வெள்ளி, 31 ஜூலை, 2020

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்- Part 1

எத்தனை மனிதர்களை வாழ்வில் சந்திக்கின்றோம். அருட்பணியாளர் வாழ்வு தந்த அருங்கொடைகளுள் முதன்மையானதாக இதைத்தான் கருதுகின்றேன். தினசரி இரண்டு, மூன்று நபராவது தங்கள் தனிப்பட்ட வாழ்வின் பலத்தை, பலவீனத்தை, மகிழ்ச்சியை, துக்கத்தை நம்பிக்கையோடு பகிர்ந்துகொள்கிறார்கள். தங்கள் தியாகத்தால், தானத்தால், தன்னம்பிக்கையால், வலிகளையும் புன்னகையுடன் எதிர்கொள்வதால் நம்மைச் சுற்றிலும் நிறைய மாமனிதர்கள் மிகவும் சாதாரணமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாயிருக்கிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பன் சவுதி அரேபியாவிலிருந்து என்னை நலம் விசாரித்தான். ஒரே ஊர். பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். ஒரு கட்டத்தில் வெளியூரில் விடுதியில் சேர்த்து படித்தான். ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறைதான் விடுமுறைக்கு வருவான். ஒவ்வொரு விடுமுறையிலும் முற்றிலும் மாறிய ஒரு ஆளுமையாக அவன் மாறி வருவதைக் கவனித்திருக்கிறேன். உடல் வளர்ச்சி, பேச்சு ஸ்டைல் என்று மிகவும் சாதாரணமாக இருந்தவனிடம் ஒரு பெரிய ஆள் தோரணை வந்துவிட்டது. வேகப்பந்து வீச்சில் எங்கள் ஊரின் நெக்ராவாக அவன் மாறியது தான் என்னை வாவ் என்று சொல்ல வைத்தது. வெளியூர் செல்வது நம் வாழ்வை நிச்சயம் மாற்றும். 

நலம் விசாரித்த தோரணையிலேயே நண்பன் பெந்தகோஸ்து சபையில் ஊறி தேறிவிட்டான் என்று புரிந்துவிட்டது. பெரும்பாலும் வாட்ஸ்அப் குரல் மெசேஜ் மூலம் தான் பேசிக்கொள்வோம். விவிலியத்தின் வாக்கியங்களை அதன் பழைய மொழிபெயர்ப்பில் சரளமாகப் பேசுகிறான். ஆசீர்வாதம், அபிஷேகம், அலங்காரம், வைராக்கியம் போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துகிறான். தான் சிறுவயதில் ஒரு கத்தோலிக்க அருட்பணியாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், பின்னர் இறைவனின் திட்டத்தில் தான் திருமண வாழ்விற்கு அழைக்கப்பட்டு, தற்சமயம் ஒரு சபையின் பாஸ்டராக இருந்து சுவிசேஷத்தை அறிவிப்பதாகவும் கூறினான். உண்மையாகவே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

கடந்த வாரம் வருடாந்திர ஐந்து நாள் தியானத்தில் இருந்தேன். டவர் சுத்தமாக இல்லாத ஒரு மலைப்பகுதி. திடீரென்று அவனிடமிருந்து ஒரு மெசேஜ். மத்தேயு நற்செய்தி 23,9 இல் இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே! அவர் விண்ணுலகில் இருக்கிறார் என்று இயேசு கூறுகிறார். ஆனால் நீங்கள் கத்தோலிக்க மதத்தில் அருட்பணியாளர்களை பாதர் (தந்தை) என்று அழைப்பது ஏன் என்று கேட்டான்.

தியானத்தில் இருப்பதாலும், அங்கு டவர் இல்லாததாலும் பிறகு பதிலளிக்கலாம் என்று இருந்துவிட்டேன். மீண்டும் எங்கோ ஒரு புள்ளியில் போன் சிக்னலைத் தேடிக் கண்டுபிடித்ததும் அவனிடமிருந்து அடுத்த மெசேஜ். பதில் தெரிந்தாலும் சொல்லணும். தெரியலைனாலும் தெரியலைனு சொல்லணும் என்று. நன்றாக கோபம் வந்தது. கோபத்திற்கு காரணம் கேள்வி அல்ல. ஆனால் நான் பார்த்த எல்லா பெந்தகோஸ்து நண்பர்களும் நலம் விசாரித்த மறுநாளே இப்படி ஒரு பார்முலா கேள்வி வஸ்திரத்தை எடுத்து வீசுகிறார்கள். என்ன அவசரம். எங்கே போய்விடப் போகிறோம். மெல்ல மெல்ல பேசலாமே. கடன்காரன் மாதிரி இப்படி கழுத்தைப் பிடித்தால் எப்படி?

