்டோபர், 2016

கதை முடிந்தது

சிறு வயதில் சில கொடூரமானக் கனவுகளைக் கண்டு நடு இரவில் விழித்திருக்கிறேன். குறிப்பாக எங்கள் ஊரில் பலசரக்குக் கடை வைத்திருந்த ஒருவரை நான் கொலை செய்துவிட்டு போலீஸ் என்னைத் தேட ஆரம்பிக்கும் போது விழித்துக் கொள்வேன். அப்போது பயத்தில் உடம்பு விறைத்து கட்டை போல படுத்திருப்பேன். பக்கத்தில் படுத்திருக்கும் அம்மாவைக் கூப்பிட மூளை கட்டளை கொடுக்கும். ஆனால் தொண்டைக்குள் பயம் பந்து போல அடைத்துக் கொண்டு குரலை வரவிடாது. ஒரு உண்டியலில் காசு போடும் துளை அளவுதான் வாய் திறக்கும். எவ்வளவு முயன்றும் அதற்கு மேல் எதுவும் இயலாது. கை கால்களை ஒரு இம்மி கூட அசைக்க முடியாது. கனவில் கண்டது உண்மை என்றும், உண்மையிலேயே நான் அந்த மனிதரைக் கொன்றுவிட்டேன் என்றும், போலீஸ் என்னைத் தேடுகிறது என்றும் நினைத்து பயத்திலேயே மயங்கி காலையில் தான் இயல்பு நிலைக்குத் திரும்புவேன். கை, கால்களை அசைத்துப் பார்த்துக் கொள்வேன். வாய் திறந்து பேசியப் பிறகுதான் எதுவுமே நடக்கவில்லை, எல்லாமே கனவு என்பதை நம்புவேன். அப்படி ஒரு கனவு சமீபத்தில் வந்தது.

அன்று நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக இருந்தது. யாரோ டப் டப்பென்று கதவைத் தட்டினார்கள். நாய்கள் எப்படி கதவைத்தட்டும்? கதவை உடைத்துவிடுவது போலத் தட்டினார்கள். நடுவீட்டில் படுத்திருந்த அப்பா கதவைத் திறக்கவும், பசித்த மிருகங்களைப் போன்று வெறிபிடித்த போலீஸகாரர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள். கெட்ட கனவுகள் மட்டும் சீக்கிரம் பலித்துவிடுமோ? வீட்டின் பின்புறம் கறிவேப்பிலை மரத்திற்குப் பின்னால் குனிந்து நான் பதுங்க, கழனிப் பானைக் கவிழ்ந்து என்னைக் காட்டிக் கொடுத்தது. ஒரு கொக்கைப் பிடிப்பதைப் போலத் தூக்கி தரதரவென்று இழுத்தார்கள். வண்டியில் தூக்கிப் போடுவதற்குள் என் கழுத்தை அறுத்துவிட்டார்கள். நெஞ்சை நனைத்தச் சூடான இரத்தத்தில் என் சட்டை தொப்பென்று ஒட்டிக்கொண்டது. தொட்டுப்பார்த்ததும் பிசுபிசுத்து கைகளில் வேகமாகக் காய்கிறது இரத்தம். நான் ஒரு கனவுதானேக் கண்டேன். அதற்கு எதற்குத் தண்டனை என்றேன். ஒருவர் தனது கை மூட்டினைக் கொண்டு என் கன்னத்தில் ஓங்கி இடித்துக் கொண்டே ஒரு பத்திரிக்கைச் செய்தியைக் காட்டினார். எங்கோ ஒரு பெண்ணை இதே மாதிரி ஒரு அதிகாலையில் வாயிலேயே வெட்டி சாய்த்துவிட்டதாகக் கூறினார். 

ஆம்! இந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதிகம் பழக்கமில்லை. எனக்கு எதுவும் தெரியாது என்றேன். அடுத்த இடியில் இரண்டு பற்கள் உடைந்து கன்னத்துச் சதையைக் கிழித்து வாயிலிருந்தும் இரத்தம் ஒழுகியது. வண்டியில் சிந்திக்கிடந்த இரத்தத்தின் மேலேயே முகம் குப்புற விழுந்துவிட்டேன். ஒரு போலீஸ்காரர் பேண்டு ஜிப்பைக் கழற்றி என் மேல் ஒன்றுக்குவிட்டார். ஒரு வழியாக இந்தக் கேஸ் முடிந்துவிட்டது என்றார். இந்த நாய் இப்போது செத்துவிடக்கூடாது. வேற மாதிரி பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டே பூட்ஸ் காலால் இடுப்பில் ஓங்கி மிதித்தார். மூச்சு அடைத்துவிட்டது. 'அய்யோ! வலிக்கிறது' என்று மனதுக்குள் கத்தினேன். ஆனால் குரல் வரவில்லை. அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் கண் விழிக்கையில் நான் மட்டும் தான் குற்றவாளி என்று ஏதோவொரு உயரதிகாரி பேட்டி கொடுத்திருந்ததைப் பத்திரிக்கையில் பார்த்தேன்.

