சனி, 21 ஜனவரி, 2017

ஒரு புதிய அரசியலுக்கானத் தொடக்கமாக

இத்தாலியின் தலைநகர் ரோமில், வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தின் அருகாமையில் உள்ள புனித பேதுரு கல்லூரி வளாகத்தில் இன்று 19-1-2017 மதியம் 3 மணியளவில் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவு கூடினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்றும், பீட்டா அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என்றும் உணர்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பினர். தமிழகம் முழுவதும் நடைபெறும் இளைஞர்களின் எழுச்சிப் போராட்டத்தில் ரோம் நகரில் வாழும் தமிழர்களும் அதே இனமான உணர்வோடு கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் தமிழர் விரோத அரசியலையும், பண்பாட்டு அழிப்பு முயற்சியினையும் வன்மையாகக் கண்டித்தனர். நல்ல பயனுள்ள பறக்கும் சாலை, புல்லட் ரயில் போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களெல்லாம் வடமாநிலங்களுக்கும், பேராபத்தான அணுஉலை,  மீத்தேன் வாயுத்திட்டம் போன்றவையெல்லாம் தமிழகத்திற்கும் ஒதுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினர். வீட்டில் பிள்ளையாக, ஊருக்கு சாமியாக, விவசாயிகளின் தோழனாகத் திகழும் நாட்டுக் காளை மாட்டினங்களை முற்றிலும் அழிக்க நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சதிவலைக்குள் தமிழகத்தைச் சிக்கவைப்பதோடு, அவர்களின் வீர வரலாற்றுச் சிறப்பின் தனிப்பெறும் அடையாளமான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடைசெய்ய சந்தர்ப்பம் தேடும் மத்திய அரசின் குரலையே உச்சநீதிமன்றமும் எதிரொலிப்பது முற்றிலும் பாரபட்சமான, இனவெறிப் பார்வையே அன்றி வேறெதுவும் இல்லை என்று அவர்கள் கூறினர்.

இன்று தமிழகம் முழுவதும் போராட்ட உணர்வோடு வீதிக்கு வந்திருக்கும் இளைஞர்களின் கூட்டத்தைப் பார்க்கும் போது இது வெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டம் மட்டுமல்ல. இது தொடர்ந்து புறக்கணிக்கப்படும், வஞ்சிக்கப்படும் ஒரு இனத்தின் எழுச்சிப் போராட்டம் என்பது தெரிகிறது. இவர்கள் அரசியல்வாதிகளாலோ, அல்லது சினிமாக்காரர்களாலோத் தூண்டப்பட்டவர்கள் அல்ல. மாறாக அவர்களையும் வீதிக்கு இழுத்து வந்து போராட்டக் குரலெழுப்ப வைத்திருக்கின்றனர். இதுவே நம் இளைஞர்களின் முதல் வெற்றிதான். இது ஒரு புதிய அரசியலுக்கானத் தொடக்கமாக இருக்க வேண்டும். தமிழகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு முதுகு சொறிந்து விடும் எட்டப்பர்கள் நம்மை ஆட்சி செய்தது போதும். உண்மையாகவே தமிழையும், தமிழர்களையும் புதிய உட்சங்களுக்கு வழிநடத்தும் நல்ல தலைவர்கள் இந்த இளைஞர் திரளிலிருந்து உருவாக வேண்டும் என்பதே ரோம் வாழ் தமிழர்களாகிய எங்களின் ஏக்கமும் ஆகும். போராட்டத்தில் ஈடுபடும் அனைவரோடும் உணர்வுப்பூர்வமாக நாங்களும் ஒன்றித்திருக்கிறோம். அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம். இவ்வாறு ரோம் புனித பேதுரு கல்லூரி வளாகத்தில் ஜல்லிக்கட்டுக் ஆதரவாக ஒன்றிணைந்த தமிழ் உணர்வாளர்கள் கூறினர்.