உண்மையைச் சொல்லுங்கள்! சொந்தமாக இப்படியெல்லாம் கேள்வி கேட்டு, பதில் கிடைக்கமல் போனதால் தான் நீங்கள் பிற சபைகளுக்குச் சென்றீர்களா? அங்கு உங்களுக்கு கேள்விகளே இல்லையா? சரி! அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் தங்களிடம் எல்லா விடைகளும் இருக்கின்றது என்று நினைப்பவர்கள் எதற்காக அடுத்தவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்? இப்படி என்னுள் பல கேள்விகள் எழும்புவதால் பெரும்பாலும் மத உயர்வுவாதிகளிடம் விவாதிப்பதில் பலனில்லை என்று சிரித்தே கடந்துவிடுவேன். இறைநம்பிக்கையைப் பற்றி பேசுவது, இறை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது நிச்சயம் சுவாரஸ்யமானதாகவே இருக்கும். ஒருவரை ஒருவர் வளப்படுத்தும். ஆனால் பார்முலா கேள்விகளில் ஒரு மேட்டிமைத்தனம் தொனிக்கிறது. அது நகைக்க வைக்கிறது. 

ஆயினும் இந்த முறை கேள்வி கேட்டது நண்பன். அவனும் ஒரு சபையின் ஆசிரியனாக இருந்து இறைவார்த்தையைப் போதிக்கின்றவன் என்ற முறையில் என் மனதில் தோன்றும் கருத்துக்களை வரிசைப்படுத்த முயற்சிக்கிறேன். நிச்சயம் துல்லியமான விடைகளாக இருக்காது. எனது புரிதல்கள் அவ்வளவுதான்.

1.கத்தோலிக்கர்களாகிய நாங்கள் கடவுள் தம்மை இறைவார்த்தையிலும் (பைபிள்), திருச்சபை மரபிலும் வெளிப்படுத்துகிறார் என்று நம்புகின்றோம். ஆனால் பிற சபையினரைப் பொறுத்த மட்டில் கடவுள் இறைவார்த்தையில் மட்டும் தான் வெளிப்படுத்துகிறார். 

2.ஆகவே நாங்கள் திருச்சபையின் பாரம்பரியத்தை (மரபினை) இறைவெளிப்பாடாக ஏற்றுக்கொள்கிறோம். அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்வது சொல்லுங்கள்? கடவுள் எங்களிடம் விவிலித்திற்கு வெளியே, இன்றைய அன்றாட வாழ்வில் மனிதர்களின் மீட்பிற்கு தேவையானவற்றை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு தனிமனிதருக்கும் வெளிப்படுத்துவதோடு, திருச்சபை முழுவதற்குமாக வெளிப்படுத்துகிறார். அதனை ஆராய்ந்து, அறிந்து அனைத்து இறைமக்களும் பின்பற்றுவதற்கான கோட்பாடுகளாக்கித் தரும் பணியினை பொதுச்சங்கங்கள் செய்கின்றன. கடைசியாக நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தில் (1962-1965) 16 ஏடுகள் வெளியிடப்பட்டன. அதில் இறைவெளிப்பாடு என்னும் நூலினை வாசித்தால் உங்களுக்கு இன்னும் சரியான புரிதல் ஏற்படும் என்று நம்புகிறேன். தமிழிலேயே பைபிள் தமிழ் என்னும் வலைத்தளத்தில் கிடைக்கின்றது.
 