அதன் பிறகு சிறையில் தினமும் இரண்டு மூன்று பேர் வந்து பூட்ஸ் காலோடு நெஞ்சில் ஏறி வாயில் இரத்தம் கொப்பளிக்கும் வரை மிதித்துவிட்டு நாங்கள் சொல்வது போல நடந்து கொண்டால் உயிர் பிழைப்பாய். இல்லையேல் மண்டை உடைந்து மூளைச் சிதறிச் சாவாய்! என்று கெட்டவார்த்தையால் திட்டினர். ஒருவர் மிதிக்கும் போது மற்றவர் லத்தியால் அடிப்பார். பாம்பு நெளியும் போது, கொத்திவிடுமோ என்ற பயத்தில் அடிக்கும் ஆவேசத்துடன் மூச்சு வாங்க வாங்க அடிப்பார். கால் கரண்டையில் கடைசியாக விழுந்த அடியில் நடு மூளையில் கீறல் விட்டது போன்றக் கடுமையான வலி. 

என்ன நடக்கிறது என்பதை ஊகிக்கும் முன்னரே கதையில் பாதிக்கும் மேல் முடிந்துவிட்டது. தவறான முகவரியில் தபால் வந்தது போல ஆள் தெரியாமல் தன் பிள்ளையைப் போலீஸ் பிடித்துவிட்டது என்றும் உண்மை தெரிந்ததும், 'மன்னிக்க வேண்டும் தெரியாமல் தப்பு நடந்துடுச்சு' என்று சொல்லி உயர் போலீஸ் அதிகாரி வந்து பிள்ளையை ஒப்படைப்பார் என்று வெள்ளாந்தியாய் நம்பிக்கொண்டிருந்தனர் என் பெற்றோர்.

ஊரில் யாராவது சாகும் போது என் கை, கால்களைப் பிடித்துப்பார்த்துக் கொண்டு நண்பர்களிடம் சொல்வேன். 'எப்படித்தான் சாகிறார்களோ மனிதர்கள்!' என்று. நான் சாக இன்னும் நூற்றிருபது ஆண்டுகளாவது ஆகும் என்று நினைத்துக் கொள்வேன். அந்த பயில்வான் போன்ற வெள்ளைப் போலீஸ்காரர் ஒரு மதம் கொண்ட யானையைப் போல மர்ம உறுப்புக்கும் கொஞ்சம் மேலே அடிவயிற்றில் ஓங்கி மிதித்த போது தான் நான் முதன் முதலாக செத்துவிடுவேனோ என்று பயந்தேன். மூச்சுவிட்டே ஆக வேண்டும். ஆனால் முடியவில்லை. மிதித்த மிதியில் உள்ளே சென்ற வயிறு ஒட்டிக் கொண்டது. இப்படி சிறிது சிறிதாக நிறையச் செத்தேன்.

அந்தக் கொலையை நான் தான், நான் மட்டும் தான் செய்தேன் என்று சொன்னால் விட்டுவிடுவதாகச் சொன்னார்கள். அடிக்கு பயந்து நான் அப்படித்தான் சொல்வேன் என்ற நம்பிக்கையில்தான் இதுவரை என்னை விட்டு வைத்திருந்தார்கள். கனவில் அந்தப் பலசரக்குக் கடைக் காரரைத் தவிர்த்து நான் யாரையும் கொலை செய்யவில்லை. முகநூலில் நண்பனின் நண்பனின் நண்பியைக் கூட நண்பியாக்கும் வயது ஆர்வத்தில்தான் அந்தப் பெண் என் நண்பியானாள். அதற்கு மேல் அந்த மாநகரத்துப் பெண்ணுக்கும் எனக்கும் எந்த பழக்கமும் இல்லை. 'நான் கொலை செய்யவில்லை. என்னை விட்டுவிடுங்கள்' என்று அழுதேன். ஓங்கி முகத்திலே மிதிக்க உதடு கிழிந்தது.

ஒப்புக்கொள்கிறாயா என்று மீண்டும் கேட்டனர். எனக்குக் காதில் விழுந்தது. பதில் சொல்ல உடம்பில் தெம்பு இல்லை. விழுந்து விடுவேன் என்று நினைத்தேன். இதுவரை அடிக்காமல் அறையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரி விரக்தியின் உச்சத்தில் ஓடிவந்து என் இரு தொடைகளும் இணையும் இடத்தில் ஒரு உதை உதைத்தார். புறமண்டை பட்டென்று சுவரில் அடிக்க தரையில் முகம் குப்புற விழுந்தேன். பூமி அந்த அறையையும் பிடித்துக் கொண்டு சுற்றுவது போல இருந்தது. அதன் பிறகு நான் எதையும் பார்க்கவில்லை. எதையும் கேட்கவில்லை. ஓ! சாவது என்றால் இதுதானா? இப்படி தெரிந்திருந்தால் எப்போதோ செத்திருப்பேன். இந்த மிருகங்களின் பிடியிலிருந்து மறைந்து நான் எங்கோ ஒரு இருட்டுக்குள் பயணிக்கத் தொடங்கினேன்.

நாளை பத்திரிக்கையில் நான் என்னையேக் கொன்றுவிட்டதாகச் செய்திகள் வரும். தொலைக்காட்சிகளில் விவாதங்கள் சூடு பறக்கும். ஆளுங்கட்சி, நடுநிலையினர் என்னும் மாறுவேட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சாதிக் கட்சி, என்று எல்லோரும் கருத்து சொல்லிவிட்டு டி.வி காரன் தரும் பயணப்படியை வாங்கிவிட்டு வீடுகளுக்குச் செல்வர். பிறகு எல்லோருமாக யாரோ ஒருத்திக்காக மண் சோறு தின்னப் புறப்பட்டுபோவார்கள். ஒருவன் 'கதை முடிந்தது' என்று ஒரு கதை எழுதி தனது ப்ளாக்கில் போடுவான். கதை முடிந்தது.