3. திருத்தூதுதர்கள் தூய ஆவியின் ஏவுதலால் தாம் பெற்றுக்கொண்ட இறைவெளிப்பாட்டை வாய்மொழி வழியாகவும் நூல்கள் வழியாகவும் மக்களுக்கு அளித்தனர். எழுதப்பட்ட நூல்கள் இறைவெளிப்பாட்டின் முழுமையைக் கொண்டிருக்கவில்லை. திருச்சபையின் மரபு வழியாகவும் இறைவெளிப்பாடு அருளப்பட்டது. திருநூல்களும் திருமரபும் ஒரே ஊற்றிலிருந்து உருப்பெற்ற காரணத்தால் இவை இரண்டும் தம்மில் நெருங்கிய தொடர்புடையன் இரண்டுமே சமமான வணக்கத்துக்குரியன. இவை இரண்டும் அனைத்து மக்களுக்கும் கடவுளால் கொடுக்கப்பட்ட கொடைகள்; இவற்றிற்கு விளக்கம் தரும் உரிமை திருச்சபை ஆசிரியத்துக்கே உண்டு என்று இறைவெளிப்பாடு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் விவிலியப் பேராசிரியர் அருட்பணி. எரோணிமுசு அவர்கள் மிக அழகாக, தெளிவாக குறிப்பிடுகின்றார்.

4. எடுத்துக்காட்டாக அன்னை மரியாளின் விண்ணேற்பு விவிலியத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் கத்தோலிக்கத் திருச்சபை ஆகஸ்டு 15 அன்று அன்னையின் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது. அய்யோ! விவிலியத்தில் இல்லையே என்று மாரில் அடித்துக்கொண்டு தயவு செய்து வராதீர்கள். புரிந்துகொள்ளுங்கள். விவிலியத்தில் இல்லையென்றால் திருச்சபை மரபில் இருக்கின்றது என்று. அது எங்கே இருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்.  உங்களது நம்பிக்கையின் ஊற்று இறைவார்த்தை மட்டுமே! ஆனால் எங்களுக்கு திருச்சபை மரபும் சமமான வணக்கத்துக்குரியது.
 
5. மேற்சொன்ன 4 கருத்துக்களும் ஒரே கருத்தைத்தான் சொல்கின்றது. போதும் என்று நினைக்கிறேன். மேலும் விவிலியத்திற்கு பொருள் கொள்ளும் முறையிலும் பிறசபையினர் கத்தோலிக்க திருச்சயினரிடமிருந்து வேறுபடுகின்றனர். பெரும்பாலும் ஒரு வார்த்தையை அல்லது வசனத்தை மட்டும் வைத்து அப்படியே நேரடி விளக்கம் கொள்கின்றனர். ஆனால் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலத்தில், பல்வேறு அரசியல், சமூக பின்னணியில் எழுதப்பட்ட ஒரு நூற்தொகுப்பை இன்றைய நமது சூழலை மட்டும் வைத்து நேரடி பொருள் கொள்ளுதல் சரியான, முழுமையான அர்த்தத்தைத் தராது. ஆகவே விவிலய நூல்களின் வரலாறு, பின்னணி பற்றிய அறிவு அவசியமாகின்றது.

6. இப்போது நண்பர் கேட்ட கேள்விக்கு வருவோம். ஏன் கத்தோலிக்க அருட்பணியாளர்கள் பாதர் என்று அழைக்கப்படுகிறார்கள்?
(நேரமாயிடுச்சி! காலையில்  மீதி எழுதுகிறேன். கொஞ்சம் பொறுங்க நண்பா!)

ஞாயிறு, 26 ஜூலை, 2020

È per il tuo bene - எல்லாம் உனது நன்மைக்குத்தான்

"எ பெர் இல் தூவோ பெனே"  (È per il tuo bene) என்பது சமீபத்தில் நான் பார்த்த இத்தாலியத் திரைப்படத்தின் பெயர். 2017 இல் வெளியான Es Por Tu Bien என்னும் ஸ்பானியத் திரைப்படத்தின் இத்தாலிய ரீமேக். அமேசான் பிரைமில் கிடைக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடும் போதெல்லாம் வழக்கமாக "எல்லாம் உனது நன்மைக்குத்தான்" என்று சொல்வார்கள் அல்லவா? அதுதான் இப்படத்தின் தலைப்பின் அர்த்தம்.

அர்த்தர்-இசபெல்லா தம்பதியினருக்கு வாலன்டீனா ஒரே மகள். அவள் அலெக்சியா என்னும் பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுக்கிறாள். அவள் கறுப்பினத்தவள். சுற்றுசூழல் போராளி. தான் வேலை பார்த்த நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிப்பதை வெளிப்படுத்தியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு திருட்டுப்பட்டம் சூட்டப்பட்டு வழக்கறிஞரான வாலன்டினாவிடம் உதவிகேட்டு வருகிறாள். வழக்கு முன்னே செல்ல காதல் பின்தொடர்கிறது. அர்த்தர் தன் மகள் வாலன்டினாவில் நன்மைக்காக இந்தக் காதலை முறியடிக்க சூழ்ச்சி செய்கிறார்.

அந்தோணியோ-பவுலா தம்பதியினருக்கு ஒரே மகள் மார்த்தா. பள்ளி இறுதியாண்டு மாணவி. உடம்பெல்லாம் பச்சைக் குத்தி, காதில் கடுக்கன், ஆங்காங்கே கிழிந்து தொங்கும் ஜீன்ஸ், காலரில்லாத சிவப்பு, மஞ்சள் வண்ண டீ-சர்ட் அணிந்து, கொஞ்சம் கஞ்சாவை உள்ளிழுத்து அனுமதியில்லாத பொது இடங்களில் பாப் இசைக்கும் ஒரு சமவயது பையன் பியோண்டாவைக் காதலிக்கிறாள். அந்தோணியோ தன் மகள் மார்த்தாவின் நலனுக்காக அவளுக்கு அவன் மேல் வெறுப்பு வரச்செய்ய முயற்சி செய்கிறார்.

செர்ஜியோ-ஆலிச்சே தம்பதியினரின் ஒரே மகள் சாரா. கல்லூரி செல்லும் வயதில் ஒரு தேநீர் விடுதியில் வேலை செய்கிறாள். செர்ஜியோ தன் செல்ல மகளின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் பரிசளிப்பதற்காக ஒரு அழகிய மிதிவண்டியை வாங்கி அவ்விடுதிக்கு வருகிறார். அங்கு தன்னிலும் வயதில் கொஞ்சம் இளைய பால்யகால நண்பன் போஜியைச் சந்திக்கிறார். சிறுவயதில் நிறைய பெண்களுடன் சுற்றிக்கொண்டிருந்த போஜியின் கெட்டிக்காரத் தனத்தை நினைவுகூர்ந்து இருவரும் சிரித்துக்கொண்டிருக்கும் போதே அங்கு வரும் சாராவிடம் தான் கொண்டுவந்திருந்த மலர்க்கொத்தை நீட்டி "இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் அன்பே" என்று கொடுக்கிறார். செர்ஜோ கடுங்கோபத்தைக் கட்டுப்படுத்த மனநல ஆலோசனைப் பெற்று வருபவர். தன்னையும் மீறி அந்த இடத்திலேயே போஜியைக் கொத்தாகத் தூக்கி தேனீர் விடுதிக்கு வெளியே வீசி துவைத்து எடுக்கிறார்.

அர்த்தர், அந்தோணியோ, செர்ஜியோ மூவரும் நெருங்கிய நண்பர்கள். தங்கள் பிள்ளைகளின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிள்ளைகளின் நலனுக்காக அவர்களின் காதலர்களை ஓடவிட மூவரும் இணைந்து செயல்படுகிறார்கள். 

அலெக்சியா தங்கள் வீட்டில் திருடியதாக கதைகட்டி அவளை நாடுகடத்தப் பார்க்கிறார்கள். பியோண்டா தனது பையில் போதை மருந்துகள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறான். போஜி நடத்தை கெட்டவன் என்பதை நிரூபிக்க ஒரு விபச்சாரப் பெண்ணின் உதவியை நாடுகிறார்கள்.

ஆனால் தங்களது அனைத்து முயற்சிகளாலும் அதிகம் பாதிக்கப்பட்டு துன்பப்படுவது தங்கள் பிள்ளைகள் தான் என்பதை உணர்ந்து, கடைசியில் அவர்களே தங்கள் பிள்ளைகளின் காதலைச் சேர்த்து வைப்பதாக படம் முடிகிறது.

மிக எளியக் கதையுடன் கூடிய மிகச்சாதாரண காமெடி திரைப்படம் தான் எனினும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் ஆளுமையையும் துல்லியமான நடிப்பால் தனித்து வெளிப்படுத்துவதால் படம் போராடிக்காமல் செல்கிறது. இதுவே ஒரு திரைப்படத்தைப் பற்றி நான் எழுதும் முதல் கட்டுரை. இந்தப்படம் கையாளும் கதைக்களம் என்னை புன்னகைக்க வைத்தது மட்டும் தான் காரணம். எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன் என்னும் வகையிலான பெற்றோர்கள் உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.

சமீபத்தில் எழுதப்பட்ட சங்கர்கள் மகிழ்ச்சியாக வாழும் போது நம்நாடு வல்லரசாகும் என்னும் கட்டுரையில் ஆல்பா என்னும் இத்தாலியப்பெண் சித்தாத் என்னும் கறுப்பினத்துப் பையனைத் திருமணம் செய்யவிருப்பதைப் பதிவு செய்திருந்தேன். அது மிகவும் சாதராணமாக தெருவுக்குத் தெரு நடப்பது போன்ற தோற்றத்தை அக்கட்டுரை ஏற்படுத்தியது.

ஆனால் இத்திரைப்படம் அதற்கு மாறான இன்னொரு பக்கத்து எதார்த்தத்தை எடுத்துக்காட்டியது. வாலண்டினா-அலெக்சியாவின் ஒருபாலினக் காதலை எதிர்கொள்ளும் ஒரு முன்னேறிய சமூகத்துப் பெற்றோர் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை முடிவு செய்ய இயலாமல் திணறுவதை, இயல்பான வசனங்களுடன் பதிவு செய்திருந்தது.

பிறருக்கு நடக்கும் போது புரட்சியாக, முற்போக்காகத் தோன்றும் சில விசயங்கள் தனக்கு வரும் போது அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக்காட்டியது. எது சரி, எது தவறு என்று சார்புகளைப் பற்றி இயக்குநர் அக்கறைப்படவில்லை. அதைப் பார்வையாளர்களிடம் விட்டுவிடுகிறார். உங்கள் கருத்துக்களைப் பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள். அவர்கள் தனித்துவமானவர்கள். அவர்கள் உங்கள் கருத்துக்களின் நகல்கள் அல்ல. வித்தியாசத்தை ஏற்றுக்கொள்ள மனதை அகலத் திறந்து பயிற்சியெடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை அவர்களாக இருக்கவிடுங்கள். அவர்களுக்கு எது நல்லது, எது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை அவர்களே முடிவெடுக்கட்டும்.

இன்யை இளம் பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி அதிகம் அக்கறை கொள்கிறார்கள். நல்லது தான். ஆனால் தனியார் பள்ளிகளும், சமூகமும் அளிக்கும் அழுத்த மிகுதியால் குழந்தை வளர்ப்பே உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை போல பதற்றமடைகிறார்கள். இயல், இசை, நாடகம், இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு என்று பிஞ்சுக் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை ஒரு கொடுங்கனவாக்குகிறார்கள். தொட்டியில் வளரும் போன்சாய் மரங்கள் அழகானவைதான் என்றாலும், வெட்ட வெளியில் வளரும் ஆலமரங்களில் தான் பறவைகள் கூடுகட்டும். கொஞ்சம் ஃப்ரியா விடுங்க பாஸ்!

புதன், 22 ஜூலை, 2020

சங்கர்கள் மகிழ்ச்சியாக வாழும் போது நம் நாடு வல்லரசாகும்!


வரும் அக்டோபர் 3 ஆம் நாள் நடைபெறவிருக்கும் திருமண அழைப்பிதழ் தான் இது. மணமகள் ஆல்பா சான் பெர்தினாந்தோ என்னும் தெற்கு இத்தாலியில் இருக்கும் ஒரு கிராமத்துக்காரி. மணமகன் சிதாத். இதே ஊரில் இருந்த ஒரு அகதிகள் முகாமில் இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்த ஆப்ரிக்காவின் கானா நாட்டு இஸ்லாமிய கறுப்பின இளைஞன். அவன் கடல் வழியாக கரை சேர்ந்தவன் என்பதால் திருமண அட்டையை இவ்வளவு அர்த்தப்பூர்வமாக அச்சிட்டிருக்கிறார்கள்.
ஆல்பா அங்கு இத்தாலிய மொழி பயிற்றுநராக பணியாற்றினாள். சித்தாத் தனது மதத்தின் இரு பிரிவினரிடையே நடைபெற்ற கவலவரத்திலிருந்து தப்பித்து விசைப்படகு மூலம் தாரந்து கடற்கரையில் ஒதுங்கியக் கதையைச் சொன்னான். இருவரும் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் இரண்டு ஆண்டுகளாகப் பழகி தெரிந்துகொண்டனர். எங்கள் ஆலயத்தில் கடந்த ஒரு ஆண்டாக திருமண பயிற்சி வகுப்பில் இருவருமே கலந்து கொண்டனர். ஆல்பாவும் அவளது குடும்பமும் எங்கள் கோவிலின் அனைத்துப் பணிகளிலும் உடனிருப்பவர்கள். அவளது தாய் பங்கின் ஏழை, எளியோருக்கு உதவும் காரித்தாஸ் அமைப்பின் பொறுப்பாளர். சித்தாத் திருமணத்தின் பொருட்டு மதம் மாறவில்லை. தொடர்ந்து இஸ்லாமியனாகவே இருப்பான். மேலும் அவன் இந்த ஊரில் காலடி வைத்த போது அவனுக்கு உதவியவர்கள் பக்கத்து பங்கின் அருட்பணியாளரும், நண்பர்களுமே என்பதால் திருமணத்தை அந்த ஆலயத்திலேயே நடத்துகின்றனர். அவன் அப்போதுதான் சொந்த வீடு போல உணர்வான் என்பதற்காக இந்த ஏற்பாடு. இப்படி அவன் அந்நியனாக உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தங்கள் விருப்பங்களை முன்னிலைப்படுத்தாது நிறைய காரியங்களைப் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள்.
சட்டப்படி தகுதியான இரு நபர்களின், சட்டப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்ட சம்மதம் திருமணத்தை உருவாக்குகின்றது. இவ்வளவு தான் திருமணம். ஆல்பாவும், சித்தாத்தும் தங்கள் சம்மதத்தை சட்டப்பூர்வமாக வெளிப்படுத்த அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை. சாதி, மதம், இனம், நிறம், பொருளாதாரம், சமுதாயம் எதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. திருமணம் இரு நபர்கள் சம்பந்தப்பட்டது. ஆம்! நீங்கள் வாசித்தது சரிதான். இரு நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது. இந்த உரிமையைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும், நீதித்துறைக்கும் உள்ளது.
மார்ச் 13, 2016 அன்று உடுமலைப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிகவளாகத்தின் வாயிலில் பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்ட பட்டியலினத்தவரான சங்கரை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். அவரது மனைவி கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்பிழைத்தார். இந்தக் குரூரக்கொலைக்கானத் தெளிவான சிசிடிவி காட்சிகள் இருக்கின்றன. திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட இன்னும் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரின் தூக்கு ஆயள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறைவாசலில் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உயிரைக் காக்க உயிரையேப் பணயம் வைத்து அந்நிய நாட்டில் அடைக்கலம் புகுபவர்கள் அகதிகள். ஐக்கிய நாட்டு சபையின் அகதிகள் உடன்பாட்டில் கையொப்பமிட்டிருக்கும் 147 நாடுகளுமே தங்கள் நாட்டில் தஞ்சம் புகும் அகதிகளைப் பராமரிக்கவும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, கருத்து, சமய உரிமைகளைப் பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளன. அவர்கள் தாயகம் திரும்புவது அவர்களது உயிருக்கு ஆபத்து எனக் கருதும் வரையிலும் அவர்களைத் திருப்பி அனுப்ப இயலாது. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அனைத்திலும் அவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.
ஆல்பாவை சித்தாத் ஊரே கொண்டாட திருமணம் செய்ய முடிந்தால் அதற்கு பெயர் வளர்ந்த நாடு. நடுரோட்டிலே போட்டு வெட்டிக் கொன்னா, கொன்னவன நீதிமன்றம் விடுதலை செஞ்சா, கொலை செஞ்சவன் கைளில் பொன்னாடையும், பூங்கொத்தும் தந்து வரவேற்கப்பட்டால் அப்துல் கலாம் கனவு கண்ட 2020 கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம்.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

சலிப்பூட்டும் நாத்திக அடிப்படைவாதம்


கருப்பர் கூட்டம் என்னும் பெயரிலான ஒரு யூடியூப் சானலில் கந்தசஷ்டி கவசப் பாடலின் ஒரு சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு மிகவும் கொச்சையாக விமர்சித்திருந்தனர். மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பா.ஜ.கா அந்த சானலைத் தடை செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்தினர். 

முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். எங்கள் ஊரில் அழகன் என்ற பெயரில் இந்து, கிறிஸ்தவ பாகுபாடின்றி நிறைய பேர் இருக்கின்றனர். அழகென்ற சொல்லுக்கு முருகா! என்ற இனிமையானப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மதம் கடந்தும் ஒருவருக்கு இதயத்தில் அன்பு சுரக்கும். சிறுவயதில் எங்கள் வீட்டில் குழந்தை முருகனின் படம் போட்டு காலண்டர் இருந்தது. அதில் யாமிருக்க பயமேன் என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டுதான் பள்ளிக்குக் கிளம்புவது வழக்கம். குழந்தை இயேசுவின் முகத்தையே எனக்கு அது நினைவுபடுத்தியது. மருங்கூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் அருகில் தான் எங்கள் பள்ளி. ஒடுக்கத்து வெள்ளியன்று அங்கு சுவையான கஞ்சி கிடைக்கும். நண்பர்களோடு சென்று சாப்பிட்டுவிட்டு, அங்கிருக்கும் ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடுவது சிறுவயதின் அழகான நினைவுகள். அந்த ஆலமரம் போன்று கடவுள் ஒருவரே. நாம் நம்பும் ஆத்திகம், அல்லது நம்பாத நாத்திகம் யாவும் நாம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் விழுதுகள்; இறுகப் பிடித்துக் கொள்ளலாம். ஆனால் என் விழுதுதான் ஐ.எஸ்.ஒ 9001 என்று கருதினால் ஆலமரம் கோபித்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். 

எங்கள் ஊரில் இந்துக்கள், சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க மதத்தினர் எனக்குத் தெரிந்து இதுவரையிலும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். புலிமலை சகாய மாதா கோவிலில் திருப்பலி நடக்கும் போது, அதன் அடிவாரத்தில் இருக்கும் சுடலை மாட சுவாமி, மற்றும் முத்தாரம்மன் கோவில் ஒலிப்பெருக்கியை அணைத்துவிடுவார்கள். அங்கு கொடை நடக்கும் போது இங்கு பொது வழிபாடுகள் நடத்துவதில்லை. எல்லாம் எழுதப்படாத ஒப்பந்தங்கள்தான். மரியாதையும், புரிதலும் தான் இந்த இணக்கத்திற்கு காரணம். 

காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது முதல் முன்பு இருந்த ஒரு இயல்பான உறவும், உரையாடலும் சற்றே பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். பரஸ்பர வெறுப்பு இல்லையென்றாலும், நாம் இன்னும் நண்பர்கள் தானா என்ற ஐயம் சமவயதினரின் கண்களில் தெரிகிறது. முகநூலிலும் தெரிந்த நண்பர்களே மத - மனித வெறுப்போடு எழுதுவது ஒரு நாசிச சமூகமாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோமா என்று அச்சத்தை உருவாக்காமல் இல்லை. 

அரசியல் விழிப்புணர்வு மிகவும் நன்மை பயக்கும் ஒன்று. அதிகாரப் பரவலை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் ஏகாதிபத்தியத்தைக் குலைக்கும். ஆனால் சக மனிதனை நேசிக்காமல், உறவு பாராட்டாமல் ஆக்குமென்றால் அது நம்மை அரசியல் குருடர்களாக்கும் என்றே நினைக்கிறேன். குருட்டுத்தனமாக கொள்கைகளின் பின்னால் செல்வது ஒற்றுமையைக் குலைத்து நம்மைப் பிளவுபடுத்தும். வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் புதிய வடிவம் தான் இன்றைய மத அரசியல் என்று புரிந்துகொள்கிறேன்.

தமிழ்நாடு கிறிஸ்தவ பேரவை, தமிழ்நாடு முஸ்லீம் இயக்கம் போன்ற மதத்தின் பெயரிலான அரசியல் ஒருங்கிணைதலுக்கு ஜனநாயகத்தில் இடம் இருக்கும் போது இந்துக்களை ஒன்றுபடுத்தும் அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு இயக்கம் இருப்பதில் யாருக்கும் நடுக்கம் தேவையில்லைதான். ஆயினும் ஒரு சமூகம் தன் மத, இன, மொழி சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது என்பதை வைத்துதான் அந்த சமூகத்தின் முதிர்ச்சியும், வளர்ச்சியும் தீர்ப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்தியா முழுவதுமே மதச்சிறுபான்மையினர் மீது, அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது நேரடியாக அல்லது அரசியல் சாசன வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. 

எனக்குத் தெரிந்த இந்து மதம் அகிம்சையைப் போதிக்கின்றது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு அதன் அடிநாதமாக விளங்குகிறது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் ஏற்றி வைத்த பசிப்பிணி போக்கும் அருட்பெருஞ்சோதி இன்றளவும் அணையவில்லை என்பதே அதன் சாட்சி. அரசியல் தளத்தில் செயல்பட்டவர்களில் காந்தியை விட அதிகமாக இந்து மதத்தை நேசித்து வாழ்ந்த ஒருவரைக் காணமுடியுமா? ஆனால் இன்று அவரைச் சுட்டுக்கொன்ற ஒருவர் கொண்டாடப்படுகிறார். காந்தி மீண்டும் பொம்மைத் துப்பாக்கியால் சுடப்படுகிறார். கூடி நிற்பவர்கள் வேடிக்கையாகக் கொக்கரிக்கிறார்கள். இது தான் அரசியல் விழிப்புணர்வா? வன்முறை கொண்டாடப்படும் சமூகத்தில் பாதுகாப்பும், அமைதியும் எப்படி இருக்க முடியும்? இந்தக் காரணத்திற்காக மட்டுமே எந்த மதம் என்றாலும் பிளவுபடுத்தும் அடிப்படைவாதிகளை கருத்தளவில் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பன்முகத்தன்மையே இந்தியாவின் ஆன்மா. பல்வகை மொழியும், இனமும், மதமும் இணைந்து, பிணைந்து, உறவு பேணி வாழ்வதே அதன் தனித்தன்மை. அதை எப்படி மத நம்பிக்கையால் ஒற்றைத் தன்மையாக்க முயல்வது வன்முறையோ, அது போலவே மத நம்பிக்கையின்மையாலும் ஒற்றைத் தன்மையாக்க முடியாது என்பதையே கருப்பர் கூட்டம் முதலான நாத்திக அடிப்படைவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

புறவுலகோடு எந்தத் தொடர்பும் அற்ற அந்தமான் பழங்குடியின மக்களிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி பெண் தேர்தல் அதிகாரி சந்திக்கும் அனுபவங்களை விவரிக்கும் ஓரு நாவல் கன்னித்தீவு. மகிழ்ச்சி, வியப்பு, காதல், காமம், பயம் போன்ற அனைத்து உணர்ச்சிகளின் போதும் அதன் சூழலுக்கேற்ப கந்த சஷ்டி கவசப் பாடல் ஒன்றினை உச்சரிப்பார் யமுனா என்னும் அந்தக் கதாபாத்திரம். யமுனாவின் கணவர் பெயர் முருகன். கன்னித்தீவு நாவலாசிரியர் எழுத்தாளர் சி.சரவண கார்த்திக்கேயன். முருகன், சரவணன், கார்த்திக்கேயன் எல்லாம் அந்த அழகனாகிய ஆறுமுகனையேக் குறிக்கும். 

ஆப்பிளுக்கு முன் நாவலில் காந்தியடிகள் தன் அகவாழ்வில் மேற்கொண்ட சோதனைகளை மிக அழகியலோடும், நேர்மையோடும்  அணுகிய அதே எழுத்தாளர் சமீபத்தில் அவரது முகநூல் நிலைத்தகவலில், "கொரோனா எத்தனை எளிதாய், எத்தனை விரைவாய் வாழ்க்கையின் நிலையாமையை மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது! என் ஆச்சரியமெல்லாம் இன்னும் எப்படி இந்தப் பைத்தியகாரர்கள் கடவுளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே!" என்று எழுதினார். கருத்துக்களால் நான் பெரும்பாலும் காயப்படுவதில்லை. ஏனெனில் "மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது. மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது" என்று திருவிவிலியம் கூறுகிறது. இந்த மடமை மிகவும் அழகானது. மனிதத்தை நேசிக்க வைக்கின்றது.

கருப்பர் கூட்டம் போன்ற நாத்திக அடிப்படைவாதிகளிடமிருந்தும் பன்முகத்தன்மையைக் காப்பாற்ற வேண்டியிருப்பது சலிப்பாயிருக்கிறது.